Published:Updated:

விவேகம் பாடல்கள்... எது டாப்? #Vivegam #VivegamSongsReview

பரிசல் கிருஷ்ணா
விவேகம் பாடல்கள்...  எது டாப்? #Vivegam #VivegamSongsReview
விவேகம் பாடல்கள்... எது டாப்? #Vivegam #VivegamSongsReview

அனிருத் அஜித் காம்போ. அனிருத் பாடல்கள் என்றாலே ஸ்பீடும், எனர்ஜியும் தொற்றிக் கொள்ளும். விவேகம் படத்தின் எல்லா பாடல்களும் வெளியாகிவிட்ட நிலையில், எந்தப் பாடல் டாப்?

பாடல்: சர்வைவா
வரிகள்: யோகி.பி & சிவா
குரல்கள்: அனிருத், யோகி பி, மல்லி மனோஜ்

ஆரம்ப இசையே சுண்டியிழுக்கிறது. யோகி.பியின் குரலில் வழக்கம்போல எனர்ஜி. இருகரம் ஆயுதம் எனும் வரிகளெல்லாம் பூஸ்டர். ‘லலலாலாலா’ என்று தியேட்டரில் கேட்டாலே ‘சர்வைவா...’ என்று தியேட்டர் அதிரப்போவது உறுதி. 

பாடல்: தலை விடுதலை
குரல்கள்: அனிருத், ஹரீஷ் சுவாமிநாதன்
வரிகள்: சிவா

அஜித் குரலில் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்’ என்று நரம்பு புடைக்க வைக்க ஆரம்பிக்கிறது பாடல். ‘தலை விடுதலை’ என்று பல்லவியில் ஆரம்பித்து இறுதிவரை ஒருவித ஸ்பீடிலேயே கொண்டு போகிறது பாடல். படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ‘செர்ஜ் குரோஸான்’ ஒரு பேட்டியில் ‘புரூஸ் லீ யின் நுன்ச்சக் சண்டையை அஜித் ஈஸியாகக் கற்றுக்கொண்டார்!’ என்றிருந்தார். பாடலின் நடுவில் வரும் ‘ஹூ ஹா’வைக் கேட்டால் அந்தச் சண்டை என கணிக்கிறேன். அஜித் குரலில் இடையில் கேட்கும் ‘நெவர் எவர் கிவ் அப்’ எக்ஸ்ட்ரா போனஸ். படத்தில் இந்தப் பாடலுக்கான காட்சிக்கு ஆவலோடு வெய்ட்டிங்! 

AK Theme Music

அசால்டான அனிருத் சிக்னேச்சர் தீம். இப்போது வரை ‘மங்காத்தா’ தீம் தான் எனக்குப் பிடித்த அஜித் தீம். இந்த தீமின் ஆரம்பம் கொஞ்சம் டெம்போ ஏற்றினாலும் அதன்பிறகு ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. படத்தோடு பார்க்க கவரலாம்.

பாடல்: வெறியேற 
குரல்கள்: எம்.எம்.மானஸி, பூர்வி கௌடிஷ்
வரிகள்: சிவா

பல்லைக்கடித்துக்கொண்டே எம்.எம். மானஸி  குரலில் ஆரம்பிக்கும் ஒரு பாடல். இதுவும் ஹீரோ வொர்ஷிப் பாடல். பல்லவியின் இரண்டு வரிகளுக்குப் பிறகு வயலினோடு வரும் பீட் ரசிக்க வைக்கிறது. பல்லவியின் வரிக்கு ஏற்ப ‘வெறியேற’ பாடியிருக்கிறார்கள் மானஸியும் பூர்வியும். சிக்கலான மெட்டுகளுக்கு சிரமமே இல்லாமல் ஹீரோயிஸ வரிகளை  எழுதியிருக்கிறார் சிவா. கடைசி 50 நொடி எலெக்ட்ரிக் கிடாரில் (அதுதானே?) ஆரம்பித்து ஒரு விருந்து..! ஆஸம் அனிருத் ப்ரோ! 

பாடல்: காதலாட 
குரல்கள்: ப்ரதீப் குமார், சாஷா திரிபாதி 
வரிகள்: கபிலன் வைரமுத்து

உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே கொஞ்சமாக அனிருத் குரலும் கேட்கும் கோரஸ். உடனொலிக்கும் வயலின். சாஷாவின் குரலில் ‘காதலாட காதலாட காத்திருந்தேனே’ என்று ஊஞ்சலாடும் மெட்டில் தொடங்கும் பாடலில் பிரதீப் குமாரின் மாயக்குரல் சேர்கிறது. பல்லவி முடிந்து ஒலிக்கும் வயலினில் கொஞ்சம் ஜிவிபி சாயல். ஆனால் அதைத்தொடர்ந்து பிரதீப்-சாஷா இணைந்து பாடும் ஆலாப்பிற்கு அடுத்து வரும் ஃப்யூஷன் அனிருத்தின் ட்ரீட்! இரண்டாம் இடையிசை முழுவதும் அதே டைப் ஃப்யூஷன் வாவ் சொல்ல வைக்கிறது. 

‘தேவகானம் தூயமௌனம் நீ கொடுப்பாயே’ வரியில் கைகுலுக்க வைக்கிறார் கபிலன் வைரமுத்து.  

பாடல்: காதலாட (Reprise)
குரல்கள்: அனிருத், ப்ரதீப் குமார், சாஷா திரிபாதி 
வரிகள்: கபிலன் வைரமுத்து

முன்னதில் வயலின் என்றால் இதில் புல்லாங்குழல் விருந்து. முன்னதில் கோரஸோடு வந்த வரிகளான ‘உன்னோடு வாழ்வது’ இதில் தனியாக அனிருத் குரலில். மனுஷன் ரொமாண்டிக் சாங் என்றால் குரல் அத்தனை மென்மையாய் வசீகரிக்கிறது.

பாடல்: Never Give Up
வரிகள்: ராஜகுமாரி
குரல்: ராஜகுமாரி

இதுவும் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் ஹீரோ வொர்ஷிப் பாடல். ஆங்கில பாடல். ''If the rain in fallin'  என்ற வரி' என்றெல்லாம் எழுத ஆரம்பித்தால் சிரிப்பீர்கள் என்பதால் நன்றாக இருக்கிறது என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். 

’காதலாட’ தவிர எல்லா பாடல்களுமே ஒரே ஜானரில் இருப்பது கொஞ்சூண்டு ஏமாற்றமளிக்கிறது. ‘சர்வைவா’வும், ’தலை விடுதலை’யும் எனர்ஜடிக்காகக் கவர்கிறது. ‘காதலாட’வின் இரண்டு வெர்ஷன்களும் ரொமான்டிக்காக ஹிட்டடிக்கின்றன. இவை இந்த ஆல்பத்தின் டாப் இடங்களைப் பிடிக்கின்றன.