Published:Updated:

'ஒரு கத சொல்லட்டா சார்..?' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் நிறைவுப் பகுதி

'ஒரு கத சொல்லட்டா சார்..?' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் நிறைவுப் பகுதி
'ஒரு கத சொல்லட்டா சார்..?' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் நிறைவுப் பகுதி

'ஒரு கத சொல்லட்டா சார்..?' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் நிறைவுப் பகுதி

கோடம்பாக்கம் தேடி..! இது சினிமாவின் பல்வேறு துறைகளைத் தேடி வந்தவர்களின் வாழ்க்கையைத் தேடிய தொடர். இவர்களில் சரிபாதிப்பேர் தங்கள் லட்சியங்களை எட்ட இன்னும் ஓடிக்கொண்டே இருப்பவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதியின் 'ஒரு கத சொல்லட்டா சார்...?' எனும் கேள்விக்கு, 'உன்னைமாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஒரே கதைதானே... நான் கீழ இருந்தேன்... கஷ்டப்பட்டேன்... இத செஞ்சு அத செஞ்சு பெரியாளாகிட்டேன்... அந்தக் கத தானே...' என்பார் மாதவன். அவ்வாறு ஒன்றிரண்டு வரிகளில் சொல்லிவிடக்கூடியவை அல்ல இவர்களது கதைகள். எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகள். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது மட்டுமே இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கும் ஒற்றுமை. 

பதினைந்து ரூபாயுடன் சென்னைக்கு வந்த ஒருவர், உதவி இயக்குநர்களிடம் இன்ஸ்டால்மென்ட்டில் துணி விற்று, அந்தக் காசை வசூல் செய்வதற்காக அவர்களுடனேயே யூனிட்டில் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போகிறார். ப்ரொடக்‌ஷன் யூனிட் சீஃப் ஆகிறார். காமெடி, குணச்சித்திர வேடங்களில் 200 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகர்களுக்குத் தெரிந்த முகமாகிறார். இன்னொருவர், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுக் கராத்தே கற்றுக்கொண்டு சென்னைக்கு சண்டைப்பயிற்சியாளர் வாய்ப்புத் தேடி வருகிறார். சினிமாவில் கண்ணாடிச் சில்லுகளைத் தெறிக்கவிட்டு, ரத்தத்துளிகளைச் சிந்தி நடிக்கிறார். காலம் தள்ளிய வேகத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ஆனவரது கதை இது. பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் நடந்து சென்று மெரினாவில் பயிற்சி செய்த அவரிடம் இப்போது சொந்தமாக வீடு, கார் எல்லாம் இருக்கிறது. 

அணிந்திருந்த ட்ரவுசரோடு சென்னைக்குப் பயணப்பட்டவர் ஒருவர் இருக்கிறார். ஷூட்டிங்குக்குப் பயன்படும் டீசலை மானியத்தில் வாங்க பெட்ரோல் பங்குகளில் முதல்நாள் இரவே படுக்கவைக்கப்பட்டவர். பின்னாளில் அவரது காமெடிகளைக் கண்டு சிரிக்காத மனிதர்கள் இல்லை. அவரது வசனங்கள் இல்லாத மீம்ஸ்கள் இல்லை. அவர் எக்காலத்திற்குமான நகைச்சுவைக் கலைஞனரென்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் நிஜம். 

வானம் நிறையக் கனவுகளோடு உள்ளே நுழைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை. ஒருவருக்குத் தனது பெயர் தடையாக இருக்கிறது. அதற்காகத் தனது பெயரை இழக்க அவருக்கு விருப்பமில்லை. 'சாதீய அடையாளம் ஒருவனை நசுக்குகிறதென்றால் நசுக்குகிற அத்தனை பூட்ஸ்களையும் கிழித்து மேலே வருவேன்' எனத் தன்மானத்தோடு முயற்சியைத் தொடர்கிறார். கொள்கையைத் தளர்த்திக்கொண்டால் வாய்ப்புக் கிடைக்கும் நிலையில், அந்த வாய்ப்பு தனக்கு வேண்டாமெனத் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார் இன்னொருவர். இயக்குநராகும் ஆசையோடு திரையுலகுக்குள் நுழைந்து, வேறொரு துறையில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள். ஸ்டூடியோ வாசலில் நின்ற வாட்ச்மேன் ஒருவர் இன்று பெயர்போன இயக்குநர். 

