Published:Updated:

'காளி’ முதல் 'கபாலி’ வரை... ரஜினி கட்டமைத்த காதல் பிம்பம்! #42YearsOfRajinism

இளம்பரிதி கல்யாணகுமார்
'காளி’ முதல் 'கபாலி’ வரை... ரஜினி கட்டமைத்த காதல் பிம்பம்! #42YearsOfRajinism
'காளி’ முதல் 'கபாலி’ வரை... ரஜினி கட்டமைத்த காதல் பிம்பம்! #42YearsOfRajinism

தமிழ் சினிமாவின் எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் என்பது, சினிமா இலக்கணத்தின் முதல் அத்தியாயம். எம்.ஜி.ஆர் `புரட்சித்தலைவர்'  என்றும்  சிவாஜி கணேசன் `நடிகர் திலகம்' என்றும் தங்கள் சாம்ராஜ்ஜியங்களை விரிவுசெய்து வைத்திருந்தார்கள். இந்தச் சாம்ராஜ்ஜியங்களின் நடுவே  உடல் தோற்றத்தாலும் மொழியாலும் ஜெமினி கணேசன், `காதல் மன்ன'னாக `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' எனப் பாடிக்கொண்டிருந்தார். காதல் காட்சிகளில் தங்களை மிகவும் இலகுவாகவும், சாந்தமாகவும், குழந்தைத்தனமான முகபாவனையுடன் காட்டிக்கொள்பவர்களே பின்னாளில் ஜெமினி கணேசனாக வலம்வந்தார்கள். தமிழ் சினிமாவில் காதல் மன்னன், காதல் இளவரசன் தொடங்கி சாக்லேட் பாய், லவ்வர் பாய் என அழைக்கப்படும் அனைத்து ஹீரோக்களுக்குமே அவர்களது நடிப்புத்திறனைவிட, காதல் காட்சியில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்  தன்மையைவிட அவர்களது புறத்தோற்றம்தான் முதன்மையாகக் கருதப்பட்டது; கருதப்படுகிறது. 

எம்.ஜி.ஆர் - சிவாஜி என்பது, மெதுவாக ரஜினி - கமல் என மாறியது. `கமல்தான் காதல் மன்னன். ரஜினிக்கெல்லாம் ரொமான்ஸ் பொருந்தாது, மாஸ்தான் லாயக்கு' என்ற குரல்கள், இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. எந்த ஒரு நடிகருக்கும் அவர்களது படங்களை வைத்தே ஒரு நிறம் நிர்ணயிக்கப்படுகிறது. கமலுக்கு `சகலகலா வல்லவ'னும் ரஜினிக்கு `முள்ளும் மலரும்' சாத்தியமானது, அந்த நிறங்களின் மீது பூசப்பட்ட வெள்ளைப்பூச்சு. தினமும் அம்மா சமைத்துத் தரும்போது குறை சொல்லாது ருசித்துச் சாப்பிடுகிறோம். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத சமயங்களில் சமைக்கும் அப்பாவின் சமையலையும் ரசித்து ருசித்து உண்ணுகிறோம். சில நாள் அம்மாவைவிட அப்பா நன்றாகவே சமைத்திருக்கலாம். இருவருமே நன்றாகவே சமைப்பவர்கள்தான். ரஜினி - கமல் ஒப்பீட்டில் அம்மா கமலாகவும் அப்பா ரஜினியாகவும் இப்படியாகத்தான் நியாயம் சேர்க்கப்படுகிறது. இருவருமே தங்களுக்கான பாதைகளை வடிவமைத்துக்கொண்டார்கள். 

`அரங்கேற்றம்', `சொல்லத்தான் நினைக்கிறேன்', `அபூர்வ ராகங்கள்' என தனது வரலாற்றின் ஆரம்பப் பக்கங்களை ஒரு மிட்டாய் பையனாகவே எழுதிவைத்திருந்தார் கமல்ஹாசன். அதனாலோ என்னவோ, அவருக்கான ஒரு சிக்னேச்சர் ரொமான்ஸிலிருந்து தொடங்கியது.  ஆனால், ரஜினிகாந்தின் தொடக்கமும் ஆரம்பகாலத் தோற்றமும் அவர் நம்பியாருக்கும் அசோகனுக்கும்  மாற்றாக  இருக்குமோ எனக் கருதவைத்தது. உடலில் நிற்காத கோட் சூட், சவரம் செய்யாத முகம், எந்தப் பக்கமும் வார முடியாத கோர முடி என சினிமாவின் ஒட்டுமொத்த இலக்கண மீறலாக அடியெடுத்து வைத்த அவருக்கு எந்த ஒரு பாசிட்டிவ் இமேஜும் எளிதில் கிடைத்துவிடவில்லை. அப்படி இமேஜ் எதுவும் கிடைக்காத ரஜினி, தனக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தனக்கு சுலபமாகக் கைவரும் கதாபாத்திரங்களில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். அது அவரை ஒரு முரடன், ஒரு காட்டுப்பய  என்ற பிம்பத்தை அனைவரிடத்திலும் முன்னிறுத்தியது. ``நான் என் வழியை மாத்திக்கிட்டேன். எனக்கு வர்றதைச் செஞ்சேன்" என்று `என் வழி தனி வழி' என்று அன்றே வசனத்தை நடைமுறைப்படுத்திவிட்டார்.   

