Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் சினிமாவின் உண்மையான படைப்புக்கு வாழ்த்துகள் ராம்! - தரமணி விமர்சனம்

தரமணி அமைந்திருக்கும் சென்னையின் ராஜிவ் காந்தி சாலை, சென்னையின் எந்த  இயல்புக்கும் இலக்கணத்துக்கும் ஆட்படாத ஒரு விநோதப் பிரதேசம்..! 

Andrea

 

சென்னை... ஏன் தமிழகமே மின்வெட்டு இருளில் மூழ்கிக் கிடக்கும்போது, சென்னையின் ஓ.எம்.ஆர் அலுவலகங்கள் 24*7 மின்னொளி/குளிர்சாதனத்தில் திளைத்துக் கிடக்கும். உலகின் அத்தனை கால நேர அட்டவணைப்படியும் ஏதேனும் ஒரு குழு பரபரத்துக் கிடக்கும். ஐ.டி. பூங்கா வேலைக்கு புரசைவாக்கம் வீட்டிலிருந்து கிளம்பும் ஆண்/பெண், அலுவலக வளாகத்துக்குள் நுழைந்ததும் அமெரிக்க மனநிலைக்கு மாறுவார்கள். ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மில்லியன் கணக்கில் சம்பளம் வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கில் வேலைக்கு ஆள் எடுக்கப்படும். ஒரே நாளில் பலரை துரத்தவும் செய்யும். ஆனால், அவற்றைக் கண்காணிக்க/நெறிமுறைப்படுத்த கொட்டிவாக்கத்தில் ஒரு லேத் பட்டறை தன் தொழிலாளிகளைக் காப்பாற்றும் தொழிலாளர் சட்டங்கள் எதுவும் கூட ஓ.எம்.ஆரில் கை கொடுக்காது. 

வெளிநாட்டு க்ளையண்ட்களுக்கான சர்வதேச தர ஓட்டல்கள், தள்ளுவண்டி கடை பிளாஸ்டிக் பேப்பர் தட்டில் இட்லிகளை அவசர அவசரமாக விழுங்கும் டீம் லீடர், முதல் மாத சம்பள நோட்டிஃபிகேஷன்களை தொடரும் கார், வீடு ஈ.எம்.ஐ. சலுகைகள், ஏரிகளாகவும் கடலின் வடிகால் பாதைகளாகவும் வயல்வெளிகளாகவும் இருந்த பகுதிகள், 'பீச் வீயூ' அபார்ட்மெண்ட்களாக விண்ணை முட்ட, 'ஆர்கனிக் உணவகங்கள்' காய்கறிகளை ஊட்டி/பெங்களூரிலிருந்து இறக்குமதி செய்து 'பிரீமியம் மீல்ஸ்' ஆக பந்தி வைக்க, ஒன்றரை கோடி ஆடி கார் L1 டீம் மேனஜரும் 10 ரூபாய் ஷேர் ஆட்டோ பயணியான திறமைசாலி L3 நபரும் ஒரே புராஜெக்ட்டில் மண்டையை உடைத்துக் கொண்டிருப்பார்கள். hugs, flirts, dating, livin, break-up என எதுவும் 'no offence meant' மோடில் கடந்து செல்லும். இப்படி பல தலைமுறைகளாக ஒரு தமிழனின் மனநிலையில் பதிந்திருக்கும் பல கற்பிதங்களை விளையாட்டாக கலைத்தபடி, எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காமல், ஆனால் பரபரப்பாக இயங்கிய வண்ணமிருக்கும்  தரமணியும், தரமணியைத் தாண்டி விரியும் ஐ.டி உலகமும். 
      
இயக்குநர் ராமின் 'தரமணி'யும் அப்படி தமிழ் சினிமாவின் கற்பிதங்களைக் கண்டுகொள்ளாமல், இன்னதென்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதை சொல்லல் மூலம் தமிழ் சினிமா ரசிகனுக்கு ஒரு புது அனுபவம் தருகிறது. செறிவான துணிச்சலான முயற்சிக்கு வாழ்த்துகள் ராம்..! 

andrea

 

வழக்கமான ஒரு சினிமாவுக்கு போல வழக்கமான ஒரு விமர்சனமாக தரமணி பற்றி பேச முடியாது. தரமணியின் மையம் அதன் கதையோ, கதை சொல்லியிருக்கும் யுக்திகளோ மட்டுமல்ல. தரமணியை நகர்த்திச் சொல்லும் ஆண்ட்ரியா, வசந்த் ரவி முதல் அழகம்பெருமாளின் மனைவியாக  உரையாடல்களிலேயே கடக்கும் வீனஸ் வரை ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் சூழல்களும்தான் இப்படத்தின் பேசு பொருளாக இருக்க வேண்டும். 

