Published:Updated:

’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..!?” - இரு படங்களின் எடிட்டர் ரூபன்

’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..!?” - இரு படங்களின் எடிட்டர் ரூபன்
’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..!?” - இரு படங்களின் எடிட்டர் ரூபன்

’மெர்சல்... விவேகம்... ரெண்டுலயும் ஸ்பெஷல் என்னன்னா..!?” - இரு படங்களின் எடிட்டர் ரூபன்

``இதுவரை 30 படங்களுக்கு நான் எடிட்டிங் பண்ணியிருப்பேன். எந்தப் படமும் `விவேகம்' அளவுக்கு என்னை வேலை வாங்கினதில்லை. அப்படி ஒரு அற்புதமான படம். சிவா சாருக்கு நன்றி!'' - அஜித்தின் `விவேகம்', விஜய் நடிக்கும் `மெர்சல்' என தல - தளபதிக்கு கட் கொடுத்துக்கொண்டிருக்கிறார் எடிட்டர் ரூபன். 

``சிவா சாரின் `வீரம்' படத்துக்கு நான் ட்ரெய்லர் கட் பண்ணிக் கொடுத்தேன். என்னோட வொர்க் அவருக்குப் பிடிச்சிருந்தது. `அடுத்த படத்துல சேர்ந்து வொர்க் பண்ணுவோம்'னு சொன்னதோடு, `வேதாளம்' வாய்ப்பைக் கொடுத்தார். அந்த நட்புதான், `விவேகம்' வரை தொடருது. தன்னோட டெக்னீஷியன்களை ரொம்ப மரியாதையாகவும் பாசத்தோடவும் நடத்துபவர் இயக்குநர் சிவா. `என் படத்துல வொர்க் பண்றீங்களா?', `என் படம் இப்படியெல்லாம் இருக்கணும்'ங்கிற வார்த்தைகள்கூட அவர்கிட்ட இருந்து வராது. ஒவ்வொருமுறையும் படத்தைப் பற்றிப் பேசும்போது, `நம்ம படம்'னுதான் சொல்வார். அவர்கிட்ட இருக்கிற லீடர்ஷிப்பைப் பார்க்கிறது அபூர்வம். `விவேகம்' படத்துல நான் நிறைய பரிசோதனை முயற்சிகள் பண்ணியிருக்கேன். அதுக்குக் கிடைக்கப்போற எல்லா பாராட்டுகளும் சிவா சாரையே சேரும்!''

`` `வேதாளம்' - `விவேகம்', `தெறி' - `மெர்சல்'னு ரெண்டு மாஸ் ஹீரோக்களின் படத்துக்குத் தொடர்ச்சியா வேலைபார்க்கிறீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம்?"

``ரொம்பப் பிடிச்சிருக்கு. சிவா - அட்லி, ரெண்டு இயக்குநர்களுமே எனக்குப் பயத்தையோ பதற்றத்தையோ கொடுக்கலை. அட்லி உதவி இயக்குநரா இருக்கும்போது, நான் உதவி படத்தொகுப்பாளர். நல்ல நண்பர்களா இருந்தோம். தயாரிப்புத் தரப்பு `பெரிய டெக்னீஷியன்ஸ் வெச்சு வொர்க் பண்ணுங்க'னு கொடுக்கிற அழுத்தத்தை அழகா சமாளிச்சு, நிறைய புது ஆள்களைப் பயன்படுத்துவார். நல்ல கலைஞர்களுக்கு, போராடியாவது அங்கீகாரம் வாங்கிக் கொடுப்பார். `தெறி' கொடுத்த வெற்றிதான், அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகளை எனக்குக் கொடுத்துச்சு. சிவா சாரும் அப்படித்தான், தன் டெக்னீஷியன்களை அவ்ளோ பத்திரமா பார்த்துக்குவார். தவிர, எவ்ளோ பெரிய படமா இருந்தாலும், ஒரு எடிட்டரோட பாயின்ட்ல நல்ல கதையா மட்டும்தான் தெரியணும். அதுல நான் தெளிவா இருப்பேன். அஜித் சார் படமாச்சே, விஜய் சார் படமாச்சேனு பயந்துகிட்டே வேலைபார்த்தா, படம் நல்லா வராது. ஸோ... ரெண்டு பெரிய ஸ்டார்களோட படங்களை எடிட் பண்ற பதற்றம் எனக்கு இல்லை. `காலையில தல படத்துக்கு வொர்க் பண்ணோம், சாயங்காலம் தளபதி படத்துக்கு வொர்க் பண்றோம்'கிற சந்தோஷம்தான் இருக்கு!''

