Published:Updated:

தரமணி பார்க்கலாமா... கூடாதா...? ஒரு பெண் மனம் சொல்வதைக் கேளுங்கள்!

தரமணி பார்க்கலாமா... கூடாதா...? ஒரு பெண் மனம் சொல்வதைக் கேளுங்கள்!
தரமணி பார்க்கலாமா... கூடாதா...? ஒரு பெண் மனம் சொல்வதைக் கேளுங்கள்!

தரமணி பார்க்கலாமா... கூடாதா...? ஒரு பெண் மனம் சொல்வதைக் கேளுங்கள்!

ஆண், பெண் உறவுச்சிக்கல் என்பது, ராம் சொல்வதுபோல ஆதாம், ஏவாள் காலத்து ஸ்கிரிப்ட். அவர் 'தரமணி'யில் பேசியிருப்பது அதுபற்றி மட்டுமல்ல. அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம், தேர்வு. அதில் தவறுதல் மனித இயல்பு. ஆனால் ஆண்களின் தவறுகளையும், பெண்களின் தவறுகளையும் இந்த உலகம் ஒரே விதத்தில் அணுகுகிறதா, ஏற்கிறதா, மன்னிக்கிறதா? காட்சிகளின் வழி நெடுக கண்ணாடி வைத்து, நம்மை நாமே கேட்கவைக்கிறார் இயக்குநர். 

தமிழ் திரைப்படச் சூழல் என்பது, பெண் மையக் கதைகள் அரிதாக வரும் தளம். அதிலும் பெண்களின் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசும் திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடக் கிடைக்காதவை. 'தரமணி'... பெண்ணைச் சூழ்ந்துள்ள கண்ணாடிக் கூரைகளை உடைத்துப் பேசுகிறது. 

ஆண்ட்ரியா(ஆல்தியா ஜோசப்), ஓரினச் சேர்க்கையாளரான தன் கணவரைப் புரிந்துகொண்டு, அவருக்குக் குடும்பம் என்ற சிறையில் இருந்து விடுதலை கொடுத்து, தன் மகனுடன் வசித்து வரும் சிங்கிள் மதர். ஐடி நிறுவனத்தில் 80,000 சம்பளம் வாங்கும் ஹெச்.ஆர் பணியாளர். மினி ஸ்கர்டுடன் மழையில் நனைந்து கிளாமராக அறிமுகமாகிறார். 'எங்கம்மாவை 'பிட்ச்'னு சொன்னாங்க' என்று தன் மகன் எழுதிய கடிதத்தைப் படித்த பின் அவர் உழன்றழும்போது, அந்தக் கவர்ச்சி பிம்பம் எல்லாம் வடிந்துபோய், பிரச்னைகள் அழுத்தும் ஒரு பெண்ணாக அவரை உணரமுடிகிறபோது, அந்தக் கதாபாத்திரம் ஜெயித்துவிடுகிறது. 

ஜீன்ஸுக்கு லாங் டாப் போட்டு, துப்பட்டாவை பின் செய்யும் ஐடி ஊழியர் அஞ்சலியும் வசந்த்ரவியும்(பிரபு) காதலிக்கிறார்கள். வெளிநாட்டுக்கு 'ஆன்சைட்' செல்லும் அஞ்சலி, அதற்காக வசந்திடம் மூன்று லட்சம் கேட்க, திருடிக்கொண்டு வந்து அந்தப் பணத்தை காதலிக்குத் தந்து விமானம் ஏற்றிவிடுகிறார் வசந்த். வெளிநாட்டு வேலையில் ஸ்ட்ராப் டாப், ஷார்ட்ஸ் என மாறும் அஞ்சலி, 'இங்க ஒருத்தர் என்னை லவ் பண்றார், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றார்' என்று சொல்லி வசந்த்துக்குக் காதல் தோல்வியும், தாடியும் தருகிறார். 

ஆண்ட்ரியா மேல் சந்தேகபுத்தி கொண்டவராக வசந்த் பின்னர் மாறப்போகும் திரைக்கதைக்கு, இந்த க்ளிஷே ஃப்ளேஷ்பேக்கை இயக்குநர் எழுதியது ஏமாற்றம். என்றாலும், ஓர் ஆணுக்கு சந்தேகபுத்தி தலைதூக்க அப்படி வலிமையான, புதுமையான ஃப்ளேஷ்பேக் எதுவும் தேவையில்லைதான். சொல்லப்போனால், ஃப்ளேஷ்பேக்கே தேவையில்லை, அது பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் ஆறாம் அறிவில் ஓர் அங்கம். 

