Published:Updated:

“Sexual Poverty... ஒரு விதமான வக்கிரத்தை உருவாக்கத்தான் செய்யும்!” - ‘தரமணி’ ராம்

“Sexual Poverty... ஒரு விதமான வக்கிரத்தை உருவாக்கத்தான் செய்யும்!” - ‘தரமணி’ ராம்
“Sexual Poverty... ஒரு விதமான வக்கிரத்தை உருவாக்கத்தான் செய்யும்!” - ‘தரமணி’ ராம்

தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வழக்கமான காதல் பாணிகளிலிருந்து சற்று விலகி, திரைக்கதையை கதைகளத்துக்கு ஏற்றவாறு தொகுக்கப்பட்ட படம்; ஒரு பெண் வாழ்வில் ஏற்படும் பாலியல் சார்ந்த அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் பொட்டில் அடித்தாற்போல் கூறிய படம்; தனிமனித வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் அரசியல் ஒளிந்திருப்பதைத் தொடர்புப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று `Talk of the Town'னாக மாறியிருக்கிறது `தரமணி' படம். அதைப் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் இயக்குநர் ராமிடம் முன்வைத்தபோது, நமக்குக் கிடைத்த புதிய கோணம்தான் இங்கு கேள்வி பதில்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

“இயக்குநர்கள், தங்களுடைய படைப்புக்கு `ஏ' சான்றிதழ் கொடுக்கக் கூடாதுனுதான் நினைப்பாங்க. ஆனா, நீங்க `ஏ' சான்றிதழ்தான் வேணும்னு கேட்டு வாங்கினதா சொல்றாங்களே. இது, படத்தை வணிக ரீதியாகத் தொடங்கி பல்வேறு கோணத்துல பாதிக்காதா?''

இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு ‘U’ சான்றிதழ் கொடுக்கத் தயாராகத்தான் இருந்தாங்க. ஆனா, அதுக்கு படத்துல சில காட்சி மாற்றங்களைக் கொண்டு வரணும். உதாரணத்துக்கு, ‘இன்று இரவு பாரதப் பிரதமர் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்’னு ஒரு வாய்ஸ் ஓவர் வரும். அந்த வரியில் `பாரதப் பிரதமர்கிற வார்த்தையைத் தூக்கிட்டு இந்திய அரசுனு மாத்தீடுங்க'னு சொன்னாங்க. பாரதப் பிரதமர்னு சொன்னா, ஒரு தனி மனிதரைச் சுட்டிக்காட்டுற மாதிரி இருக்கும். தவிர, படத்துல முதன்மைக் கதாபாத்திரமா வர்ற பெண் மது அருந்துறாங்க. ரெண்டு தடவை சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வேற இருக்கு.

எனக்குத் தெரிஞ்சு கிராமத்துல இருக்கிற பாட்டிங்க எல்லாரும் பல்லாண்டு காலமா, சுருட்டு பிடிச்சுட்டிருக்காங்க. அதை நாம ஒருபோதும் பிரச்னையா நினைக்கலை. பெண்கள் பொது வெளியில மது அருந்துறதும் சிகரெட் பிடிக்கிறதும் நமக்கெல்லாம் பிரச்னையா தோண்றதுக்குக் காரணம், அவங்க ஜீன்ஸ் பேன்ட் போடுறதுனாலகூட இருக்கலாம். இதுவே சிகரெட்டை எடுத்துட்டு சுருட்டு பிடிச்சா பிரச்னை இல்லையா?

நான் மதுரையில காலேஜ் படிச்சப்போ கிராமப்புறப் பெண்கள் சுருட்டு பிடிக்கிறதைப் பார்த்திருக்கேன். இதெல்லாம் தவறுன்னு சொல்றதை மிடில் க்ளாஸ் மக்களின் பிரச்னையாத்தான் பார்க்கிறேன். மேல்தட்டு மக்களும் கீழ்த்தட்டு மக்களும் என்ன செஞ்சாலும் பரவாயில்லைனு விட்டுடுறாங்க. ஸோ, மிடில் க்ளாஸ் மக்களின் பொது புத்திக்கு பங்கம் வராம பார்த்துகிறதுல சென்சார் போர்டு அதிக அக்கறையோடு செயல்படுதுனு சொல்லலாம்.”

“பாலியல் பற்றி சரியான புரிதல் குழந்தைகளுக்கு இல்லாததுக்குக் காரணமே அதன் அறியாமைதான். இது குழந்தைகளுக்கு மறைக்கப்படத்துக்கான காரணம் என்ன?”

