Election bannerElection banner
Published:Updated:

கட்டம் கட்டும் நாலு பேர்.. கண்டுகொள்ளாத ஓவியா! #BiggBossTamil

கட்டம் கட்டும் நாலு பேர்.. கண்டுகொள்ளாத ஓவியா! #BiggBossTamil
கட்டம் கட்டும் நாலு பேர்.. கண்டுகொள்ளாத ஓவியா! #BiggBossTamil

கட்டம் கட்டும் நாலு பேர்.. கண்டுகொள்ளாத ஓவியா! #BiggBossTamil

வெள்ளிக்கிழமை ‘சஸ்பென்ஸ்’ போல பல்லக்கெல்லாம் காட்டி பில்ட் அப் கொடுத்தபோதே, பின்னணியில் ஒலிபரப்பிய பாடலை வைத்து நம் நெட்டிசன்கள் ‘பிந்து மாதவி’ப்பா என்று கண்டுபிடித்துவிட்டார்கள். ஞாயிறன்று பிக் பாஸ் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்த பிந்து மாதவியைப் பார்த்ததும் ஓவியாவை சப்போர்ட்டர்கள் மனம் மாறிவிடுவார்களோ என்று அங்கங்கே விவாதங்கள்.. விமர்சனங்கள்!

ஓவியாவுக்குப் பிந்து மாதவி போட்டியா என்பதை விடுங்கள். இப்போது வரை அவர் அச்சுறுத்தல் இல்லை என்று தெரிகிறது. ஓவியாவுக்கு அச்சுறுத்தல் யார் யார்? 


ஓவியா பிக் பாஸ் ஹவுஸுக்குள் நுழைந்தபோது, அவர் 15 பேரில் ஒருவர். ஆனால் இன்றைக்கு அவர் பத்தோடு பதினொன்றாம் நபர் அல்ல. இந்த இடம் அவருக்குக் கிடைக்கக் காரணம்.. அவர் அழகு, உடை என்றோ, ‘கேமரா முன்னாடி நின்னு அதையும் இதையும் காமிக்காறா’  என்று காயத்ரியைப் போலவோ, ‘ஓவியாவை பிக் பாஸும், சேனலும்தான் காப்பாத்துது’ என்று சினேகனைப் போலவோ யாரும் நினைக்கத் தேவையில்லை.

முதல்நாள் கேமராவைப் பார்த்து ‘ஒரே ஒரு பனானா குடேன்’ என்கிறார். கேமரா மேலும் கீழும் அசைகிறது. அதை ஓகே சொன்னதாய் நினைத்துக் கொண்டு ஸ்டோர் ரூம் ஓடுகிறார். பிறகு திரும்ப வந்து ‘எக்ஸ்பெக்ட் பண்ண வெச்சு ஏமாத்தாத. ஏன் இப்டிப் பண்ற?’ என்று கோபித்துக் கொள்கிறார். 

இதை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. அந்தக் கேமராவுக்குப் பின் கேமராமேன் இருப்பார் என்பது தெரியும். இல்லாவிட்டாலும் அப்படி, கேமராவைப் பார்த்துப் பேசும் குணம் கொண்டவராகத்தான் ஓவியா இருக்கிறார். அந்தக் கேமராவிடம் காட்டும் பரிவைத்தான் சினேகன், ஆரவ், சக்தி, காயத்ரி என்று எல்லாரிடமும் காட்டுகிறார். 

‘ஜுலி ‘ஸாரி’ கேட்டபிறகும் பொய் சொன்னதை ஏன் மன்னிக்க முடியவில்லை ஓவியாவால்” என்று சிலர் கேட்கிறார்கள். ஜூலி பொய் சொன்னது வெளிப்பட்ட அந்தக் குறும்பட நிகழ்வுக்குப் பிறகு கொஞ்சம் ரிலாக்ஸ்டாகத்தான் இருந்தார் ஓவியா. ஆனால் ஜூலி ‘நான் பொய் சொல்லல’ என்று எல்லாரிடம் போய்ப் பேசிக் கொண்டிருந்ததும், காயத்ரி ஆரவ்வை அழைத்து என்ன நடந்தது என்று விளக்கச் சொல்லி ஒரு கூட்டம் கூட்டியதும்தான் ஓவியாவை பாதித்தது. அதனாலதான் ‘நீ இன்னும் அதை உண்மைனு சொல்லிட்டிருக்கியா?’ என்று ஜூலியைப் பார்த்துக் கேட்கிறார். 

சரி, இப்போது ஓவியாவுக்குப் போட்டி யார் என்பது இருக்கட்டும். அச்சுறுத்தல்கள் யார் என்று பார்ப்போம். 

