Published:Updated:

தூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை!

தூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை!
தூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை!

தூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை!

தொண்ணூறுகளின் காலத்தில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து வாழ்ந்த சுகமே தனிதான். அப்போது வந்த தொலைக்காட்சி தொடர்களெல்லாம் இன்னும் அதன் பசுமை மாறாமல் பலர் மனதில் தங்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. குறிப்பாக, ஜனூன் நாடகமும் அதில் வரும் சுமீர் அகர்வால், ஆதித்ய தன்ராஜ், கேஷவ் கல்சி, மினி, தாத்தா நஹர்கர் ஆகிய கதாபாத்திரங்களும் அவர்களின் தமிழும் மறக்க முடியாதவை. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மிக நீண்ட தொடர்களுக்கு ஆதார ஸ்ருதியாக ஜனூன் நாடகம் விளங்கியது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்காது.

செவி வழியாக மட்டுமே கேட்டு வந்த மந்திரக் கதைகளை சினிமாவுக்கு அப்பாற்பட்டு நம் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்ததில் சந்திரகாந்தா, அலிஃப் லைலா, ஜங்கிள் புக் போன்ற நாடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை ஒரு மாயஜால உலகுக்கே நம்மை இட்டுச் சென்றன. மட்டுமின்றி துப்பறியும் தொடர்களான ராஜா ஆர் ராஞ்சோ, மார்ஷல், சி ஹாக்ஸ் என்று களைகட்டும். இன்னொரு பக்கம் ஆன்மீகத் தொடர்களான மகாபாரதமும், கருணாமூர்த்தியும், ஜெய் ஹனுமானும் தொடங்குவதற்கு முன் ஆரம்பிக்கும் அதன் பாடல்களைக் கேட்ட உடனே ஆர்வத்துடன் டி.வி முன் அமர்ந்த நாட்களெல்லாம் கண்முன் நிழலாடுகின்றன. சக்திமானைப் பார்த்துவிட்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கூறி மாடியிலிருந்து குதித்து இறந்து போகும் அளவுக்கு நம் வீட்டுப் பிள்ளைகளிடம் இவை செல்வாக்கை செலுத்தியிருந்தன.

மேற்கூறியவையெல்லாம் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்ட நாடகங்கள் மட்டுமே. இது தவிர நேரடியாக தமிழில் வெளிவந்து நாம் ரசித்த தொடர்களும் இருக்கின்றன. அம்மா இங்கே கணேஷ் அங்கே, துப்பறியும் சாம்பு போன்ற தொடர்கள் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? குழந்தைகள் பங்கேற்கும் கண்மணிப்பூங்கா, காண்போம் கற்போம் ஆகிய நிகழ்ச்சிகள்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் குழந்தைகள் சார்ந்த பல நிகழ்சிகளுக்கு முன்னோடி. வயலும் வாழ்வும் போன்ற நிகழ்சிக்கு இன்றைய சூழலில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை உணரும்போது அந்த மாதிரி ஒரு நிகழ்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்வர்களெல்லாம் தீர்க்கதரிசிகளாகவே தெரிகிறார்கள்.

அடுத்தவாரம் என்ன படம் போடப் போகிறார்கள் என்பதை 'முன்னோட்டம்' நிகழ்ச்சியின் வழியாக தெரிந்துக் கொள்ள தூக்கம் தொலைத்த இரவுகள்தாம் எத்தனை சுகமானவை. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் பாண்டி நாட்டுத் தங்கம் படத்திலிருந்து பாடம் ஒளிபரப்ப வேண்டுமென வாரவாரம் மாதாவுக்கு பிரார்த்தனை செய்யும் அக்காவின் ஏக்கத்தில் இருந்த குழந்தைத் தனமும் அவளின் காதலும் இப்போது நினைத்தாலும் தித்திப்பாக இருக்கிறது. பாலு மகேந்திராவின் ‛கதை நேரம்’ போன்ற ஒரு தொலைக்காட்சி தொடர்கள்கள் ஏன் இப்போது வருவதில்லை? தமிழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை அரைமணிநேர படமாக அவர் எடுத்து வெளியிட்ட காலம் டிவி சீரியல்களின் நாகரீகம் உச்சத்தில் இருந்த காலம் என்று சொல்லலாம்.

