Published:Updated:

இசையமைப்பாளர் தரணின் '25-வது படம்!'

கே.ஜி.மணிகண்டன்
இசையமைப்பாளர் தரணின் '25-வது படம்!'
இசையமைப்பாளர் தரணின் '25-வது படம்!'

பாக்யராஜ் இயக்கத்தில் அவருடைய மகள் சரண்யா பாக்யராஜ் நடித்த 'பாரிஜாதம்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். தொடர்ந்து 'சித்து +2', 'போடா போடி', 'சமர்', 'தகராறு', 'நாய்கள் ஜாக்கிரதை' போன்ற பல படங்களுக்கு இசையமைத்தார். தற்போது இவர் இசையமைத்துக்கொண்டிருக்கும் 'பிஸ்தா' படத்தின் மூலமாக '25 படங்கள்' என்ற மைல்கல்லை எட்டுகிறார். 

புதுமுக இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கத்தில், 'மெட்ரோ' சிரிஷ் ஹீரோவாக நடிக்கும் 'பிஸ்தா' படத்தில் மிருதுளா முரளி நாயகியாக நடிக்கிறார். அருந்ததி நாயர், சதீஷ், நமோ நாராயணன், யோகி பாபு, சென்றாயன், சாமிநாதன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படம், இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாம். தனது 25 வது படமான இதில், தனது முத்திரையைப் பதிக்க நான்கு பாடல்களையும், ஒரு தீம் இசையையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தரண். கூடிய விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருக்கிறது.

தவிர, மாடலிங் அழகியும் நடிகையுமான தீக்‌ஷிதாவுக்கும், இசையமைப்பாளர் தரணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் திருப்பதியில் நடைபெற இருக்கிறது. இவ்விரு நிகழ்வுகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தரண்.