Published:Updated:

ஓவியாயிஸம்... ஜூலியிஸம்... கல்லூரிகளின் வைரல் பழக்கம்!

ஓவியாயிஸம்... ஜூலியிஸம்... கல்லூரிகளின் வைரல் பழக்கம்!
ஓவியாயிஸம்... ஜூலியிஸம்... கல்லூரிகளின் வைரல் பழக்கம்!

'ஓவியா' என்ற தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் ஒரு நாளும் நிறைவு பெறாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஓவியாவுக்கு தினந்தினம் புது வரவு வாக்குகளும் பேராதரவுகளும் குவிந்த வண்ணமே உள்ளன. ஓவியா புரட்சிப் படையில் தொடங்கி அகில இந்திய ஓவியா பேரவை வரை பேரன்பை அள்ளித்தெளிப்பவர்களில் கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் என்றும் சொல்லலாம். ஒன்றரை மணி நேர டிவி ஷோவில் ஒன் கேர்ள் ஆர்மியாக செயல்பட்டு ஆயிரமாயிரம் லைக்குகளையும், ஷேர்களையும் தன் வசம் இழுத்த ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ஃபாலோயர்ஸும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். அத்தனைக்கும் காரணம் அவருடைய நேர்மையும், தன்னலமில்லா செயல்பாடுகளும் தான். அவர் ஆடுவதில் தொடங்கி அழுவது வரைக்கும் அத்தனையும் வசீகர விமர்சனங்களால் வாயை அசைபோட வைத்தன. 

மேலும், இந்த ஓவியா மேனியாவின் மற்றுமொரு அவதாரம் தற்போது வைரலாகி வரும் 'ஓவியாயிஸம்' எனும் வார்த்தைதான். இது வெறும் வார்த்தை மட்டுமல்ல கல்லூரிகளில் பின்பற்றப்படும் ட்ரெண்டும் கூட. அதென்ன ஓவியாயிஸம்..."ஓவியாவை ஃபாலோ பண்றதுக்கு பேருதான் 'ஓவியாயிஸம்'னு வச்சிருக்கோம். எங்களுக்கு பெரும் முன்னோடியா சமீபகாலத்துல அவங்கதான் இருக்காங்க" என்று அசத்தலாக பதிலளித்தனர் கல்லூரி மாணவர்கள்.

என்ன நடந்தாலும் சரி 'Take it Light', 'Walk off from that Place' போன்ற வார்த்தைகள்தான் மாணவர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. "பாய் ப்ரெண்ட் பிரச்னை, புரளி பேசும் பழக்கம், காலேஜ் தடாலடி, நண்பர்களோட லடாய் இப்படி எதுவாக இருந்தாலும் 'டேக் இட் லைட்' பாலிசியை கடைபிடிக்கலாம்" என்று புதிய ட்ரெண்டை உருவாக்கி, நமது அத்தனை செயல்களிலும் பிக் பாஸ் மயம் உள்ளது என்று நிதர்சனத்தை தெரிவிக்கின்றனர் நவீனகாலத்து ஃபன் கிரியேட்டர்ஸ்.

தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி மஞ்சுளா அவர்களிடம் பேசினோம். "ஒரு நடிகையை படத்தில் பார்த்து அவர்கள் போடுகிற உடை, பேசுகிற டயலாக் போன்றவற்றை காப்பி அடிப்பத்தை விட. அவர்களின் நல்ல குணங்களை பின்பற்றுவது நல்லதுதானே" என்று

கூறினார். மேலும் இவரிடம் ஓவியாயிஸம் என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக ஜூலியிஸமும் இருக்கும் தானே என்றும் கேட்டோம். "ஆமாம். கண்டிப்பாக....ஜூலியை நாங்கள் எல்லாரும் ஒரு களப்போராளியாகத்தான் பார்த்தோம். ஆனால், நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதம் அப்படியே எதிர்பார்ப்பிற்கு மாறாக உள்ளது. ஜூலி பிக் பாஸில் கலந்து கொள்ளாமல் தனது களப்பணியை மட்டும் செய்திருந்திருக்கலாம். இருப்பினும் ஜல்லிக்கட்டில் பார்த்த அதே ஜூலியைத்தான் நாங்கள் மறுபடியும் பார்க்க நினைக்கிறோம். மற்றவர்களைப் பற்றி தவறாக விமர்சிப்பதும், புரளி பேசுவதும், மூட்டிக்கொடுப்பதும் என அனைத்தையும் விட்டுவிட்டு நல்ல படியாக இருந்தால் அவருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் ஜல்லிக்கட்டு ஜூலியை நாங்க இன்னும் மறக்கவில்லை" என்று பதிலளித்தார். 

