Published:Updated:

வருத்தப்படாத ரஜினிமுருகன் இருக்க பயமேன்...! பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
வருத்தப்படாத ரஜினிமுருகன் இருக்க பயமேன்...! பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
வருத்தப்படாத ரஜினிமுருகன் இருக்க பயமேன்...! பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்

தன் ஊர் கூத்தப்பட்டிக்கு நல்லது செய்வதையே ஒரே லட்சியமாக வைத்து வெட்டியாக சுற்றிவருபவர் கணேஷ் (உதயநிதி). தன் ஊர் நல்லதுக்காக பக்கத்து ஊரின் பணக்காரன், வில்லங்கமான வில்லன் ஊத்துக்காட்டான் (பார்த்திபன்) மகள் லீவாவதியை (நிவேதா பெத்துராஜ்) காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறார். இறுதியில் கல்யாணம் நடந்ததா? ஊருக்கு நல்லது நடந்ததா? இதுதான் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் ஒன் லைன்.

கிராமத்துக் கதைக் களம், ஜிகு ஜிகு கலர் சட்டை, முறுக்குமீசை என கொஞ்சம் வருத்தப்படாத ரஜினிமுருகன் டைப் கதையில் களம் இறங்கியிருக்கிறார் உதயநிதி. நிச்சயமாக அது ஓரளவுக்கு அவருக்கு கைகொடுத்தும் இருக்கிறது. 'என்னா மாப்ள', 'எங்க ஊருக்கு நான் திரும்ப வருவேன்டா' போன்ற வசனங்கள் பேசி சிரமப்படாமல் நடித்துவிட்டுப் போகிறார். நடனத்தில் முன்பைவிட முன்னேறியிருப்பவர், நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேறியிருக்கலாம். சில மாதங்களுக்கு முன் பார்த்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் இருந்த அதே எக்ஸ்பிரஷன்கள்தான் இதிலும். ஊத்துக்காட்டானாக வரும் பார்த்திபன் கதாபாத்திரம் கொஞ்சம் சுவாரஸ்யம். காது குத்தும் போது.... குத்திக் காட்டிப் பேசுவேன், 'மடி....ச்சு வை' என அவர் வரும் சீன்களில் எல்லாம் கூடவே வரும் அவரின் ட்ரேட் மார்க் நக்கல்கள் சில இடங்களில் நச், பல இடங்களில் ப்ச். சூரியின் காமெடி பன்ச்கள் வழக்கம் போல் போராக இருந்தாலும், அந்த போட்டோ ஷூட் காட்சிக்கும், பாட்ஷா பட ரீ-க்ரியேஷன் காட்சிக்கும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. இதற்கு முன்பு பல கிராமத்து  படங்களில் ஹீரோயின்களுக்கு என்ன வேலையோ அதேதான் நிவேதா பெத்துராஜுக்கும். பாடலில் ஓகே, நடிப்பிலும் அடியே அழகே மோடிலேயே இருந்தா எப்படி?

கூத்தப்பட்டி ஆட்களால் ஒரு நாள் அசிங்கப்படும் பார்த்திபன், அந்த ஊருக்கும் கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லாவற்றையும் அண்டர்கவர் ஆபரேஷன் நடத்தி கெடுத்துவிடுகிறார். பல குடும்பங்களை ஊரைவிட்டே ஓடச் செய்கிறார். இப்படி பல கெடுதல்களைச் செய்து அங்கிருக்கும் அம்மனை தன் ஊருக்கு கொண்டுவந்துவிடலாம் என்பதே ஊத்துக்காட்டானின் அந்த லாங் டேர்ம் ப்ளான். கூத்தப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், அந்த ஊர் நல்லாசிரியரின் மகன். தனது அப்பா எப்படி அந்த ஊருக்காக அரும்பாடு பட்டாரோ, அதே அளவுக்கு இவரும் படுவார். ‘நான் ஊரையே காலி செய்யணும்னு திட்டம் போடுறேன். இவன் என்னான்னா ஊருக்கு நல்லது பண்றேன்னு சுத்திக்கிட்டு இருக்கான்’னு உதயநிதி மேல் வெறுப்பாகிறார் பார்த்திபன். தனது ஊருக்கு கெடுதல் செய்வது ஊத்துக்காட்டான் தான் என உதயநிதிக்கு தெரியவந்த பிறகு இருவருக்குமான நேரடி மோதல் ஆரம்பமாகிறது. இப்படி கிராமமும் கிராமம் சார்ந்தும் யோசித்த கதையை முடிந்த வரை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சி செய்திருக்கிறார் பொன்ராமின் உதவி இயக்குநரான தளபதி பிரபு.

ஆனால், தனது குருவின் ஸ்டைலை நைட் ஸ்டடி மேற்கொண்டு அப்படியே மக்கப் பண்ணியிருக்கிறார். படம் முழுக்க 'வருத்தப்படாத வாலிவர் சங்கம்' படத்தின் சாயல் அப்பட்டமாக தெரிகிறது. ஹீரோவின் கலர் கலர் சொக்காவில் ஆரம்பித்து, ஊதா கலர் ரிப்பன் பாடல் சாயல் வரை. போதாகுறைக்கு சூரி, இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெத்தில் தொடங்கி டீ கடைக்காரர், பஞ்சாயத்து திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வரை 'வருத்தப்படாத வாலிவர் சங்கம்', 'ரஜினிமுருகன்' ஆகிய படங்களைப் பல இடங்களில் நினைவுபடுத்துகிறது. அங்க சத்யராஜ் இங்க பார்த்திபன். அவ்வளவே. கிராமத்துக் கதை என்றாலே கலர் கலர் சட்டைதான், ஊர்திருவிழாதான் என்ற வழக்கமான அதே ஸ்டீரியோ டைப் திரைக்கதை படத்தின் பெரிய மைனஸ்.

கொஞ்சமும் வஞ்சனை இல்லாமல் முழுப்படத்தையும் வண்ணமயமாக்குகிறது பாலசுப்ரமணியெமின் ஒளிப்பதிவு. 'அம்மணியே', 'சிங்கக் குட்டி' என இமானின் சிக்னேசர் டைப் பாடல்கள், கேட்க இதம். ஆனா, எங்கயோ கேட்டாப்ள இருக்கு பீலைத் தவிர்க்க முடியவில்லை. வண்டி பெட்ரோல்ல ஓடுது... ஏன், டயர்ல ஓடலையா போன்ற ஒன் லைனர்களைத் தவிர்த்து, சுவாரஸ்யமான கதை, திரைக்கதை இருந்திருந்தால், மனசு போல படமும் தங்கமாக இருந்திருக்கும்.