Published:Updated:

1000 வாரம் ஓடிய படத்தின் அசத்தல் கதாநாயகி... கஜோல்! #HBDKajol

1000 வாரம் ஓடிய படத்தின் அசத்தல் கதாநாயகி... கஜோல்! #HBDKajol
1000 வாரம் ஓடிய படத்தின் அசத்தல் கதாநாயகி... கஜோல்! #HBDKajol

1000 வாரம் ஓடிய படத்தின் அசத்தல் கதாநாயகி... கஜோல்! #HBDKajol

``நான் மிகவும் மோசமான ஒரு குழந்தையைப்போல் இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே மிகவும் பிடிவாதமாகவும் உணர்ச்சிமிக்கவளாகவும் உள்ளேன். என் பெற்றோர், என்னுடைய இளம் வயதிலேயே பிரிந்துவிட்டார்கள் என்பதுதான் இதற்குக் காரணமா அல்லது எனது இயற்கை குணமே இப்படித்தானா என்பது தெரியவில்லை. ஆனால், நான் ஒருபோதும் உறவுகளின் பிரிவுகளாலும் பிளவுகளாலும் பாதிக்கப்படக் கூடாது என நினைக்கிறேன். சிறிய வயதில் மட்டுமே என் பெற்றோருடன் வளரும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த நாளில் தாயிடமிருந்து `மகாராஷ்டிரா' கலாசாரத்தையும், தந்தையிடமிருந்து `பெங்கால்' கலாசாரத்தையும் ஒருசேரக் கற்றுக்கொண்டேன். என் பாட்டிதான் என்னை வளர்த்து முழுமையான ஆளாக்கினார். என் அம்மா, ஒரு தலைசிறந்த நடிகை. அப்பா, பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். தனுஜா-சோமு முகர்ஜி தம்பதியின் மகள்தான் நான்" என்று தன் முதல் படம் வெளிவந்தபோது உணர்வுபூர்வமாகப் பேட்டியளித்து அனைவரையும் நெகிழச்செய்தவர் நடிகை கஜோல்.

தன் அம்மாவுடன் சேர்ந்து நடித்த `பெகுடி' எனும் இந்திப் படத்தின் மூலம் 1992-ம் ஆண்டு திரையில் தோன்றினார். அடுத்த ஆண்டே ஷாரூக் கானுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, அந்தப் படத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். திரைக்கு வந்த ஒரு வருடத்துக்குள் அதிக சம்பளத்தை எட்டிய மிகச்சிறந்த நடிகைகளுள் இவரும் ஒருவர். SRK-யுடன் ஜோடி சேர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த முதல் படம் `பாஸிகர்'. பிறகு 1997-ம் ஆண்டு வெளிவந்த `குப்த்' படத்தின் மூலம் அந்த ஆண்டின் சிறந்த வில்லிக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றார். இந்த வெற்றியை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, 1995-ம் ஆண்டு ஷாரூக் வெற்றிக் கூட்டணியில் வெளிவந்த `தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம். பல வருடங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வந்த இந்தத் திரைப்படம், கடைசியாக  1,000-மாவது வெற்றி வாரத்தில் தனது திரையிடலை முடித்துக்கொண்டது. ஒரு படம் 20 ஆண்டுகளாக தியேட்டரில் ஓடியது, இந்திய சினிமாவில் இதுதான் முதலும் கடைசியும்.

படங்களில் நடிப்பது தவிர, சமூக தொண்டு செய்வதையும் தனது பணிகளில் ஒன்றாக வைத்துள்ளார் கஜோல். விதவைகள் மற்றும் குழந்தைகளுக்காகப் பணியாற்றியமைக்கு 2008-ம் ஆண்டு `கர்மவீர் புரஸ்கார்' விருதைப் பெற்றார்.  ``அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். ஏனென்றால், கல்விதான் ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதற்கான ஆரம்பநிலை. நம் சமுதாயத்தில் இன்றைக்கும் பெண் சிசுக் கொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. விதவைகள் இன்னமும் மறுமணம் செய்யாமல் வீட்டிலேயே பூட்டிவைக்கப்படுகிறார்கள். நான் அவர்களுக்கு பலமாக இருக்க விரும்புகிறேன். சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்னைகளை ஒழிக்க, என்னால் முடிந்த அளவுக்குப் பொறுப்புகளை ஏற்பேன்" என்று விருது மேடையில் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் சேவைகளைச் செய்துவரும் ஓர் அரசு சாரா நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, பெண் கல்விக்காக இன்றுவரை தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். மேலும், `லும்பா' தொண்டு நிறுவனத்தின் சர்வதேச நல்லுறவு தூதராகவும் ஆதரவாளராகவும் பணியாற்றிவருகிறார்.

இவருக்கு 1999-ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனுடன் திருமணம் நடந்தது. ``எங்களது திருமணம் காதல் திருமணமா அல்லது வீட்டில் எங்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு திருமணத்தை முடிவுசெய்தனரா எனத் தெரியவில்லை. நாங்கள் ஒருபோதும் `ஐ லவ் யூ' சொல்லிக்கொண்டதில்லை. காரணம், இருவரும் சினிமா துறையில் ஒன்றாகச் சேர்ந்து வளர்ந்ததுதான். நல்ல நண்பர்களாக நட்பு பாராட்டினோம். நண்பர்கள் அனைவரும் எங்களின் உறவு, திருமணத்தில்தான் முடியும் என்பதில் உறுதியாக இருந்தனர். எதிர்பாராதவிதமாக திருமண வேலைகளையும் வீட்டில் ஏற்பாடு செய்யத் தொடங்கினர். கஜோல் எனக்கு அப்படியே நேரெதிர். அவர் எப்போதும் கலகலவெனப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பார். நான் அதிகம் பேசுவதை விரும்ப மாட்டேன். மேலும், ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், சிறந்த தாயாகவும் எங்களின் இரு குழந்தைகளை வழிநடத்திவருகிறார் கஜோல்'' என்று கூறினார் நடிகர் அஜய் தேவ்கன்.

அதை மெய்ப்பிக்கும்வண்ணம் `VIP-2' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கஜோல், ``என்னால் இனி அதிகமாக சினிமாவில் ஈடுபட முடியாது. என் இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பதே எனது முக்கியப் பொறுப்பு. மேலும், என்னுடைய ஒருசில அம்சங்கள் சினிமாவுக்குப் பொருந்தாதவையாக உள்ளன. நான் சில கதாபாத்திரங்களில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். குறிப்பாக, `Dirty Picture' போன்ற படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் என்னால் நடிக்க இயலாது. தவிர, சினிமாவில் அதிகம் நடிக்க வேண்டும் என்றால், அது என் மனதைக் கவர்ந்த கதையாக இருக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

மேலும், இவர் ஆறு ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்குச் சொந்தக்காரர். 2011-ம் ஆண்டு `பத்மஸ்ரீ விருதும், நாட்டின் நான்காவது உயர்ந்த குடிமகளுக்கான விருதும் இந்திய அரசால் கஜோலுக்கு வழங்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் கஜோல் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்து 25 ஆண்டுகளைக் கடந்துள்ளார். தற்போது நடிகர் தனுஷுடன்  `VIP-2' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கம்-பேக் கொடுக்க இருக்கிறார். `மின்சாரக் கனவு' படத்தில் `வெண்ணிலவே வெண்ணிலவே...' பாடலின் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களின் மனதைத் தொட்ட கஜோலுக்கு, இன்று 43-வது பிறந்த நாள்.

வாழ்த்துகள் கஜோல் அஜய் தேவ்கன்!

அடுத்த கட்டுரைக்கு