Published:Updated:

''ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..!'' - விமல்

''ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..!'' - விமல்
''ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..!'' - விமல்

''ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..!'' - விமல்

"நமிதாவை நடுங்கச் செய்த நாட்டாமையே...ஆர்த்தியை அரைவிட்ட ஆளுமையே...காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே...பரணிக்கு பாய் சொன்ன பாசமே...தங்கத் தலைவி ஓவியா பிக் பாஸ் டைட்டில் பெற வாழ்த்துகள்" என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் புதுக்கோட்டையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அங்கு மட்டுமல்ல தமிழ்க் குரலின் ஒட்டுமொத்த ஒலியையும் ஒற்றை நிகழ்ச்சியில் தன்வசப்படுத்திய பிக் பாஸ் அழகி ஓவியா. அடுத்த சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக நின்றால் கூட வெற்றி வாக்கை மக்கள் அள்ளித்தெளிப்பார்கள் என்பதில் தொடங்கி அகில இந்திய ஓவியா பேரவை தொடங்குவது வரைக்கும் எங்குப் பார்த்தாலும் ஓவியா மயம்தான். ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட்டராக மாறியதோடு மட்டுமல்லாமல், கல்லூரிப் பெண்களும் ஓவியாவைப் போல் அனைத்துக்கும் 'டேக் இட் லைட்' பாலிசியை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் ஓவியா ஆர்மி வெற்றியின் வேற லெவல்.

இப்படி பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சுபவர்களை சும்மா விட்டால் நிகழ்ச்சி ஒரு நிலையில் மட்டும் வளர்ந்து கொண்டே போகும். அதாவது, தராசின் ஒருபக்கத்தில் ஓவியாக்கான மாஸ் மற்றும் வெயிட்டேஜ் மட்டும்  கூடிக்கொண்டே போகும். அது நாளடைவில் ரசிகர்களுக்கு சலிப்புணர்வைக் கூட்டலாம். ஒரு சிறிய தவறு ஓவியாவின் பக்கம் நிகழ்ந்தாலும் கூட அதை பெரிதுபடுத்தி விடுகின்றனர் நெட்டிசன்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிக் பாஸ் வீட்டில் ஓவியா முதன் முறையாக அழுததை அனைத்து மட்டங்களிலும் வெவ்வேறு நிலையில் பார்த்ததுதான். இப்படி ஓவியாவுக்கு நிகழும் சிறு சிறு மாறுதல்களைக் கூட அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கும் நெட்டிசன்களுக்கு புதிய தீனி  போடவே பிந்துவை உள்ளே சேர்த்துள்ளனர். இதை 'Retaining Situational Equilibrium' என்றும் உளவியல் ரீதியாகக் கூறலாம். அதாவது சூழலுக்கு ஏற்றாற்போல் சமநிலையைக் கொண்டுவருவது.

இதனடிப்படையில், 15 பேரில் 6 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 9 பேர் மட்டுமுள்ள நிலையில், 34வது  நாளன்று புது போட்டியாளரைக் களமிறக்கியுள்ளது பிக் பாஸ். கமல் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் அனைவைரையும் 'வாவ்' போடா வைத்த ரகம்.

'தெலுங்கில் பிக் பாஸ் நடந்தாலும் தமிழ் பிக் பாஸ்தான் எனக்குப் பிடிக்கும்" என்றும் ’வீட்டுக்குள் நுழைந்தவுடன் உங்களுக்கு யார் போட்டியாளராக இருப்பார்’ என்றும் கமல் கேட்டதுக்கு, "கண்டிப்பாக எல்லாருக்கும் தெரியும்; ஓவியாதான் எனக்கு போட்டி" என்று மிக இயல்பாக பதிலளித்துள்ளார். 

