Published:Updated:

"அந்த ரெண்டு விஷயம் என்னை பிஸியா வைச்சிருக்கு!" - 'காதலிக்க நேரமில்லை' சந்திரா

கு.ஆனந்தராஜ்
"அந்த ரெண்டு விஷயம் என்னை பிஸியா வைச்சிருக்கு!" - 'காதலிக்க நேரமில்லை' சந்திரா
"அந்த ரெண்டு விஷயம் என்னை பிஸியா வைச்சிருக்கு!" - 'காதலிக்க நேரமில்லை' சந்திரா

"பல மொழிகளிலும் சினிமா, சீரியல்னு ஆடியன்ஸ் ரசனைக்கேற்ப காதல், சென்டிமென்ட், காமெடினு பல வெரைட்டியான ரோல்களில் நடிச்சுட்டேன். இதையெல்லாம் தாண்டி மனசுக்கு நிறைவான ஒரு கேரக்டருக்காக காத்திருக்கிறேன். இதுக்கு நடுவில் பெயின்டிங்ல தீவிர கவனம் செலுத்திட்டிருக்கேன். 'மனசெல்லாம்' புத்துணர்ச்சியைக் கொடுக்குது" எனப் புன்னகைக்கிறார் நடிகை சந்திரா லஷ்மணன். 'மனசெல்லாம்' திரைப்படம்தான் இவரின் முதல் திரை அறிமுகம். சினிமா, சீரியல்களில் கலக்கியவர். 

" 'மனசெல்லாம்' என்ட்ரி எப்படி கிடைச்சுது?" 

"ஸ்கூல் படிக்கிறப்போ பூர்வீகமான கேரளாவிலிருந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆனோம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸில் சேர்ந்ததும் மாடலிங்லயும் இறங்கினேன். சில விளம்பரப் படங்களிலும் நடிச்சுட்டிருந்தேன். அந்தச் சமயத்தில், ஆனந்த விகடனில் என் கவர்ஸ்டோரி பேட்டி வந்துச்சு. அதன் வால்போஸ்டரைப் பார்த்துதான் சினிமா வாய்ப்பு வந்துச்சு. 'மனசெல்லாம்' படத்தில் ஶ்ரீகாந்த் தங்கச்சியா நடிச்சேன்.'' 

"சினிமா டு சீரியல்னு கலக்கின அனுபவம்..." 

"தமிழில் முதல் படத்துக்குப் பிறகு, மலையாளத்தில் பிரித்திவி ராஜூக்கு ஜோடியா நடிச்சேன். அந்தப் படம் ரெண்டுப் பேருக்குமே பெரிய பிரேக் கொடுத்துச்சு. தொடர்ச்சியா மூணு படங்களில் சேர்ந்து நடிச்சோம். அடுத்து, மலையாள சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். சீரியல்ல நடிச்சா, சினிமா வாய்ப்பு வராதுனு பயப்படுவாங்க. எனக்கு அப்படி நடக்கலை. சினிமா, சீரியல்னு மாறி மாறி நடிச்சுட்டிருந்தேன். குறுகிய காலத்திலேயே மலையாளத்தில் நல்ல அடையாளம் கிடைச்சது." 

"தமிழின் ரீ-என்ட்ரி சீரியல்மூலம்தானே ஆரம்பிச்சது?" 

"ஆமாம்! மலையாளத்தில் பிஸியா நடிச்சுட்டிருந்தபோது, சன் டிவியின் 'கோலங்கள்' வாய்ப்பு கிடைச்சுது. அந்த சீரியல்ல ஹீரோயினா நடிச்ச தேவயானி மேம், கர்ப்பமா இருந்தபோது பிரேக் எடுத்துக்கிட்டாங்க. அந்தச் சமயத்தில் ஹீரோயினுக்கு ஈக்குவலா ஒரு கேரக்டரை கொண்டுவர நினைச்சாங்க. அப்படித்தான், அந்தச் சீரியலின் கங்கா ரோலில் கமிட் ஆனேன்.'' 

"டிரெண்ட் செட்டரான 'காதலிக்க நேரமில்லை' சீரியல் அனுபவம் பற்றி..." 

