Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி... உலகமயமாக்கல் ட்ரைலாஜி! - #GlobalizationTrilogy

பிரபாகரன், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. சிறுவயதில் தாய் இறந்துவிட, தந்தை ராணுவத்தில் பணியாற்ற, தன் விடுதி வார்டனின் அரவணைப்பில் வளர்கிறான். அவரும் இறந்துபோக, தன் பால்யகால காதலி ஆனந்தியைச் சந்திக்கிறான். அவளும் தன் தாயோடு வேறு ஊருக்குச் செல்கிறாள். பிரபாகரனின் வாழ்க்கை, அவனை பெரும் உளவியல் பாதிப்புக்குத் தள்ளுகிறது. அவன் வாழும் சமூகத்தை எதிர்த்து நாளடைவில் `சோசியோபாத்' (Sociopath) ஆக மாறுகிறான்.

இது ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் சுருக்கம். இன்னும் சுருங்கச் சொல்லவேண்டுமானால், தமிழ் படித்தவனுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதில்லை என்பதைப் பற்றிய கதை. தமிழ் படித்த பிரபாகரனுக்கு, ஏன் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கவில்லை? அதற்குப் பின்னால் சில சம்பவங்கள் இருக்கின்றன.

தமிழ்

1991-ம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகளை இந்தியா ஏற்றுக்கொண்டது. உலகமயமாக்கல் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு, உலகச் சந்தைகளுள் ஒன்றாக இந்தியா மாற்றப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவுக்குள்ளும் நுழைந்தன. அதன் விளைவாக, அந்த நிறுவனங்களில் பணியாற்ற ஆள்கள் தேவைப்படும் சூழல் உருவானது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பொறியியல் மற்றும் கணினி மென்பொருள் சார்ந்தவையாகவே இருந்தன. அந்தத் துறைகளில் பணி செய்பவர்களை உருவாக்க, பொறியியல் கல்லூரிகள் தாராளமாக நாடு முழுவதும் தோன்றின.

கலை மற்றும் பிற மனிதவியல் துறைகளுக்கான மவுசு குறைந்தது. அரசு, அந்தத் துறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட, மக்களும் அவற்றை மறந்தனர். இந்தச் சூழலில் பிரபாகரன் என்கிற இளைஞன், கணினி அறிவியல் துறையில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், `தமிழ் பிடிக்கும்’ எனக் கூறி தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறான். படித்து முடித்த பிறகு, குறைந்த சம்பளம்கொண்ட ஆசிரியர் பணியில் சேர்கிறான். கால் சென்டரில் ஆங்கிலம் பேசி, தன்னைவிட பல மடங்கு சம்பாதிப்பவர்களைக் கண்டு ஏங்குகிறான். அவனது வாழ்க்கைப் பின்னணி, தன்னைச் சுற்றியுள்ள சமூகம் என அனைத்தும் விரோதமாக தோன்றுகையில், அவற்றை எதிர்க்கக் கிளம்புகிறான்.

‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டா?’ என்ற பாரதியின் பாடலுக்கேற்ப உலகமயமாக்கல் மனிதர்கள் வாழ்க்கையில் நேரடியாகத் தலையிட்டதைப் பற்றிப் பேசியது `தமிழ் MA'. வரிவிலக்குக் காரணமாக அதன் பெயர் ‘கற்றது தமிழ்’ என மாற்றப்பட்டது.

 மூன்று திரைப்படங்களுமே ராம் - யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணியில் அமைந்தவை.

`தங்கமீன்கள்’, உலகமயமாக்கல் ட்ரைலாஜியின் இரண்டாவது படைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால், அப்பா- மகளுக்கு இடையில் இருக்கும் பாசம், தனியார் பள்ளிக்கூடங்களில் நிலவும் பிரச்னைகள் என்பவையாகத் தோன்றும். உலகமயமாக்கலின் தாக்கம், எப்படி தென் தமிழகத்தின் மூலையில் உள்ள கிராமத்தில் வெளிப்படுகிறது என்பதை ‘தங்கமீன்கள்’ பேசியது. குளத்தில் இறந்தால் தங்கமீன் ஆகலாம் எனக் கற்பனை செய்து வாழும் குழந்தை செல்லம்மா, மகளுக்காக எதையும் நிறைவேற்றும் தந்தை கல்யாணி. படிப்பில் பின்தங்கியவாறு இருக்கும் மகள்மீது நம்பிக்கையோடு இருக்கும் ஒரே ஜீவன் கல்யாணிதான்.

திரைப்படங்கள்

இன்றைய கல்வி முறை, மாணவர்களிடையே போட்டியைத் தூண்டி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலைசெய்யும் பணியாள்களை உருவாக்கும் கூடங்களாக மாறியிருக்கின்றன. கற்பனைகளில் வாழ விரும்பும் செல்லம்மாவை, அவளது கல்வி, போட்டிகளினூடே நெருக்குகிறது. கல்யாணியும் தன் மகளுக்காக மலை தாண்டிச் சென்று வேலை செய்கிறான். படத்தின் இரண்டாம் பகுதியில் செல்லம்மா விரும்பும் நாய்க்குட்டியை அவளுக்கு வாங்கித் தர கல்யாணி முயல்கிறான். செல்லம்மா, அந்த நாய்க்குட்டியை சிம் கார்டு விளம்பரம் ஒன்றில் பார்த்திருப்பாள். பெரும் நிறுவனங்கள் தங்கள் விளம்பர உத்திகள் மூலம் வெவ்வேறு பொருள்களை ஒரே விளம்பரத்தில் சந்தைப்படுத்துகின்றனர். உலகமயமாக்கலின் விளைவாக, மக்கள் நுகர்வுக் கலாசாரத்துக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை இந்தக் காட்சிகள் நுட்பமாகக் காட்டின.