மேலும், இதுகுறித்து பிந்து மாதவி மற்றும் ஓவியாவின் ஜோடியாக திரைப்படங்களில் நடித்து இருவரிடமும் நட்பு பாராட்டி வரும் நடிகர் விமலிடம் சில கேள்விகளைக் கேட்டோம். இவர் ஓவியாவுடன் களவாணி, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு போன்ற படங்களிலும் பிந்து மாதவியுடன் தேசிங்கு ராஜா, கேடி பில்லா  கில்லாடி ரங்கா  போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

"பிக் பாஸ் தொடர்ந்து பாக்குறீங்களா? அதைப் பற்றி உங்களோட கருத்து..."

"நான் தொடர்ந்து பார்க்க ட்ரை பண்றேன். பெரும்பாலும் எல்லா எபிஸோடுகளையும் பார்த்துருவேன். ஷூட்டிங் இருக்குற சமயங்களில் மட்டும் மிஸ் பண்றதுண்டு. இருந்தாலும் ஓவியாவுக்காக நெட்டுல பாத்துருவேன். ஆனா, அந்தக் கண்ணீர் விட்ட எபிஸோடை மட்டும் எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். இப்போவாரைக்கும் பார்க்க முடியல. மத்த சீரியலோட ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிக் பாஸ் நல்ல நிகழ்ச்சிதான். அதனால தானே மக்களும் அதிகமா விரும்புறாங்க...பார்க்குறாங்க..."

"ஓவியாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமா இருக்குறதைப் பத்தி என்ன நெனைக்குறீங்க?"

"மக்கள் நெனைக்குறது கரெக்ட்தான். அவங்க உண்மையா இருக்கறதுனாலதான் உண்மையான அன்பும் கிடைக்குது. அதுமட்டுமல்லாம, களவாணி படத்தோட பாதிப்பும் லேசா இருக்குதுன்னு நினைக்குறேன். ஓவியா இப்போ மட்டுமில்ல அந்தப் படத்துல கியூட் ஸ்கூல் பொண்ணா நடிச்சதுல இருந்தே மக்கள் மனசை கவந்துட்டாங்கனுதான் சொல்லணும். ஏன்னா அந்தப் படம் கிராமத்துப் பக்கம் நல்ல வரவேற்பை அள்ளுச்சு. தவிர  அவங்க வீட்டுக்குள்ள சும்மா இருக்காம ஏதாவது ‘துறு துறு'னு செஞ்சுக்கிட்டே இருக்குறது பார்குறவங்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கு. அது ரசிக்குற மாதிரியும் இருக்கு. அதனால எல்லாரும் ஓவியாவை அவங்க வீட்டுப் பொண்ணா நெனைக்கிறது எனக்கும் சந்தோசம்தான்."  

"நீங்க செட்டுல பார்த்த ஓவியாவுக்கு இப்போ வீட்டுல பார்க்குற ஓவியாவுக்கு ஏதாச்சும் வித்தியாசம் இருக்கா?"

"வித்தியாசமா...நோ சான்ஸ்...ரெண்டு ஓவியாவும் ஒரே மாதிரிதான். என்னைப் பொறுத்தவரை அவங்க நேரத்துக்கு நேரம் மாறுகிற ஆளு இல்லன்னு நெனைக்குறேன். அவங்க தன்னோட துக்கத்தைக் கூட யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க. அவங்க அம்மா இறந்த விஷயமே எனக்கு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரியும். தன்னை சுத்தி இருக்குறவங்களை சந்தோஷமா வச்சுக்கணும்னு அவங்க எப்பயும் நெனக்கிறது உண்டு. செட்டுல எப்படி ஓவியாவை  பார்த்தேனோ, 90% அப்படியேதான் இருக்காங்க. மீதி என்ன அந்த 10% மாற்றம்னு உடனே யோசிக்காதீங்க. அது அந்தப் படத்துக்காக அவங்க கொடுக்குற கேரக்டர் சேன்ஜ் ஓவர்."

"ஓவியா-பிந்து மாதவி ரெண்டு பேரும்  எப்படி...'

