Published:Updated:

ஓவியா, கஞ்சா கருப்பு, சினேகன்... ஷேரிங்ஸ் சொல்கிறார் பரணி! #BiggBossTamil

ஓவியா, கஞ்சா கருப்பு, சினேகன்...  ஷேரிங்ஸ் சொல்கிறார் பரணி! #BiggBossTamil
News
ஓவியா, கஞ்சா கருப்பு, சினேகன்... ஷேரிங்ஸ் சொல்கிறார் பரணி! #BiggBossTamil

ஓவியா, கஞ்சா கருப்பு, சினேகன்... ஷேரிங்ஸ் சொல்கிறார் பரணி! #BiggBossTamil

``எந்தக் கேள்வி வேணும்னாலும் கேளுங்க சார். ஆனா, கொஞ்சம் பார்த்து யார் மனசையும் புண்படுத்தாம கேளுங்க. பதில் சொல்றேன்'' என ஆர்வத்துடன் அமர்ந்தார்  `பிக் பாஸ்' பரணி.

`` `நீங்க `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே இருந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை'னு காயத்ரி குற்றச்சாட்டு வெச்சாங்க. வெளியே வந்த நமீதாவும் இதையேதான் சொன்னாங்க. உண்மையாகவே நீங்க எப்படி?'' 

``நமீதா சொன்ன குற்றச்சாட்டுக்கு, கமல் சார் பதில் சொல்லிட்டார். காயத்ரி மேடம் சொன்ன குற்றச்சாட்டுக்கு, அவங்க வெளியே வந்ததும் மக்கள் பதில் சொல்லிடுவாங்க. உண்மையாவே நான் எப்படினு என்னைப் பார்க்கிற மக்களுக்குத் தெரியும். எனக்கு அம்மா, தங்கச்சி, மனைவி, மகள் இருக்காங்க. தமிழ் குடும்பத்துல பிறந்து வளர்ந்த பையன் நான். மனைவியைத் தவிர மற்ற எல்லாரையும் அக்கா, தங்கச்சியாத்தான் பார்ப்பாங்க. நானும் அப்படித்தான். அங்கே இருக்கிறவங்களை என்னைவிட உயர்வாகத்தான் பார்த்தேன். காயத்ரியை ஒரு நடன குருவாகத்தான் பார்க்கிறேன். நமீதா மேடம் 100 படங்கள் நடித்த பெரிய நடிகை. அவங்களையும் நான் உயர்வாகத்தான் பார்க்கிறேன். என்னை இப்படிச் சொன்னதால், அவர்கள் மீது கோபம் இல்லை.'' 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``வெளியே வந்த பிறகு கமல்ஹாசனிடம் வேற என்னென்ன பேசுனீங்க?'' 

``நாங்க `பிக் பாஸ்' சம்பந்தமா எதுவுமே பேசலை. எங்க ஊரைப் பற்றித்தான் அதிகம் பேசினோம். பரமக்குடி எங்க ஊர். ரொம்ப வறட்சியான மாவட்டம். `அங்கே நிலத்தடி நீரை அதிகரிக்கணும்; விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்'னு சில விஷயங்களை சார்கிட்ட சொன்னேன். 37 வருடங்களாக நற்பணி இயக்கங்களை வைத்து தலைவர் பல நல்லதை பண்ணிட்டிருக்கார். அதன் அடிப்படையில் `இதையும் கொஞ்சம் பண்ணுங்க. நாங்களும் உங்ககூட இருக்கிறோம் சார்'னு சொன்னேன்.  `நீங்க நல்லா வரணும்'னு சொன்னார்.'' 

``நீங்க `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே நடந்த பிரச்னையைப் பற்றிப் பேசலை, நாட்டு பிரச்னையைத்தான் பேசி இருக்கீங்க?'' 

``இது நாட்டுப் பிரச்னையும் கிடையாது. இந்த நாட்டுக்குள்ளேதான் என் வீடு இருக்கு. அதனால, இதை என் வீட்டுப் பிரச்னையாகக்கூட நீங்க எடுத்துக்கலாம்.'' 

`` `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே போனதுக்கு அப்புறம், `ஏன்டா இங்கே வந்து மாட்டிக்கிட்டோம்'னு நினைச்சீங்களா?'' 

``ஆங்... அப்படியெல்லாம் எதுவும் நினைக்கலைங்க. ஆனா, சினேகன் சார் `Dishonest'னு அவார்டு கொடுத்தார்ல. அப்பதான் நான் செத்தேபோயிட்டேன். அன்னிக்கு ராத்திரி, நான் செத்துபோன மாதிரி நான் உணர்ந்தேன்.'' 

``அது ஒரு டாஸ்க். அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்?'' 

``அது டாஸ்க்தான். ஆனா, மனசுக்குத் தெரியாதுல்ல. `நம்மை `Dishosent'னு சொல்லிட்டாங்களே'ங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியலை. அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துச்சு.'' 