சிங்கிள் மதர், '34-28-36' சைஸ், 80,000 சம்பளம், கே கணவர், பார்ட்டி, டேட்டிங், பிட்ச் வசை  ஆண்ட்ரியாவின் ஒவ்வொரு நாளும் கொடுக்கும் உணர்வுப் பெருக்கு, அது உண்டாக்கும் மன அழுத்தம்.... கச்சித வார்ப்பு. பியர்ட்வாலா, முரட்டு முட்டாள், சுவாரஸ்ய காதலன் என வசந்த் ரவியின் கதாபாத்திரம் மற்றும் காஸ்டிங்... வெரி குட். ஐந்து சீன் அஞ்சலி முதல் 'சூப்பர்... சூப்பர்... சூப்பர்' என இன்ஸ்பெக்டர் கணவன் முன் ஆக்ரோஷமாக ஆடும் பெண் வரை படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் இயல்பில் கச்சிதம்...மற்றும் நிஜம்!      

வேதாளத்தை முதுகில் சுமந்து திரியும் விக்கிரமாதித்யன்போல பெண்களின் கற்பு குறித்த சந்தேகக்கேள்விகளை எப்போதும் சுமந்து திரியும் ஆண்களின் அற்பத்தனத்தை முகத்திலறைந்து கேள்வி கேட்கும் காட்சிகளால் செவிட்டில் அறைந்து கொண்டே இருக்கிறது 'தரமணி'.

கணவனைப் பிரிந்து தன் குழந்தையுடன் வசிக்கும் கார்ப்பரேட் பணியாளர் ஆண்ட்ரியா. ஒரு மழைக்காலப் பகற்பொழுதில், காதலில் தோல்வியுற்று தாடி வைத்துத் திரியும் வசந்த்ரவியைச் சந்திக்கிறார். ஒருகட்டத்தில் ஆண்ட்ரியாவின் வாழ்க்கைக்குள் உள்ளே நுழையும் வசந்த்ரவி, கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப்பிராணியாக மாறி, கேள்விகளால் ஆண்ட்ரியாவைத் துளைத்தெடுக்கிறார். வசந்த்ரவி மட்டுமல்ல, எல்லா ஆண்களுமே சந்தர்ப்பம் கிடைத்தால் சபலம் கொள்கிறவர்களாகவும், அதேநேரத்தில் தனக்குச் சொந்தமான பெண்களின்மீது சந்தேகம் கொண்டவர்களாகவும் எப்படி சமூகப் பச்சோந்திகளாக வாழ்கிறார்கள் என்பதைத் துணிச்சலுடன் விவரிக்கின்றன சம்பவங்கள். 

ஆண்ட்ரியா - 'தரமணி'யைத் தாங்கி நிற்கும் துணிச்சல் தேவதை. காதல், நெருக்கம், கசப்பு, விரக்தி, வெறுப்பு, சலிப்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் எதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். காதலில் கழுத்து வரை மூழ்கி அதைக் கண்களின் வழி வெளியே கொட்டுவது, கோபத்தில் கன்னப்பருக்கள் அதிர அலறுவது, 'நீ போய்ட்டியோனு நினைச்சேன். போறதா இருந்தா சொல்லிட்டுப் போ' என சுருண்டு அழுவது, சிகரெட் பிடிக்க பெண்களுக்கும் காரணமிருக்குமென்று விரல் இடுக்கில் சிகரெட் புகைய அலட்சியமாகப் பதில் சொல்வது, இறுதிக் காட்சியில் கதவுக்குப் பின்னால் நின்று அழுவது வரை அசரடித்திருக்கிறார் ஆண்ட்ரியா! இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அவருக்கென அமைந்திருக்கும் தனித்துவமான இந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு கச்சிதமாகச் செய்யமுடியுமோ, அத்தனை நேர்த்தியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இன்னும் நிறைய படங்களில் நடியுங்கள் ஆண்ட்ரியா!