எப்போதும் வீரியமாயிருக்கிற உங்களது லட்சியம், இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்!

பல படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றி இருந்தாலும் இயக்குநராகத் தனது பெயரைத் திரையில் பார்க்காமல் இன்னும் கதை சொல்லிக்கொண்டே காத்திருக்கிறார்  ஒருவர். அவரது பேச்சில் இப்போதும் அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் இன்றும் வாய்ப்புத் தேடி வருபவர்களுக்கு எனர்ஜி டானிக். சினிமாக் கனவுகளுக்காக சிறு வயதிலேயே வீட்டை விட்டுக் கிளம்ப எத்தனித்தவர், பொருளாதார நிர்ப்பந்தங்களால் கனவுகளை நெஞ்சில் சுமந்தபடி, காலம் கனியும் என்கிற ஏக்கத்தோடு வேறொரு வேலையில் இருக்கிற நண்பர்... எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், ஆரம்ப காலத்தில் தான் பட்ட கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாது எனத் தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் வயிறாறச் சாப்பாடு போட்டு அனுப்பும் நடிகர்... பாட்டெழுத வந்து எதிர்பாராமல் நடித்து, காமெடியனாகப் புகழ்பெற்ற ஒருவர் என எல்லோரும் கற்றுத் தருவது நம்மையும் எதையாவது தேடச் சொல்லித்தான். 

தேடல் இல்லா மனிதர் இருக்க முடியாது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவே கூகுளில் தேடுகிற காலம் இது. முன்போல் அல்லாமல் இப்போது தேடல் அவ்வளவு எளிதாகிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் உங்களது திறமையை வெகு எளிதாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும். அதன்மூலம் வாய்ப்புகளையும் பெற முடியும். பாரதிராஜா காலத்தைப் போல ஸ்டூடியோ வாசலில் மாதக்கணக்காகக் காத்துக்கிடந்து வாய்ப்புத் தேடத் தேவையில்லை.

இந்தத் தொடரை எழுதுவதற்காக, சம்பந்தப்பட்ட நபர்களிடமும் அவர்களை நன்றாக அறிந்த / உடனிருந்த உதவியாளர்களையும் சந்தித்துப் பேசினேன். அவர்களது ஆரம்பகால வாழ்க்கையை அவர்கள் சொல்லும்போது கடந்து வந்த பாதையை ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்துக் கொள்கிறார்கள். காலத்தின் வேகத்தை உணர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். அத்தனை கதைசொல்லிகளுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றி. நடிகர், இயக்குநர் பாண்டியராஜனுடனான முதல் சந்திப்பு வழக்கமான ஒரு நேர்காணலைப் போல அமைந்தாலும், கட்டுரை வெளியான பின்பு, அவர் மறுபடி வீட்டுக்கு அழைத்து நெகிழ்ந்துபோய்ப் பல கதைகள் பேசினார்.  

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தான் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடும் கதை சொல்கிறார்... தான் ஏமாந்த கதை சொல்கிறார் இன்னொருவர். ஒவ்வொருவரின் அனுபவமும் நமக்கு வித்தியாசமான பாடம்தான். இவர்களோடு முடிந்துவிடுவதல்ல இந்தத் தேடல். பெண் இயக்குநர்கள், சினிமாவின் ஒவ்வொரு டெக்னிக்கல் துறைகளிலும் பணிபுரியும் நபர்கள் என ஒரு பெரிய கூட்டத்தின் கதைகளை அடையாளம்காட்ட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. யாவற்றையும் காலமே தீர்மானிக்கிறது. கடைக்கோடியில் இருந்து முன்னேறுகிற ஒவ்வொருவரின் கதையும் யாரோ ஒருவரால் எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். வெற்றிக்கதைகள் எப்போதும் வாசிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். 

ஆம். தேடல்களுக்கு முடிவேது..?

- நின்று நிதானமாக ஓடலாம்.  

~ நிறைந்தது. 

முந்தைய பாகங்களை வாசிக்க இந்தப் படங்களை க்ளிக் செய்யவும்...

...

அடுத்த கட்டுரைக்கு