Published:Updated:

அரக்கர்களை அழிக்க கடந்த காலத்திற்குள் குதிக்கும் சிறுவன்! #MissPeregrinesHomeForPeculiarChildren

அரக்கர்களை அழிக்க கடந்த காலத்திற்குள் குதிக்கும் சிறுவன்! #MissPeregrinesHomeForPeculiarChildren
அரக்கர்களை அழிக்க கடந்த காலத்திற்குள் குதிக்கும் சிறுவன்! #MissPeregrinesHomeForPeculiarChildren

‘மிக சுவாரஸ்யமான திரைப்படம் இது காணத்தவறாதீர்கள்’ என்ற வாக்கியத்துடன் ஒரு திரைப்பட விமர்சனத்தை ஆரம்பித்தால் அது அநியாயமா? எனில் அந்தப் பழியை ஏற்றுக் கொண்டு இந்த விமர்சனத்தை இப்படியாகத் துவங்குகிறேன். ‘மிக சுவாரஸ்யமான திரைப்படம் Miss Peregrines Home for Peculiar Children காணத்தவறாதீர்கள்’.

அப்படியென்ன சுவாரஸ்யம்?

Miss Peregrine's Home for Peculiar Children  திரைப்படத்தில் வரும் மாயாஜாலக் காட்சிகள்தான் அதிசுவாரஸ்யம்.  ஒரு பெரும் படையே இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் கிராபிக்ஸ் உன்னதங்கள், ஆர்வம் தூண்டும்  திரைக்கதை. வியக்க வைக்கும் கதாபாத்திரங்கள், கற்பனைகள் என்று பல விஷயங்களைச் சொல்லலாம். 

இந்த திரைப்படத்திற்காக ஆர்ட் டிபார்ட்மெண்ட் பல நாள்கள் ஓவர்டைம் வேலை செய்திருப்பார்கள் போல. அந்தளவிற்கு மிக விசித்திரமான பொருட்களை, சூழல்களை உருவாக்கித் தங்களின் கடினமான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். 

Ransom Riggs என்பவர் அமெரிக்க எழுத்தாளர் மற்றும் இயக்குநர். பழைய புகைப்படங்களைச் சேகரிக்கும் பழக்கமுள்ள இவர், அந்தப் புகைப்படங்களில் இருந்த பிம்பங்களை வைத்து ஒரு நாவல் எழுதினார். அதையொட்டியே இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

படத்தின் கதை என்ன?

தன் தாத்தாவிடம் விசித்திரமான கதைகளைத் தினமும் கேட்டு வளர்பவன் சிறுவன் ஜாக். அசாதாரணமான சக்தி படைத்தவர்கள், அரக்கர்களைக் கொன்றழிக்கும் கதைகள் அவை.  தாத்தாவுக்கும் பேரனனுக்கும் இடையே ஆழமான அன்பும் புரிதலும் உண்டு. 

ஒரு நாள், தன் தாத்தாவைப் பார்க்க சென்று கொண்டிருக்கிறான் ஜாக். தொலைபேசியில் அவரை அழைக்கிறான். ‘இங்கு வந்து விடாதே.. ஆபத்து’ என்று பதறுகிறார் தாத்தா. ‘என்ன ஆயிற்றோ..’ என்று விரைந்துசென்று பார்க்கிறான். செல்லும் வழியில் விசித்திரமான உருவம் கொண்ட ஒருவன், ஜாக்கை முறைத்துப் பார்த்துக் கொண்டே செல்கிறான். 

வீட்டிற்குச் சென்று பார்த்தால், கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் தாத்தா அசைவின்றி கீழே கிடக்கிறார். ஜாக் அழுது கொண்டே எமர்ஜென்சி எண்ணை அழைக்கிறான். சலனமின்றி விழுந்து கிடந்தார் என்றா சொன்னேன்.. இல்லை.. ஸ்விட்ச் போட்டது சட்டென்று விழித்துப் பார்க்கும் தாத்தா, தான் சொன்ன கதைகளில் உள்ள இடத்தையும் கடந்த வருடத்தில் உள்ள ஒரு நாளையும் குறிப்பிட்டு ‘உடனே அங்கே போ’ என்று சொல்லி விட்டு இறந்து விடுகிறார். 

அவனுக்குப் பின்னால் பிரமாண்டமான அரக்க உருவம் ஒன்று தோன்றுகிறது. தாத்தா சொன்ன விவரங்களின் மர்மம் என்ன? அது என்ன இடம்? அங்கே யார் இருக்கிறார்கள்? ஜாக் ஏன் அங்கே செல்ல வேண்டும்?

இதற்கான விடைகள்தான் சுவாரஸ்யமான காட்சிகளாக விரிகின்றன.