'ரெண்டு பேருமே அச்சு அசலா ஒரே மாதிரி கேரக்டர்தான். ரொம்ப பொறுமையா இருப்பாங்க. சூழ்நிலையை நல்லா அலசி ஆராய்ந்து அதுக்கேத்த மாதிரி நடந்துக்குற பக்குவம் ரெண்டு பேருக்குமே உண்டு. ஷூட்டிங் ஸ்பாட்ல கூட ரொம்ப சகஜமா பழகுவாங்க. எல்லாரையும் ஈர்க்குற மாதிரி துறு துறு கேரக்டர்ஸ். செம்ம ஜாலி பர்சனாலிட்டீஸ்."

"சரி...அப்போ ரெண்டு பேரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள எப்படி இருப்பாங்கனு நெனைக்குறீங்க?"

"பிக் பாஸ் சரியாத்தான் பிந்துவை களம் இறக்கியிருக்காரு. ரெண்டு பேருக்குமே போட்டிகள் வரலாம். ஆனா, எதையுமே கூலா ஹேண்டில் பண்ற ஆளுங்க அவங்க. சொல்லப் போனா பிந்துவும்- ஓவியாவும் வேற வேற இல்ல. ஆனா, பிந்துவுக்கு ஏற்கெனவே உள்ள நடந்த பல விஷயங்கள் தெரியும். பிக் பாஸ் வீட்டை அவங்க ஒரு பார்வையாளரா நல்லா அலசி ஆராய்ந்துருப்பாங்க. ஓவியாவை இந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். அதனால, பிந்து சூழ்நிலை தெரிஞ்சு நடிக்கப் போறாங்களா, இல்ல உண்மையா இருக்கப் போறாங்களான்னு பொறுத்திருந்துப் பார்க்கலாம்." 

"உங்களைப் பொறுத்தவரை யாரு வெற்றிவாகை சூடுவாங்க..."

'ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது'ன்றதோட எதுவுமே நிரந்தரமும்  கிடையாது'ன்றதையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க. அதுதான் உண்மையும் கூட. நாளைக்கு நிலவரம் என்னன்னு நமக்கே தெரியாது. ஸோ, யாரு ஜெயிப்பாங்கன்னு நான் ஒருபோதும் கணிக்க மாட்டேன்."

"உங்க ஓட்டு யாருக்கு பாஸ்..."

"இப்போதைக்கு என்னோட ஆதரவு ஓவியாவுக்குத்தான். இது அவங்க என்னோட நட்பு'ன்றதுக்காக சொல்லல, எல்லாமே அவங்களோட கேரக்டருக்குக் கிடைத்த அங்கீகாரம்னுதான் சொல்லணும். பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டுக்குள்ள எப்படி இருக்குறாங்கனு பார்த்துட்டு அவங்களுக்கும் என்னோட ஆதரவைத் தெரிவிப்பேன். ஏன்னா ரெண்டு பேருமே ஒரே மாதிரி தானே."

"பிக் பாஸுக்கு உங்களை கூப்பிட்டா போவீங்களா?"

"எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராம சும்மா இருந்தா போவேன். அதுமட்டும் இல்லாம இத்தனை நாள் ஒரு வீட்டுக்குள்ள இருக்குறது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும்.  நான் கூத்துப்பட்டறைல  கொஞ்ச காலம் ட்ரைனிங்ல இருந்தேன். அங்கேயும் இப்படித்தான் 15 பேரோட சேர்ந்து பயணிச்சது ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துச்சு. கதையைக் கேட்கும் போது நீங்க இந்த கேரக்டராவே மாறணும்னு  சொல்லிக்கொடுத்து நடிப்புத் திறனை வளர்த்தாங்க. அதே மாதிரிதான் பிக் பாஸ்லையும்'கேரக்டர் கேமெல்லாம் வைக்குறாங்க. அதைப் பார்க்கும் போது ...ச்சா..நம்ம இதை எப்பவோ பண்ணிட்டோமே'ன்னு நெனச்சுக்குவேன். ஸோ, அப்படி ஒரு வாய்ப்பு வந்தா பார்ப்போம்" என்று முடித்தார் விமல். 

அடுத்த கட்டுரைக்கு