Published:Updated:

"புரூஸ் லீ யின் நுன்ச்சக் சண்டையை ஈஸியாகக் கற்றுக்கொண்டார்!" அஜித் பற்றி ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்! #Vivegam

"புரூஸ் லீ யின் நுன்ச்சக் சண்டையை ஈஸியாகக் கற்றுக்கொண்டார்!" அஜித் பற்றி ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்! #Vivegam
"புரூஸ் லீ யின் நுன்ச்சக் சண்டையை ஈஸியாகக் கற்றுக்கொண்டார்!" அஜித் பற்றி ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்! #Vivegam

ஹாலிவுட் தரத்தில் மாஸாக வரவிருக்கிறது ‘விவேகம்’! காரணம், அஜித்! அதைத் தாண்டி இன்னொரு அந்தஸ்து - செர்ஜ் குரோஸான் கேஸின். ஜேம்ஸ்பாண்டின் 'கேஸினோ ராயல்', ஜெரார்டு பட்லரின் '300', 'டிரான்ஸ்போர்ட்டர்', 'இன்டச்சபிள்ஸ்' போன்ற மெகா ஹாலிவுட் ஹிட் படங்களின் ஸ்டன்ட் மாஸ்டர். ‘விவேகம்’ படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர்களில் செர்ஜ் குரோஸானும் ஒருவர். ‘விவேகம் படத்தில் சண்டைக் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்த அஜித்’ என்று செய்திகள் வருவதற்குக் காரணம், இவர்தான்.

ஜேம்ஸ்பாண்ட், ஜேஸன் ஸ்டாதம், அர்னால்டு போன்றவர்களை இயக்கிய செர்ஜ் குரோஸான், இப்போது ‘விவேகம்’ படத்துக்காக அஜித்தையும் விவேக் ஓபராயையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். ‘‘இந்தியப் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் அஜித் போன்ற திறமையானவர்களை இயக்குவது பெருமையாக இருக்கிறது. புரூஸ் லீ மட்டுமே புகுந்து விளையாடக் கூடிய ‘நுன்ச்சக்’ கலையை இத்தனை விரைவாக ஒரு நடிகர் கற்றுக் கொண்டது நான் வாழ்நாளில் பார்த்திராத விஷயம்’’ என்று அஜித்தைப் பற்றிப் புகழ்ந்து பேசியிருக்கிறார் செர்ஜ் குரோஸான். 

‘எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படத்தில் வருவதுபோல், ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு ஒரு டீம் இருக்கும். உலகில் யாராலும் நடத்த முடியாத சில இம்பாஸிபிள் மிஸன்களை நடத்திக் காட்டுவதுதான் அஜித்தின் வேலையாம். தீவிரவாதத்துக்கு எதிராகச் செயல்படும் அஜித், விவேக், ஆரவ், ஆமிலா, செர்ஜ் என்ற 5 பேர் கொண்ட டீமில் ஒருவராக நடித்திருக்கிறார் செர்ஜ் குரோஸான்.

‘விவேகம்’ பட சான்ஸ் எப்படி? அஜித்தின் நட்பு எப்படி? அவரே சொல்கிறார்.

‘‘பல்கேரியாவில் ஒரு சண்டைக் காட்சிதான் நான் நடித்த முதல் காட்சி. என்னுடைய பழைய படங்களைப் பார்த்து, டைரக்டர் சிவாதான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். நான் இந்தப் படத்தில் கம்ப்யூட்டர் ஹேக்கிங் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறேன். அப்போதுதான் நான் முதன் முதலில் அஜித்தைப் பார்க்கிறேன். பார்த்தவுடன் ‘சட்’ எனப் பழகிவிட்டார் அஜித்குமார். முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். ஹாலிவுட் முதல் சமையல் வரை எல்லாமே பேசினோம். ஷூட்டிங்கெல்லாம் முடிந்து பேக்-அப் ஆகி வீட்டுக்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது - அவர் தமிழ்நாட்டின் அல்ட்டிமேட் ஸ்டாராமே! அப்புறம்தான் அவர் நடித்த படங்களைப் பார்த்தேன். ஒரு பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர் இவ்வளவு எளிமையாக நடந்து கொண்டது ஆச்சர்யமாக இருக்கிறது.

அவர் ஒரு முழுமையான நடிகர். ரிஸ்க்கான ஷாட்களைக்கூட ‘இன்னொரு டேக் போகலாம்’ என்று கேட்டு வாங்கிச் செய்தார். இந்தப் படத்தில் அவர் பைக் ஓட்டும் ஸ்டைலைப் பற்றி விசாரித்த பிறகுதான் அவர் ரேஸர் என்பதும் தெரிந்தது. ஒக்கினாவான் மார்ஷியல் கலையான நுன்ச்சக்கை இவ்வளவு சீக்கிரமாகக் கற்றுத் தேர்ந்த ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. கற்றுக்கொண்டது மட்டுமில்லாமல், அதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

முதலில் என்னை ஸ்டன்ட் மாஸ்டராகத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். நான் ஹாலிவுட்டில் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் பண்ணியிருக்கிறேன். ஆனால், எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதைச் சொன்னவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் எனக்கு அஜித்துடன் நடிக்க வாய்ப்பளித்த டைரக்டர் சிவாவுக்கு நன்றி!’’ என்று சொல்லியிருக்கிறார் செர்ஜ் குரோஸான்.