Published:Updated:

``ப்ரீபுரொடக்‌ஷன் ஒரு வருஷம்; 40 நாள்கள் மட்டுமே ஷூட்டிங்!” - ஹாலிவுட் அனுபவம் சொல்லும் தனுஷ்

``ப்ரீபுரொடக்‌ஷன் ஒரு வருஷம்; 40 நாள்கள் மட்டுமே ஷூட்டிங்!” - ஹாலிவுட் அனுபவம் சொல்லும் தனுஷ்
``ப்ரீபுரொடக்‌ஷன் ஒரு வருஷம்; 40 நாள்கள் மட்டுமே ஷூட்டிங்!” - ஹாலிவுட் அனுபவம் சொல்லும் தனுஷ்

``ப்ரீபுரொடக்‌ஷன் ஒரு வருஷம்; 40 நாள்கள் மட்டுமே ஷூட்டிங்!” - ஹாலிவுட் அனுபவம் சொல்லும் தனுஷ்

“ஒரு படம் எடுத்து, அதை விற்று, அந்தப் படம் நல்லா ஓடினால்தான் இங்கே எல்லாருக்குமே வேலை. ஒரு படம் எடுக்கிறதே அவ்வளவு கஷ்டம்னா, அதை ரிலீஸ் பண்ண சரியான தேதி கிடைக்கிறது அதைவிட பெரிய போராட்டம். அப்படியும் சரியான ரிலீஸ் தேதியில் படம் வந்தாலும், அதை மக்கள் வீட்டிலிருந்து தியேட்டருக்கு வந்து பார்க்கணும்னா, இன்னிய தேதிக்கு அது சிம்மசொப்பனம். ஆமாம், ஸ்டார் நடிகர்கள்னு சொல்ற ஆறேழு பேர்களைத் தவிர, மற்ற நடிகர்களின் படங்களைப் பார்க்கவைப்பது மிகப்பெரிய சவால். நல்ல படம்னா எந்தச் சவாலையும் தாண்டி மக்கள் வரத் தயாரா இருக்காங்க. ஆனால், நகைச்சுவை, பாட்டுனு ஒவ்வொண்ணுக்கும் தனி சேனல், டிவி-யில் குறைந்தபட்சம் எல்லா மொழிகளையும் சேர்த்து ஒரு நாளைக்கு 60-க்கும் மேற்பட்ட படங்கள், வெப் சீரிஸ், ஆப்ஸ், பைரஸி, இன்டர்நெட்டில் லீக்... இவற்றுக்கு மத்தியில் மக்களை தியேட்டருக்கு வரவெச்சு, அவங்க தர்ற காசு தயாரிப்பாளருக்குப் போறதுக்குள்ள தலை சுத்துது. இந்தச் சூழல்லதான் சினிமா தயாரிப்பாளர் - தொழிலாளர்கள் பிரச்னை. இந்தக் கஷ்டங்களை மனசுல வெச்சுதான் இந்தப் பிரச்னையை அணுகணும்’’ சினிமாவில் உள்ள பிரச்னைகளை ஆத்மார்த்தமாக அணுகுகிறார் தனுஷ். ‘வேலையில்லா பட்டதாரி-2’ ரிலீஸுக்கு முன்பு அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

`` `விஐபி-2’க்காக கஜோலுடன் டிராவல் பண்ணின அனுபவம் எப்படி இருந்துச்சு?’’

``இந்தக் கதைதான் பண்றோம்னு முடிவானதுக்குப் பிறகு எங்க டீம்ல எல்லாரும் உட்கார்ந்து பேசினோம். ‘இந்த மாதிரி ஒரு கேரக்டர், இயல்பாவே ஸ்டைலா இருக்கணும். அதுக்காக எஃபர்ட் எடுத்து ஸ்டைலா இருக்கக் கூடாது. அவங்க சும்மா இருந்தாலே ஸ்டைலா, பவர்ஃபுல்லா இருக்கணும். பவர்ஃபுல்லா தன்னைக் காட்டிக்கக் கூடாது. இயற்கையாவே அந்தத் தன்மை அவங்களுக்கு இருக்கணும். அந்த மாதிரி இங்கே யார் இருக்கா?’னு பேசிட்டிருந்தோம். அப்ப ‘கஜோல் மேடம் மாதிரி யாராவது இருந்தா நல்லா இருக்கும்’னுதான் ஆரம்பிச்சோம். ‘கஜோல் மேடம் மாதிரி யாரு?’னு இரண்டு மூணு நாள் டிஸ்கஷன் போயிட்டிருந்துச்சு. பிறகு, ‘ஏன் கஜோல் மேடத்தையே கேட்கக் கூடாது?’னு நான் சொன்னேன். பிறகு, அவங்களைச் சந்திச்சோம். அவங்க சொன்ன வார்த்தைகள் நல்லா ஞாபகம் இருக்கு. ‘நான் எதுக்காகவும் பண்றேன்னு நினைக்காதீங்க. கதை எனக்குப் பிடிச்சிருக்கு. அதனாலதான் பண்றேன்’னு சொன்னாங்க. அது எங்களுக்கு இன்னும் ஊக்கமா இருந்துச்சு. 