Andrea

ஐந்துக்கும் குறைவான காட்சிகளில் அஞ்சலி. சுடிதாருக்கு டாப் போடும் வைஜெயந்தி மாலாவாக, சேலை கட்டிய சரோஜாதேவியாக ஒரு சராசரி ஆண் எதிர்பார்க்கும் சராசரித் தமிழ்ப்பெண்ணாக இருந்து, அமெரிக்கா போய் அதன் கலாசாரச் சூழலுக்கு ஏற்ப மாறும் காட்சிகளில் கச்சிதம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் பழைய காதலனைச் சந்திக்கும் காட்சியில் தான் ஒரு நடிப்புப் பிசாசு என்பதை அழுத்தமாய் நிரூபித்திருக்கிறார் அஞ்சலி. "நீ பணம் கொடுத்தே வாங்கமாட்டேன்னு நினைச்சுத்தான் சாக்லேட் பாக்ஸ்ல வெச்சுக் கொடுத்தேன்", "அந்த போட்டோஸ் அப்படியே இருக்கட்டும். உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. நான் சந்திச்சதிலேயே ஒரே நல்லவன் நீதான்!" என்கிற வசனங்களில் ஆண்திமிருக்கு சவுக்கடி கொடுக்கிறார் அஞ்சலி.

கதாநாயகன் வசந்த் ரவி ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் ராமையே பிரதிபலிக்கிறார். ராமைப் போலவே உடல்மொழி, குரல், சமூகம் பற்றிய புகார்கள் என்று அவர் பேசுவது இயக்குனர் ராம் பேட்டிகளில், மேடைப்பேச்சுகளில் பேசுவதையே நினைவுபடுத்துகிறது.  வசந்த்ரவியின் பாத்திரத்தை ஒருவகையில் 'கற்றது தமிழ்' ஜீவாவின் நீட்சி என்று சொல்லலாம். 'கற்றது தமிழ்' படத்தில் பெண்கள் டி-ஷர்ட்டில் எழுதப்பட்ட வசனங்களுக்காகக் கோபப்படுவது, பீச்சில் நெருக்கம் காட்டும் காதலர்களிடம் நடந்துகொண்ட விதம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளாகின. அதற்கான பதிலை வசந்த் ரவி மூலம் இந்தப் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் ராம். ஆணாதிக்கத்தின் அத்தனைக்கூறுகளையும் அச்சு அசல் பிரதிபலித்த உடல்மொழிக்காக, வாழ்த்துகள் வசந்த் ரவி!

"வீனஸ் எனக்குப் பொண்டாட்டியா இருந்தாலும் யாரோ ஒருத்தருக்கு அக்காதானேடா, மகள்தானேடா, தங்கைதானேடா?" என்று உருக்கம் காட்டும் அழகம்பெருமாள், ஆண்ட்ரியா காறித்துப்பியபிறகும், "ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ் அதிகமாயிடுச்சு" என்று கூலான உடல்மொழி காட்டும் அந்த 'பாஸ்', வசந்த்ரவியால் பாதிக்கப்படும் பெண்கள், அசிஸ்டென்ட் கமிஷனர், அவரது மனைவி என சின்னச் சின்ன கேரக்டர்களையும்கூட செதுக்கியிருக்கிறார் ராம். அதிலும் 'தாடிவாலா' என்று வசந்த்ரவியிடம் அன்பு காட்டி, 'பிட்ச்னா என்னம்மா?' என்று ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பி அதிரவைக்கும் அந்தச் சிறுவன், நம் மனசில் அழுத்தமாக அமர்ந்துகொள்கிறான்.  "சிகரெட் குடிக்காதே, நீ ஒரு பையனுக்கு அம்மா", "நீகூடத்தான் ஒரு அம்மாவுக்குப் பையன்" என்று வசனங்கள் ஒவ்வொன்றும் எதார்த்தத்தையும் எள்ளலையும் பொதிந்துவைத்திருக்கின்றன. யுவன்ஷங்கர் ராஜாவின் இசை, கவிதையாய் மிளிர்கிறது. தேனி ஈஸ்வரின் கேமரா, புறாக்களைப் போல தரமணியைச் சுற்றிச் சுழல்கிறது.