உலகமயமாக்கல் எப்படி, சாதாரண நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் இடையில் புகுந்து அவர்களது வாழ்க்கையில் ஒன்றாகிப்போனது என்பது பற்றி ‘தங்கமீன்கள்’ பேசியது. இந்தியாவின் 61-வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் மூன்று விருதுகளை வென்றது.

உலகமயமாக்கல் ட்ரைலாஜியின் மூன்றாவது திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்தது ‘தரமணி’. இயக்குநர் ராம் அடிக்கடி மேடைகளில் சொல்வதுபோல, ``இந்தியாவின் வரைபடத்திலிருந்து களவாடப்பட்டு, அமெரிக்க வரைபடத்தில் பொருத்தப்பட்ட ‘யோயோ’ பாஸ், கேர்ள்ஸ் வாழும் ஊர்'' தரமணி. முந்தைய படங்களில் உலகமயமாக்கல் பிரபாகரனின் வேலைவாய்ப்பிலும், செல்லம்மாவின் கல்வியிலும் கலந்திருப்பதைக் காட்டிய ராம், ‘தரமணி’யில் உலகமயமாக்கல் எப்படி ஆண்-பெண் உறவுகளில் ஊடுருவியிருக்கிறது என்பதைப் பேசியிருக்கிறார்.

திரைப்படங்கள்

உலகமயமாக்கல், இந்தியப் பெண்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ சுதந்திரம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. கலாசாரம், பொருளாதாரம் முதலியவற்றில் பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட முக்கியக் காரணம் உலகமயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கை. சராசரி இந்திய ஆண் மனம் உலகமயமாக்கலின் தாக்கத்தைத் தன்னளவில் கொண்டாடினாலும், இன்னும் பழைமைவாதத்தைத் தொட்டே வாழ்ந்துவருகிறது. பெண் என்பவள், தனக்கு உடமை என்னும் பழங்கால ஆணாதிக்க மதிப்பீடுகளை இன்றும் தாங்கிவருகிறது. இப்படியாக ஆண்-பெண் உறவுகளில் உலகமயமாக்கலின் தாக்கத்தைப் பேசியிருக்கிறது ‘தரமணி’.

ஆல்தியா ஜான்சன், ஐடி நிறுவனம் ஒன்றில் மனிதவளப் பிரிவின் மேலாளர். அவருக்கு, கூவத்திலிருந்து வந்த பிரபுநாத் உடன் காதல். ஆல்தியா, தன் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரிந்தவுடன், மிக நாகரிகமாகவும் நட்பாகவும் பிரிந்து, மகனோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். பிரபுவின் கடந்த காலத்தில் சேலையும் சுடிதாரும் மட்டுமே அணியும் அபூர்வ செளமியா இருந்திருக்கிறார். இவர்களுக்கிடையில் இருக்கும் உறவு பல்வேறு பரிணாமங்களுக்கு வளர்ச்சியடைகிறது. ஆல்தியாவின் சிகரெட் பழக்கத்தைக் கேள்வி கேட்கத் தொடங்கும் பிரபு, அவளது ஃபேஸ்புக் தொடங்கி அனைத்தையும் வேவு பார்க்கிறான். அது ஒருகட்டத்தில் அவர்களுக்குள் மோதலைத் தூண்ட, இருவரும் பிரிகின்றனர். ‘தரமணி’ திரைப்படம் முழுவதும் ராமின் நேரடி வசனங்கள் காட்சிகளின் இடையிடையே தூவப்பட்டிருக்கும்.

பல அடுக்குமாடிக் கட்டடப் பணியில் ஈடுபட்டு, கீழே விழுந்து இறந்துபோகும் ‘சமர்’ என்பவர் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பது, இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் இந்தியா வென்றால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்துவது முதலிய நேரடி அரசியல் காட்சிகள். ‘தரமணி’, ராமின் உலகமயமாக்கல் ட்ரைலாஜியின் முடிவு,

உலகமயமாக்கல் என்னும் கொள்கையை இந்த மூன்று திரைப்படங்களும் எதிர்க்கின்றனவா, ஆதரிக்கின்றனவா என்பதைவிட, அந்தக் கொள்கையின் தாக்கம் எப்படி சில மனிதர்களின் வாழ்க்கையில் ஒன்றோடு கலந்துபோயிருக்கிறது என்பதற்கான உதாரணங்களாக இருக்கின்றன.

மூன்று திரைப்படங்களுமே மனிதர்களிடையே சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களைத் தாண்டி, அன்பும் காதலும் அவர்களை இயக்கிக்கொண்டிருப்பதைக் காட்டியிருக்கின்றன. உலகமயமாக்கல் ட்ரைலாஜியின் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய நா.முத்துக்குமாரின் வரிகளில்,

‘யாரும் இன்றி யாரும் இங்கு இல்லை,
இந்தப் பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்கும் இல்லை,
பேரன்பின் ஆதி ஊற்று!’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்