தனக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசி நடிக்கும்போது கம்ஃபர்டபிளா இல்லை என்பதால்தான், அவங்க இந்தி தவிர வேறு மொழிப் படங்கள் பண்ண தயங்கியிருக்காங்க. எங்ககிட்ட கதை கேட்டுட்டு ‘இல்லை. பண்றது இல்லை’னு சொல்லிடலாம்கிற ஐடியாவுலதான் எங்களை வரச்சொல்லியிருந்தாங்க. ஆனால், கதையைக் கேட்ட பிறகு, ‘எவ்வளவு டயலாக்ஸ் இருக்கும்?’னு கேட்டாங்க. ‘இங்கிலீஷ்ல 50 சதவிகிதம், தமிழ்ல 50 சதவிகிதம்னு மாறி மாறி இருக்கும் மேடம்’னு சொன்னோம்.

ஷூட்டிங் வந்த ஒரே வாரத்துல தமிழ் டயலாக்ஸை எல்லாம் மனப்பாடம் பண்ணி, ரொம்ப ஈஸியா நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ‘அப்புறம் எதுக்கு 50 சதவிகிதம் இங்கிலீஷ் டயலாக்ஸ்?’னு அவங்ககிட்ட கேட்டு, கொஞ்சம் கொஞ்சமா இங்கிலீஷைக் குறைச்சுக்கிட்டே வந்தேன். படம் முடியும்போது அது 80 சதவிகிதம் தமிழ், 20 சதவிகிதம் இங்கிலீஷ்னு வந்து நின்னுச்சு. அதுக்கு அவங்க ‘நீங்க என்னை ஏமாத்திட்டீங்க’னு சும்மா விளையாட்டா சொன்னாங்க. இந்தப் படம் எடுக்கும்போதே `பார்ட்-3'க்கான ஒன்லைனை அவங்ககிட்ட சொன்னேன். அந்த லைனும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சது. ‘கம்ப்ளீட் பண்ணிட்டு வாங்க. நல்லா இருந்தா நிச்சயமா பண்றேன்’னு சொன்னாங்க. அவங்களோட கான்ட்டிராக்ட்ல கொடுத்த நாள்களைவிட அதிக நாள்கள் பட புரமோஷனுக்கு வந்தாங்க. நல்ல மனசு உள்ள ஒரு புரொஃபஷனல்கூட வொர்க் பண்ணினதுல எனக்கும் சந்தோஷம்.’’

``இசையமைப்பாளர் ஷான் ரோல்டனைக் கொண்டாடுறீங்க. எப்படி இருந்துச்சு அவருடனான இசைப் பயணம்?’’

``ஷான் ரோல்டன் ஒரு ஜீனியஸ். அவரின் ஃபேமிலி பின்னணி மிகப்பெரியது. பெரிய சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரோட தாத்தா சாண்டில்யன், மிகப்பெரிய எழுத்தாளர். இதை நான் சொல்றது அவருக்குப் பிடிக்காதுதான். இதெல்லாம் தெரியக் கூடாதுனுதான் அவரோட பேரை `ஷான் ரோல்டன்'னு சம்பந்தமே இல்லாமல் மாற்றி வெச்சுக்கிட்டார். ஆனால், தெரியறது தெரியணும். அந்தப் பாரம்பர்யம், க்ரியேட்டிவிட்டி அவரின் ரத்தத்துலேயே இருக்கு.

முதல்முறை அவர்கூட உட்கார்ந்து மியூசிக் பண்ணும்போது ‘எப்படி இவரால் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?'னு பிரமிச்சேன். என்னென்னவோ பண்ணிக்காட்டினார். இப்ப அவர் வெறும் ஆறேழு படங்கள்தான் பண்ணியிருக்கார். அதுக்குள்ளவே ‘ஜோக்கர்‘, பவர்பாண்டி’ பின்னணி இசையை இன்டர்நேஷனல் தரத்துல தர அவரால முடியுது. அதே சமயம் நம்ம இசையையும் கலப்படம் இல்லாமல் தர முடியுது. இப்ப பண்றதைவிட இன்னும் அஞ்சாறு படங்களுக்குப் பிறகு அவர்கிட்ட இருந்து இன்னும் பிரமாதமான இசை வரும்.’’