தனது பாதையை மாற்றிக்கொள்ளாது, அவருக்கான அடிகளைப் பார்த்துப் பார்த்துதான் எடுத்துவைத்தார். காலம் காலமாகச்  சொல்லப்படும் ரொமான்டிக் ஃப்ரேம்களில்  அவரைப் பொருத்திப்பார்க்க அன்றைய சினிமா வர்த்தகமும் தயாராக இல்லை. தனக்கான ஸ்டைல் பீடத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில்,  அவரை வைத்து செய்யப்பட்ட சோதனை முயற்சிகளான `முள்ளும் மலரும்', `ஆறிலிருந்து அறுபது வரை' இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைத் தந்தன.  

`முள்ளும் மலரும்' படத்தில் பரிசலில் ஊர் பெண்கள் காளியைக்(ரஜினி) கடந்து செல்லும் காட்சியில் ``நீங்க எல்லாம் என்கிட்ட வந்து மாட்டிருக்கணும்டி, உதச்சேன்னா'' என்று தனது வசனத்தை ரஜினி சொல்லி முடிக்கும் வரை அந்தப் பெண்கள் ரஜினியை ஒரு கிறக்கத்துடன்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதே படத்தில் முதல் இரவு முடிந்து மறுநாள் காலையில் உணவு அருந்தும்போது ரஜினிக்கும் `படாபட்' ஜெயலட்சுமிக்கும் நடக்கும் சம்பாஷணைகளில் அத்தனை அழகியல். ``சும்மா சொல்லக் கூடாது, அழகாத்தான்டி இருக்க" என்று சொல்லும்போதும் சரி, கழுத்தில் இருக்கும் காயங்களைச் சுட்டிக்காட்டி ``என்னடி இது?'' என்று குறும்பாகக் கேட்கும்போதும் சரி, ரஜினியின் மற்றொரு முகம் வெளிவரும். 

இதன் பிறகு காதலைத் தூக்கிச் சுமக்கும் ஜனரஞ்சகமான ஒரு கதாபாத்திரத்தை ரஜினிக்கு `ஜானி' திரைப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் கொடுத்து அழகு பார்த்தார். மகேந்திரன் - ரஜினி கூட்டணியில் `முள்ளும் மலரும்', `ஜானி', `கை கொடுக்கும் கை' என எல்லாமே பொக்கிஷங்கள். 

`ஜானி' திரைப்படத்தில் ஸ்ரீதேவி ரஜினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் காட்சி. ரஜினி ஆரம்பத்தில் தனது பின்னணியை நினைத்து, காதலை ஏற்கத் தயங்குவார். கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நடந்த பிறகு, அருகில் வந்து திருமணம் செய்வதாக ஒப்புக்கொள்வதாகக் காட்சி நகரும். அந்தக் கட்சியின் இறுதியில் ``என்ன பத்தி அது இதுன்னு ஏதேதோ தப்பா நினைச்சுட்டு, ஏன் அப்படிலாம் பேசிட்டீங்க?" என்று ரஜினி கேட்டதும், ஸ்ரீதேவி குழந்தைத்தனமாக ``நான் அப்படித்தான் பேசுவேன்" என்பார். ``ஏன் ஏன் ஏன்?" என்று கேட்கும் ரஜினியின் பக்கம் ஸ்ரீதேவி திரும்பியதும்  இருவரும் சிரிக்கத் தொடங்குவார்கள். பின்னிருந்து படத்தின் ஜீவனான பியானோ ஒலிக்கத் தொடங்கும்.  ஒரு காதல் மலர்வதின் அதன் முதல் படியை இருவரும் சிரித்துக்கொள்வதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதில் ரஜினி தனது முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கும் சமயம் அந்தக் காதலுக்கான கதவுகள் திறந்துகொண்டிருக்கும். அந்தப் புன்னகையும் இசையும் அழகிய இலக்கண மீறல். 

