ஃபெப்சி பஞ்சாயத்து... காலா படப்பிடிப்பு நிறுத்தம்; துப்பறிவாளவன் ஷூட்டிங் நடக்கிறது!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால்,  `ஃபெப்சியுடன் தயாரிப்பாளர் சங்கம் செய்துவைத்திருந்த ஒப்பந்தம் ரத்து' என எப்போது அறிவித்தாரோ, அப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டது பரபரப்புப் பஞ்சாயத்து. `ஃபெப்சி ஒப்பந்தம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் பரிசிலீக்க வேண்டும்' என்றும் `ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஃபெப்சி வேலைநிறுத்தம் செய்யும்'  என்றும் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.

ஃபெப்சி

ஃபெப்சி கிராஃப்ட்டில் அங்கம் வகித்துவரும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்  `ஃபெப்சி ஸ்டிரைக்கில் கலந்துகொள்ள மாட்டோம்' என அறிவித்திருப்பதைக் கண்டு செல்வமணிக்குக் கடும் அதிர்ச்சி. சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, செயலாளராக வெற்றிபெற்றவர் செல்வமணி என்பது குறிப்பிடத்தக்கது.  ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து `ஃபெப்சி போராட்டத்தில் கலந்துகொள்வதில்லை' என அறிவித்திருக்கிறது.

முக்கியமாக, படப்பிடிப்பில்  நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர்கள் இல்லாமலும், சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட்  மாஸ்டர்கள் இல்லாமலும் படம்பிடிப்பது மிகமிகச் சிரமம். அந்த இரண்டு சங்கங்களும் ஃபெப்சி வேலைநிறுத்தத்தில் `நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்' என அறிவித்துள்ளன. சினிமா உலகில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஃபெப்சி வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது. சென்னை ஃபிலிம் சிட்டியில் நடந்துகொண்டிருந்த `வணங்காமுடி' படப்பிடிப்பை  ஃபெப்சி அமைப்பினர் நிறுத்திவிட்டதாகச் செய்தி பரவிவருகிறது. மேலும், `சிதம்பரம் அருகில் இருக்கும் பிச்சாவரத்தில்  விஷால் நடித்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம்'  என ஃபெப்சி தெரிவித்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, இயக்குநரும் தயாரிப்பாளருமான ப்ரவீன்காந்திடம் பேசினோம்.

``கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த டெக்னாலஜி வேறு, தற்போதுள்ள நிலைமை வேறு. சாதாரண கேமராவில் படம்பிடித்தாலே போதும், DIA வாயிலாகச் சுலபமாகச் சரிசெய்துவிடலாம். ஒரு கார் விளம்பரப் படத்தை எடுத்தேன். அதற்கு ஃபெப்சியிலிருந்து ஐந்து பேர் மட்டுமே தேவை. அழைத்தேன். வேண்டுமென்றே 10 நபர்கள்  வந்து `போக மாட்டோம். சம்பளம் கொடுங்கள்!' என அடம்பிடித்தனர். லலிதா ஜுவல்லரி விளம்பரப்  படப்பிடிப்பின்போது நான் பட்டப்பாட்டைச் சொல்லிமாளாது. இரு விளம்பரப் படங்களை எடுப்பதற்கு மூன்று லட்சம் ரூபாய் எனத் திட்டமிட்டுச் செயல்படுவோம். விளம்பரப் படப்பிடிப்பின்போது `ஒரு மணி நேரத்துக்கு ஏழு லிட்டர் டீசல் வேண்டும். பணம் கொடுங்கள்' என்று என்னிடம் வந்து நிற்பார்கள். குறிப்பாக, ஃபெப்சியைச் சேர்ந்த நான்கு டிபார்மென்ட்டைச் சேர்ந்தவர்கள் காலையில் இருந்தே நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.  தமிழ் சினிமாவில் நிறைய இயக்குநர்கள் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்கள். லிங்குசாமி தயாரிப்பளராகி ஃபெப்சியில் மாட்டிக்கொண்டு தவித்த கதைகள் நிறைய இருக்கின்றன. 

துப்பறிவாளன் ஷூட்டிங்

 நான் ஒரு தயாரிப்பாளர். அதையும் தாண்டி ஓர் இயக்குநர்.  ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர்தான் கேப்டன். நாங்கள் படமாக்கும் காட்சி பற்றியச் சிந்தனையோடு வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஃபெப்சியில் இருப்பவர்கள் `சார், 2 மணிக்குள் ஷூட்டிங் முடிச்சுடுங்க' என்று எங்களுக்கு உத்தரவுபோடுவது எந்த விதத்தில் நியாயம்?  நான் யோசித்து வைத்திருந்த அத்தனை க்ரியேட்டிவ் காட்சிகளும் ஒரே நிமிடத்தில் உருக்குலைந்துபோய்விடும். நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவோடு  வரும் இளைஞர்களிடம் வித்தியாசமான புதிய புதிய சிந்தனைகள் எழுகின்றன. படப்பிடிப்பில் ஃபெப்சி அமைப்பினர் செய்யும் கெடுபிடிகளால் அவர்களின் சிந்தனைகளும் கற்பனைகளும் முடக்கப்பட்டு, வேலை செய்ய முடியாமல் மனம் புழுங்கித் தவிக்கின்றனர். ஃபெப்சி அமைப்பினர், தங்கள் ஸ்டிரைக்கை ஏதோ பானிபட் போர் மாதிரி க்ரியேட் செய்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. ஷூட்டிங் நடக்கும் இடத்தில் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னால் `ஏன்?' எனக் காரணம் கேட்போம். அப்படியே மீறிப்போனால், படப்பிடிப்பில்  ஒரு மணி நேரம் பிரேக் ஏற்படும் அவ்வளவுதான். மறுபடியும் படப்பிடிப்பு தொடரும்.

விஷால் நடித்துவரும் `துப்பறிவாளன்' படப்பிடிப்பு, சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா தளத்தில் நடந்துகொண்டிருக்கிறது. விஷால் மேனேஜர் முருகு ராஜேந்திரனிடம் பேசினேன். `ஷுட்டிங் பிரமாதமாக நடக்கிறது. மிஷ்கின் கூலாக டைரக்‌ஷன் செய்துகொண்டிருக்கிறார்' என்றார். தமிழ் தயாரிப்பாளர்களின் அறிவிப்பும்  ஃபெப்சியின் ஸ்டிரைக்கும் ரஜினி சாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் `காலா' படப்பிடிப்பை நடத்தாமல் தற்போது நிறுத்தியிருக்கிறார். அநேகமாக, நாளையோ அதற்கு மறுநாளோ `காலா' ஷூட்டிங்கில் ரஜினி சார் கலந்துகொள்வார்" என்று விளக்கம் சொன்னார் இயக்குநர் ப்ரவீன்காந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!