`` `பவர் பாண்டி’க்குப் பிறகு ராஜ்கிரண் என்ன சொன்னார்?’’

``சார் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க என்பது தெரியும். ஆனால் ‘எமோஷனல் ஆகிடுவோம்’ என்பதாலயா என்னனு தெரியலை. சார் என்கிட்ட நிறைய எக்ஸ்பிரஸ் பண்ணிக்க மாட்டாங்க. சுப்ரமணிய சிவா சார் மாதிரி என்னோடு இருக்கிறவங்ககிட்ட நிறைய பகிர்ந்துப்பாங்க. எனக்கு உறுதியா தெரியும் ‘பவர் பாண்டி’, சாருக்கு ரொம்ப சந்தோஷமான புராஜெக்ட்.’’

``இயக்குநரா அடுத்த கமிட்மென்ட் என்ன?’’

``இப்ப ஒரு ஸ்க்ரிப்ட் எழுதிட்டிருக்கேன். என்கிட்ட `பவர் பாண்டி-2'வுக்கான லைனும் ரெடி. ஆனால், உடனடியா அதே உலகத்துல டிராவல் பண்ணினா எனக்கு போரடிச்சுடுமோனு பயமா இருக்கு. இப்படி இம்பேஷன்ட்டாகுற ஆளுதான் நான். அதனால் வேறொரு ஸ்க்ரிப்ட் பண்ணிட்டு இதைப் பண்ணலாமா... இதைப் பண்ணிட்டு வேறொண்ணுக்குப் போகலாமாங்கிற சின்னக் குழப்பம் இருக்கு. இந்த ரெண்டும் இல்லாம மூணாவதா வேறொரு கதை எழுதிட்டிருக்கேன். இப்ப எழுதின வரை அந்த ஸ்க்ரிப்ட்டில் நான் இல்லை. வேற நடிகர்தான் நடிப்பார். நாளைக்கு அது மாறினாலும் மாறலாம். அடுத்த வருஷம் முதல் பாதியில இந்தப் படத்தை ஆரம்பிப்பேன்.’’

‘‘மூணு பாகங்கள், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிச்சிருக்கீங்க. எப்படி வந்திருக்கு ‘வடசென்னை’?’’

‘‘ஆமாம், `வடசென்னை' முதல் பார்ட் முடிய இன்னும் 15 நாள் ஷூட்டிங்தான் இருக்கு. படம் 90 சதவிகிதம் முடிஞ்சிடுச்சு. என் கரியர்ல ‘வடசென்னை’ நிச்சயம் ஒரு மைல்கல் படம். எடுத்தவரைக்கும் நானும் வெற்றி மாறன் சாரும் பார்த்தோம். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’னு சார் எடுத்த படங்களைத் தாண்டி இதுதான் அவரோட பெஸ்ட் படம்னு என்னால ஓப்பனா சொல்ல முடியும். அப்படித்தான் மக்களும் ஃபீல் பண்ணுவாங்கனு நம்புறேன். இவ்வளவு இயல்பா, இவ்வளவு யதார்த்தமா `வடசென்னை'யை யாரும் காட்டியிருக்க முடியுமா அல்லது இதுவரை இப்படி ஒரு படம் வந்திருக்கா? இனிமேலும் இப்படிக் காட்டப்படுமானு தெரியலை. நான் யாருடைய வேலையையும் கம்மி பண்ணி சொல்லலை. இவ்வளவு ராவா இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. பெரிய கதை. ஒவ்வொரு கதைக்குள்ளேயும் ஒரு கிளைக் கதைனு எடுக்க எடுக்கப் போயிட்டே இருக்கு. இது மகாபாரதம்தான். அதனால்தான் மூணு பார்ட்னு அறிவிச்சிருக்கோம். பார்ட் ஒண்ணையே ரெண்டரை மணி நேரத்துக்குள்ள சொல்ல அவ்வளவு சிரமப்படுறோம். மறுபடியும் சொல்றேன், ‘வடசென்னை’ வெற்றி மாறனோட பெஸ்ட் புராடெக்ட்.’’

