Published:Updated:

ஆரவ்வின் மருத்துவ முத்தமும், கமலின் மருத்துவ முத்தங்களும்!

ஆரவ்வின் மருத்துவ முத்தமும், கமலின் மருத்துவ முத்தங்களும்!
ஆரவ்வின் மருத்துவ முத்தமும், கமலின் மருத்துவ முத்தங்களும்!

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சமீபத்தில் சர்ச்சையான விஷயம் `மருத்துவ முத்தம்'. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியா, தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரபலமாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. நிகழ்ச்சியில், இன்னொரு பங்கேற்பாளரான ஆரவ் என்பவரோடு ஓவியா ஒருதலையாகக் காதல்கொண்டதும், அதுகுறித்தான விவாதங்களும் வலைதளங்களில் தொடர்ந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

06-08-17 அன்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், `பிக் பாஸ்' வீட்டிலிருந்து ஓவியா வெளியேறியதைப் பற்றி ஆரவ்விடம் விசாரணை நடத்தினார். அப்போது `தங்களிடம் திருப்பிக் கேட்டதைக் கொடுத்துவிட்டீர்களா?' என வினவினார். முதலில் மறுத்த ஆரவ், பிறகு கமலின் தீவிர கேள்விக் கூர்மையில் திருட்டுமுழியுடன் மாட்டிக்கொண்டார். ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். `காதல் இல்லை எனும்போது எப்படி முத்தம்?' எனக் கேட்டதற்கு, ஆரவ் நிறைய சமாளிஃபிகேஷனோடு `அது பிக் பாஸின் ஆலோசனைப்படி, சினேகனோடு கலந்து பேசி...' என்றெல்லாம் சமாளிக்க முயற்சிசெய்தார். ஆனால், கமல் அவரை விடுவதாக இல்லை. முத்த நாயகனிடமே முத்தம் பற்றி எசகுபிசகாக விளக்கலாமா?   `சினேகன் கூறினால், யாருக்கு வேண்டுமானாலும் முத்தம் கொடுப்பீர்களா?' என்று கேள்விக்கணைகளைச் சரமாரியாக வீசினார்.

கமலும் முத்தமும்:

தமிழ் சினிமா உலகில் `முத்த நாயகன்' என்னும் பெயரை 30 ஆண்டுகளாக தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பவர் கமல். அவருடைய முத்தங்களை, அவ்வளவு எளிதில் ரசிகர்கள் கடந்துவிட முடியாது. ஒரு கதைக்கோ ஒரு காட்சிக்கோ உறுத்தலாக இல்லாமல், எங்கு தேவையோ அங்கு முத்தங்களை விதைக்கும் சினிமாவின் முத்த வல்லுநர் கமல். அவருடைய முத்தங்களை விவரமாகச் சொல்லவேண்டுமென்றால், பிரிவு, ஏக்கம், உற்சாகம், வலி எனப் பல இடங்களில் உணர்ச்சிப் பிரவாகத்தைப் பகிரும் காரணியாக முத்தங்களைப் பிரயோகம் செய்திருப்பார்.

மருத்துவ முத்தம் என்றால் என்ன?

ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்து உண்டு. ஆனால், இங்கு மருந்தே நோயாகும். ஆம், காதல் என்னும் நோய்க்கு ஒருவித ஆறுதல் தரும்விதமாக முத்தத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டபோது, கமல் நகைச்சுவையாக `அப்படியானால், இது மருத்துவ முத்தமா?' என்று கேள்வி எழுப்பினார். `அப்படியானால், அந்த மருந்து தன் வேலையைச் செய்ததா? அது நோயைக் குணமாக்கும் முத்தமல்ல' என்பதை `பிக் பாஸ்' நிகழ்வில் கமல் முன் ஓவியா `ஐ லவ் ஆரவ்' என்று கத்தியதையும் பொதுவெளியில் மக்கள் முன் `ஐ லவ் ஆரவ்' என்று சொல்லிவருவதையும் வலைதள வீடியோக்களில் காணலாம். அப்படியானால், ஆரவ் கொடுத்தனுப்பிய முத்தம், நோயை குணமாக்கவில்லை என்றுதானே அர்த்தம்!

கமலின் ஒரிஜினல் மருத்துவ முத்தங்கள்:

`புன்னகை மன்னன்' படத்தில் முதல் காட்சியிலேயே கமல்-ரேகா முத்தக் காட்சி, அன்றளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அபரிமிதமான காதலைக்கொண்ட ஜோடி, சமூகம் முன் வாழ முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன் ஒருவருக்கொருர் தரும் முத்தம். அது, அவர்கள்கொண்ட வலிக்கும் அவர்கள் கொண்டாடப்போகும் மரணத்துக்கும் பொதுவான மருத்துவ முத்தமாக அமைந்தது. `தேவர் மகன்' படத்தில் தன் காதலியைப் பிரியும் ரயில் காட்சியில் கவுதமி, கமல் கன்னத்தில் இடும் முத்தம் அவர்களுடைய பிரிவுக்கான வலிக்கு கவுதமி எடுத்துச் செல்லும் மருந்து, அந்த மருத்துவ முத்தம்.

`மகாநதி' படத்திலும் அப்படியான ஒரு காட்சி உண்டு. வில்லன்களைப் பழிவாங்க புறப்படும் கமலைத் தடுக்க முயற்சிக்கும் சுகன்யாவுக்குக் காதல் தளும்ப, கமல் முத்தம் கொடுப்பார். அவருடைய இளமைக்காலம் அந்த முத்தத்தோடு முடிவடையப்போகிறது என்பதான ஒரு வலிக்கு மருத்துவ முத்தமாக அமையும் காட்சி அது.

`ஹேராம்', `குருதிப்புனல்', `உத்தமவில்லன்', `ஆளவந்தான்' போன்ற படங்களிலும் முத்தக் காட்சியில் கமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட முத்த நாயகனிடம் ஆரவ் கூறிய குழந்தைத்தனமான சமாளிஃபிகேஷனுக்கு, கமல் தன் எரிச்சலை, கோபத்தை சபை நாகரிகம் கருதியே மறைத்துக்கொண்டு `மருத்துவ முத்தம்' எனக் கூறி பரிகாசம் செய்தார். கமலின் இந்த டைமிங் பேச்சினால் வைரலானது அந்த வார்த்தை. இனி வலைதளங்களில் அதிகமாக `மருத்துவ முத்தம்'  பற்றி அடிக்கடி காணலாம்!

உங்களுக்குத் தெரிந்த கமலின் மருத்துவ முத்தங்களை இங்கே பகிருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு