Published:Updated:

காதல் தோல்வியின் வலியைவிட போண்டாவின் சுவை அதிகம்..! #5YearsOfAttakathi

காதல் தோல்வியின் வலியைவிட போண்டாவின் சுவை அதிகம்..! #5YearsOfAttakathi
காதல் தோல்வியின் வலியைவிட போண்டாவின் சுவை அதிகம்..! #5YearsOfAttakathi

காதல் எத்தனை வகைப்படும்? – இந்தக் கேள்விக்கு தமிழ்சினிமாவின் காதல் கதைகளைப் புரட்டினால், பதில் கிடைக்காமல் ‘எக்ஸ்ட்ரா பேப்பர்’களின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டிருக்கும். இந்தக் கேள்விக்கான விடை தமிழ்சினிமாவில் எப்போதும் தேவை. ‘காதலுக்கு மரியாதை’, ‘காதல்கோட்டை’, ‘காதலர் தினம்’ எனக் காதலைக் கொண்டாடினாலும், ‘காதல் கசக்குதய்யா…’ எனப் பாட்டுபாடி வருந்தினாலும், தமிழ்சினிமாவுக்குக் காதல் தேவை. ‘காதல் காதல்… காதல் போயின் சாதல்’ என்ற நிலையில் இருந்த பெரும்பாலான காதல் படங்களுக்கு மத்தியில் ‘காதல் காதல்… காதல் போயினும் காதல்’ என்ற பரிணாமத்தைக் கொடுத்த படம்தான், இதே சுதந்திர தின நன்னாளில் 5 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘அட்டகத்தி’. ‘தினா – பூர்ணிமா – அமுதா - ரூட்டுதல – போண்டா – ஆசிரியர்’ ஆகிய டாப்பிக்கில் ரசிகர்கள் மனதில் நச்செனப் பதிந்துவிட்ட ‘அட்டகத்தி’ பலரின் அடையாளமும்கூட!

தமிழ்சினிமாவின் ஃபிரெஷ்ஷான காட்சி அமைப்புகளுக்குப் பரிசுத்த உதாரணம் ‘அட்டகத்தி’. ‘ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்து டுடோரியல் படிக்கும் ஹீரோவின் காதலும் காதல் சார்ந்த சம்பவங்களும்தான் ‘அட்டகத்தி’யின் அடிப்படை. காதலை ஜாலியாகச் சொன்ன, தமிழ்சினிமா பார்த்திராத சென்னையின் புறநகர வாழ்க்கையைப் பிரதிபலித்த ஒரு யதார்த்த சினிமா.

படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘அட்டகத்தி’ வெற்றியின் மூலம்  ரஜினியை இயக்கும் ‘ஸ்டார் இயக்குநர்’ ஆனார். நடிகர் தினேஷூக்கு இன்றுவரை ‘அட்டகத்தி’ என்ற அடைமொழி பின்தொடர்ந்தே வருகிறது. இப்படத்தின் மூலம் இசையின் புதுமொழியைப் புரியவைத்த சந்தோஷ் நாராயணன் முக்கியமான இசையமைப்பாளர்கள் லிஸ்டில் இருக்கிறார். நாயகிகள் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் லைம்லைட் குறையாத நடிகைகளாக வலம் வருகிறார்கள். தயாரிப்பாளர் சி.வி.குமார், ‘அட்டகத்தி’யின் முதுகெலும்பாக இருந்த ‘கானா’ பாலா, எடிட்டர் லியோ ஜான்பால்… என ‘அட்டகத்தி’யில் கலக்கிய ஒவ்வொருவரும் இன்று கூர்மையான வளர்ச்சியில் இருக்கிறார்கள். இதுதான், ‘அட்டகத்தி’யின் வெற்றி!

காதலித்து திருமணம் செய்யவேண்டும், காதலில் ஜெயிக்கவேண்டும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நாயகன் தினேஷுக்கு, காதலில் தொடர் தோல்விகள். ரசித்துக் காதலித்த பெண், ‘அண்ணா…’ என்கிறாள். சோகத்தில் முகத்தைத் தொங்கபோட்டுத் திரியலாம் என முயற்சித்து, அதில் தோற்று… காதல் தோல்வியைச் சிரித்தே சமாளித்துக் கடக்கிறார். படம் பார்க்கும் நமக்கும், ‘அட… இது நல்லா இருக்கே?’ என புருவம் உயர்கிறது. காதல் தோற்றுப்போன விரக்தியில் இருக்கும்போது ‘போண்டா’ குறுக்கே வருகிறது. ‘இந்த நிலைமையில எப்படிடா உன்னால போண்டா சாப்பிட முடியுது?’ என மனசாட்சி காறித் துப்ப, போண்டாவைத் துப்புகிறார் தினேஷ். ஆனால், பூர்ணிமா மீதான காதலைவிட, போண்டா மீதான பிரியத்தில் தினேஷ் என்ன செய்தார் என்பதைத் திரையில் பார்த்து சிரித்தோம், ரசித்தோம்!