``ஒரு நடிகரும் இயக்குநரும் அடுத்தடுத்த படங்கள்ல தொடர்ந்து பயணிக்கும்போது சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள், மன வருத்தங்கள் நிச்சயம் வரும். அப்படி இருந்தும் தனுஷ் - வெற்றி மாறன்  இணை தொடருதுன்னா இருவருக்குமான அந்தப் புரிதல்தான் முக்கியமான காரணமா இருக்கும். அந்தப் புரிதலோட ஸ்பெஷல் என்ன?’’

`` `நீங்க பண்றது தப்பு’னு அவர் என் முகத்துக்கு நேரா சொல்லும்போது நான் எடுத்துக்கிற விதம் என்ன? அதையே நான் அவர்கிட்ட சொல்லும்போது அவர் எடுத்துக்கிற விதம் என்ன? இந்த அடிப்படை கேள்வியிலிருந்துதான் எல்லா விஷயங்களையும் பார்க்கணும். ஒருசில விஷயங்கள்ல கருத்து வேறுபாடுகள் வரலாம். எங்களுக்குள் அப்படி நிறைய வந்திருக்கு. அவர் சொல்றதை சில சமயம் நான் ஒப்புக்குவேன்; சமயங்கள்ல ஒப்புக்க மாட்டேன். அந்தச் சமயங்கள்ல அவர் சொல்றதைக் கேட்டுக்கிட்டு எனக்கு எது சரினு தோணுதோ அதைப் பண்ணுவேன். நான் பண்ணினது சரியா இருந்தா, என் முடிவை அவர் மதிப்பார். அதேபோல அவர் கருத்தை நானும் மதிப்பேன். அந்த வகையில் முகத்துக்கு நேரா டப்புனு சொல்ற டைப்தான் ரெண்டு பேருமே. அதனால் ரெண்டு பேருக்குமே பாதிப்பு வராத வகையில் பார்த்துப்போம். இப்படி இருக்க, ஒண்ணு... அடிப்படையில் ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை, மரியாதை வைக்கணும். இன்னொண்ணு, ஈகோ இருக்கக் கூடாது. இதுதான் எங்க காம்பினேஷனுக்கான மிகப்பெரிய பலம், சிறப்புனு நினைக்கிறேன்.’’

``கவுதம் மேனனின் டைரக்‌ஷன்ல நீங்க பண்ணிட்டிருக்கிற ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை எப்ப எதிர்பார்க்கலாம்?’’

``கௌதம்கூட வொர்க்பண்றது ரொம்ப நல்ல அனுபவம். அது ரொம்ப ஸ்டைலிஷான படம். ‘பரவாயில்லை, நாமகூட பார்க்க நல்லா இருக்கோமே’னு காட்டியிருந்தார் கவுதம் மேனன். இன்னும் 15 நாள் வேலைகள்தான் மீதி இருக்கு. சீக்கிரமா அதுவும் நடந்து முடியும். ஸ்டைலிஷான ஆக்‌ஷன் பிளாக்கோடு, நல்ல பொழுதுபோக்குப் படமாவும் அது இருக்கும்.’’

`` `ராஞ்சனா', `ஷமிதாப்'னு பாலிவுட்லயும் உங்களுக்கு நல்ல வரவேற்பு. இப்ப ‘The Extraordinary Journey of the Fakir’னு இங்கிலீஷ் படம் பண்ணிட்டிருக்கீங்க. அந்த டீம்ல உங்களை எப்படி ரிசீவ் பண்ணினாங்க?’’

``ரொம்ப அழகான அனுபவம். நிறைய கத்துக்க முடிஞ்சது. நிறைய விஷயங்கள்ல, ‘ஓஹோ இப்படித்தானா அது’னு இருந்துச்சு. ஒரு நாளைக்கு நாம பத்து வேலைகள் செய்யணும்னா, இங்கே ஆறேழுதான் பண்ணிட்டு இருக்கோம்னு புரிஞ்சது. அதனால அது இன்னும் கடுமையா உழைக்கவைக்கிற அனுபவமா இருந்துச்சு. ‘பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்’ங்கிற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் அங்கே போன பிறகுதான் புரிஞ்சுது. ‘ஷூட்டிங் ஸ்பாட் போய்ப் பார்த்துப்போம்’னு எதுவுமே அவங்க பண்ண மாட்டாங்க. எல்லாமே ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ரெடி பண்ணிட்டுத்தான் வர்றாங்க. வந்தால் ‘என்ன பண்ணணும்’னு ஸ்க்ரிப்ட் புக்ல இருக்கும். அதைப் பண்ணிட்டுப் போயிட்டே இருக்காங்க.

ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே ஸ்க்ரிப்ட் என் கைக்கு வந்துடுச்சு. பிறகு, எல்லாத்துக்குமான ட்ரயலுக்கு ஒரு வருஷம் எடுத்துக்கிட்டாங்க. பிறகுதான் ஷூட்டிங். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க, ஒரு வருஷம் ப்ரி-புரொடக்‌ஷன். ஷூட்டிங் வெறும் 40 நாள்கள்தான். இப்படி அவங்க அணுகுமுறை ரொம்ப புரொஃபஷனலா இருக்கு. அது என்னை பல வழிகள்ல ட்ரெயின் பண்ணிக்கவும் உதவியா இருந்துச்சு. குறிப்பா சொல்லணும்னா, போகும்போது ஒரு இயக்குநரின் நடிகனா போனேன்; வரும்போது ரொம்பவும் சரண்டராகுற ஒரு இயக்குநரின் நடிகனாகத் திரும்பி வந்திருக்கேன்.”

``வறுமையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் 125 குடும்பங்களை உங்க சொந்த ஊர் சங்கராபுரம் வரவைத்து நிதி உதவி பண்ணியிருக்கீங்க. ரொம்ப நல்ல விஷயம். இப்பவும் சொந்த ஊருக்கு அடிக்கடி போவது உண்டா... சொந்த ஊர் நினைவுகள் சொல்லுங்க?’’

``மூணு வயசுலயிருந்தே கோடை விடுமுறை முழுக்க அம்மாவோட அம்மா ஊரான சங்கராபுரத்துலதான் இருப்போம். ஸ்கூல் திறக்குறதுக்கு ரெண்டு நாள்கள் முன்னதான் சென்னைக்கு வருவோம். என் அம்மாவின் அண்ணன், தம்பிகளோட குழந்தைகளும் லீவுக்கு அங்கே வந்திடுவாங்க. மொத்தமே ஏழெட்டு பேர்தான் இருக்க முடியும்கிற அளவுக்கு ரொம்பச் சின்ன வீடு. அந்த வீட்டைத் தாண்டி ஒரு மாட்டுக் கொட்டகை. எப்பவுமே மூணு மாடுகள், இரண்டு கன்னுக்குட்டிகள் இருக்கும். மாடு சாணம் போடுறது, கோமியம் பெய்வது வீட்டுக்குள்ளேயேதான் நடக்கும்னு சொல்ற அளவுக்கு வீடும் மாடும் ஒண்ணாவே இருக்கும். அந்தச் சத்தம் எல்லாம் இன்னும்கூட என் மைண்டலயே இருக்கு.

அதிகாலையில 5 மணிக்கே எழுப்பிவிட்டு, குட்டிப்பசங்க எல்லாரையும் வயலுக்கு அனுப்பிடுவாங்க. சமயத்துல பூப்பரிச்சு கொடுக்கவேண்டி இருக்கும். `ஒரு கிலோ பூப்பரிச்சு கொடுத்தா, நாலணா'னு சின்னப்பசங்களை என்கரேஜ் பண்ணுவாங்க. நாங்க அந்தக் காசுக்காகவே அந்த வேலைகளை எல்லாம் பண்ணுவோம். ரெண்டு மணி நேரம் வேலை பார்த்தா, ரெண்டு ரூபாய் கிடைக்கும். அந்த ரெண்டு ரூபாயை எடுத்துட்டு பஸ்ஸ்டாண்ட் போனா அங்கேயே இட்லி சாப்பிடலாம். 

எங்க ஊர்ல ஆறு கிடையாது. ஆத்துல குளிக்கணும்னா அங்கேயிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி குச்சனூர் போகணும். அங்கே போய்க் குளிச்சுட்டு, மத்தியானம் தோட்டத்துக்குப் போறது, பம்ப் செட்ல ஆடுறது, சாப்பிட்டப் பிறகு அங்கேயே தூங்குறது, இதுக்கு நடுவுல எங்களுக்குள்ள நடக்கிற சண்டை. பிறகு அதை அன்னிக்கே மறந்து சாயங்காலம் பேசி ராசியாகுறது. அங்கிருந்து சில்லுமரத்துப்பட்டி, போடிக்குப் போய் படம் பார்த்தது, அங்கே பஸ்ஸுக்காக வெயிட் பண்ணினதுனு அந்த நாள்கள் இன்னும் பசுமையா நினைவுல இருக்கு.