`` `விவேகம்', `மெர்சல்' ரெண்டுமே அவங்களோட முந்தைய படங்களைவிட அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள். அதைப் பூர்த்திசெய்ற பொறுப்பு உங்களுக்கும் இருக்கு. ரசிகர்களைச் சமாளிச்சிடுவீங்களா?"

``அஜித், விஜய்... ரெண்டு பேருக்கும் தனித்தனி ஏரியா இருக்கு. கிரிக்கெட்ல நாம அஸ்வினோட பெளலிங்கையும் ரசிப்போம்; விராட் கோலியோட பேட்டிங்கையும் ரசிப்போம். அந்த மாதிரி, ரெண்டு பேரோட படங்களையும் அவங்களுக்குத் தகுந்த மாதிரி, அவங்க ஆடியன்ஸோட பல்ஸுக்குத் தகுந்த மாதிரி எடிட் பண்ணியிருக்கேன். `விவேகம்' படம், எனக்கு பெரிய அனுபவம். இயக்குநர் சிவாவுக்கு நாம 50 சதவிகித உழைப்பைக் கொடுத்தாலே, ரசிச்சுப் பாராட்டுவார். இன்னும் அதிகமா கொடுத்தா ரொம்ப உற்சாகமாகிடுவார். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், ஒரு கலைஞனுக்குப் பாராட்டுதானே பலம்! அவரோட நம்பிக்கையை `விவேகம்' படத்துல காப்பாத்தியிருக்கேன். இது கதை, திரைக்கதையில ஆரம்பிச்சு, எல்லா பக்கங்களும் பரிசோதனை முயற்சிகளைக்கொண்ட படம். தவிர, ஒரு எடிட்டரா எல்லா படங்களையும் பார்க்கிறேன்; ரசிகர்களோட எதிர்பார்பை உள்வாங்கிக்கிறேன். நிச்சயமா என்னோட பெஸ்ட் வொர்க் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!''

`` `விவேகம்' , `மெர்சல்' படங்களோட ஸ்பெஷல்ஸ் சொல்ல முடியுமா?"

``கொஞ்சமா சொல்றேன். மிகைப்படுத்திச் சொல்றதா நினைக்கவேணாம். ஹாலிவுட் மேக்கிங்ல ஒரு படத்துக்கு என்னென்ன ஃபுட்டேஜ் எடுப்பாங்களோ, அதையெல்லாம் `விவேகம்' படத்துக்காக எடுத்திருக்காங்க. ஷூட் பண்ண பெரும்பாலான காட்சிகளைப் படத்துக்குப் பயன்படுத்தியிருக்கேன். `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படம் பார்க்கும்போது, ஒரு காரை எப்படியெல்லாம் ஹேண்டில் பண்றாங்கனு காட்டுறதுக்கு டீடெயிலான ஷாட்ஸ் வெச்சிருப்பாங்க. `விவேகம்' மேக்கிங்ல அந்த நுணுக்கம் இருக்கு. `ஜேம்ஸ் பாண்ட்' படங்கள்ல இருக்கும் விறுவிறுப்பும் இருக்கு. ` `விவேகம்'  படம், தமிழில் ஒரு ஹாலிவுட் படம்'னு தாராளமா சொல்லலாம்.