காயத்ரி: ஆரம்ப எபிசோடுகளில் 'மல்லிகையே மல்லிகையே’ பாடிக்கொண்டிருந்தனர் இருவரும்.  ஓவியாவைப் பொறுத்தவரை அன்றுமுதல் இன்றுவரை நன்றாகப் பேசினால் பேசுவார். ஆனால் என்ன, பொது விஷயங்கள் - ரசனை சார்ந்த பேச்சுகள்தான். புரணி பேசுவதென்பது அவருக்குப் பிடித்ததில்லை. ஆனால் காயத்ரிக்கு அதுதான் அல்வா. அதற்கு ஆர்த்திதான் சரியான சாய்ஸாக இருக்க, இருவருமாய் ஜூலியைக் கலாய்த்து பொழுதுபோக்கினர். ஆர்த்தி போனபிறகு நமீதாவுடன் கூட்டு. நமீதாவும் போனால் என்ற எண்ணம் வர, அப்போதிலிருந்தே ஜூலியை கிட்டத்தட்ட தன் சொல் பேச்சுக் கேட்கும் வேலையாள் போலவே நடத்திவந்தார் காயத்ரி. ஜுலிமீதும் அவருக்குப் பெரிய அபிப்ராயமில்லை. எனவே சக்தி, சினேகன் என்ற தன் வட்டத்தை எப்போதும் விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறார். நடுவில் கொஞ்சம் ஓவியாவுக்குத் தோழமை காட்டுவதுபோல் நடித்த இவர் சாயம், ஓவியாக்குக் கிடைத்த 'வீக்கெண்ட் க்ளாப்ஸ்'க்கு அப்பறம் வெளுத்துவிட்டது. பிந்து மாதவி வருகையும் அவருக்குக் கொஞ்சம் கிலி. அவரையும் தன் பக்கத்துக்கு இழுக்கவேண்டி ஓவியாவைக் கிண்டலடித்து அவரிடம் பேசுவதும், ரைசா ஓவியாவைப் பற்றிப் பேசும்போது ‘நாம பேசவேண்டாம். அவங்களே புரிஞ்சுக்குவாங்க’ என்று கேமரா கான்ஷியஸுடன் பேசுவதும் என்று சிலவற்றைச் செய்கிறார். 

இந்த வார நாமினேஷனில் 'ஓவியாக்கு சப்போர்ட்டாவே இருக்கார்' ஆரவ்வைச் சொன்ன இவர்தான், ஆரவ் ஓவியா மீது கொஞ்சம் கடுப்பில் இருப்பதை உணர்ந்து அவருக்கு சப்போர்ட்டாக இருப்பதுபோலப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆரவ்வும் தன் பக்கம் என்ற குதூகலம் அப்பட்டமாக முகத்தில் தெரிகிறது. இன்றைய தேதியில் உலகத்திலேயே ஒருநாளில் 48 மணிநேரம் ஓவியா பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர் இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும். 

சக்தி: 'இவர் பாட்டுக்கு தேமே என்றிருக்கார்’ என்று இவரைப் பற்றி பார்வையாளர்கள் நினைக்கவேண்டும் என்று பாடுபடுகிறார். அதனாலேயே கமல் ‘நீங்க என்ன நெனைச்சீங்க’ என்று கேட்கும்போது ‘ஐய்ய.. ஒண்ணும்ல சார்..’ என்று பதறுகிறார். ஆனால் சனி, ஞாயிறைத்தவிர மற்ற நாள்களில் இவர் செய்வதை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை.  தனக்கெதிராய் ‘எங்க அறைங்க பார்க்கலாம்’ என்று ஓவியா எழுந்ததையும், அதனால்  தன் பெயருக்கு இழுக்கு நேர்ந்ததையும் இன்றுவரை இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு காயத்ரியும் இவரும் நல்ல நட்பு வேறு. அந்த நட்பு பரஸ்பரம் ‘மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ இல்லாமல் வெறுமனே நகுதற் பொருட்டும், புறம் பேசவும் மட்டுமே செய்கிறது. அதனால்தான் இப்போதுவரை காயத்ரியிடம் 'ஏன் எப்பவுமே அடுத்தவங்க பற்றியே பேசிட்டிருக்க நீ?' என்று கேட்க இந்த நட்பால் முடியவில்லை. 

போதாக்குறைக்கு பிக் பாஸிடம் வாக்குமூலமே கொடுத்துவிட்டார். 'நான் இருக்கறவரை ஓவியாவை நாமினேட் பண்ணுவேன்' என்று. 'நீங்க ஓவியா திருந்த எத்தனை வாய்ப்புதான் கொடுப்பீங்க?' என்கிறார். திருந்த அவர் என்னடா தப்பு செய்தார் என்றால், இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு புறம் பேசாததுதான். வேலை செய்யவில்லை என்று எடுத்துக் கொண்டால் ரைசாவும் அந்தக் கேட்டகிரிதானே. ஆனால் அவர் மேக்கப் போடும் நேரம் தவிர, பாக்கி 4 மணிநேரம் இவர்களுடன் புறம் பேசிக்கொண்டு ஓவியாவை எதிர்ப்பதால் அவர் ஓகே. ஓவியா நாட் ஓகே. இதுதான் சக்தி நிலைப்பாடு. 