தாத்தா குறிப்பிட்ட வீட்டில், அசாதாரணமான சக்தி கொண்ட சிறுவர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறுவன் வாயைத் திறந்தால் பூச்சிகளாக வெளியே வரும். ஒரு சிறுமிக்கு பற்கள் தலையின் பின்னால்தான் இருக்கின்றன. இன்னொரு சிறுவனால் தன் கனவுகளை அப்படியே திரைப்படமாக ஒளிபரப்ப முடியும். நம்மால் காண முடியாத படி அருவமாக திரிகிறான் ஒருவன். 

எம்மா என்கிற இளம்பெண்ணால் தன் வாயால் காற்றை ஊதி, கடலையே காலியாக்க முடியும். இப்படி விநோதமான சக்திகள் கொண்ட சிறுவர்களின் குழு அது.  இவர்களுக்கு தலைவி - Miss Peregrine.  தன்னிடமுள்ள கடிகாரத்தைப் பயன்படுத்துவதின் மூலம் காலத்தையே முன்னும் பின்னுமாக இவளால் நகர்த்த முடியும். 

1943-ம் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் உறைந்து போன இவர்கள், அதே நாளிலேயே வாழ்கிறார்கள். எனவே ஒருவருக்குமே வயது கூடவோ குறையவோ செய்யாது. விபரீதமான பரிசோதனையில் ஈடுபடும் சில அரக்க ஆசாமிகளால் அவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. எனவே யாருக்கும் தெரியாத ஒரு மறைவிடத்தில் தங்கி, காலத்தை உறையச் செய்து வாழ்கிறார்கள். 2016-ல் இருக்கும் ஜாக் அவர்களைச் சென்று சந்திக்க வேண்டும் என்பதுதான் தாத்தாவின் கோரிக்கை. 

எனவே, அவர்களைத் தேடி செல்கிறான் ஜாக். அரக்க உருவங்களை ஜாக்கால் மட்டுமே பார்க்க முடியும்.. அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை பல்வேறு விதங்களில் ஜாக் முறியடிக்கிறான். சிறுவர்களின் அசாதாரண சக்திகள் இதற்கு உதவுகின்றன. மாயாஜாலங்களும் டைம்டிராவல் சுவாரஸ்யமும் கலந்த இந்தத் திரைக்கதை, தொடக்கக் காட்சி முதற்கொண்டு இறுதி வரை பரபரவென்று நகர்கிறது. 

இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளும் அதிலுள்ள அரசியலும் மிகப் பொருத்தமாக இந்தக் கதையில் பொருத்தப்பட்டுள்ளன. 

**
தன்னுடைய கடிகாரத்தின் மூலம் காலத்தை நகர்த்தி, போர் விமானங்கள் வெடிகுண்டுகளைப் போடும் சமயத்தில் உறையச் செய்து பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் விளையாட்டை Miss Peregrine செய்து காட்டும் காட்சி அற்புதம். காற்றை ஊதி கடலினுள் தனக்கான ரகசிய இடத்தை ஏற்பாடு செய்திருக்கும் எம்மாவின் சாகசம் பிரமிக்க வைக்கிறது. 

அசாதாரணமான சக்தி கொண்ட சிறுவர்களின் கண்களைப் பறித்து தின்றால்தான் பரிசோதனைக்காரர்களின் உருவம் திரும்பும் என்பதால் கண்களுக்காக அவர்கள் நிகழ்த்தும் வேட்டையும் அதிலிருந்து சிறுவர்கள் தப்பிக்கும் காட்சிகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

Mr. Barron என்கிற மெயின் வில்லனாக சாமுவேல் ஜாக்சன் அற்புதமாக நடித்துள்ளார். முதல் பாதியில் இவருக்கு அதிக வேலையில்லையென்றாலும் பிற்பாதியில் இவர் நிகழ்த்தும் அட்டூழியங்கள் ரகளை. சிறுவர்களைக் காப்பாற்றும் விடுதியின் தலைவியாக எவா க்ரீன் அற்புதமாக நடித்துள்ளார். வேறு வழியில்லாத சூழலில் தன்னையே தியாகம் செய்து கொள்வது உருக்கம். 

இத்தனை ரணகளத்திலும் கிளுகிளுப்பாக, ஜாக்கிற்கும் எம்மாவிற்கும் உருவாகும் காதலும், கால வித்தியாசத்தால் அவர்கள் இணைய முடியாத சோகமும் நெகிழ வைக்கின்றன. இறந்து போன தன் தாத்தாவிடம், கடந்த காலத்திற்குள் செல்லும் ஜாக் பேசுவது சுவாரஸ்யமான காட்சி.

முன்பே சொன்னது போல் நாவலில் விவரிக்கப்பட்ட கற்பனையை கிராபிக்ஸ் காட்சிகளாக திரையில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். பேட்மேன் வரிசைப்படங்கள் உள்ளிட்டு சிறுவர்களுக்கான பல சாகசத் திரைப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்கிய டிம் பர்ட்டன் Miss Peregrine's Home for Peculiar Children திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  அற்புதமான டார்க் ஃபேண்டஸி திரைப்படம் இது.

முதல் வரியை மீண்டும் படியுங்கள்.