இந்த வெற்றிகளுக்குப் பிறகு அவரை ஒரு ஜாலி பாயாகக் களமிறக்கிய திரைப்படம் `தில்லு முல்லு'. `ராகங்கள் பதினாறு...' பாடல் முழுவதும் அவர் காட்டும் முக பாவனைகளும் உடல்மொழிகளும்  இன்று வரை பிரமிக்கவைக்கின்றன. ``இந்திரனும் நான்தான் சந்திரனும் நான்தான்'' எனத் தெரியப்படுத்தும் காட்சியில் ``என்ன.. அடிச்சு ஓஞ்சுட்டியா... மீசை வெச்ச ஆம்பளடி. அடிச்ச கையாலேயே மீசையை எடு. எட்றீ" என்று அதட்டியதும் ஒட்டு மீசையைப் பிய்த்து எடுப்பார் மாதவி. அப்போது புருவத்தை உயர்த்தும் ரஜினியின்  குறும்புப் பார்வையும் சரி, கட்டியணைக்க அழைத்து மாதவி ஓடிவரும்போது ஒதுங்கிக்கொள்ளும் அழகும் சரி, ரஜினியின் காதல் ஸ்டைல் அவை. அதையேதான் `கபாலி' படத்தில் படுக்கைவிரிப்பை ராதிகா ஆப்தே சரி செய்ததும் அதைச் சிரித்துக்கொண்டே களைத்துவிடுவார்.

இப்படி, தொடர்ந்து தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடனான ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்களை அத்தனை அழகாகவே வடிவமைத்துக்கொண்டார். இன்று வரையில் ஒரு காதலன் தனது காதலியை எண்ணி ஒரு சோலோ பாடலில் மெய்மறக்கச் செய்ய முடியுமென்றால், அது `காதலின் தீபமொன்று...' பாடலாகத்தான் இருக்க முடியும். கைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தலையை சிலுப்பியவாறே சவுக்கு மரக் காட்டில் காதல் விதைக்கும் அந்தப் பாடலில்` காதல் வாழ்க' என்று சொல்லும் ரஜினியில், அவர் கட்டமைக்க நினைத்த காதல் பிம்பம் வாழத் தொடங்கியிருக்கும். 

`கை கொடுக்கும் கை' திரைப்படத்தில் `தாழம்பூவே வாசம் வீசு...' பாடலில் கண்பார்வையற்ற ரேவதியை, பாடல் முழுவதும் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக்கொண்டே நடந்து வருவார். அந்த அரவணைப்பில் தெரிவதுதான் காதல். காதலை, வேறு எப்படி வெளிப்படுத்திவிட முடியும்?

`தளபதி' படத்தில் `போ பண்ணிக்கோ, யார் வேணாம்னு சொன்னா, போ" என்று துரத்தும்போது ஒரு காதலின் முறிவையும் தன்னால் காட்ட முடியும்; கண்ணீரில் தேக்கிவைக்க முடியும் என்பதை நிரூபித்திருப்பார். 

`மாய நதி' பாடலில் `வாஞ்சை தரவா...' என்று கைகளைப் பிடித்துக்கொள்வதிலும் ஒரு நொடி நெஞ்சம் கசிந்திருக்கும்.  குமுதவல்லி இல்லாத வீட்டில் அவர் இருப்பது போன்ற பிரமைகளில் சுற்றி வரும்போது ஒரு சிரிப்பு சிரித்து அவளைத் தேடுவதுபோல தொடங்கி இறுதியில் ஓய்ந்து அமரும் வரை அவர் காட்டும் காதல் ஏக்கங்கள் காதலின் தீபம் ஏற்றும் கணங்கள்.

ரஜினி எனும் நடிகரை வியாபாரப் பிம்பமாகத் தமிழ் சினிமா கடைசி வரை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுருக்கி வைத்துக்கொண்டிருக்கிறது எனச் சொன்னால், அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதில் அவருக்கும் பங்கு இருக்கிறது. விமர்சனங்கள் இருந்தாலும் `சூப்பர் ஸ்டார்' ரஜினியைவிட `நடிகர்' ரஜினியை ரசிப்பவர்களும் விரும்புவர்களும் ரசிகர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

ரஜினி முதன்முதலில் நடித்த 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் வெளியாகி, இன்றோடு 42 ஆண்டுகள் ஆகின்றன.