Published:Updated:

இந்த ‘ஒக்கடு’ ஒரு சினிமா ‘போக்கிரி’! - ஜெயிக்கப்பிறந்த ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு! #HBDMaheshBabu

பா.ஜான்ஸன்
இந்த ‘ஒக்கடு’ ஒரு சினிமா ‘போக்கிரி’! - ஜெயிக்கப்பிறந்த ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு! #HBDMaheshBabu
இந்த ‘ஒக்கடு’ ஒரு சினிமா ‘போக்கிரி’! - ஜெயிக்கப்பிறந்த ‘ஸ்பைடர்’ மகேஷ்பாபு! #HBDMaheshBabu

அப்பா கிருஷ்ணா திரையுலகில் பெரிய ஸ்டார். சினிமா என்ட்ரிக்கு வசதியாக நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியிருந்தார் மகேஷ் பாபு. எனவே, அவர் 'ராஜ குமாருடு' படத்தில் அறிமுகமான போது யாருக்கும் அது ஆச்சர்யமாக இல்லை. இருந்த ஒரே சவால் மகேஷ் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்வதும், அதற்கு தகுதியானவராக தன்னை வளர்த்துக் கொள்வதும்தான். உடனடியாக இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக அது நடந்தது. அதில் இன்னொரு பலமான சிக்கலும் உண்டு. மகேஷ் மட்டுமல்ல, அங்கு நடிக்க வரும் ஒவ்வொரும் வாரிசு நடிகர்களாகவே இருந்தார்கள். இன்றுவரை, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் 99 சதவிகிதத்தினரின் பின்னால் வலுவான சினிமாப் பின்னணி உள்ள குடும்பம் இருக்கும். எனவே இதில் மகேஷ் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க ஏதாவது செய்தாக வேண்டும். செய்தார்... ரசிகர்கள் கொண்டாடினார்கள்.. மகேஷ் பாபு ரசிகர்களின் ப்ரின்ஸ் ஆனார். அந்த ப்ரின்ஸுக்கு இன்று பிறந்தநாள்!

எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரி நடிப்புதானே? என்பதும், தோற்ற மாற்றம் என்பதை ஹேர் ஸ்டைல் மற்றும் காஸ்ட்யூம் வழி மட்டுமே காட்டியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும், மகேஷ் மீது எப்போதும் முன்வைக்கப்படும். கண்டிப்பாக இது ஒப்புக் கொள்ளவேண்டியதுதான். அதோடு, அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் போல் நடிக்க வேற்றுகிரகத்தில் கூட ஆள்கிடையாது என்று சொல்வதோ, வலிந்து அதை நிரூபிக்க முயற்சி செய்வதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் கிடையாது. வெறுமனே, மாஸ் ஹீரோ... 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் படங்கள், கட்-அவுட், பாலாபிஷேகம் என மகேஷ் மீது விழுந்திருக்கும் பார்வையை திருத்தச் செய்யும் முயற்சி. அவர் வெறுமனே மாஸ் மட்டும் காட்டும் மெஷின் இல்லை என சின்ன மேற்கோள்காட்டுதல் மட்டுமே எண்ணம். இப்போது எழும்பியிருக்கும் அவர் மீதான மாஸ் கட்டமைப்பிற்குப் பின்னால் நிறைய முன்னெடுப்புகள் உண்டு. அடித்து சொல்லலாம், மகேஷ் அளவுக்கு வித்தியாசமான களங்களைத் தேர்ந்தெடுத்த தெலுங்கு நடிகர்கள் மிக மிகக் குறைவு. ஆரம்பகாலம் பலருக்கும் போல மகேஷுக்கும் காதல் படங்களாக வந்து விழுந்தது. ஆனால், 'முராரி'க்குப் பிறகு கதைத் தேர்வில் கொஞ்சம் கவனம் காட்டத் தொடங்கினார் மகேஷ். 

