Published:Updated:

''சென்சார் சிஸ்டமே வேண்டாம்!’’ - விளாசும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்

தமிழ்ப்பிரபா

'தரமணி' படத்துக்கு 'ஏ' சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் எழுப்பியிருந்தார் அந்தப் படத்தின் இயக்குநர் ராம். 'படத்தில் இடம்பெறும் முத்தக்காட்சி ; 2 விநாடிகள்' என்று விளம்பரம் செய்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்சார்  சிஸ்டம் ஏன் உருவானது என ஆராய்ந்து பார்த்தால், இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சிசெய்த காலத்தில் `சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு எதிரான கருத்துகளை சினிமாவின் வழியாக நாம் பிரசாரம் செய்துவிடுவோமோ!' என்று அஞ்சிய ஆங்கிலேயர்கள், சினிமா தணிக்கைத் துறையை உருவாக்கினர் என்பது தெரியவருகிறது.

ஒரு திரைப்படத்தில் எந்தெந்தக் கருத்துகள்  இருக்க வேண்டும் என அவர்கள் முடிவுசெய்தார்கள். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகும் தணிக்கைத் துறைக்குத் தேவை இருக்கிறது என்று `Cinematographic Act'- 1952-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதற்கென தணிக்கை அலுவலகம் அமைத்து அதிகாரிகளைத் தேர்வுசெய்தார்கள்.  தென்னிந்திய திரைப்படங்களின் தணிக்கை அலுவலகம் சென்னையில் இருந்தது. நம் சகோதர மாநிலங்கள் தங்கள் படங்களைத் தணிக்கை செய்யவேண்டுமென்றால் சென்னைக்கு வரவேண்டிய சூழல்  இருந்தது. பிறகு, ஹைதராபாத், கர்நாடகா, திருவனந்தபுரம் என ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அலுவலகங்கள் அமைக்கப்பெற்றன.

அந்தந்த மாநில மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப, மக்கள் எதை எதைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தணிக்கை அதிகாரிகள், அதில் உள்ள உறுப்பினர்கள் முடிவுசெய்தார்கள். அந்த முடிவின் அடிப்படையில் திரைப்படங்களுக்கு U, U/A, A எனச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. படம் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கு அது எந்த வகையான சான்றிதழை வாங்கியிருக்கிறது என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால், படக் குழுவினர் மிகுந்த ஆவல்கொள்வார்கள்.

வணிக நோக்கங்களைத் தாண்டி சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை, பேசவேண்டிய அரசியலைத் தன்னுடைய படைப்பின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் இயக்குநர்களின் திரைப்படங்களும் இந்தத் தணிக்கைத் துறையினரால் பலியாக்கப்படுகின்றன என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. இதுகுறித்து இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் பேசினோம்...

`` `பேராண்மை', `புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' ஆகிய திரைப்படங்களிலிருந்து சில முக்கியமான காட்சிகளை சென்சாரில் நீக்கிவிட்டதால், அந்தப் படங்கள் மூலம் சொல்ல வந்த கருத்து முழுமையாக மக்களிடம் போய்ச் சேரவில்லை' என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். முத்தக் காட்சிகள் குறித்து சென்சார் அமைப்பு தற்போது இன்னும் சில  கட்டுப்பாட்டு விதிகள் கொண்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``என்னைக் கேட்டால் சென்சார் என்ற அமைப்பே தேவையில்லை என்றுதான் சொல்வேன். அதில் உள்ள உறுப்பினர்கள், சமூகத்தைப் பற்றிய புரிதலே இல்லாமல் அல்லது புரிந்தும் தங்களுக்கு எதிரான அரசியலைப் பேசியிருந்தால் அதற்கு ஏற்ற முடிவையே எடுக்கிறார்கள். `பேராண்மை' படத்தில் அம்பேத்கர் சொன்ன முக்கியமான ஒரு கூற்றை  வசனத்தில் வைத்தபோது, அதைத் தணிக்கை அதிகாரிகள் கத்தரித்துவிட்டார்கள். பாலியல் காட்சிகளையும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றியும் அப்பட்டமாகச் சொன்னால் அதை வெளியிடுவதற்கு யோசிக்கிறவர்கள், எந்தவிதமான தயக்கமுமின்றி மோசமான வன்முறைக் காட்சிகளை எதன் அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் என்றே புரியவில்லை. இதுபோன்ற ஓர் அமைப்பு இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன?''

``இயக்குநர் தன்னுடைய அரசியலைப் பேசுவதை, சமூக நீதியாக அவர் எண்ணுவதை படத்தில் வைப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பொதுச் சமூகம் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றும் என்கிற தயக்கம் அதிகாரிகளுக்கு இருப்பதும் நியாயமான காரணம்தானே?''

``பொதுச் சமூகத்தைப் புரிந்துகொண்ட அதிகாரிகள் அந்தப் படத்தைப் பார்த்தால் பிரச்னை இல்லை. முதலில் அவர்கள் எதன் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஒரு படத்தைப் பார்க்க வருவதற்கு முன், அந்தப் படம் பேசும் மூலத்தை ஆய்வுசெய்துகொண்டு வருவதில்லை. ஏனோ தானோ என வந்து அமர்ந்து படம் பார்ப்பவர்களால் அதன் உள்ளீடுகளைப் புரிந்துகொள்ள முடியாது.''

``திரைப்படங்களைத் தணிக்கை செய்பவர்கள், அரசியல் புரிதல் உள்ள அதிகாரிகளாக இருந்தால் உங்களுக்குப் பிரச்னை இல்லை அப்படிதானே?''

``எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு சினிமாவில் வரும் வசனம் அல்லது காட்சி போன்றவை மக்களுக்குத் தேவையா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதிகாரிகள் அல்ல. ஒரு வேட்பாளர் என்ன வேண்டுமானாலும் சொல்லி ஓட்டு கேட்கலாம். ஆனால், அவர் வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தானே முடிவுசெய்கிறார்கள். சினிமாவையும் அந்த வழியில் அணுகுங்கள். எங்களை நிராகரிக்கும் பொறுப்பை நேரடியாக மக்களிடம் விடுங்கள். இங்கே சமூக அறிவுகொண்ட சென்சார் அதிகாரிகள் தேவை என்பது அல்ல என் கருத்து. சென்சார் சிஸ்டமே வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.''