Published:Updated:

“பேயா நடிக்குறது ரொம்பக் கஷ்டம்ப்பா!” - ‘யாரடி நீ மோகினி’ யமுனா!

வெ.வித்யா காயத்ரி
“பேயா நடிக்குறது ரொம்பக் கஷ்டம்ப்பா!” - ‘யாரடி நீ மோகினி’ யமுனா!
“பேயா நடிக்குறது ரொம்பக் கஷ்டம்ப்பா!” - ‘யாரடி நீ மோகினி’ யமுனா!

‘யாரடி நீ மோகினி’ சீரியலில் கொடூரமான பேயாக வந்து, பார்ப்பவர்களை பயத்தில் உறையவைப்பவர் யமுனா. இவர் 'அபூர்வ ராகங்கள்' உள்ளிட்ட சில சீரியலிலும் நடித்துவருகிறார். 'யாரடி நீ மோகினி' சீரியலில் பேயாக நடித்தாலும், நிஜத்தில் பேசும் குரலிலேயே அவ்வளவு அன்பு வெளிப்படுகிறது. 

''உங்களைப் பற்றி..?'' 

''நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். பதினாறு வயசிலேயே மீடியாவுக்குள் நுழைஞ்சுட்டேன். என் தங்கச்சி வள்ளியும் சின்னத்திரை நடிகைதான்.'' 

“ 'வெயில்' சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?” 

“என் அம்மாவுக்கும் சின்ன வயசிலிருந்தே நடிக்கணும்னு ஆசை. ஆனால், அந்த வாய்ப்பு அவங்களுக்குக் கிடைக்கலை. அதனால், என்னை எப்படியாவது நடிகையா பார்க்கணும்னு நினைச்சாங்க. டான்ஸ் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. அந்த சமயத்தில், 'வெயில்' படத்துக்கு ஆடிஷன் நடக்குதுனு என்னோடு டான்ஸ் கிளாஸ் வந்த ஒரு ஆன்ட்டி கூட்டிட்டுப் போனாங்க. அதில் செலக்ட் ஆனேன். இப்படிதான் என்னுடைய என்ட்ரி ஆரம்பிச்சது.'' 

“வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்குள் வந்தது ஏன்?” 

“வெள்ளித்திரையில் 'செய்', 'என் கண்மணி பிரியா' என இரண்டுப் படங்களில் சப்போர்ட்டிங் ரோல் பண்ணினேன். அதற்கப்புறம் பெரிய வாய்ப்புகள் இல்லை. சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சதும் ஓகே சொல்லிட்டேன்.''

“ 'யாரடி நீ மோகினி' சீரியலில் பேய் வேடத்தில் நடிக்கும் அனுபவம் பற்றி...” 

“நான் அந்த கேரக்டரை ரொம்ப என்ஜாய் பண்ணி பண்றேன். நேரடியா டயலாக் பேசுறது ஈஸி. ஆனா, முகத்தில் உணர்வுகளைக் காண்பித்து பயமுறுத்தறது ரொம்ப சவாலான விஷயம். நான் அந்த ரோல்ல நடிக்கும்போது, மத்தவங்க என் நடிப்பை எப்படிப் பார்க்கணும்னு மட்டும்தான் மனசுல நினைச்சுக்கிட்டு நடிப்பேன்.'' 

“அந்த சீரியலை உங்களுக்காகவே குழந்தைங்க பார்க்கிறாங்களாமே?'' 

“ஆமாங்க... (சிரிக்கிறார்) வெளியில் என்னை எங்கே பார்த்தாலும் குழந்தைங்க 'ஏன் ஆன்ட்டி நேத்து நீங்க வரலை. தினமும் ஒரு தடவையாவது வந்துட்டு போங்க'னு சொல்றாங்க. குழந்தைங்களுக்காக தினசரி ஒரு சீனிலாவது வாங்க மேடம்னு பெற்றோரும் ரெக்வஸ்ட் பண்றது செம ஜாலியா இருக்கு.'' 

“பேயா நிறைய ஸ்டண்ட்கூட பண்றீங்களே பயமா இல்லியா?'' 

“அதெல்லாம் அசால்ட்டா பண்ணிடுவேன். திடீர்னு மொட்டை மாடி சுவத்தில் நிற்கச் சொல்வாங்க. அதையெல்லாம் விரும்பி செய்யறதால் ஸ்டண்ட் எதுவுமே பெரிய விஷயமா தெரியலை.'' 

“ 'அபூர்வ ராகங்கள்' சீரியல் நெகட்டிவ் ரோல், 'யாரடி நீ மோகினி' பாசமான பேய்... இதில் எது உங்களுடைய உண்மையான கேரக்டர்?” 

“ரெண்டுமே கிடையாது. பொதுவாக நானா யார்கிட்டேயும் அதிகமா பேச மாட்டேன். ஆனால், நல்லா பழகிட்டா பேசிட்டே இருப்பேன். எனக்கு ரொம்ப கோபம் வரும். அதைக் குறைக்சுக்கறதுக்காகவே பெரும்பாலும் பேசறதைத் தவிர்த்து, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்துடுவேன்.” 

“உங்க தங்கச்சி உங்களுக்கு அண்ணியா நடிக்கிறாங்களாமே..?” 

“ரெண்டாவது முறையா என் தங்கச்சியோடு சேர்ந்து நடிக்கிறேன். ஒரு சீரியல்ல நான் அவளுக்கு அண்ணியா நடிச்சேன். ‘அபூர்வ ராகங்கள்’ சீரியல்ல அவள் எனக்கு அண்ணி. நாங்க ரெண்டுப் பேரும் அக்கா, தங்கச்சியா நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை இருக்கு. நடக்குதானு பார்ப்போம்.” 

“உங்க எதிர்கால திட்டம் என்ன?” 

“இப்போதைக்கு நிறைய சீரியல்ஸ்ல  நடிக்கணும். வெள்ளித்திரையில் பேசப்படும் கதாபாத்திரம் கிடைச்சா நிச்சயம் நடிப்பேன்.”