" 'கோலங்கள்' சீரியலுக்கு அடுத்து, விஜய் டிவியின் 'காதலிக்க நேரமில்லை' ஹீரோயினா நடிச்சேன். அதுவரை சீரியல்னாவே சென்டிமென்ட், அழுகைனு இருந்துச்சு. யங்ஸ்டர்ஸ் காதல் மற்றும் வேலைச் சூழலை அழகாகப் பிரதிபலித்த 'காதலிக்க நேரமில்லை' பெரிய டிரெண்ட்டை உண்டாக்கிடுச்சு. இளைஞர்கள் நிறைய பேர் அந்த சீரியலைப் பார்த்து ரசிச்சாங்க. 'என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு' என்கிற சீரியலின் டைட்டில் சாங் இளைஞர்களின் ரிங்டோனா இருந்துச்சு. இப்போவரை பலரும் அந்த சாங்கை காலர் டியூனாக வெச்சிருக்கிறாங்க. எங்காவது அந்தப் பாடல் ஒலிக்கிறதைக் கேட்டால், அப்படியே பரவசமாகி நின்னுடுவேன்.'' 

"அடுத்தடுத்து மூன்று மொழிகளிலும் முப்பது சீரியல்களில் நடிச்சு முடிச்சுட்டீங்களே..." 

"ஆமாம்! 'காதலிக்க நேரமில்லை' சமயத்திலேயே 'வசந்தம்', 'மகள்', 'பாசமலர்' உள்ளிட்ட பல சீரியல்களில், தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடிச்சேன். பதினைந்து வருஷத்துக்குள் முப்பது மெகா சீரியல்கள். அதோடு நிறையப் படங்களிலும் நடிச்சிருக்கிகேன்னு நினைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு. இப்போ ஆறு மாசமா பிரேக் எடுத்திருக்கிறேன். இதுவரை இல்லாத வகையில் ஸ்பெஷலானா கேரக்டரில் நடிக்க ஆசை. அதனால்தான் மூன்று மொழிகளிலும் பல வாய்ப்புகள் வந்தும் அதையெல்லாம் மறுத்துட்டேன்." 

"ஆக்டிங் டு பிசினஸ்  என்ட்ரி..." 

(சிரிப்பவர்) "என் அம்மா நல்லா பெயின்டிங் பண்ணுவாங்க. பிஸியாக நடிச்சுட்டிருந்தப்பவே நானும் பெயின்டிங் கத்துக்கிட்டேன். அம்மாவும் கிளாஸ் எடுக்கிறது, தெரிஞ்சவங்களுக்கு பெயின்டிங் செஞ்சுக் கொடுக்கிறதுன்னு இயங்கறாங்க. நிறையப் பேர் பெயின்டிங் கேட்கவே, அதையே பிசினஸா செய்யலாம்னு முடிவெடுத்தாங்க. வித்தியாசமா, சேலைகளில் பெயின்டிங் செய்ய ஆரம்பிச்சாங்க. அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. 'மியூரல் ஆரா' என்கிற பிராண்ட் பெயரில் சாரீஸ், ஃபர்னீச்சர், அலங்காரப் பொருள்கள் எனப் பலவற்றிலும்... கேரளா மியூரல், கேன்வாஸ், வார்லி எனப் பல வகையான பெயின்டிங் செய்ய ஆரம்பிச்சோம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு. அப்பா டிசைனிங் செய்ய, நானும் அம்மாவும் பெயிங்டிங் செய்வோம். பெரிய போர்வை மாதிரியான துணியில் கடவுள், மனிதர்கள், வித்தியாசமான உருவங்களை வரைஞ்சுகொடுக்க பெரிய டிமான்ட் இருக்குது. அப்படியான பெயின்டிங்கை உருண்டு புரண்டு பல நாள்கள் டைம் எடுத்து செஞ்சு முடிப்பேன். கூடவே, ஜூவல்ஸ் செஞ்சும் சேல்ஸ் பண்ணிட்டிருக்கேன். லைஃப் புது ஸ்டைலில் பரபரப்பா போயிட்டிருக்கு" எனப் புன்னகைக்கிறார் சந்திரா லஷ்மணன்.