படம் வெளியான பின்பு நினைத்தது நடந்ததோ இல்லையோ, ஆனால் புதுசு புதுசாக கதைகள் தேர்ந்தெடுப்பதைக் கைவிடவில்லை அவர். 'முராரி' சூப்பர் நேச்சுரல் வகையறா படம், மிக சுமாரான கௌவ் பாய் படம் என்றாலும் 'டக்கரி தொங்கா' படமும் கவனிக்கப்பட வேண்டியது, 'ஒக்கடு' பக்கா கமர்ஷியல் படம். மகேஷே எதிர்பார்க்காத அளவு ஹிட்டானது 'ஒக்கடு'. இந்த சமயத்தில் உருவாகிறது 'நானி'. தமிழில் பல சர்ச்சைகள் கிளம்பி, ‘அந்தப் படமா பார்த்துட்டு வந்த? சீ!’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட 'நியூ' படத்தின் தெலுங்கு வெர்ஷந்தான் 'நானி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வெளியானது படம். தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக தயார் செய்து கொண்டிருந்த மகேஷ், இப்படியான ஸ்க்ரிப்டைத் தேர்ந்தெடுத்து நடிப்பது கயிற்றின் மேல் அல்ல கத்தியின் மீது நடக்கும் சவால் போன்றது. அந்த சவால் தோல்வியில்தான் முடிந்ததும் கூட. ஆம்...  'நானி' படுதோல்வி. அதை சமன் செய்தது குணசேகர் இயக்கத்தில் நடித்த 'அர்ஜுன்' படத்தின் ஹிட். படம் முழுக்க ஹீரோவின் பெயரையே குறிப்பிடாமல் எடுக்கப்பட்டது என அதிலும் சின்ன சுவாரஸ்யம் உண்டு. அடுத்து 'அதடு', 'போக்கிரி' என பேக் டூ பேக் ப்ளாக் பஸ்டர் ஹிட். 

இன்னும் சில படங்களுக்குப் பிறகு 'சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு' படத்தில் வெங்கடேஷ் உடன் நடிக்க வேண்டிய சூழல். மல்டி ஸ்டார் கேஸ்டிங் எல்லாம், தெலுங்கில் எப்போதாவது நிகழும் அதிசயம். ஒரு சண்டைக்காட்சி கூட கிடையாது, முழுக்க முழுக்க குடும்ப உறவுகள், அண்ணன் தம்பி சென்டிமென்ட் என இறங்கி வந்து நடிக்க வேண்டிய படம். ஒரே மாதிரி தன்னை ஆடியன்ஸுக்குக் காட்ட வேண்டாம் என்ற மகேஷின் எண்ணம் படத்தில் நடிக்க வைத்தது. வருடத்தின் மிகப் பெரிய ஹிட்டானது படம். 'சின்னோடு' என குடும்ப ஆடியன்ஸுக்கு மிக நெருக்கமானார் மகேஷ். அதே போல் தோல்விக்கும் ஒரு சாம்பிள் உண்டு. 'ஆர்யா 2' ஹிட் கொடுத்த இயக்குநர் சுகுமாரின் 'நேனொக்கடினே' கதையைக் கேட்கிறார். சைக்கலாஜிகல் த்ரில்லர் வகைப் படம். வழக்கமான மசாலா படங்களுக்கு நடுவே, தெலுங்கு சினிமா எடுத்த முக்கியமான முயற்சி 'நேனொக்கடினே'. ஆனால், பொங்கல் வெளியீடாக வந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த பன்ச் இல்லை, தெறிக்கவிடும் சண்டை என எதுவும் இல்லை. படம் ப்ளாப். இப்ப என்ன வேணும், இதுதானே இந்தா 'ஆகடு' எனப் பழைய படி இறங்கி பன்ச் பேச வசூல் எகிறியது. நினைத்தால் மற்ற மொழிகளில் ஹிட்டான படங்களை எடுத்து ஸ்கெட்ச் போட்டு ரீமேக் செய்து கல்லாகட்ட முடியும். ஆனால், மகேஷின் எண்ணம் அது கிடையாது. கூடவே ரீமேக்கில் அவருக்கு உடன்பாடு கிடையாது. மகேஷின் நினைப்பு எல்லாம், கொஞ்சமாவது வித்தியாசமாக பண்ண வேண்டும். நம்மிடம் என்ன ரசிக்கிறார்களோ, அதை வைத்து என்னவெல்லாம் புதிதாக செய்ய முடியுமோ, அதை செய்ய வேண்டும். முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் 'ஸ்பைடர்' எப்படியான படமோ தெரியாது. ஆனால், கண்டிப்பாக இன்னொரு பரிசோதனை முயற்சிக்கு மகேஷ் தயாராகவேதான் இருக்கிறார். அதற்கு தகுந்த ஆள் சிக்கினால், "ஆய்... ஊய்..." என்ற அடிதடிப் படங்களைத் தாண்டி வேறு வேறு வகைப் படங்களிலும் மகேஷைப் பார்க்க முடியும். 

வீ ஆர் வெயிட்டிங் மகேஷ்!