சினேகன்: இந்த நால்வரில் டேஞ்சரஸ் இவர்தான். எதிரிகள் ஓகே. ஆனால் இவர் போன்றவர்கள் ரொம்ப ஆபத்து. 'ஓவியா மீது பெரிய குற்றங்கள் இல்லை' என்பதை அறிந்திருக்கிறார். 'அந்தப் பொண்ணு ஜென்யூன்' என்று அவ்வப்போது சொல்கிறார். ஆனால் காயத்ரி மந்திரம் கேட்டால் பக்தனாக மாறிவிடுகிறார். ஒரு தலைவனாகவோ, நல்ல நண்பனாகவோ 'நீங்க ஏன் மாஸ்டர் எப்பப்பாத்தாலும் ஓவியா என்ன பண்றானு வருத்தப்பட்டுட்டே இருக்கீங்க? நீங்க பண்றது, அவரை ஒதுக்கறது தப்பு' என்று சொல்வதே இல்லை. காயத்ரி அருகில் இல்லாதபோதுகூட 'காயத்ரி  மாஸ்டர்' என்று பயந்த பேச்சுதான் இவரிடம்.

ஓவியாவுக்கு இவர் ஏன் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றால், ஓவியா இவரை நம்புவதுதான். 

ஆரவ்: ஆகச்சிறந்த சந்தர்ப்பவாதிகளில் ஒருவராக மாறியிருக்கிறார். பிக் பாஸ் ஹவுஸுக்கு வெளியே பலருக்கும் ஓவியாவைப் பிடிக்கக்காரணம் அவரது வெளிப்படைத்தன்மை. முதல் எபிசோடிலேயே சொல்லிவிட்டார்: 'நான் கேமரா இருக்கறத மறந்துடுவேன். அந்த கான்ஷியஸோட இருக்கறது எனக்கு சிரமம்' 

எதுவாக இருந்தாலும் சரி ஓபனாகத்தான் கேட்கிறார் ஓவியா. ஆனால் ஆரவ்க்கு அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இருக்கலாம்: இருக்கட்டும். ஆனால் ஓவியா தன்னுடன் நெருக்கமாக இருப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டவர் இவர்தான். தன் நிழலாக ஓவியாவைத் தேர்ந்தெடுத்தவர் இவர்தான். ஓவியா அருகில் இருக்க 'இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத்தான் என்ன?' பாடியவர் இவர்தான். ஆனால் இப்போது என்னவோ வெளியில் பார்ப்பார்களே என்று புலம்புகிறார். (பார்க்காவிட்டால் பரவாயில்லையா ஆரவ்?) ஓகே. அது அவரது பெர்சனல். ஆனால் ஒரு விஷயம் உறுத்துகிறது. 

யாரிடமோ பேசிக்கொண்டிருக்கும்போது "காயத்ரி மாஸ்டர்கூட நேத்து அட்வைஸ் பண்ணாங்க. 'அவ இப்டி பண்றது உன் பேரைக்கெடுக்கும்'னாங்க" என்றார். ஆக இவரது மாற்றத்துக்குப் பின்னாலும் காயத்ரியின் கைவண்ணம் இருக்கிறது. 

சரி, மனம் மாறுங்கள்; என்னமோ செய்யுங்கள். அந்தப் பெண் காதல் சொன்னதும், கைதொட்டுப் பேசியதும் உங்களிடம்தானே? அது என்ன, எல்லாரிடமும் போய் உடன் அப்படிப் பழகிய பெண்ணைப் பற்றி புகார் வாசிப்பது? ஆக ஆரவ்வும் ஓவியா நம்பக்கூடாதவராக ஆகிவிட்டார். 

இவர்கள் நான்குபேரிடமும் ஓவியா கவனமாக இருந்தால் போதும். மற்றவர்களால் பெரிய அச்சுறுத்தல் இல்லை. 

பிந்து மாதவி, இவர்கள் புறம்பேசும்போதெல்லாம் ஓரக்கண்ணால் சூசகமாக ஒரு பார்வை பார்க்கிறார். 'இவங்க ஏன் எப்பவும் அந்தப் பொண்ணப் பத்தியே பேசிட்டிருக்காங்க' என்று நினைத்திருப்பார். வெளியில் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருப்பதால் அவரும் ஓவியா ஆர்மியாகத்தான் இருக்கவேண்டும். ஒரு தளபதி போல ஓவியாவின் எதிரிப்படையை 'உறவாடிக் கெடுப்பார்'  என்று எதிர்பார்க்கலாம். அல்லது வேறு வழியின்றி அங்கே காலந்தள்ள அந்தக் கூட்டணிக்குத் தலையாட்டலாம். 

எதுவாகினும், எத்தனை பேரால் நாமினேஷன் ஆனாலும் ஓவியாவின் ப்ளஸ் பாய்ன்ட்டை அவர் விடாமல் இருத்தல் நலம். அது, அவர் அவராகவே இருப்பது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு