Published:Updated:

கைதான சினிமா ஃபைனான்சியர் போத்ராவும், அவருடைய அந்த ஒரு ஃபார்முலாவும்!

கைதான சினிமா ஃபைனான்சியர் போத்ராவும், அவருடைய அந்த ஒரு ஃபார்முலாவும்!
கைதான சினிமா ஃபைனான்சியர் போத்ராவும், அவருடைய அந்த ஒரு ஃபார்முலாவும்!

ஒரே ஒரு ஃபார்முலாவை வைத்து பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களை ஆட்டிப்படைத்திருக்கிறார் முகுன்சந்த் போத்ரா. பிரபலங்களுக்குக் கடன் கொடுப்பது, விதவிதமான வட்டிகளை விதிப்பது என மிரட்டிக்கொண்டிருந்த போத்ரா, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். யார் இந்த போத்ரா

சென்னை, சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கும் போத்ராவின் பூர்வீகம் வடமாநிலம் என்றாலும், மயிலாடுதுறையில் படித்து வளர்ந்தவர். வைர வியாபாரியின் மகன் என்பதால், அதையே தொழிலாகத் தொடர்ந்திருக்கிறார். `D IF Diamonds' என்ற பெயரில் வைர வியாபாரம் செய்கிறார். ரியல் எஸ்டேட், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, `குளோபல் அமெரிக்கன்' என்ற பெயரில் ஒரு நிறுவனம்... எனப் பல வகைகளில் தனக்கான தொழில் நெட்வொர்க்கை வைத்திருக்கிறார். தவிர, 1980-ம் ஆண்டுகளில் தயாரிப்பாளர் சங்கம், ஃபிலிம் சேம்பர் உள்ளிட்ட சினிமா சங்கங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

``நடிகர் பாண்டியராஜனின் கரியரையே காலிபண்ணவர், போத்ரா. `ஆண்பாவம்' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக, ஒரு தொகையை போத்ராவிடம் கடனாக வாங்கினார் பாண்டியராஜன். அதற்கு வட்டிமேல் வட்டி போட்டு, வீட்டையே எழுதிக் கேட்டார். அதிலிருந்து பாண்டியராஜன் மீண்டு, சினிமாவுக்குள் தனக்கான இடத்தைத்  திரும்பவும் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!'' என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். ``முடிஞ்சுபோன பிரச்னையைப் பற்றிப் பேச விரும்பலை'' என்பதுதான், போத்ராவால் பாதிக்கப்பட்ட இயக்குநர், நடிகர் பாண்டியராஜனின் பதில்.

நடிகை ரோஜா மீது செக் மோசடி வழக்கைப் பதிவுசெய்து, அதில் வெற்றியும் பெற்றார். பொதுவாக, செக் மோசடி வழக்குகளில் குறுக்கு விசாரணை இல்லை என்பது, போத்ராவுக்குச் சாதகமான விஷயமாக அமைந்தது. பெரிய பெரிய திரைப் பிரபலங்களுக்குக் கடன் கொடுப்பதும், அந்தக் கடனுக்கு வட்டி மீது வட்டி போட்டு பணம் பறிக்கத் தொடங்குகிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது செக் மோசடி வழக்கு பதிந்து, நடிகர் ரஜினிகாந்தையும் கோர்த்துவிட்டார் போத்ரா.

பிறகு, பச்சமுத்து மீது போத்ராவின் கவனம் திரும்பியது. `மொட்டசிவா கெட்டசிவா' படத்துக்காக தனக்கு வரவேண்டிய பணம் பெருமளவு வரவில்லை எனக் கூறி, ரிலீஸ் சமயத்தில் பிரச்னையைக் கிளப்பினார். `கன்னியும் காளையும் செம காதல்' என்ற படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடப்பதின் பின்னணி போத்ராதான். `கடன் கொடுக்கிறார். கொடுத்த கடனைத் திரும்பக் கேட்கிறார். கொடுக்காதவர்கள் மீது வழக்கு தொடுக்கிறார்... இதில் என்ன பிரச்னை?' எனத் தோன்றலாம். ``இங்கேதான் முகுன்சந்த் போத்ரா பயன்படுத்திய மாஸ்டர் ப்ளான் ஃபார்முலா வேலை செய்ய ஆரம்பிக்கிறது'' என்கிறார், அவர்மீது புகார் கொடுத்தவரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான சதீஷ்குமார்.