இதுமட்டுமல்லாமல், ஓவியாவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசினால் மாணவர்கள் சந்தோஷமடைகின்றனர் என்றும் கூறுகிறது மாணவர் தரப்பு. அது ஒரு நல்ல காரியம் செய்வதாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் தன்னைப் பற்றி பேசும் போது ஒதுங்கி வருவதாக இருந்தாலும் சரி, எதையுமே பெரிது படுத்தாமல் மற்றவர்களைக் குறை கூறாமல் இருந்தாலும் சரி. இவற்றில் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் அவர்களையும் ஓவியாயிஸ டீமில் சேர்த்து விடுகிறார்களாம்.

அதே சமயம் ஜூலியின் நடவடிக்கைகளுக்கு ஏற்றாற்போல கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. கோல் மூட்டி விடுவது, கெட்ட விஷயங்களைப் பரப்புவது என்று எது செய்தாலும், 'நீ ஜூலியிஸத்தை ஃபாலோ பண்ற' என்று ஏகபோகமாக கலாய்ப்பதும் கண்டிப்பதுமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதைப்பற்றி ஊடக ஆய்வுகள் பயிலும் மாணவர் லட்சுமிகாந்த் பாரதியிடம் பேசினோம். "ஜூலி என்னதான் தவறு செய்தாலும், மக்கள் இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிப்பது தவறு என்றுதான் நினைக்கிறன். உள்ளே நடக்கும் பிக் பாஸ் அரசியலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சினிமா துறை சார்ந்த நபர்களை நல்ல விதமாகவும், சினிமா அல்லாதவர்களை வேறொரு விதமாகவும் காண்பிப்பதுதான் அது. ஆரம்பத்தில் காயத்திரி கூறிய வார்த்தைகளை வைத்துத்தான் இதை நான் கூறுகிறேன். 'அவர் நாமெல்லாம் சினிமா பெர்சனாலிட்டீஸ். அதனால் நமக்குள் ஒத்துப் போய்விடும். ஆனால் ஜூலி அப்படியல்ல' என்று காயத்ரி கூறியதை நாம் நினைவில் வைத்துதான் ஆக வேண்டும். ஜூலியை ஒதுக்கி வைப்பதால் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க இப்படியான முட்டாள்தனமான காரியங்களில் அவர் ஈடுபடுவது என்பது தவறு. எங்கள் கல்லூரியிலும் ஜூலியிஸத்தை பின்பற்றுகிறோம். அதாவது ஜூலி மாதிரி ஏதாவது தவறு செய்தால் 'ஜூலியிஸம்' என்று கூறி கலாய்ப்பதுதான்" என்று கூறினார். 

அகில இந்திய மாணவர் பேரவையின் துணை செயலாளர் வெண்மணி பிரியாவிடம்  கேட்டோம். "ஓவியாவின் நல்ல குணங்களை வரவேற்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. கல்லூரி மாணவர்கள் தற்போதைய ட்ரெண்ட் என்னவோ அதைப் பின்பற்றுவது வழக்கம்தான். 'நீ ஜூலியிஸம் டீம்' என்று சொன்னதுமே அந்த அளவுக்கு நான் மட்டம் இல்லை என்று கூறி தவறை உடனே திருத்திக்கொள்ளும் அளவுக்கு மாணவர்களின் மனப்பான்மை இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி அவரவர்களே தங்களின் நடத்தையை மதிப்பிட்டுப் பார்த்து சரி செய்வதுதான் சிறந்தது. அப்படி செய்தால் ஓவியாயிஸம்- ஜூலியிஸத்தால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது" என்று தெரிவித்தார். 

பிக் பாஸ் வீட்டில் எவரேனும் ஒருவர் தவறாக நடந்துகொண்டால் அதை மறுகணமே நம் வீட்டுச் சொந்தக் கதை போல் புறம் பேச ஆரம்பித்து விடுகிறோம். தவறை திருத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் மீதுள்ள குறையையே பெரிதாக எண்ணுகிறோம். அசிங்கமான வார்த்தைகளை உபயோகிப்பதற்குக் கூட நாம் தயங்குவதில்லை. அத்தனைக்கும் காரணம் நமக்குள் இருக்கும் 'ஈகோ க்ளாஷ்' தான். அந்த ஈகோவானது வாழ்க்கைப் பந்தயத்தில் மற்றவர்கள் நம்மை விட்டு முந்தாமல் பின்தள்ளும் மனப்பான்மையை வளர்கிறது. அது தவறு என்று சரியாக புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு தவறைத் திருத்திக் கொள்ள வழி விட்டு, நாமும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் போதுதான் அந்த உறவுகளுக்கான அர்த்தம் மேம்படுகிறது. எனவே, போட்டியாளர்களை சிறு பிள்ளைத்தனமாக மோதவிடும் பிக் பாஸ் யுக்திக்குள் நாமும் சிக்காமல் நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளவேண்டும். பின் ஓவியாயிஸம் - ஜூலியிஸத்தால் என்ன செய்ய முடியும். எல்லாமே வாழ்க்கையில் 'டேக் இட் லைட்' தான். 

loading...
அடுத்த கட்டுரைக்கு