Published:Updated:

'முத்து' முதல் 'விஸ்வரூபம்' வரை... தமிழ் சினிமாவின் லாஜிக் குளறுபடிகள் ! #MovieMistakes

தார்மிக் லீ
'முத்து' முதல் 'விஸ்வரூபம்' வரை... தமிழ் சினிமாவின் லாஜிக் குளறுபடிகள் ! #MovieMistakes
'முத்து' முதல் 'விஸ்வரூபம்' வரை... தமிழ் சினிமாவின் லாஜிக் குளறுபடிகள் ! #MovieMistakes

தமிழ் சினிமாவோட வளர்ச்சி நாளுக்கு நாள் அடுத்தடுத்த லெவல்களுக்கு போனாலும் டெம்ப்ளேட்டா சில தவறுகள் படைப்பாளிகளையும் மீறி நடந்துகிட்டேதான் இருக்கு. அப்படி மாஸ் நடிகர்கள், மாஸ் சீன்களில் இடம்பெற்ற சில தவறுகள் இதோ!

முத்து :

கே.எஸ். ரவிகுமார் இயக்குத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்தப் படம் 'முத்து'. மீனாவை அழைத்துச் செல்ல வரும் அவரது மாமாவுக்கும் ரஜினிக்கும் இடையே மோதல் ஏற்படும். இருவரும் சரமாரியாக அடித்துக் கொள்வார்கள். ஒரு கட்டத்தில் ஆந்திரா வில்லனை அடித்து துவைக்கத் தொடங்கிவிடுவார் ரஜினி. ஆந்திரா வில்லனால் அடி தாங்க முடியவில்லையோ, என்னவோ அவருக்கு பதிலாக டூப் ஒருவர் அடி வாங்குவார். சினிமா சண்டைக் காட்சிகளில் டூப் போடுவது வழக்கம்தான். அடி வாங்கும் ஆளுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆளைப் போட்டால் க்ரூப்புல டூப் கதைதான். 

ஆதவன் :

அதே கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம்தான் 'ஆதவன்'. இதுவும் வழக்கமான ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடி என எல்லாமே கலந்துகட்டி இருந்த கே.எஸ்.ஆர் பார்முலா படம்தான். இதில் சூர்யாவோட இன்ட்ரோ சாங் முடியப்போற சமயத்தில் தண்ணிக்கு அடியில் போய் ஒருவரை சுடும்படியான காட்சி இருக்கும். அதில் முங்கு நீச்சல் அடித்து சூர்யா அந்த சாமியாரை கொல்லப் போவார். ஆனால் அவரின் நெற்றியில் இருக்கும் விபூதி, பொட்டு அழியாமல் அப்படியே இருக்கும். வாட்டர் ப்ரூஃப் விபூதியா? இது லிஸ்ட்லயே இல்லையே! 

ஆம்பள :

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம் 'ஆம்பள'. அதில் ஒரு பாடலில் விஷாலும், ஹன்சிகாவும் ரொமான்ஸ் செய்துகொண்டிருப்பார்கள். வீடியோ காலில் காதல் வளர்க்கும் காட்சி அது. உற்று கவனித்தால், ஹன்சிகா கையில் போனைப் பிடித்து பேசிக்கொண்டிருக்கும் ஷாட்டில் அவர் நெற்றியில் பொட்டு, கழுத்தில் செயின், காதில் ஜிமிக்கி என எதுவுமே இருக்காது. ஆனால் விஷால் அவரை வீடியோ வழியாக காண்கையில் கலர் பொட்டில் ஆரம்பித்து, செயின், ஜிமிக்கி என எல்லாமே அணிந்திருப்பது போல் தெரியும். என்ன அப்ளிகேஷன் பாஸ் இது? எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா டவுன்லோட் பண்ணிக்குவோம். 

வேலையில்லா பட்டதாரி : 

தனுஷின் நடிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் படம் 'வேலையில்லா பட்டதாரி'. அதில் இடம்பெற்றிருக்கும் 'ஏய் இங்க பாரு' என்ற பாடலில் தனுஷும், அமலா பாலும் பார்த்துக்கொள்வார்கள். பாட்டில் பாரு, பாரு என்று சொன்ன அவர்கள் அதில் நடந்த மிஸ்டேக்கை பார்க்காமல் விட்டார்கள். அமலா பால் கையில் பிடித்திருக்கும் புத்தகத்தை கவனித்தால் ஒரு ஷாட்டில் அது நேராக பிடித்திருப்பார், இன்னொரு ஷாட்டில் புக் தலைகீழாக இருக்கும். காதலுக்கு கண்ணில்லைங்கிற குறியீடா ஜி?