`மெர்சல்', விஜய் சாரோட வேற லெவல் படம். காலையில ஷூட்டிங் நடந்தா, சாயங்காலம் எடிட் பண்ணிடுவோம். பெரும்பாலான ஷூட்டிங் முடிஞ்சது. ஒரு பாடல் காட்சி மட்டும் எடிட்டிங் பண்ணவேண்டி இருக்கு. விஜய் சாரோட நடிப்பும், பாட்டுக்கு அவர் ஆடியிருக்கும் டான்ஸும் ரொம்ப ஸ்பெஷல். ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட பெஸ்ட் ஆல்பங்கள்ல `மெர்சல்' ஆல்பமும் ஒண்ணா இருக்கும். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற, தமிழைப் போற்றிப் புகழ்கிற மாதிரி... சூப்பர் பாட்டு ஒண்ணு படத்துல இருக்கு!''

``ஹீரோக்களின் சாகசங்களை ஆடியன்ஸ் பிரமிப்பா பார்ப்பாங்க; செய்திகளை ஷேர் பண்ணுவாங்க. ஆனா, ஒரு எடிட்டருக்குத்தான் சாகசங்கள், பிரமிப்புகளுக்குப் பின்னாடி இருக்கிற உண்மை தெரியும். அந்த வகையில், `விவேகம்'ல அஜித் எடுத்த ஒரிஜினல் ரிஸ்க் என்ன?"

``நிறைய இருக்கு. ஒரு சண்டைக்காட்சியில 50 அடி உயர மரத்துல இருந்து அஜித் குதிப்பார். பாதுக்காப்பு வசதிகளோடுதான். ஆனாலும், அதை டூப் வெச்சு எடுக்காம அஜித்தே நடிச்சார். ஒரு பாலத்துல நடக்கும் சண்டைக்காட்சி படத்துல இருக்கு. ரெண்டு டிரெயின்களுக்கு நடுவே நடக்கும் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கு. அஜித் சார் எடுத்த அதிகபட்ச ரிஸ்க் இதுனு சொல்வேன். ஏன்னா, சாதாரணமா ஒரு டிரெயின் நம்மளைக் கடக்கும்போதே உடம்புல உதறல் இருக்கும். ஓடிக்கிட்டே இருக்கிற ரெண்டு டிரெயின்களுக்கு இடையில சண்டைக்காட்சிகள் எடுத்திருக்காங்க. அது எடுக்கப்பட்ட விதமும் ரொம்ப அருமையா இருந்தது. அஜித் வர்ற பைக் சீக்குவன்ஸ் எல்லாம் -15 டிகிரி குளிர்ல எடுத்தது. 20, 30 கார்கள் துரத்தும்போது, அவ்வளவு குளிர்ல பைக் ஓட்டுறது கஷ்டம். அதையும் அஜித் சார் ஒரிஜினலாவே பண்ணார். தவிர, ரெண்டு ஃபைட்ல அக்‌ஷரா ஹாசனும் கலக்கியிருக்காங்க!''

``எடிட்டிங்ல படம் பார்க்கும் அஜித் - விஜய் என்ன கமென்ட்ஸ் கொடுப்பாங்க?"

``அஜித் சார் எப்பவுமே மொத்தப் படத்தையும் முடிச்சுட்டு `பார்க்கலாம்'னு சொல்வார்; டீசர், ட்ரெய்லர் காட்டும்போது சந்தோஷப்படுவார். டெக்னீஷியன்ஸ் மேல அதிக நம்பிக்கைவைக்கிற மனிதர் அஜித். விஜய் சாரைப் பொறுத்தவரைக்கு அவரோட படம் எப்படி வந்திருக்குனு பார்க்கிறதுல ஆர்வம் இருக்கும். ஆனா, எங்கமேல அந்த பிரஷரைத் திணிக்க மாட்டார். அவரோட ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு, நாங்களே சில காட்சிகளைப் போட்டுக்காட்டி, `இந்த இடத்துல பிரமாதமா பண்ணியிருக்கீங்க சார்'னு அவருக்கு சர்பிரைஸ் கொடுப்போம்.''

``அடுத்து?"

``விக்ரம் நடிக்கும் `ஸ்கெட்ச்', ஜெய் நடிக்கும் `பலூன்', சிபிராஜ் நடிக்கும் `ரங்கா', விஷ்ணுவின் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படங்களோட வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. இன்னும் சில படங்களுக்கு கமிட் ஆகியிருக்கேன்!''

அடுத்த கட்டுரைக்கு