வசந்தும், ஆண்ட்ரியாவும் வழிப்போக்கர்களாக அறிமுகமாகி, ஒருவர் கதையை ஒருவர் அறிந்த பின்னர், வாழ்க்கையில் இணைகிறார்கள். ஆனால், சில மாதங்களில் வசந்தின் சந்தேக புத்தி செழிப்பாக வளர்கிறது. 'ஃபேஸ்புக்ல உனக்கு எப்படி 2248  ஃப்ரெண்ட்ஸ்?' என்று ஆரம்பிக்கிறார்.  'யூ லுக் கார்ஜியஸ்' என்று கமென்ட் பதிவிட்ட ஆணைப் பற்றி விசாரிக்கிறார். ஆண்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு சக ஊழியர் பரிசளித்த உடையில் பிரச்னையை ஆணி அடித்து, 'உன் சைஸ் அவனுக்கு எப்படித் தெரியும்?' என்று சைக்கோ முகம் காட்டுகிறார். பாஸ் ஆண்ட்ரியாவுக்கு அனுப்பிய 'பெட் ரெக்வஸ்ட்' எம்.எம்.எஸ்-ஐ கீழடியில் கிடைத்த முக்கியத்  துருப்பெனப் பற்றிக்கொண்டு, ஆண்ட்ரியாவின் அம்மா அவரைச் சுட்டும், சுடும் அதே வார்த்தையால் சுடுகிறார்... 'யூ ஆர் எ பிட்ச்'!

வசந்த் என்பது, வசந்த் மட்டும்தானா? சிவா, முகுந்த், ஹரீஷ், கந்தசாமி என லட்சம் பெயர்களுடன் வாழும் ஆண்களின் ஒற்றை பிம்பம். தான் நேசிக்கும் பெண் மீது அன்பைவிட உரிமையை அதிகம் செலுத்தி, 'பொஸசிவ்னெஸ்' என்ற பெயரில் சித்ரவதை செய்ய ஆரம்பித்து, இறுதியில் சந்தேக குணத்தை வெளிப்படையாகக் காட்டி, அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதைத் தன் வெற்றியாக முகரும் பாலினக்காரர்களின் பிரதிநிதி. குறிப்பாக, தனித்து வாழும் பெண்கள் என்றால் ஆண்களால் பயன்படுத்தப்பட்டவர்களாக, அல்லது அவர்களை அனுமதிப்பவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகிற இந்த மூடநம்பிக்கைக்காரர்களுக்குத் தணல் பதிலாக நிற்கிறார், லவ்வபிள் ஆண்ட்ரியா.   

கேரக்டர் அசாஸினேஷன் செய்தால் கண்கள் சிவக்க பக்கம் பக்கமாக கற்பு டயலாக் பேசும் ஹீரோயின் வகையல்ல ஆண்ட்ரியா. அவர் 'மாடர்ன் டேஸ்' பெண்களின் பிரதிநிதி. அந்தப் பெண்களுக்கு அது மட்டுமேயல்ல பிரச்னை. தன் வேலை, வீடு, பயணம், பொருளாதாரம் என வரிசை கட்டும் பிரச்னைகளில் ஒன்றாக, அல்லது பிரச்னைகளுக்கு மத்தியில் தங்களைத் துரத்தும் 'பெட் ரெக்வஸ்ட்'களையும் கடக்க வேண்டிய சூழலில் உள்ளவர்கள். ஹீரோயிஸ துணையை நாடாமல், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள். 'வழக்கம்போல பாஸ் அனுப்புற மெசேஜை அவன் படிச்சிட்டான்' என்று சொல்லும் ஆண்ட்ரியா, அப்படித்தான் பல வருடங்களாக அதைக் கடந்து வந்திருக்கிறார். 

'ஐ லவ் யூ' என்று வசந்த் சொல்லும் நொடியில் முகம் மாறி, காபி கோப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஆண்ட்ரியா அவரைத் துரத்தும் காட்சியில், ஓர் ஆண் இணையை நாடாத அவர் வாழ்வைக் கூப்பாடில்லாமல் கூர்மையாகச் சொல்லியிருக்கிறார் ராம். 'யூ லுக் ஸ்டைலிஷ், ஸ்கர்ட், யூ ஸ்மோக்... இதெல்லாம் ஒரு ட்ரைதானே?' என்று வழியும் பாஸை போல்டாக டீல் செய்கிறார். வேலையில் இருந்து நீக்கிவிட்டு, 'என்ன ஹெல்ப்னாலும் செய்றேன்... என்ன கொஞ்சம் ஃபெளெக்‌ஸிபிளா இருக்கணும்' என்று சொல்லும் மேலதிகாரியை துச்சமெனக் கடக்கிறார்., 'ரேட் எவ்வளவு?' என்று போதையில் கூவும் ஆண்களைச் செருப்பால் அடிக்கிறார். இவர்கள் எல்லாம் அவருக்குப் பொருட்டேயல்ல. அவரின் கண்ணீருக்குக் காரணம், அன்பு மட்டுமே. 'பார்க்கிறவங்க எல்லாம் என்கூட படுக்கணும்னு நினைச்சப்போ, நீ மட்டும்தான் என்னோட வாழணும்னு நினைச்ச' என்று அந்த அன்பை அவர் தேர்ந்தெடுத்ததே காரணம். ஆம்... உலகின் ஆகச் சிறந்த வன்முறை அல்லவா அது?!  