``ஓவியாவுக்கு `தான் சோம்பேறி'னு விருது கொடுக்கப்பட்டபோது, அவங்க அதை வாங்கிக்கொள்ளவில்லை. சினேகன்கிட்டயே கொடுத்துட்டு வந்துட்டாங்க. நீங்களும் அப்படித் திருப்பிக் கொடுத்திருக்கலாமே?'' 

``நான் திருப்பிக் கொடுத்திருந்தால் வேற பிரச்னை வந்திருக்கும். அவரோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருப்பார். மீண்டும் அந்தப் பேச்சு வளரும். பிரச்னை உருவாகும். அது இன்னமும் அதிகப்படியான மன உளைச்சலை எனக்கு ஏற்படுத்தும் என்பதால், அதை வாங்கிக்கிட்டேன். சினேகன் சார்கிட்ட, `நான் என்னைத் திருத்திக்கிறேன்'னு சொன்னேன். அப்படிச் சொன்னால்தான் அவர் திருப்தி அடைவார்னு எனக்குத் தெரியும். அதுதான் அங்கே அப்படிப் பேசினேன். அங்கயே முடிக்கணும்னு நினைச்சேன். அதுதான் வாங்கிக்கிட்டேன்.'' 

பரணி பேட்டி முழுவதும் காண...

``நீங்களும் கணேஷும் `அச்சம் தவிர்' என்ற நிகழ்ச்சியில் ஏற்கெனவே ஒண்ணா கலந்துக்கிட்டீங்க. ஆனா, `பிக் பாஸ்' வீட்டுல உங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது கணேஷ் ஏன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணலை?'' 

``அவர் என்னை ஒரு போட்டியாளரா பார்த்துட்டார். அதனாலதான் எனக்கு ஆதரவு தரலை. அங்கே எனக்கு மனிதாபிமான அடிப்படையில்கூட யாரும் உதவி செய்யலை. நான் வெளியே வந்ததுக்கு அப்புறம், எங்க அம்மா `என்னடா கண்ணு, மேல ஏறினபோது கீழ விழுந்து உன் கை, கால் உடைஞ்சிருந்தா என்னடா ஆகுறது? உனக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்களேடா'னு சொன்ன அப்புறம்தான் அந்த விபரீதத்தை என்னால் உணர முடிஞ்சது.'' 

``கஞ்சா கருப்பு உங்கமேல பல குற்றச்சாட்டுகளை வைத்தார். என்னதான் உங்களுக்கும் அவருக்கும் பிரச்னை?'' 

``கமல் சார்கிட்ட சொன்னதுதான், `நாடோடிகள்' படம் பண்ணும்போதே நடுவுல ஏதாவது சொல்லிட்டிருப்பார். சமுத்திரக்கனி அண்ணன் வந்து சமாதானம் பண்ணுவார். அவர் 300 படம் நடிச்சிருக்கார். நான் மூணு படம்தான் நடிச்சிருக்கேன். அவர்கிட்ட நான் சண்டைபோட என்ன இருக்கு? அடுத்து நான் ஹீரோவா பண்ண படத்துலயும் அவர் காமெடியனா நடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லி அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்தேன். ஆனா, ஒண்ணுங்க `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற திருக்குறளை நாம எடுத்துகிட்டுப் போகவேண்டியதுதாங்க. நாம ஏன் அவரைப் பற்றிக் குறை சொல்லணும்?'' 

``நீங்க வெளியே வந்ததுக்கு அப்புறம் எல்லா எபிசோடுகளையும் பார்த்தீங்களா?'' 

``இல்லைங்க. என் தம்பி, தங்கச்சி வீட்டுக்காரர் எல்லாருக்கும் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. நான் அவங்களைப் பார்த்துக்க ஹாஸ்பிட்டலையேதான் இருந்தேன். அதனால, நான் எந்த எபிசோடையும் பார்க்கலை.'' 

``Wild Card என்டரி கொடுத்தா திரும்பவும் வீட்டுக்குள்ளே போவீங்களா?'' 

``அதை மக்கள்தான் முடிவுபண்ணணும்.'' 

``மக்களும் நீங்க திரும்பவும் அந்த வீட்டுக்குள்ளே போகணும்னு முடிவுபண்ணிட்டாங்க. அப்ப என்ன பண்ணுவீங்க?'' 

``மக்கள் முடிவு செஞ்சா நிச்சயம் போவேன். ஒரு கலைஞனுடைய வேலை என்ன? மக்களை ரசிக்கவைப்பது. மக்கள் விரும்புவதைக் கொடுப்பதுதானே!'' 

`` `பிக் பாஸ்' வீட்டுக்கு மீண்டும் போயிட்டீங்க. திரும்பவும் உங்களை கார்னர் பண்ணாங்கன்னா என்ன பண்ணுவீங்க?'' 