இதொரு பக்கமிருக்க கேபிள் டிவியின் வரவுக்குப் பிறகு டிவி தொடர்கள் இன்னொரு பரிணாமத்தை அடைந்தன. திகில், சாகசம் ஆகியவற்றை பிரதானப்படுத்தி இந்தியில் மட்டுமே வந்து கொண்டிருந்த தொடர்களுக்கு சவாலாக மர்ம தேசம், ஜென்மம் எக்ஸ், மந்திரவாசல் போன்ற தொடர்கள்  நம் வீடுகளை அதிர வைத்தது. 'விடாது கருப்பு' என்று அதேபோல தடித்த குரலில் பேசி பயமுறுத்திய நாள்கள் உங்களுக்கு நினைவு இருக்கிறதா?

சன்டிவியின் சூப்பர் டென், மிராண்டா மீண்டும் மீண்டும் சிரிப்பு, விசுவின் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களுக்கு புதியதாகவும் பரவசமாகவும் இருந்தன. பெப்ஸி உமாவிற்கு போன் செய்வதற்காக வீட்டில் பணம் திருடிக் கொண்டு எஸ்டிடி பூத்திற்குச் சென்ற நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறர்களா?

நீண்டகாலமாக வாரத்திற்கு ஒரு படம் பார்த்து வந்த நேயர்களுக்கு நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய், காவிய புதன், அதிரடி வியாழன், சூப்பர் ஹிட் வெள்ளி என்று தினமொரு சுவையில் விருந்து படைத்தது சன் டிவி. அந்தச் சூழலில் கொஞ்சங்கொஞ்சமாக தூர்தர்ஷனில் இருந்தும், மெட்ரோ சேனலில் இருந்தும் விடுபட ஆரம்பித்து, கேபிள் கரண்ட் போனால் மட்டும் அவைகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியாக மாறிக்கொண்டோம்.

பிறகு நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்தன. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்குரிய சேனலைப் பார்க்க வேண்டுமென்கிற போட்டியுணர்வு இருந்தது. வீட்டில் ஆதிக்கம் செலுத்துபவரே ரிமோட் கன்ட்ரோலையும் கைப்பற்றி மற்றவர்களை ஆட்டுவிப்பார். அனால் இப்போது அந்த ரிமோட் சண்டை காலத்தையும் நாம் கடந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆளுக்கொரு செல்போனை வைத்து நோண்டிக் கொண்டிருக்க ரிமோட் கன்ட்ரோல் ஆதரவின்றிக் கிடக்கிறது. முதல்நாள் பார்க்க முடியாத சீரியல்களை மறுநாள் HotStar அல்லது யு- டியூப்பில் பார்த்துக் கொள்கிறோம். அவ்வளவு ஏன், HotStar-ல் மட்டுமே ஒளிபரப்பாகும் சீரியல்களும் (Am i suffering from kadhal) வந்துவிட்டன.

டிவியில் இரண்டே இரண்டு சேனல்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் எந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்கிற குழப்பம் நமக்கு இருந்ததில்லை. சொல்லப்போனால் வாழ்க்கையிலும் அவ்வளவாக குழப்பமில்லாத காலகட்டம் அது. அவற்றையெல்லாம் தொலைக்காட்சி நிகழ்சிகளின் வழியாக மீட்டுருவாக்கம் செய்து கடந்த காலத்தில் நீந்திக் களிப்பதற்கான சின்னஞ்சிறிய முயற்சியே இந்தப்பதிவு.

அடுத்த கட்டுரைக்கு