Published:Updated:

இம்தியாஸ் அலியின் மேஜிக்கா... இல்லை பிளாக் மேஜிக்கா? - `ஜப் ஹரி மெட் சேஜல்' படம் எப்படி? #JabHarryMetSejal

இம்தியாஸ் அலியின் மேஜிக்கா... இல்லை பிளாக் மேஜிக்கா? - `ஜப் ஹரி மெட் சேஜல்' படம் எப்படி? #JabHarryMetSejal
இம்தியாஸ் அலியின் மேஜிக்கா... இல்லை பிளாக் மேஜிக்கா? - `ஜப் ஹரி மெட் சேஜல்' படம் எப்படி? #JabHarryMetSejal

காதல் கதைதான். ஆனால், யாஷ் சோப்ரா, கரண் ஜோகர் படங்களின் ட்ரீட்மென்ட் ஒருவிதம் என்றால், இம்தியாஸ் அலியின் படம் கையாள்வதே வேறு ஒன்றாக இருக்கும். பாலிவுட்டில் மட்டுமல்ல, பல மொழிகளிலும் காட்டாத, சொல்லாத காதல் கதைகளே கிடையாது. ஆனாலும், `ஜப் ஹரி மெட் சேஜல்' என்ற காதல் படம் வெளியாகிறது என்றதும் ஆர்வமானார்கள் ரசிகர்கள். காரணம். இம்தியாஸ் மட்டும்தான். ஆனால்...

சேஜல் ஸாவெரி (அனுஷ்கா ஷர்மா), குடும்பத்துடன் யூரோப்புக்கு சுற்றுலா வருகிறார். டூரிஸ்ட் கைடுடானா ஹரிந்தர் சிங் நெஹ்ரா (ஷாரூக் கான்) எல்லா பயணிகளையும்போல இந்தக் குடும்பத்துக்கும் ஊர் சுற்றிக்காண்பித்து வழியனுப்பிவைக்கிறார். ஆனால், ஏர்போர்ட்டிலிருந்து அனுஷ்கா மட்டும் ஷாரூக்கை நோக்கி ஓடிவருகிறார். ``மேரா என்கேஜ்மென்ட் ரிங் மிஸ்ஸிங் ஹே" எனச் சொல்லி, ``அது திரும்பக் கிடைக்காம யூரோப்பைவிட்டுப் போறதா இல்லை'' என்கிறார். ஊர் சுற்றிக்காட்டிய ஷாரூக்கையே மோதிரத்தைத் தேடவும் கைடாக அழைத்துக்கொண்டு கிளம்புகிறார் அனுஷ்கா. பிறகு, நடப்பது இம்தியாஸ் அலியின் மேஜிக்கா, இல்லை பிளாக் மேஜிக்கா என்பதுதான் படம். 

கவிதைபோல கதை நகர்த்துவது, இம்தியாஸுக்குச் சாதாரணமான விஷயம். தனிமையிலிருந்து தன்னை மீட்க வந்தது இவள்தான். இவள் அருகில் இருப்பது அமைதி, முழுமை என ஷாரூக்கும், தனக்கான பாதுகாப்பும், சுதந்திரமும், காதலும், அழுகையும் இவனிடம்தான் இவனுக்காகத்தான் என அனுஷ்காவும் உணர்வதாக, மோதிரத்துக்கான இவர்களின் பயணம் நீள்கிறது. இடையில் நடக்கும் உரையாடல்கள், விலகுவதற்காக இருவரும் எடுக்கும் முயற்சிகள் மூலமாக, ஆடியன்ஸுக்குக் கொடுக்க விரும்பும் அத்தனை உணர்வுகளையும் கொடுக்கிறார் இம்தியாஸ். அதை மெள்ள மெள்ள ஓர் உயரத்துக்குக் கொண்டுசேர்ப்பது, முடிவடையும்போது தொப்பெனப் போட்டு உடைத்து அதன்மூலம் தர நினைத்த அமைதியும் சூழ்கிறது. ஆனால், எத்தனை முறை? வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு சூழல்கள். ஆனால், ஒரே மாதிரி ஆட்டம் என்பது அலுப்புதருகிறது. இம்தியாஸ் அலி + ஷாரூக் கான் + அனுஷ்கா ஷர்மா என நல்ல கூட்டணி, `நீ தேடிக்கொண்டிருப்பது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது' என்ற ரூமியிச ஒன்லைன். வேறென்ன வேண்டும் என அமர்ந்தால், `ஜப் வி மெட்', `லவ் ஆஜ் கல்', `தமாஷா' என நாம் முன்பு பார்த்து ரசித்து, சிலிர்த்து, சலித்த அத்தனையும்தான் மீண்டும் ஒருமுறை திரையில் வருகின்றன. 

தான் உணரும் தனிமை, வெளிக்காட்டும் கோபம், சட்டென உடைந்து அழுதபடி அமர்வது, அனுஷ்காவுடனான வாக்குவாதம் என ஷாரூக் சிறப்பு. ஆனால், இதைவிட ஷாரூக் சிறப்பாக நடித்த படங்கள் இருக்கின்றன எனும்போது சறுக்கல். கொஞ்சம் முன்னால் வெளியான `ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் இதே மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப்பில் வேறு மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. அதே அழுகை, சிரிப்பு, காதல், தடுமாற்றம். ஆனால், பிரச்னை மட்டும் வேறு. சிறப்பான நடிப்பாகவே இருந்தாலும், இப்போதுதான் இதே மாதிரி ஒரு அனுஷ்காவைப் பார்த்தோம் என உறுத்தல் இருந்தது. யூரோப்புக்கு டிக்கெட் எடுத்து விண்டோ சீட்டில் அமர்ந்ததுபோல் பெர்லின், லிஸ்பான், வியன்னா என மொத்த யூரோப்பையும் சுற்றிக்காட்டுகிறார் கே.யூ.மோகனன். ப்ரீத்தம் இசையில் `ராதா', `கர்' பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. ஹிதேஷ் சோனிக் பின்னணி இசையில் பல இடங்களில் மெலிதாக ஒலித்தே சிறப்பான உணர்வைக் கடத்துகிறது. 

`இம்தியாஸின் மிக பலவீனமான சினிமா இது!' எனப் படம் பற்றி, எங்கும் நெகட்டிவ் விமர்சனங்கள்தான் முன்வைக்கப்படுகின்றன. அது ஏற்றுக்கொள்ளக்கூடியதும்தான். ஆனால், இது இம்தியாஸுக்குப் புரியாமல் இருக்குமா என்ன? நிஜத்தில் அவரின் கதை எழுதும் புராசஸ், யோசனைகள் எல்லாம் முடிவடையாத ஒரு தேடல் போன்றது. அந்தத் தேடல் முடிவடையாது என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும், அதைத் தொடர மேற்கொள்ளும் முயற்சிகள்தான் அடுத்தடுத்த படங்களில் நாம் பார்ப்பது. அடுத்த முறை இன்னும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதை இம்தியாஸ் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். 

ஏற்கெனவே பார்த்த ஊரை, மோதிரத்தைத் தேடுவதற்காக அனுஷ்கா மறுபடியும் சுற்றிப்பார்க்க நேர்கிறது. ஆனால், ஒரே ஊரை பலருக்கும் சுற்றிக்காட்டி சலித்துப்போன ஷாரூக் நிலைமையை நினைத்துப்பாருங்கள். அதுபோலதான் ஆடியன்ஸ் நிலைமையும். பலமுறை பார்த்த அதே காதல், அதே ஃபீலிங்ஸ், அதே இம்தியாஸ். இருந்தும்... சரி இருக்கட்டும்!