Published:Updated:

பண்ணையார்கள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை... தமிழ் சினிமாவின் வில்லன்கள்!

பண்ணையார்கள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை... தமிழ் சினிமாவின் வில்லன்கள்!
பண்ணையார்கள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை... தமிழ் சினிமாவின் வில்லன்கள்!

பண்ணையார்கள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை... தமிழ் சினிமாவின் வில்லன்கள்!

* 'நல்லது, கெட்டது', 'நல்லவன், கெட்டவன்' என்று வாழ்க்கையையும் மனிதர்களையும் இருமை எதிர்வுகளாகப் பார்க்கும் பண்பு நம் கதைகேட்கும் மரபிலிருந்தே தொடங்குகிறது. குழந்தைகளும் கிராமப்புற மனிதர்களும் 'வில்லன்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'கெட்டவன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். ஒருவகையில் இத்தகைய கதை சொல்லல் என்பது வைதீக இந்துக் காப்பிய மரபு எனலாம். பவுத்த-சமணக் காப்பியங்களில் 'நாயகன் - வில்லன்' என்ற இருமை எதிர்வுகளுக்கு முக்கியம் தரப்படுவதில்லை. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்னும் தமிழ் மரபு பவுத்த - சமணக் கருத்தியலின் தாக்கத்தால் உருவானது. பவுத்த ராமாயணத்தில் ராவணன் என்ற கதாபாத்திரமே இல்லை. சமணக்காப்பியமான சிலப்பதிகாரத்தில் 'ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்', 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' அவ்வளவே. தவறாய்த் தீர்ப்பளித்த பாண்டிய மன்னனோ பொற்கொல்லரோ முதன்மை வில்லன் பாத்திரங்கள் அல்ல. ஆனால் ராமாயணத்தில் ராமன் ஹீரோ, ராவணன் வில்லன், மகாபாரதத்தில் பாண்டவர்கள் நல்லவர்கள், கௌரவர்கள் கெட்டவர்கள் என்று துல்லியமான வரையறை உண்டு. அந்த வகையில் நம் சினிமா ஹீரோ - வில்லன் மரபு, இந்து இதிகாச மரபு எனலாம்.

* நாயகர்களைக் கொண்டாடுவதைப் போலவே வில்லன்களைக் கொண்டாடுவதும் வரவேற்பதும் தமிழ் ரசிக மனநிலையின் ஒரு கூறுதான். நம்பியாரை வெறுப்பதென்பது எம்.ஜி.ஆர் படங்களோடு முடிந்துவிட்டதென்றே நினைக்கிறேன். அவர் காலத்திலேயே நாயகர்களை ரசிப்பதைப்போல வில்லன்களை ரசிக்கும் தன்மையும் தொடங்கிவிட்டது. ஹீரோக்களைப் போலவே வில்லன்களும் தனக்கென தனியான பாணியை உருவாக்கிக்கொண்டனர். குறிப்பாக எம்.ஆர்.ராதா. அடித்தொண்டையிலிருந்து ஒலிக்கும் கரகரத்த குரல், சிலநேரங்களில் கம்மி ஒலிக்கும். வளைந்து நெளியும் உடல்மொழி, எள்ளல் - இவை ராதாவின் தனித்துவமான உடல்மொழி. நாயகர்களுக்கு இருந்த வரவேற்பு எம்.ஆர்.ராதாவுக்கும் ரசிகர்களிடம் இருந்தது. அசோகன்  புருவத்தைத் தூக்கி, கண்களைச் சிமிட்டி, மிகையான ஏற்ற இறக்கத்துடன் கூடிய வசன உச்சரிப்பு என்று செயற்கையான உடல்மொழியை உருவாக்கிக்கொண்டார். சத்யராஜ் 'என்னம்மா கண்ணு', 'தகடு தகடு', 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே' என்று பஞ்ச் டயலாக்குகளையும் உருவாக்கிக்கொண்டார். ரஜினிகாந்தின் 'இது எப்டி இருக்கு', பிரகாஷ்ராஜின் 'செல்லம்' ஆகியவை புகழ்பெற்ற வில்ல மொழிகள்.

* ஹீரோக்களின் தனித்துவ அடையாளங்களான ஸ்டைலான உடல்மொழி, பஞ்ச் டயலாக் ஆகியவற்றை வில்லன்களும் ஏற்படுத்திக்கொண்டார்கள். எனவே நாயகர்களுக்கு இணையான எதிர்நாயகர்களாகவே வில்லன்களைத் தமிழ் ரசிக மனநிலை ஏற்றுக்கொண்டது. ரஜினிகாந்த், சத்யராஜ் போன்ற வில்லன்கள் நாயகர்கள் ஆனபோது மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டதற்கு இந்த உளவியல் காரணமாக இருக்கலாம்.

* ஹீரோக்கள்கூட எதார்த்தமாக நடித்துவிடலாம். ஆனால் கண்டிப்பாக வில்லன்கள் சற்றே மிகையான, தூக்கலான நடிப்பைத்தான் வழங்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் அதிகம் ரசிக்கப்படுவார்கள். எம்.ஆர்.ராதா முதல் பிரகாஷ்ராஜ் வரை அதற்கு உதாரணங்கள்.