பையா :

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளிவந்த படம் 'பையா'. அதில் இடம்பெற்ற 'அடடா மழைடா' பாடல் இளசுகளின் ரிங்டோனாக நிறைய நாட்கள் இருந்தது. யுவன் சங்கர் ராஜா மியூசிக் வேற! சொல்லவா வேணும்? பாட்டு, லொக்கேஷன் எல்லாமே ஓகே. ஆனா பெய்த மழையில்தான் ஒரு சின்ன சிக்கல். கேமரா வைத்த ஃப்ரேமில் எல்லா பக்கமும் சென்று டான்ஸ் ஆடுவார் கார்த்தி. அப்போ பெய்யுற மழையை கவனிச்சுப் பாருங்க மக்களே, அவர் நிக்கிற இடத்தில் மட்டும்தான் மழை பெய்யும். அதிசய ஊரா இருக்குமோ? 

தனி ஒருவன் :

மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படம் 'தனி ஒருவன்'. அரவிந்த் சாமி, ஜெயம் ரவி இருவருக்கும் அது மிக முக்கியமான படம். கொரியனில் வெளிவந்த 'I Saw The Devil' படத்தில் இருக்கும் சிப் வைக்கும் கான்செப்ட் 'தனி ஒருவன்' படத்திலும் இருக்கும். சிப்பை கண்டுபிடிக்க முடியாத கடுப்பில் ஒரு மூலையில் அந்த டிடெக்டரை தூக்கி எறிவார் ரவி. சுவர் மூலையில் கிடக்கும் அந்த பக், சிறிது நேரத்தில் பொசிஷன் மாறி நகர்ந்து கிடக்கும். டிடெக்டருக்கு கால் இருக்குதா? 

தசாவதாரம் :

ஒரு கமல் என்றாலே படம் வேற லெவலில் இருக்கும். பத்து கமலின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்தான் 'தசாவதாரம்'. அதில் வில்லன் ஃப்ளெச்சர், ஹீரோவைக் கொல்ல முயற்சிப்பார். அப்போது தப்பிப்பதற்காக சிலையோடு ஒரு பழ வண்டியில் குதித்து ட்ராவல் செய்வார் கமல். அந்த வண்டி படிகளில் தடதடவென இறங்க மொத்தப் பழங்களும் கீழே விழுந்துவிடும். அடுத்த ஷாட்டில் வண்டியைக் காட்டும் போது சிதறிய பழங்கள் மறுபடியும் வந்துவிடும். க்ரேட் கிரிகாலன் மேஜிக் ஷோவில் பயன்படுத்திய பழ வண்டியாகக்கூட இருக்கலாம்!

துப்பாக்கி :

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் க்ளாஸ் நடிப்பில் வெளியான மாஸ் படம்தான் 'துப்பாக்கி'. அதில் 12 பேரையும் ஒரே சமயத்தில் கொல்லும் சீன்தான் எல்லோருக்கும் ஃபேவரைட். அதில் சத்யன், விஜய் வீட்டில் இருந்து கிளம்பி, சர்ச்சில் ப்ளான் போடும் வரை ஒரு கலர் சட்டையும், விஜய்யுடன் சேர்ந்து அந்த ஒவ்வொரு ஸ்லீப்பர் செல்லையும் ஃபாலோ செய்து, கொல்லும் போது வேறு கலர் சட்டையும் அணிந்திருப்பார். மாஸ் சீன் என்பதால் கொஞ்சம் நல்ல கலர் சட்டை போட்டுட்டு வரலாம் என்று நினைத்திருப்பார் போல. ஆனா முன்னாடி போட்டுருந்த கலர்தான் பாஸ் எனக்கு பிடிச்சு இருந்தது.  

விஸ்வரூபம் :

கமலே நடித்து, இயக்கி பல இடையூறுகளுக்குப் பின் வெளியான படம் 'விஸ்வரூபம்'. படம் வந்ததும் எல்லோரையும் பிரமிக்க வைத்தது கமலின் அதிரிபுதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன்தான். ப்ரேயரை சொல்லி முடித்த பின், கண் இமைக்கும் நேரத்தில் எல்லோரையும் அடித்து துவம்சம் செய்வார் கமல். அதில் முதலில் அடிவாங்குபவரின் காட்சியை கவனித்தால் ஒரு மிஸ்டேக்கை கண்டுபிடிக்கலாம். லாங் ஷாட்டில் கேமரா இருக்கும்போது ஓங்கி முதுகில் மிதிக்கப் போவார், அதே கேமரா க்ளோஸப் ஷாட்டுக்கு வந்தவுடன், கமல் அடித்த அடி பொடனியில் விழும். அடிச்ச அடி அப்படி!