வீடு வாடகைக்குக் கிடைக்குமா? - சமூக ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் ஆவணப்படம்! #IsItTooMuchtoAsk? | article about documentary film - Is It Too Much to Ask by Leena Manimekalai

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (10/08/2017)

கடைசி தொடர்பு:17:37 (10/08/2017)

வீடு வாடகைக்குக் கிடைக்குமா? - சமூக ஆதிக்கத்தை அழித்தொழிக்கும் ஆவணப்படம்! #IsItTooMuchtoAsk?

இந்திய சினிமாவில் `புனைவு ஆவணப்படங்கள்' (Docufiction) என்ற வகை திரைப்படங்கள் மிக அரியவை. வணிக நோக்கத்துடன் திரைப்படங்கள் உருவாக்கப்படும் இந்தியா போன்ற நாட்டில், புனைவு ஆவணப்படங்களைத் திரையில் எதிர்பார்க்க முடியாது. ஆவணப்படம் என்பது, உண்மைச் சம்பவத்தை அல்லது மனிதரைப் பற்றிப் பதிவுசெய்வது. அதில் உண்மை மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஆவணப்படங்களில் ஏதேனும் சம்பவங்களைப் புனைந்து இயக்கப்படுவது புனைவு ஆவணப்படங்களில் வரும்.

ஆவணப்படம்

ஸ்மைலியும் (லிவிங் ஸ்மைல் வித்யா), கிளாடியும் நாடகக் கலைஞர்கள். இருவரும் இணைந்து வாழ்ந்துவரும் வீட்டில், அவர்கள் `திருநங்கை'கள் என அவர்களின் வீட்டு உரிமையாளருக்குத் தெரியவருகிறது. வீட்டைக் காலிசெய்யச் சொல்கிறார். அதற்காக மிகக் குறுகிய கால அவகாசத்தையும் தருகிறார். ஸ்மைலியும் கிளாடியும் சென்னை மாநகரில் வீடு தேடுகிறார்கள். இப்படியான கதை ஓட்டத்துடன் பயணிக்கிறது `இஸ் இட் டூ மச் டு ஆஸ்க்?’ (Is It Too Much to Ask?) என்கிற புனைவு ஆவணப்படம்.

சென்னை மாற்றுப் பாலின, மாற்றுப் பாலீர்ப்புத் திரைப்பட விழாவின் முதல் திரைப்படமாக இது திரையிடப்பட்டது. 30 நிமிடத்தைக் கால அளவாகக்கொண்டிருந்த இந்த புனைவு ஆவணப்படத்தைத் தயாரித்து, இயக்கியவர் பிரபல கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை. ஒரு மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை மற்றும் இருப்பிடம். இந்தியாவில் இந்த மூன்று அடிப்படை தேவைகளிலும் சாதியும் ஆணாதிக்கமும் தங்கள் இருப்பை நிலைநிறுத்தியுள்ளன.  இந்தப் பாகுபாடுகள், கிராமங்களில் மட்டுமல்ல... நகரங்களிலும் எந்த வகையான வித்தியாசமுமின்றி இருக்கவேசெய்கின்றன.

ஆவணப்படம்

சமீபத்தில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் `தான் பிறப்பால் முஸ்லிம் என்பதால், தனக்கு வீடு வாடகைக்கு விட மறுக்கப்படுகிறது' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, பொதுப்பெயருடன் இயங்கும் மனுஷ்ய புத்திரன் மீது பாரபட்சமின்றி பாகுபாடு காட்டப்படுகிறது என்றால், சமூகத்தில் பெரிதும் அறிமுகம் இல்லாத ஸ்மைலியும் கிளாடியும் எங்கே செல்வார்கள்?

இந்த ஆவணப்படத்தின் தொடக்கத்தில், இரு திருநங்கையரும் அவர்கள் வாழப்போகும் வீட்டைப் பற்றி பெரும்கனவுகளுடன் இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அதன் உரிமையாளர்கள் பல காரணங்கள் கூறி, அவர்களுக்கு வீடு தராமல் மறுப்பு தெரிவிப்பர். `சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டும்தான் வீடு தருவோம்’, `ஃபேமிலி ஒன்லி’, `ஐ.டி நிறுவனப் பணியாளர்களுக்கு மட்டும்’ என்பது போன்ற காரணங்கள். ஒவ்வொரு வீடும் மறுக்கப்பட, ஸ்மைலிக்கும் கிளாடிக்கும் கனவுகள் தகர்ந்துபோகின்றன.

இந்த ஆவணப்படத்தின் சிறப்பே, பிரசாரம் செய்யும் தொனியில் அல்லாமல், ஸ்மைலியுடனும் கிளாடியுடன் பயணித்து, நிஜ மனிதர்கள், இரண்டு திருநங்கைகளுக்கு வீடு வாடகைக்கு அளிப்பதை மறுப்பதைத் தெளிவாகப் பதிவுசெய்தது. மேலும், லீனா மணிமேகலையின் கதாபாத்திரங்கள் ஸ்மைலியும் கிளாடியும் தங்கள் சோகங்களை, கலை மூலம் வெளிப்படுத்தி சமூகத்திடம் பிரதிபலிப்பவர்களாக இருக்கின்றனர்.

ஆவணப்படம்

வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள், தங்கள் வீடுகளில் குடியிருப்பவர்களின் அடையாளத்தைப் பிரதானமாகக் கருதுவதைப் பகடிசெய்து, ஸ்மைலியும் கிளாடியும் நாடகம் நடிக்கின்றனர்; ராப் பாடல் பாடுகிறார்கள்.

ஸ்மைலியும் கிளாடியும் அனைத்து திருநங்கைகளின் சார்பாக என்ன கேட்கிறார்கள்? தங்குவதற்கு வீடும், சக மனிதன் என்ற அங்கீகாரமும்தானே?

Is it too much to ask?

 


டிரெண்டிங் @ விகடன்