`பாதிக்கதை பஞ்சு!' இளம் இயக்குநர்களின் முன்னோடி... பஞ்சு அருணாசலம் நினைவு தினக் கட்டுரை!

தமிழ் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, அச்சுத் துறையில் சேர்ந்து, கண்ணதாசனின் உதவியாளராக இருந்து, பிறகு திரையுலகில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்து, இனிவரும் திரைக் கலைஞர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்பவர் பஞ்சு அருணாசலம். அவர் இறந்து, இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்த சூழலில், அவருக்கான அஞ்சலியாக இந்தக் கட்டுரையைச் சமர்பிக்கிறோம்.

பஞ்சு அருணாச்சலம்

பஞ்சு அருணாசலம், தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களுக்காக இளையராஜாவைக் கொண்டுவந்தவர் என்றே அடிக்கோடிட்டு அறியப்படுகிறார். இதுமட்டுமே அவர் சாதனை அல்ல, சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர் என, திரையின் பல பிம்பங்களில் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டவர். அதேநேரம், தன்னைப் பற்றியும் தன் செயல்களைப் பற்றியும் ஒருபோதும் விளம்பரம் செய்துகொள்ளாதவர். தமிழ் சினிமாவில் கமர்ஷியலாக வெற்றிபெற்ற பல படங்களின் படைப்பாளியாக இருந்து, சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியவர்.

கல்லூரிக் காலத்தில் அப்பாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மெட்ராஸுக்கு ரயில் ஏறி, தன் பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம்  பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார். `தென்றல்' பத்திரிகையில் `அருணன்' என்ற புனைபெயரில் எழுதினார். உறவினர்கள் சினிமாவின் பல்வேறு துறைகளில் இருந்தும்கூட, மிகச் சாதாரணமாக அவர் தன்னை முன்னிறுத்திக்கொள்ளவில்லை. கண்ணதாசனின் சிந்தனைகளுக்கு எழுதுகோலாக இருந்து, திரைத்துறையைக் கற்றவர்.

அவரின் எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்துவதில் வல்லவரான பஞ்சு அருணாசலம், ஆகச் சிறந்த பாடல் ஒன்றை எழுதினார். அதுதான் இன்றும் நம் வீட்டுத் திருமணங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் `மணமகளே மருமகளே வா வா...' பாடல். தமிழ் திரையுலகின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக விளங்கிய இந்தப் பாடலுக்குப் பிறகு, திரை வாய்ப்புகள் அவரை வாரி அணைத்துக்கொண்டன. அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் பெருங்கவிஞர்களின் மொழியாளுமைக்கு எந்த வகையிலும் குறைவில்லாதவை. உதாரணங்களாக, `கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ, காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்...'  போன்ற பாடல்களைச் சொல்லலாம். அவர் என்னென்ன பாடல்கள் எழுதினார் எனத் தேடிப் பார்க்கையில் கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யத்தையும் பரவசத்தையும் ஒருங்கே தரவல்லவை.

பாடலாசிரியராக அவர் அடைந்த வெற்றி, கதை இலாகாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் எழுதிய கதைகள் திரைப்படங்களாவதில் பல தடைகள் ஏற்பட்டன.  தடைகளைத் தாண்டி உருவான சில படங்கள், வெளியாகவில்லை. இதனால் அவர் சினிமா துறையில் `பாதிக்கதை பஞ்சு' என்றே அழைக்கப்பட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் தொடர் தோல்விகளையே சந்தித்தார். தன் விடாமுயற்சியால் அவர் வெற்றிபெற ஆரம்பித்தார். அவரது வெற்றி, சுயநலம் சார்ந்த வெற்றியாக இல்லாமல் தமிழ் சினிமாவில் நிறைய புதுமைகளுக்கு வித்திட்டது. 1970-களில் இந்திப் பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில், `அன்னக்கிளி' என்ற திரைப்படத்துக்காக திரைக்கதை - வசனத்துடன் அனைத்து பாடல்களையும் எழுதினார். மேலும், இந்தப் படத்தின் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி புதிய அலையைத் தோற்றுவித்தார். `பாபி', `ஆராதனா', `ஷோலே'  போன்ற படங்களின் பாடல்கள் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில் பஞ்சு அருணாசலத்தின் வரிகளில் `மச்சானப் பாத்தீங்களா...' பாடலும், மண் மனம் கமழும் இசையும் தமிழ் திரையுலகை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

பஞ்சு அருணாசலம்

தமிழ் சினிமாவில் பஞ்சு அருணாசலம் ஏற்படுத்திய இன்னொரு முக்கியமான நகர்வு, ரஜினியின் பிம்பத்தை மாற்றியது. ரஜினி என்றாலே, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, வேகமான உடல்மொழி என்பதைத் தாண்டி, ரஜினியால் மிகச்சிறந்த நடிகராகவும் பரிமளிக்க முடியும் என்பதை நிரூப்பித்தவர்களில் பஞ்சு அருணாசலமும் முதன்மையானவர். தான் கதை எழுதி 1977-ம் ஆண்டு வெளிவந்த  `புவனா ஒரு கேள்விக்குறி' படத்தின் மூலம் ரஜினியை இன்னொரு தளத்துக்குக் கொண்டுபோனார்.  ரஜினியால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம்தான் `ஆறிலிருந்து அறுபது வரை'. கலைஞர்களுக்கு ஏற்ப கதைகளை உருவாக்குவதில் தேர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில், கமர்ஷியலான கதை அமைப்பில் கமல்ஹாசன் நடித்து வசூல் சாதனை படைத்த படம்தான் `சகலகலா வல்லவன்'

பஞ்சு அருணாசலம்

ரஜினி, கமல்  இருவரும் இன்றைய தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழ்வதற்கு, இவர் எழுதிய கதை, திரைக்கதை, வசனங்களும் ஒரு காரணம். உதாரணங்களாக, `ஜப்பானின் கல்யாணராமன்', `மனிதன்' , `உயர்ந்த உள்ளம்', `அபூர்வ சகோதரர்கள்', `தர்மத்தின் தலைவன்', `குரு சிஷ்யன்', `ராஜாதி ராஜா', `ராஜா சின்ன ரோஜா'... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தத் திரைப்படங்களை இன்றைக்குப் பார்த்தால்கூட சுவாரஸ்யம் குன்றாமல் நம்மால் ரசிக்க முடிவதற்கு பஞ்சு அருணாசலம் எழுதிய கதையம்சமே காரணம். 

ஒரு திரைப்படத்தில் பிரபலமான நடிகர், நடிகைகள், நல்ல பாடல்கள் இருந்தும் பார்வையாளர்களால் அந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை என்றால், `ஸ்க்ரீன் ப்ளே சரியில்லை' என்று இப்போதெல்லாம் பல் முளைக்காத குழந்தைகூட எளிதில் கண்டுபிடித்துவிடும். அதற்கான மிக முக்கியமானப் பயிற்சியை, பார்வையாளனுக்கு வழங்கியவர் பஞ்சு அருணாசலம். வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற-இறக்கங்களைச் சந்தித்து தன் கலைப் படைப்புகளால் காலத்துக்கும் அவர் மக்கள் மனதில் நிற்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை, இன்றைய இளம் இயக்குநர்களுக்குத் தன் திரைப்படங்களின் மூலம் பாடமாக்கிவிட்டுத்தான் மறைந்திருக்கிறார் பஞ்சு அருணாசலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!