விதவிதமாக வித்தை காட்டினாலும், காதல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க, ‘நான் நல்லாத்தானேடா இருக்கேன், ஸ்டைலா அழகாதானேடா இருக்கேன், என்னை ஏன் மச்சி பிடிக்கலை?’ என தினேஷ் ஆன் ஸ்கிரீனில் புலம்பியபோது எத்தனை ஆரவாரம்? பூர்ணிமாவின் க்யூட் ரியாக்‌ஷன்களில் காதலை ரசிக்க வைத்தார். வாழை மரத்தை வெட்டிச் சாய்த்து ரகளை செய்யும் தினேஷின் அப்பா காமெடியை ரசிக்க வைத்தார். ஒருவழியாக பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேரும் தினேஷ் ‘ரூட்டு தல’யாக ரகளை செய்தால், கானா பாட்டு, கலாய், சண்டை… என ‘ரூட்டு தல’ தினகரனின் நண்பர்கள் கலர்ஃபுல் வாணவேடிக்கை காட்டினார்கள்.

முதல் படமாக காதலைக் கையில் எடுத்த இயக்குநர் ரஞ்சித், ‘அட்டகத்தி’யை ‘இதுவும் ஒரு சினிமா’ என்ற வரையறையில் வைத்துப் பூட்டாமல், தமிழ்சினிமாவில் இருந்த தூசுகளைத் தட்டித் துண்டை விரித்தார். இல்லையெனில் படத்தில் இடம்பெறும் தினா, பூர்ணிமா, அமுதா, தினாவின் அண்ணன், அப்பா, அம்மா, நண்பர்கள், புறநகர் சென்னையின் ஒரு ஏரியா… என அவ்வளவும் அத்தனை கச்சிதமாகக் கவர்ந்திருக்காது.

மகிழ்ச்சியோ, வருத்தமோ… சூழலுக்குத் தகுந்த கானா பாடலைப் பாடிக் கொண்டாடும் கலாசாரம் கொண்ட மக்களைக் காட்டினார். சினிமா போர்வையில் குறிப்பிட்ட சமூகத்தைத் தூக்கி நிறுத்தும் நோக்கத்திற்கெல்லாம் செல்லாமல், ஒரு சமூகத்தின் கலாசாரத்தையும், வாழ்வியலையும் அழகியலாகக் கட்டமைத்துக் காட்டினார். அதில் சோகமும் இருந்தது, கொண்டாட்டமும் இருந்தது. ‘ஆடி போனா ஆவணி…’, ‘நடுக்கடலுல…’ பாடல்கள் ஒரு ரகம், ‘அடிஎன் கானமயில் குயிலே...’ வேறு ரகம். காதலின் ரசனைக்கு ‘ஆசை ஓர் புல்வெளியும்’, காதல் வருத்தத்திற்கு ‘வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றும் என்றே…’ பாடலும் வாட் எ ஃபீல்!

ஹீரோ தன் ஜட்டியைத் தேடும் முதல் காட்சியில் இருந்து, க்ளைமாக்ஸ் காட்சியின் காதல் எபிசோட் வரை… தினகரன் பேருந்துகளில் ஃபுட் போர்ட் அடித்துக் காதல் வளர்க்கும் அத்தியாயத்தில் இருந்து, காதல் தோல்வியில் இருந்து மீள பவுலிங் போட்டுக்கொண்டே ரோட்டில் ரியாக்ட் கொடுப்பது வரை… ஒளிப்பதிவில் புகுந்து விளையாடியிருந்தார் பி.கே.வர்மா.

நகரம், கிராமம்… இந்த சூழல்கள் தமிழ்சினிமாவுக்குப் புதியது இல்லை என்றாலும், ‘அட்டகத்தி’ காட்டிய சென்னையை, சென்னையைச் சேர்ந்தவர்களே பார்த்திருப்பார்களா எனத் தெரியாது. வழக்கமான கதைக் களத்தின் தேர்வை உடைத்துப் போட்டு, புது சாந்து பூசியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

விமர்சன ரீதியாக அணுகும்போது சில குறைகள் இருக்கலாம். மற்றபடி, காதல் குறித்த இன்றைய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலித்த விதத்தில், காதலின் கீதத்தைப் புதுமையாகச் சொன்ன விதத்தில், தமிழ்சினிமாவில் அதுவரை இருந்த காதலின் வரையறையைக் கலைத்துப்போட்ட விதத்தில்… எனப் பல வகைகளில் மனதில் பதிகிறது ‘அட்டகத்தி’. அதில், மிக முக்கியமானது ஒரு சினிமாவை ரசிகனுக்கு உணர்வு ரீதியாகக் கடத்தியது.

ஒவ்வொருவரும் காதலைக் கடந்து வந்திருப்போம். காதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட சூழலில் உண்டாகும் உணர்வுகளின் அடர்த்தி நமக்கு மட்டுமே தெரியும். ஆனால், ‘அட்டகத்தி’யில் வாழ்வியல், காதல், நட்பு, பாசம், கொண்டாட்டம்… என எல்லா உணர்வுகளுமே அடர்த்தியாகக் கையாளப்பட்டிருந்தது. ரசிகர்களும் ‘அட்டகத்தி’க்கு அடர்த்தியான வெற்றியைக் கொடுத்தார்கள்.

இன்னும் கூர்மையாக உருவாகிக்கொண்டிருக்கும் ‘அட்டகத்தி’ டீமுக்கு வாழ்த்துக்கள்!