``இதுக்கு முன்னாடி எந்தச் சூழ்நிலையில் எப்படி இருந்தேனோ... அதே சூழ்நிலையில் அப்படியேதான் இருப்பேன். திரும்பவும் என்னை டார்ச்சர் பண்றது அவங்களுடைய நோக்கமா இருக்கலாம். ஆனா, நான் நானாகத்தான் இருப்பேன்.'' 

``திரும்பவும் தப்பித்து வர மாட்டீங்களே?'' 

யோசிக்கிறார் ``98 சதவிகிதம் அப்படிப் பண்ண மாட்டேன். (என்ன நினைத்தாரோ) இல்லை... இல்லை... இந்த வாய்ப்பைக் கொடுக்கிறது மக்கள்னு சொல்லிட்டீங்க. அப்ப என்னை என்ன பண்ணாலும் 100 சதவிகிதம் உள்ளயேதான் இருப்பேன். தப்பிக்க முயற்சி பண்ண மாட்டேன்.'' 

``உள்ளே இருந்தபோது உங்களுக்குப் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாரு... வெளியே வந்ததுக்குப் பிறகு, உங்களுக்குப் பிடிச்சவங்க பிடிக்காதவங்க யாரு?'' 

``உள்ள இருந்தபோதும் எல்லாரையும் எனக்குப் பிடிக்கும்; வெளியே வந்த பிறகும் எல்லாரையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடுத்து, தலைவர் `உள்ளே போய் வாழு'னு சொல்றார். வெளியே வந்த பிறகு அந்தக் குடும்பத்தைப் பற்றிக் குறை சொல்வது நாகரிகமாக இருக்காது. ஒருவரைப் பற்றி முழுமையாத் தெரியாம குறை சொல்வது, ஒரு கொலை பண்றதுக்குச் சமம். என்னை அப்படி நிறையபேர் கொலை பண்ணியிருக்காங்க. அதே மாதிரி நானும் குறை சொல்லி, கொலை பண்ணணும்னு நீங்க நினைக்கிறீங்களா? என்னை நீங்க வாழ்த்தினாலும் வணங்குறேன், திட்டினாலும் வணங்குறேன்.'' 

``உங்ககூட `பிக் பாஸ்' வீட்டில் இருந்தவர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லணும்னா என்ன சொல்வீங்க?'' 

``சினேகன் - `ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள..' இதை எழுதினவருக்கும் இது பொருந்தும். 

காயத்ரி - நம்ம எல்லோரையுமே இப்படிச் சொல்லியிருப்பாங்க, `ரொம்ப ஆட்டம் போடுறேன்'னு. அதுதான் அவங்க. 

ஜூலி - (நீண்ட யோசனைக்குப் பிறகு) இன்னொரு வீட்டுக்குப் போன தங்கச்சி. 

ரைசா - செயற்கை, என்னிக்கும் ஒரிஜினல் ஆகாது. அவங்க செயற்கைதான். 

ஆரவ் - கூட்டத்தைப் பார்த்து ஒத்து ஊதுகிறது என்னிக்குமே நிலைக்காது. 

ஓவியா - எந்தச் சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி. 

வையாபுரி - அனுபவம் வாய்ந்த சிங்சா.. 

சக்தி - சொல்றதுக்குக் கஷ்டமாயிருக்கு. தொட்டியில் வைச்சு ஒரு மரத்தை வளர்ப்பாங்க. அது என்னிக்குமே பரந்து விரிந்து ஆலமரமாகவோ, பனைமரமாகவோ வளராது. பார்க்கும்போது மட்டும் பளிச்னு இருக்கும். அந்தத் தொட்டி மரம்தான், சக்தி. 

கணேஷ் - ஹைப்ரீட் முட்டை. 

நமீதா - டாய்லெட்ல மட்டும் சுத்தம் இருக்கக் கூடாது. மனசுலயும் இருக்கணும். 

ஆர்த்தி - `மாமியார் உடைச்சா மண் சட்டி, மருமகள் உடைச்சா பொன் சட்டி'னு சொல்வாங்க. அதுதான் அவங்களுக்குப் பொருந்தும். 

பரணி - என்னை மாதிரி வீட்டுல ஒருத்தன் இருப்பான். 

கஞ்சா கருப்பு - எல்லா தெருவுலயும் இந்த மாதிரி ஒருத்தர் இருப்பார். அவர் யாருனு நான் சொல்ல மாட்டேன். 

``கமல், `யார் ஜெயிப்பாங்க?'னு கேட்டபோது, ` `பை பரணி'னு சொன்ன குரல் ஜெயிக்கும்'னு சொன்னீங்க. இன்னமும் அவங்கதான் வெற்றி பெறுவாங்கனு நினைக்கிறீங்களா?'' 

``அன்னிக்கு இருந்த சூழ்நிலையில அப்படிச் சொன்னேன். இப்ப பிந்து மாதவியும் உள்ளே இருக்காங்க. அதனால, மக்கள் யாரை முடிவுசெய்றாங்களோ, அவங்கதான் வெற்றிபெறுவாங்க.''