``கடன் கொடுக்கிறவங்ககிட்ட வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவார். ஸ்டாம்ப் பேப்பர், செக் லீஃப், ஒரிஜினல் டாக்குமென்ட்ஸ்... என எல்லாத்தையும் வாங்கிக்கிட்டுதான் கடன் கொடுப்பார். `சாதாரண டூவிலர் வாங்குறதுக்கே மூணு செக் கேட்குறாங்க. இவ்ளோ பெரிய கடன் தொகைக்கு அவர் கேட்கிறது நியாயம்தானே'னு தோணும். ஆனா, இதுதான் போத்ராவோட பவர்பாயின்ட். முதல் ரெண்டு மூணு முறை கடன் கொடுக்கும்போது, நாம கொடுத்த பேப்பர்ஸ், டாக்குமென்ட்ஸ் எல்லாத்தையும் நேர்மையா திரும்பக் கொடுக்கிற போத்ரா... பிறகுதான் தன்னோட வேலையைக் காட்டுவார். சினிமாவுக்குப் ஃபைனான்ஸ் பண்றதையே தொழிலா வெச்சிருக்கிற எல்லோரும் 90 சதவிகிதம் நியாயமா இருப்பாங்க. ஆனா,போத்ரா அப்படி இல்லை!'' என்றவர்,

``நம்மளோட பின்னணியைத் தெரிஞ்சுப்பார். நாம `லாக்' ஆகுற ஒரு சூழலை உருவாக்குவார். 10 லட்சம் ரூபாய் கடனுக்கு, நாம கொடுத்த செக்ல ரெண்டு கோடி ரூபாய் ஃபில் பண்ணி பேங்க்ல போடுவார். அது பெளன்ஸ் ஆகிடும். செக் மோசடிக்கான சட்டம் `138'ல விசாரணை பெரும்பாலும் இருக்காது. அது அவருக்குச் சாதகமாபோயிடும். பிரபலங்களும் முக்கியப் புள்ளிகளும் அடிக்கடி கோர்ட் வாசலை மிதிப்பதை விரும்ப மாட்டாங்க. அதனால, போத்ராகிட்ட சமாதானம் பேசுவாங்க. பேசின தொகையைக் கொஞ்சம் குறைச்சுக் கேட்பார். வேற வழியில்லாம கொடுத்துடுவாங்க. நான் அவர்கிட்ட வாங்கின கடன் 15 லட்சம் ரூபாய்தான். அதுக்கு வட்டி மட்டுமே 15 லட்சம் கொடுத்துட்டேன். `1 கோடி ரூபாய்க்கு செக் போட்டு பெளன்ஸ் ஆக்கி, என்மேல வழக்கு போடுவேன்'னு சொன்னார். நியாயம் கேட்க வீட்டுக்குப் போனேன். சந்திக்க முடியலை. தவிர, சினிமா துறைக்குள்ள நான் அவருக்கு 4 1/2 கோடி ரூபாய் கடன் பாக்கி தரவேண்டி இருக்குனு வதந்தி பரப்பினார். போத்ராகிட்ட நியாயம்னு ஒண்ணு கிடையாது. நாம குனியக் குனியக் குட்டிக்கிட்டே இருப்பார். இனியும் பொறுக்காம, சட்டத்தை நோக்கிப் போவோம்னுதான் போலீஸ்கிட்ட புகார் கொடுத்தேன்'' என்று முடிக்கிறார் சதீஷ்குமார்.

