Published:Updated:

'பாஸ்கர் தி ராஸ்கல்' அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அர்விந்த்சாமி!

எம்.குணா
'பாஸ்கர் தி ராஸ்கல்' அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அர்விந்த்சாமி!
'பாஸ்கர் தி ராஸ்கல்' அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அர்விந்த்சாமி!

பொதுவாக முன்னணி நடிகர்கள் முதல் சாதாரண நடிகர்கள்வரை புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்ய வரும்போதே  முதலில் சம்பளத்தை பேசுவார்கள். அதன்பின் சம்பளத்தில் பெருந்தொகையை உஷாராக முன்கூட்டியே அட்வான்ஸ் பணமாக வாங்கிவிடுவார்கள். அடுத்து படப்பிடிப்புக்கு வரும் காலங்களில் தங்கள் உதவியாளர்கள் வாயிலாக இரண்டாம் கட்டமாக சம்பளப் பணத்தைப் பெறுவார்கள். மூன்றாம் நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிடும்,  போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிடும். அதன்பிறகு நடிகர்கள், நடிகைகள் டப்பிங் பேசும்பணி  ஆரம்பிக்கும். ஹீரோக்கள் பின்னணி குரல் கொடுப்பதற்கு முன்பே முழுசம்பளத்தையும் தயாரிப்பாளர் தந்துவிட வேண்டும் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விடுவார்கள். சில தயாரிப்பாளர்கள் பணநெருக்கடி காரணமாகப் படம் வெளியில் வியாபாரம் ஆனபிறகு, சம்பளத்தின் பாக்கி தொகையைத் தந்துவிடுகிறேன் என்று ஹீரோக்களிடம் சொல்லியிருப்பார்கள்.

இதுமாதிரி விஷயங்களில் அர்விந்த்சாமி விதிவிலக்கானவர். 'அடிதடி' படத்தைத் தயாரித்த முருகன், 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற படத்தில் கதாநாயனாக நடிப்பதற்கு முதலில் அர்விந்த்சாமியை அணுகினார். அவரும்  நடிப்பதற்கு மறுக்காமல் ஒப்புக்கொண்டார். சம்பளம் எவ்வளவு? எத்தனை நாள்கள் கால்ஷீட் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதே அர்விந்த்சாமிக்குத் தர வேண்டிய சம்பளத்தில் ஒரு பகுதியை அட்வான்ஸ் பணமாக கொடுப்பதற்கு முன்வந்தார் முருகன். அப்போது 'இப்போ எதுக்கு அட்வான்ஸ் பணம்? நான் ஷூட்டிங்குல நடிக்க வந்த பிறகு, அப்புறமா வாங்கிக்கிறேன். இப்போ நீங்களே வெச்சுக்கோங்க' என்று  சொல்லி அட்வான்ஸ் பணத்தை வாங்க மறுத்த அர்விந்த்சாமியைப் பார்த்து ஒரு நிமிடம்  அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார், முருகன். வழக்கமாக எந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டாலும், அந்தப்பட  தயாரிப்பாளருக்குப் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டால் கெடுபிடி எதுவும் செய்யாமல், பெருந்தன்மையாக டப்பிங்பேசி கொடுத்துவிடுகிறார் அர்விந்த்சாமி.