“ ‘படத்துக்கு U/A சான்றிதழ் கொடுத்திருந்தா, குழந்தைகளோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கலாம். தனிக்குடும்பமா இருக்கிறப்போ, நிறையபேருக்கு குழந்தைகளை யார்கிட்ட விட்டுட்டு போய் படம் பார்க்கிறதுனு ஒரு பிரச்னை இருக்குது. அதனால நிறையபேர் ‘எப்படியாவது நீங்க U/A வாங்கியிருக்கலாமே’ன்னு சொன்னாங்க. ‘தங்கமீன்கள்’ படத்துக்கு தன் மகளோடு வந்து படம் பார்த்த அப்பா, இந்தப் படத்துக்கும் மகளோடு வந்து படம் பத்தாருன்னா எம்மேல கடுமையான கோபத்துக்கு உள்ளாகலாம். ஏன்னா, இந்தப் படம் பெண் உடல்மீது ஆண் என்னென்ன மாதிரியான பிம்பங்களை வெச்சிருக்கான்கிறதைப் பற்றி பேசுற படம். அதைப் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்கு ஒரு முதிர்ச்சி வேணும். ‘A’ படம்னு சொன்னதுக்கு அப்புறமும்கூட ‘தரமணி’ இவ்வளோ விமர்சனத்துக்குள்ளாகியிருக்கு. இதுவே வேற ஏதாவது சான்றிதழ் கொடுத்திருந்தா அவ்வளோதான். அதனாலதான் தயாரிப்பாளரோடு பேசி ‘A’ வாங்கலாம்கிற முடிவுக்கு வந்தோம்.”

“ ‘கற்றது தமிழ்’ படத்துல பிரபாகரன் கதாபாத்திரத்தின் நீட்சிதான் ‘தரமணி’யில வர்ற கதாநாயகனோட பாத்திரம்னு எடுத்துக்கலாமா?”

“ ‘கற்றது தமிழ்’ல பிரபாகரன் கதாபாத்திரம், வாழ்க்கையில ஜெயிச்சவனைப் பார்த்துப் பொறாமைப்பட்டுப் பேசுற ஒரு கதாபாத்திரம். அவனுக்கு ரேஷன் கார்டு கிடையாது; வீடு கிடையாது. அவன் அங்கேதான் வாழ்றான்கிறதுக்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது. அவனோட 24 வயசு வரைக்கும் இருந்தது ஒரேயொரு கேர்ள் ஃப்ரெண்டுதான். அவளும் ஒரேயொரு முறைதான் அவன் தோள்மேல சாஞ்சிருக்கா. பெண் உடல் மீதான அதிக அளவு பரிச்சயம் அதுமட்டும்தான். உயிரியல் அடிப்படையில் ‘Sexual Poverty’ன்றது ஒருவிதமான வக்கிரத்தை உருவாக்கத்தான் செய்யும். 

‘Touch me here, if you dare’னு ஒரு பொண்ணோட டிஷர்ட்டுல எழுதுறது, அவளோட கருத்துச் சுதந்திரத்தின்படி சரி.  ஆனா, மனநிலை பாதிப்படைந்த ஒருத்தன் அதை எப்படிப் பார்க்கிறான்? கிறதுதான் விஷயமே. அதற்கான பதிலும் அந்தப் படத்துலேயே சொல்லப்பட்டிருக்கும். ‘எங்க இஷ்டம் நாங்க எழுதுறோம். எழுதாமப் போனா மட்டும் இவங்க பார்க்காமப் போயிருவாங்களா என்ன?’னு சொல்லி அதற்கான மாற்று பதிலையும் படத்துல வெச்சிருப்போம். ‘தரமணி’ படத்துல வர்ற பிரபுநாத், ஏற்கெனவே கல்யாணமாகி குழந்தை இருக்கக்கூடிய ஒரு பெண்ணைக் காதலிக்கிற ஒருத்தன். ஆனா, அவனால ஆண்ட்ரியாவோட பாஸ், `You're single, Anglo-Indian, U smoke, Skirt, modern. ஸோ, நான் மெசேஜ் அனுப்பினதுல என்ன தப்பு இருக்கு? என்னைப் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடவேண்டியதுதானே'னு ரொம்ப சாதாரணமா கேட்கிறதைப் புரிஞ்சுக்கத் தெரியலை. அவனைப் பொறுத்தவரைக்கும் அதெல்லாம் ரொம்பத் தப்பான விஷயம்.”

“ஆண்கள், பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்போது ஏதோ ஒருவகையில் பெண்களெல்லாம் அதற்கு சரணடையுறாங்க. ஆண்ட்ரியா அத்தனை இழிவுக்குப் பிறகும் அந்தக் கதாநாயகனோடுதான் சேருறாங்க. அப்போ, இந்தப் படம் ஆணாதிக்கத்துக்கு உட்பட்ட ஒரு பெண் வெளியைத்தான் பேசுதா?”

“பத்தாவது படிச்சுட்டு கான்ஸ்டபிள் வேலை பார்க்கிறவர்தான் இந்தப் படத்துல வர்ற பர்னபாஸ் கதாபாத்திரம். அவரைப் பொறுத்தவரை வீனஸ் செஞ்சது தப்பு. ‘நானும் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். அதனால, அவ தப்பு செஞ்சா அதை நான் புரிஞ்சுக்கணும்’னு சொல்வார். அந்தக் கதாபாத்திரத்தோட புரிதலை எப்படி வெளிப்படுத்தினா நல்லா இருக்குமோ, அப்படித்தான் என்னால வெளிப்படுத்த முடியும். என்னுடைய ஐடியாலஜியை இதுல நான் புகுத்த முடியாது” என்ற இயக்குநர் ராமின் பேட்டியை மேலும் பார்த்து மகிழ்ந்திட...

இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.

அடுத்த கட்டுரைக்கு