போத்ராவின் தொல்லைகளைப் பக்கம் பக்கமாக வாசிக்கிறார்கள், அவரால் பாதிக்கப்பட்ட சினிமா துறையினர். ``அவரோட எல்லா புகார்களையும் கவனிச்சுப்பார்த்தா, ஒரே மாதிரிதான் இருக்கும். கடன் கொடுத்திருப்பார், செக் பெளன்ஸ் ஆகும். `வழக்கு போடுவேன்'னு மிரட்டுவார். அடிபணியாதவங்க மேல வழக்கு போடுவார். வாங்குற பணத்துக்கு, 10 நாளைக்கு ஒரு வட்டி, 20 நாளைக்குப் பிறகு ஒரு வட்டி, ஒரு மாசம் கழிச்சு வேற வட்டினு நமக்கே முழி பிதுங்கும்! முடிந்த அளவுக்குத் தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொள்வது போத்ராவின் மற்றொரு ஸ்பெஷல் பாயின்ட்'' என்கிறார்கள்.

கடன் வாங்கியவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை எனில், அவர்களுடைய வீட்டுக்கு இரண்டு நபர்களை அனுப்பிவைப்பாராம் போத்ரா. இரண்டு நபர்களும், கடன் வாங்கியவர்களுடைய வீட்டில் நின்று பணம் கேட்டு நச்சரித்துக்கொண்டிருப்பார்கள். பொறுக்க முடியாமல், அவர்களை அடித்து விரட்ட வேண்டும் என்பது போத்ராவின் நோக்கம். அது நிறைவேறிவிட்டால், `கடனைத் திரும்பக் கொடுக்காதது மட்டுமல்லாமல், எனது ஆள்களை அடித்திருக்கிறார்கள்' என்ற பாயின்டை எடுத்துக்கொண்டு வாதாடுவார். எல்லா கடன் வழக்குகளிலும் போத்ராவே ஆஜராகி வாதாடுவார். `சிறைப்பறவை' மாதிரி கோர்ட்டையே சுற்றிவரும் `நீதிமன்றப் பறவை' போத்ரா!

அ.தி.மு.க கட்சியில் இருந்தவர், பிறகு பா.ஜ.க-வில் சேர்ந்தார். அழகாகப் பேசுவது மட்டுமல்ல, தமிழ் மொழியை அழகாக எழுதக் கற்றுக்கொண்டவர். கடன் வாங்கும் சினிமா பிரபலங்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவது, பெர்சனலாக மிரட்டுவது... என போத்ராவின் மிரட்டல்களுக்குப் பலம் சேர்க்க, `எனக்கு அமித்ஷாவைத் தெரியும், போலீஸ் அதிகாரிகள் எனக்கு நண்பர்கள், நீதிபதிகள் என் கன்ட்ரோலில் இருக்கிறார்கள்' எனத் தன்னைச் சுற்றி ஒரு மாய பிம்பத்தை உருவாக்கும் போத்ரா, கடன் வாங்குபவர்களிடம் அந்தப் பிம்பத்தை நம்பவும் வைப்பார்.  பிரபலங்கள், தொழிலதிபர்கள் மட்டுமல்ல... சிறு சிறு முதலாளிகளையும் குறிவைத்திருக்கிறார். தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்தவர், வட்டியாக 2 3/4 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். 

கடைசியாக, சென்னை தி.நகரில் இயங்கிவரும் பி.ஆர்.சி இன்டர்நேஷனல் பி.லிட் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் கணபதி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகிய இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் முகுன்சந்த் போத்ரா. ``கேட்கிறதுக்கே க்ரைம் த்ரில்லர் கதை மாதிரி இருக்குல்ல... எனக்கு நடந்த கொடுமைகள் மட்டுமல்ல, போத்ராவின் கந்துவட்டி கதையை வெச்சு ஒரு படமே தயாரிக்கலாம்னு முடிவுபண்ணிட்டேன்!'' என்கிறார் சதீஷ்குமார்.

போத்ரா வெளியே வந்த பிறகுதான், இந்தச் சம்பவத்தின் முழுக்கதை புரியும்!