ஆண்ட்ரியா புகைப்பிடிக்கிறார். மது அருந்துகிறார். தனக்குப் பிடித்த, வசதியான மாடர்ன் உடைகளை அணிகிறார். தன் முகநூல் புகைப்படங்களுக்கான ஆண்களின் கமென்ட் குறித்து வசந்த் கேட்கும்போது, 'உன்னை யாராச்சும் அழகா இருக்கேனு சொன்னா உனக்குப் பிடிக்குமா பிடிக்காதா?' என்று கூல் பதில் தருகிறார். பார்ட்டி செல்கிறார். இந்தக் காட்சிகளை எல்லாம் தியேட்டரில் எகத்தாளமான வெடிச் சிரிப்புகளுடன் கடக்கும் பொதுபுத்திக்கு, இயக்குநர் ஆண்ட்ரியா மூலம் பிரசாரமாக அல்லாமல் நுட்பமாக உணர்த்தியிருக்கும் 'ஸோ வாட்?' கேள்வி, ஊசி. அதேவேளை, ஆண்ட்ரியா குடித்த மது பாட்டில்களை டிஸ்போஸ் செய்ய அவருடைய ஆறு வயது மகன் எடுத்துச்செல்லும் காட்சியும், 'இதெல்லாம் யாரு குடிச்சது?' என்ற கேள்விக்கு, 'எங்கப்பா' என்று சொல்லும் பதிலும், 'உங்களுக்கு மொட்டைத் தலை புரிஞ்சா மொட்டைத் தலை, முழங்கால் புரிஞ்சா முழங்கால்' ஷாட்ஸ்.  

ஆண்ட்ரியாவை விட்டு நகர்ந்து கதையில் பிற பெண்கள் பற்றிப் பேசலாம். சந்தேகப் போரால் ஆண்ட்ரியாவை விட்டு விலகும் வசந்த், தன் ஆண் ஈகோவை ப்ளே செய்யவிடுகிறார். 'நான் சாப்பிட்ட நரகலை இந்த ஊருல இருக்கிறவங்களும் சாப்பிடுறாங்கனு தெரிஞ்சுக்கிட்டா, அதுக்கப்புறம் அந்த நரகலை கொஞ்சம் ஹேப்பியா சாப்பிடலாம்ல' என்ற வசனம், ஏற்க முடியாத 'மிஸோஜினி(misogyny)' ரகம். 'நான் அடிச்சு சொல்வேன் சார்... அடிடா அவள... உதைடா அவள.... தேவையேயில்ல' என்ற நையாண்டிக்கான நேர்மை, இந்தச் சொற்களில் வலிமை இழக்கிறது. திருமணமான பெண்களிடம் அலைபேசியில் பேசி வசீகரிக்க முயற்சிக்கிறார் வசந்த். பல பெண்கள் அவரிடம் பேச்சில் படிகிறார்கள். அதிர்ச்சியான, கண்டனங்களை எதிர்கொள்ளும் திடத்துடன் அமைக்கப்பட்ட இந்தக் காட்சிப்படுத்துதலில் கவனிக்க வேண்டியது, 'வீனஸி'ன் கணவராக வரும் அழகம்பெருமாளின் வார்த்தைகள். 