ஆண்ட்ரியாவுக்கும் வசந்த்ரவிக்கும் இடையிலான வாக்குவாதக் காட்சிகள், காவல் அதிகாரி - அவர் மனைவிக்கு இடையே நடக்கும் மோதல்களும் அதன் திடுக்கிட வைக்கும் முடிவும், கார்ப்பரேட் நிறுவன நடைமுறைகள், தன் மகன் மாடிப்படியில் இறங்கிவரும்போது தன்மீது ஆதிக்கம் செலுத்தும் ஆண்களில் ஒருவராகவே ஆண்ட்ரியா பார்க்கும் காட்சி, கண்ணாடிச் சுவரில் மோதி மரணிக்கும் புறா, 'பிட்ச்னா என்னம்மா?' என்று மகன் கேட்கும்போது, ஆண்ட்ரியா பூனைக்குப் பால் கொடுக்கும் காட்சி என படம் முழுவதும் கவித்துவக் காட்சிகள். 

Tharamani

 

ஏரிகளை ஆக்கிரமித்து எழும்பிய கட்டிடங்களைப் போல தரமணி குறித்து நமக்கும் சில கேள்விகள் எழுகின்றன. தமிழக மீனவர் படுகொலை, ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது, வடமாநிலத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது என்று ராம் பேசியிருக்கும் பல விஷயங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றையெல்லாம் பேசவேண்டும் என்பதற்காக, கதையோட்டத்துக்கு வெளியே பேசியிருப்பது உறுத்துகிறது. படம் முழுக்க, வாய்ஸ் ஓவரில் ராம் போடும் 'ஸ்டேட்டஸ்'கள் புதுமையான உத்திதான் என்றாலும் படத்தின் சீரியஸ்தன்மையைக் குலைக்கிறது. காட்சி நமக்குக் கடத்தும் சீரியஸ்னெஸ்ஸை ராமின் வாய்ஸ் ஓவர் சட்டென்று கீழிறக்குகிறது.

ஆண் பெண் இருவருக்குமான உறவுச் சிக்கல்களில் நவீனத் தொழில்நுட்பங்களின் பங்களிப்பை படம் அதிகம் பேசியிருக்கிறது என்றாலும், 'வாட்ஸ்அப்பில் பேசாதீங்க சார்.... ரெக்கார்ட் பண்ணி ஃபேஸ்புக்ல போடுவாங்க'. 'ஃபேஸ்புக்ல நீங்க பார்ல சண்டை போட்டது வைரல் ஆகியிருக்கு', 'ஸ்கைப்ல பேசலாம்', 'ஃபேஸ்புக்ல உனக்கு எப்படி இத்தனை ப்ரெண்ட்ஸ்?'... படத்தின் இறுதிக் காட்சியில் கூட 'நீங்கெல்லாம் பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறமாதிரி, நான் படத்துக்கு நடுவே ஸ்டேட்டஸ் போடுறேன்' என இயக்குநரே சொல்கிறார். டெக்னாலஜியை இவ்வளவு எதிர்மறையாக காட்டியிருக்க வேண்டுமா?

 

இப்படியான விமர்சனங்களைத் தாண்டி ஓரின சேர்க்கையாளரின் பிரச்னையை ஆபாசமாக்காமல் எதார்த்தத்தோடு பதிவு செய்தது, கார்ப்பரேட் சூழல் பெண்களுக்கு சுதந்திரத்தையும் பாலியல் ஒடுக்குமுறைகளையும் ஒருசேரக் கொடுத்திருப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது, ஆண்ட்ரியா குடிக்கும், புகைக்கும் காட்சிகளை வெறுமனே அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்லாமல் இயல்பாகக் காட்டியிருப்பது, 'இது சரி, இது தவறு' என்று கறுப்பு - வெள்ளையாக வாழ்க்கையைப் பார்க்காமல் மனிதர்களை அவர்களின் பலத்தோடும் பலவீனத்தோடும் பார்க்கவேண்டும் என்ற அறவுணர்வை முன்வைத்திருப்பது, காலங்காலமாக 'கற்பு' என்ற பெயரில் ஆணாதிக்கம் செலுத்தும் வன்முறையை அதிரும்படி சொல்லியிருப்பது என்று பலவகையில் முக்கியமான படம் 'தரமணி'.

taramani

 

இன்னும், படம் பற்றி பேசிக் கொண்டே செல்லலாம். ஆனால், இது போதும், இப்போதைக்கு.
தமிழின் உண்மையான நேர்த்தியான, எந்த சமரசமுமில்லாமல் தமிழர்களின் மனசாட்சியை அறைந்து கேள்வி கேட்கும் முக்கியமான படைப்பு....'தரமணி'..! 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?