இப்படி 11-ம் வகுப்பு படிக்கிற வரை தொடர்ந்து சங்கராபுரம் போயிட்டும் வந்துட்டும் இருந்தேன். ‘துள்ளுவதோ இளமை’ ரிலீஸுக்குப் பிறகுதான் அங்கே போவது கம்மியாச்சு. ரொம்ப நாளைக்குப் பிறகு கிடைச்ச மூணு நாள் லீவுல `அங்கே போனால்தான் நிம்மதியா இருக்கும்'னு தோணுச்சு. மொத்த ஃபேமிலியையும் திரட்டிப் போயிட்டு வந்துட்டேன். ஊர், நிறைய மாறிடுச்சு. அதில் பல மாற்றங்கள் வேதனையைக் கொடுத்தது. சில மாற்றங்கள் சந்தோஷத்தைக் கொடுத்தது. முன்னாடியெல்லாம் பார்த்தால் கண்ணுக்கெட்டின தூரம் வரை வயல்வெளியா தெரியும். இப்ப அது குறைஞ்சு நிறைய கட்டடங்களா மாறிடுச்சு. அதே சமயம், நல்லதா ஒரு ஸ்கூல், ஒரு நல்ல க்ளினிக் இருக்குனு சில நல்ல மாற்றங்களையும் பார்த்தேன். என் சொந்த ஊர் நினைவுகள் சிலதை ‘பவர் பாண்டி’யிலக்கூடப் பதிவுபண்ணியிருப்பேன். அந்த ஊர் நினைவுகளை வெச்சே இன்னும் 10 படங்கள் எடுக்கலாம்.’’

```இப்ப சொந்த ஊர்ல யார் யார் இருக்காங்க?’’

``என் அம்மாவோட அம்மா முத்துராம் பாட்டியும், என் தாய்மாமாவும் இருக்காங்க. ஆரம்ப காலத்துல பாட்டி எங்ககூட சென்னையிலதான் இருந்தாங்க. இப்ப மூணு வருஷங்களாத்தான் அங்கே இருக்காங்க. ‘என் கடைசிக் காலத்துல நான் பிறந்த ஊர்ல இருக்கணும்னு நினைக்கிறேன்’னாங்க. அது புரிஞ்சுக்கூடிய விஷயமா இருந்துச்சு. அனுப்பிவெச்சோம். இப்ப வீட்டு வேலைக்கு ஆள் வெக்காம ஒரு குழந்தையைப் பார்த்துக்கவே பலர் கஷ்டப்படுறாங்க. ஆனால், அப்ப எங்க வீட்டுல நாலு பசங்க. ரொம்ப வறுமை. அவங்களுக்குச் சாப்பாடு கொடுக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. அதுல வீட்டு வேலைக்கு எங்க ஆள் வெக்கிறது? அப்படிப்பட்ட சூழல்ல எங்களை வளர்த்த எங்க அம்மாவை ஒரு `இரும்புப் பெண்’னு சொல்லலாம். அவங்களுக்கு உதவியா இருந்து பாட்டிதான் எங்க நாலு பேரையும் வளர்த்தாங்க. சாப்பாடு ஊட்டி விடுறதுல இருந்து நாலு பேரையும் ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்புறது வரை எங்க பின்னாடியே நிப்பாங்க. மற்ற மூணு பேரைவிட நான் துறுதுறுனு ஒரு இடத்துல நிக்காம ஓடிட்டேதான் இருப்பேன். நான் படிச்ச எங்க ஸ்கூல், வீட்டுல இருந்து அஞ்சாறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும். என் கையைப் பிடிச்சு ஸ்கூல் கூட்டிட்டுப் போறது, ஸ்கூல் முடிஞ்சதும் திரும்பக் கூட்டிட்டு வர்றதுனு பாட்டிதான் என்னைப் பார்த்துப்பாங்க. அதே மாதிரி மதியம் சமைச்சு சாப்பாடு எடுத்துட்டு வந்து ஊட்டிவிடுறது, சாயங்காலம் ஸ்கூல் இருந்து வந்தா சாப்பிட ஏதாவது ரெடி பண்ணி வைக்கிறதுனு பாட்டிதான் எங்களை கவனிச்சுப்பாங்க. எங்க வளர்ச்சியில் பாட்டிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. இதேபோல அப்பாவோட ஊர் மலிங்காபுரம். அங்கேயும் இதே மாதிரியான நினைவுகள்தான்.”

அடுத்த கட்டுரைக்கு