Published:Updated:

தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்!

விகடன் விமர்சனக்குழு
தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்!
தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்!

தனக்கென எந்த சிறப்புத் திறமைகளும் இல்லாமல், தன்னுடைய சராசரி குணத்தைப் பற்றித் தாழ்வாக நினைத்துக்கொண்டு வாழும் ஒருவனுக்கு, தற்செயலாக ஒரு பாராட்டுக் கிடைக்கிறது. அப்படி தன்னைப் பாராட்டிய அந்த +2 மாணவியின் மீது காதல்கொண்டு, அவள் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்து, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறான். இவனை, கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனென்றும், ‘சாதித்துவிட்டு வா, அப்புறம் என்னன்னு பாக்கலாம்’ என்று வழியனுப்பிவைக்கிறாள் காதலி. சோர்ந்துபோய் தற்கொலைக்கு முயல்கிறவனின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள், குறுக்குவழியில் அவனுக்குக் கிடைக்கும் புகழ்வெளிச்சத்தின் உண்மை நிலவரம் என்னவென்று காதலிக்கு, குடும்பத்துக்கு, கல்லூரிக்கு என அனைவருக்கும் தெரிந்ததும், எல்லோரும் அவனைக் கைவிடுகிறார்கள். பிறகு, அவன் என்ன ஆனான்... நிராகரித்தவர்களே அவனை ஏற்றுக்கொண்டு, தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு ஆனந்தக் கண்ணீருடன் அட்டென்ஷனில் நிற்குமளவுக்கு அவன் என்னசெய்தான் என்பதே கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதை.

'சூது கவ்வும்', 'தெகிடி'யில் நாம் பார்த்த அசோக் செல்வனா இது என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார். நடை, உடை, பேச்சு என அனைத்திலும் கூட்டத்தில் ஒருத்தனாகவே நமக்குத் தெரிகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் தன் கதாபாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார். வீட்டில், சமுதாயத்தில், கல்லூரியில் என எங்கெல்லாம் தான் உதாசீனப்படுத்தப்படுகிறேன் என சமுத்திரக்கனியிடம் அவர் சொல்லி விசனப்படும் காட்சியில், "காதலிக்கணும்னா சாதனை செஞ்சி இருக்கணுமா சார்? நானெல்லாம் காதலிக்கிறதே சாதனை தான் சார்" என்று அவர் கலங்குகையில், அவரைப் போன்ற குணாதிசயம் கொண்டவர்களுக்கு அது அழுத்தமான காட்சியாகவே மனதில் பதியும். பால சரவணனுக்கு, படம் முழுக்க கதாநாயகனோடு டிராவல் பண்ணும் காமெடியன் கதாபாத்திரம். சில இடங்களில் மட்டும் கிச்சுக்கிச்சு!  ப்ரியா ஆனந்த் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை. 

சத்யா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். நாசர், ஜான்விஜய்க்கு இன்னும் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், ஏண்டா இப்படி என்கிற பாடல், படத்தின் பலம். எஸ்.பி.பி-யின் குரலில் இருக்கும் இளமை என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு ஒரு நற்சான்று இந்தப் பாடல். பி.கே. வர்மாவின் ஒளிப்பதிவு, கதையை  நீரோட்டம்போல நகர்த்துகிறது. லியோ ஜான் பால் எடிட்டிங், இந்தப் படத்துக்கு பர்ஃபெக்ட்.

கூட்டத்தில் ஒருத்தன், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள எப்படியெல்லாம் போராடுகிறான் என்கிற கதை சுவாரஸ்யமானது என்றாலும், அடுத்தடுத்து வரக்கூடிய காட்சிகளைத் தமிழ் சினிமாவை அதிகம் பார்க்கும் எவரும் எளிதில் கணித்துவிடலாம் என்பதால், சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுவதோடு, காதல், ஏமாற்று வேலை, ரவுடி, என்கவுண்டர் என படத்தின் கான்செப்ட்டுக்குத் தேவையில்லாத காட்சிகள் திணிக்கப்பட்ட உணர்வு ஏற்படுகிறது. 

கடைசி அரைமணி நேரம் ஆவணப்படம் பார்க்கிற மாதிரியான ஒரு அனுபவத்தையும் கொடுக்கிறது. என்றாலும், எடுத்துக்கொண்ட கதைக் கருவில் பாசிட்டிவ்வான ஒரு எண்ணத்தை, சமூக அக்கறையை இன்றைய இளைஞர்களிடம் விதைக்க முயற்சித்தற்காக இயக்குநர் ஞானவேலைப் பாராட்டலாம். மையக்கதையை நோக்கி அதிகம் பயணித்திருந்தால், இந்த கூட்டத்தில் ஒருத்தன் இன்னும் ஜொலித்திருப்பான்.