Published:Updated:

கமல் ட்வீட்ஸின் பொருளுரையும் ரோபோ ஷங்கரின் புலம்பலும்!

கமல் ட்வீட்ஸின் பொருளுரையும் ரோபோ ஷங்கரின் புலம்பலும்!
கமல் ட்வீட்ஸின் பொருளுரையும் ரோபோ ஷங்கரின் புலம்பலும்!

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக கமல், ட்விட்டரில் ஆக்டிவாக இயங்கிவருவது இணைய உலகம் அறிந்ததே. குறிப்பாக, ஆளும் கட்சியைப் பற்றிய அரசியல் விமர்சனங்களைப் பூடகமான மொழியில் அவர் ட்விட்டி வருகிறார். ஆனால், அவருடைய மொழி பெரும்பான்மையோரால் உள்வாங்க முடியமால், `புரியல ஆண்டவரே' எனத் தலையைச் சொரியும்விதமாகவே இருக்கிறது.

கமல் ட்வீட்டிய சில நிமிடத்திலேயே `புரியலை' என்கிற புலம்பல்களும், `இது என்னடா புரியல' என்கிற பொருளுரைகளும் காணக் கிடைக்கின்றன. இந்த நிலையில், நேற்று இரவு கமல் எழுதிய ட்விட்டுகளுக்கான விரிவுரையை, கவிஞர் மகுடேஸ்வரனிடம் கேட்டோம். 

*

விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே.
களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்.

பொருள் : 

விம்முதல் என்றால் தேம்பியழுதல். பம்முதல் என்றால் மறைந்து ஒளிதல். இப்படி ஆகிவிட்டதே என்று அழுது கிடக்காமல், இப்படி ஆகிவிடுமோ என்று மறைந்து ஒளியாமல், உன்னால் ஆவது எதுவோ அதைச் செய். தனியொருவனின் எண்ணத்தில் உதிக்கும் சிந்தனைதான் உலகப் போக்குகளை மாற்றுகின்ற புரட்சிக்கே விதையாக இருந்திருக்கிறது. திடீர் ஆர்வக்கோளாறுடன் விவேகமில்லாமல் ஓடி என்னைத் தள்ளிவிடாதே.  ஓட்டத்தால் களைத்து விழுந்து உன்னையும் சேர்த்து இழுத்துச் செல்லும் பொறுப்பை எனக்கு வழங்கி, என் இயல்பான விரைவிலும் காலத்தாழ்ச்சியை ஏற்படுத்தாதே. ஒருவரோடு ஒருவராகக் கூடி நட. அப்படிச் சேர்ந்து நடந்தால்... வெல்லப்போவது நான் மட்டுமே அல்ல... நாம் அனைவரும்தாம். 

**

பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரைக் கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும்தான்.

பொருள் : 

பரிதல் என்பதற்குப் பல பொருள்கள் உள. இரக்கமுள்ளவர், பகுத்தறிந்தவர், சார்பாகப் பேசுபவர், வெளிப்படுபவர் எனப் பலவாறு கருதலாம். புரியாமல் கிடப்போரின்மீது இரக்கம்கொண்டவர்கள் அவர்களுக்கு இதன் பொருளைப் புகட்டுங்கள். நாட்டுக்குத் தொண்டு செய்பவர்களை ஏளனமாகப் பேசாதே. அகவை முதிர்ந்து இறந்துபோவதற்குள்ளாவது இங்கே கிடைத்துள்ள சுதந்திரத்தைப் பழகிக்கொள். அவ்வாறே தேசியத்தையும். 

**

கமல் போட்டிருந்த ட்வீட்டில் அவரின் ரசிகரும் நகைச்சுவை நடிகருமான ரோபோ ஷங்கர்கூட `புரியல ஆண்டவரே' என்று சொல்லியிருந்தார். `உங்களுக்குமா?' என்று அவருடன் பேசினோம்.

``ஜி, அது என்னோட அக்கவுன்ட்டே இல்லை. அந்த அக்கவுன்டால் தொடர்ந்து பிரச்னையைச் சந்திச்சுட்டு வர்றேன். சமீபத்துலகூட `ஜூலி, `பிக் பாஸி'ன் வைகோ'ன்னு அந்த அக்கவுன்ட்ல இருந்து ட்வீட் வர, வைகோ சார் எனக்கு போன் அடிச்சு `தம்பி, நீங்க அப்படி பண்ண மாட்டீங்க. உங்களுக்கு என்மேல நல்ல மதிப்பு உண்டுன்னு தெரியும். உலகளாவி இருக்கிற என்னோட தொண்டர்களால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நீங்க ஒரு லெட்டர் மட்டும் எழுதிக் கொடுங்க'னு ரெண்டு மூணு வாட்டி எனக்கு போன் அடிச்சுப் பேசினார். அது, யாரோட அக்கவுன்ட்னே தெரியலைங்க. ஆனா, என் பேர்ல இருக்கு.

``உங்க ஒரிஜினல் அக்கவுன்ட்ல இருக்கிற ஐடியில இருந்து கமல் ட்வீட்லாம் படிப்பீங்களா?''

``படிப்பேங்க. அதைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு நமக்கு நாலேஜ் இல்லை. தலைவர் போட்டிருக்கார்னா, நல்ல விஷயமாத்தான் இருக்கும்னு நெனச்சு விட்டுடுவேன். ஆனா `புரியல ஆண்டவரே'ன்னுலாம் கேட்டதில்லை" என்று முடித்துக்கொண்டார்.

கமல் போடும் ட்வீட் மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவர் சொல்கிற விஷயத்தின் சாராம்சம் நேர்மையற்றவர்களைத் தொந்தரவு செய்துகொண்டிருக்கும் என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமுமில்லை.