பெயரால் மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்படும் 'வீனஸ்', அன்பும் அக்கறையும் கனிந்த, அழகம்பெருமாளின்  குடும்பப்பாங்கான மனைவி. 'நீங்க மட்டும் பிரஷர் மாத்திரை சாப்பிட்டியா, சுகர் மாத்திரை சாப்பிட்டியா, மங்கி குள்ள கட்டுனியா, மஃப்ளர் கட்டுனியானு அப்படீனு கேட்கிற வீனஸை ஊருல இருந்து கூட்டிட்டு வருவீங்க. நாங்க மட்டும் சென்னைப் பொண்ணு, அதுவும் கல்யாணமாகி குழந்தை இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணனுமா சார்?' என்று முன்பொரு காட்சியில் அழகம்பெருமாளிடம் கேட்பார் வசந்த். பின்னர் 'வீனஸு'ம் எதிர்பாராத விதமாக வசந்த்தின் 'அலைபேசி விக்கெட்'களில் ஒருவராகிறார். 'வீனஸ்', 'ஆல்தியா' மூலம் ஊர்க்காரப் பெண், சென்னைப் பெண் பிம்பங்களை நொறுக்குகிறார் இயக்குநர். தோற்றத்தால் பெண்ணை தராசில் நிறுக்கும் இந்த உலகத்தை, 'ப்ளீஸ் நோட்' என்கிறார். 'அப்போ ஊருப்பக்க பொண்ணுங்கன்னா, வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்குற பொண்ணுங்கன்னா அப்படித்தானா?' என்ற கோபம் அல்ல இங்கு பார்வையாளர்கள் புரிந்துகொள்ள ராம் முன்வைப்பது. அது அழகம்பெருமாளின் வசனத்தில் இருக்கிறது. 

''இந்த 23 வருஷ கல்யாண வாழ்க்கையில எனக்கும் ரெண்டு, மூணு சபலம் இருந்துச்சு. அதை நான் மறைச்சுட்டேன். ஏன்னா... நான் ஆம்பள!" 'வீனஸ்' மீது ஏற்படும் அதிர்ச்சி, அத்தனை அன்பான மனைவி அமைந்தும், 'நானும் ரெண்டு மூணு தடவை சபலப்பட்டிருக்கேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் அழகம்பெருமாளின் மீது ஏன் ஏற்படவில்லை? 'தரமணி' கேட்கும் முக்கியக் கேள்வியும், தரும் பதிலும் இது.  

அசிஸ்டன்ட் கமிஷனரின் மனைவியாக, அன்பில்லாத இல்லறத்தின் அரசியாக, 'சாப்பிட்டியானு கேட்க ஆளில்ல' என்று சொல்லும் அந்தக் கதாப்பாத்திரம், படத்தின் ஓட்டத்தை சில நிமிடங்கள் கொதிநிலைக்கு எடுத்துச்சென்று அதிர, உறைய வைக்கிறார். புத்தகங்கள் சிதறிக் கிடக்க, 'நீ இவ்வளவு புக் படிக்கும்போதே நினைச்சேன்டீ' என்ற ஆத்திரத்தில் கத்துகிறார் அவர் கணவர். வாசிப்புப் புத்தகங்கள் பறிக்கப்பட்ட வீடடைந்திருக்கும் பெண்களுக்கும், புத்தகங்கள் படிப்பதாலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்களைக் கடந்த, கடக்கும் பெண்களுக்கும் அது நிச்சயம் மற்றுமொரு காட்சியல்ல. 'அவன் என்னைவிட சூப்பரா?' என்ற கணவரின் கேள்விக்கு, 'சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்' என்று சொன்னபடியே அவர் உக்கிரமாகும் காட்சி, 'சூப்பரா?' என்று கேட்டவர்களை அறைந்திருக்கும்; கேட்கப்பட்டவர்களை ஆசுவாசப்படுத்தியிருக்கும். 

வாழ்க்கையின் எந்த வலிகளுக்கும் மருந்தாகக்கூடிய நேசத்தைத் தவறவிடும் அஞ்சலி பின்னர், 'நான் வாழ்க்கையில பார்த்த ஒரே நல்லவன், நீ மட்டும்தான்' என்கிறார். 'அவனோட படுக்கணுமா படுக்க வேண்டாமானு முடிவு பண்ண வேண்டியது நான், அவனில்ல. அதை முதல்ல புரிஞ்சுக்கோ' என்று சொல்லும் ஸ்ட்ராங்கஸ்ட் ஆண்ட்ரியா, இறுதியில் வசந்த்தை மீண்டும் ஏற்றிருக்கத்தான் வேண்டுமா என்றால்... அன்பென்ற பற்றுக்கொடியைத் தேடும், நாடும் உயிர் சுமந்த உடல்களே இங்கு அனைவருடையதும். அது பற்றக்கொடுக்குமா, நுரையீரல் சுற்றி அழுத்துமா என்பதை, வாழ்ந்து பார்த்தலில்தான் உணரக்கொடுக்கிறது காலம். அவரவர் வாழ்வு, அவரவர் முடிவு, அது தரும் விளைவு, நிறைவு!  

'தரமணி'க்கு வார்ம் வெல்கம்!

அடுத்த கட்டுரைக்கு