* எந்த மாதிரியானவர்களை வில்லன்கள் ஆக்குவது என்பதும் காலந்தோறும் மாறிவந்திருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, இந்துமத வைதீக எதிர்ப்பு என்றெல்லாம் பேசிவந்தாலும் அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தவரின் பெரும்பாலான சிறுகதைகள், நாவல்களில் பண்ணையார்களும் பணக்காரர்களும்தான் வில்லன்கள். இந்த நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ எதிர்ப்பு அவர்களின் சினிமாக்களிலும் எதிரொலித்து, பணக்காரர்களே வில்லன்களாக விளங்கினார்கள். இந்த மரபு தமிழ் சினிமாவில் நீண்டகாலம் நீடித்தது. காதலை எதிர்க்கும் பணக்கார வில்லன், மக்களுக்கு அநீதி இழைக்கும் பணக்கார வில்லன் என்று தேய்வழக்கான கதைகளாக இருந்தாலும் பணக்காரர்களே பல ஆண்டுகளுக்குத் தமிழ் சினிமாவில் வில்லன்களாக இருந்தார்கள். இந்துத்துவ அரசியல் எழுச்சியினூடாக 'முஸ்லீம் தீவிரவாதிகள்' என்ற வில்லன் வகையினம் தமிழ் சினிமாக்களில் உருவானது. திராவிட இயக்க சினிமா காலந்தொட்டேகூட அடியாட்களுக்கு முஸ்தபா, பீட்டர் என்று பெயர் வைப்பது, கிளப்பில் நடனம் ஆடும் பெண் ரீட்டாவாக இருப்பது என்று தொடங்கி வடசென்னையைச் சமூக விரோத நிலப்பரப்பாகக் காட்டுவது வரை ஆதிக்க மனநிலை பல்வேறு காலங்களில் பிரதிபலித்திருக்கிறது. இப்போது கார்ப்பரேட் கம்பெனிகளையும் கார்ப்பரேட் முதலாளிகளையும் வில்லன்களாகக் காட்டுவதும் சமகால அரசியல் பிரதிபலிப்பே.

* ஒரு நடிகர் தன்னைச் சிறந்த நடிகராக நிரூபிக்க வேண்டுமெனில் அவர் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்துத்தான் தன்னை நிரூபிக்கவேண்டும். முழுநீள நகைச்சுவைப் படமொன்றில் நடிப்பது, வில்லனாக நடிப்பது. பெரும்பாலான நாயகர்கள் இந்தச் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள். சமகாலத்தில் அஜித் உருப்படியாக நடித்த ஒருசில படங்களில் 'வாலி'யும் ஒன்று. 'பிரியமுடன்' படத்தில் விஜய்யும் எதிர்நாயகன் பாத்திரத்தில் ஓரளவுக்கு  நடித்திருப்பார். விக்ரம் தனக்குக் கிடைத்த வாய்ப்பை 'இருமுகன்' படத்தில் வீணாக்கியிருப்பார். தனுஷும் விஜய் சேதுபதியும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக நடிப்பார்கள் என்று தோன்றுகிறது. வில்லன்களாக இருந்து நாயகர்களாக மாறியவர்கள் ரஜினியும் சத்யராஜும். இருவருமே நீண்டநாள்களுக்குப் பின் வில்லன் வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து தங்களை நிரூபித்திருப்பார்கள். 'அமைதிப்படை'யில் சத்யராஜின் அசத்தல் நடிப்பைச் சொல்லவே வேண்டாம். 'சந்திரமுகி'யில்  'வேட்டையன்' கதாபாத்திரத்திலும் 'எந்திரன்' படத்தில் 'சிட்டி ரோபோ' பாத்திரத்திலும் மிகச்சிறப்பாக நடித்திருப்பார் ரஜினி.

* தமிழ் சினிமாவில் வில்லன்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, வில்லிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவுக்குக்கூட இல்லை. வில்லன்கள் என்பவர்கள் நாயகர்களுக்கு இணையானவர்கள். ஹீரோ என்னும் ஆணுக்கு இணையாக, சவால்விடும் நிலையில் ஒரு பெண்ணை வைத்துப் பார்க்க விரும்பாத ஆணாதிக்க ரசிக மனநிலைதான் வில்லிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம். மீறி உருவான சில வில்லி கதாபாத்திரங்களும் படித்த பெண் பாத்திரங்களாகவே இருந்தன. 'படையப்பா' நீலாம்பரி ஓர் உதாரணம். 'படித்த பெண்கள் என்றாலே திமிரானவர்கள்' என்ற பொதுப்புத்தி 'பட்டிக்காடா பட்டணமா' படத்திலிருந்து 'படையப்பா' வரை தொடர்கிறது. இத்தகைய 'திமிரான' பெண்களை ஹீரோக்கள் அடக்கும்போது, தாங்களே அடக்கியதாக ஆண் ரசிக மனம் திருப்திப்பட்டுக்கொள்கிறது. 

* உண்மையில் ஒருவர் முழுக்க நல்லவராக - ஹீரோவாக, அல்லது கெட்டவராக - வில்லனாக இருக்க முடியாது என்பதுதான் எதார்த்தம். சந்தர்ப்பச் சூழல்களே மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதைப் பிரதிபலித்த தமிழ்ப்படங்கள் மிகக்குறைவு, உடனடியாக நினைவுக்கு வரும் பாத்திரம் 'ஆடுகளம்' பேட்டைக்காரன். மனிதர்களின் உணர்வுநிலைகளை நுட்பமாகச் சித்தரிப்பதன் மூலம்தான் நாம் ஹீரோ - வில்லன் என்ற இருமை எதிர்வுகளைக் கடந்துபோக முடியும். அப்போதுதான் எதார்த்தமான, மாற்று சினிமாக்களும் தமிழில் சாத்தியம்.

அடுத்த கட்டுரைக்கு