Published:Updated:

‘சென்னையில் பிறந்து வளர்ந்தா மட்டும்தான் இந்த வித்தியாசம் தெரியும்’ - எதைச் சொல்கிறார் எஸ்.பி.ஜனநாதன்? #Chennai378

‘சென்னையில் பிறந்து வளர்ந்தா மட்டும்தான் இந்த வித்தியாசம் தெரியும்’ - எதைச் சொல்கிறார் எஸ்.பி.ஜனநாதன்? #Chennai378
‘சென்னையில் பிறந்து வளர்ந்தா மட்டும்தான் இந்த வித்தியாசம் தெரியும்’ - எதைச் சொல்கிறார் எஸ்.பி.ஜனநாதன்? #Chennai378

“ஒரு பேங்க் மேனேஜர் பையனோட பாயின்ட் ஆஃப் வியூல சென்னை ஒரு மாதிரி இருக்கும். ஸ்லம், குப்பத்துல பிறந்தவங்களோட பார்வையில வேற மாதிரி இருக்கும். சென்னைக்கு இப்படிப் பலவிதமான பார்வைகள் இருக்கு. நான் பார்க்கும் சென்னையும் அப்படித்தான்!’’ – தன் படைப்புகளில் ஆகச்சிறந்த அரசியலையும் எளிமையாகச் சொல்பவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ‘சென்னை அனுபவம்’ குறித்த அவரது உரையாடலும் அப்படித்தான் இருக்கிறது.

``சென்னை மயிலாப்பூர்ல பிறந்து வளர்ந்தேன். சாந்தோம் ஸ்கூல்ல படிச்சேன். கடற்கரைகளில்தான் அதிகமா பொழுதுபோக்கியிருக்கேன். அம்மா, பட்டாணிக் கடை வெச்சிருந்தாங்க. எங்க குடும்பத்துலேயே நான்தான் அதிகம் படிச்சவன். எஸ்.எஸ்.எல்.சி. சொல்ல வெட்கமாத்தான் இருக்கு. எல்லோரும் நினைப்பாங்க, ‘சென்னையில எல்லாம் தெரிஞ்சுக்கலாம்'னு. என் நிலைமை அப்படி இல்லை. நான் பார்த்த, வளர்ந்த சென்னை மக்கள் எல்லோரும் ரொம்ப இன்னொசன்ட். ரொம்ப உண்மையாவும் இருப்பாங்க. என்னை என் குடும்பத்தைச் சுற்றி இருந்தவங்க பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவங்கதான். பலதரப்பட்ட மக்கள்கிட்ட பழகினதுதான், நான் படிச்ச படிப்பு. உருது முஸ்லிம், சில கிறிஸ்தவப் பிரிவு மக்கள், ரொம்ப கஷ்டப்படுற தமிழ் முஸ்லிம்கள், பார்சி மக்கள், சேட்டு… இப்படி எல்லா தரப்பு மக்களோடும் பழகியிருக்கேன். இதுதான் சென்னை. வெளிமாவட்ட மக்கள், ‘ஸ்லம்’ ‘குப்பம்’ ரெண்டையும் ஒண்ணா பார்க்கிறாங்க. ஆனா, ரெண்டுமே வேற வேறனு சென்னையிலேயே பிறந்து வளர்ந்தா மட்டும்தான் தெரியும்!’’ என்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.

``நீ வா சார்…’’

``சென்னையில் இல்லாத கதாபாத்திரங்களே கிடையாது. சென்னையை மேலோட்டமா பார்த்துட்டுப் போறவங்களுக்கு, சென்னை மக்கள் கொடுக்கிற மரியாதை புரியாது. சென்னை மக்கள் மத்தவங்களை ‘நீ’, ‘வா’, ‘போ’னு பேசுறதைக் கவனிப்பாங்களே தவிர, அதுக்குப் பிறகு அவங்க கொடுக்கிற ‘சார்..’ங்கிற மரியாதையை மிஸ்பண்ணிடுவாங்க.

சென்னைக்கு வந்த கவிஞர் ஒருத்தர், ‘பாரிஸுக்குப் போகணும்’னு ஆட்டோகாரர்கிட்ட சொன்னார். ‘நீ உட்கார் சார்… போயிடலாம்’னு ஆட்டோ டிரைவர் பதில் சொன்னார். கவிஞருக்கு ‘நீ’னு கூப்பிட்டத்துல வருத்தமில்லை. அதுக்கு அடுத்த வார்த்தையிலேயே ‘சார்’னு அதிக மரியாதை சேருதேனு ஆச்சர்யமா இருந்ததாம். சென்னை மக்களோட மரியாதையைப் புரிஞ்சுக்க நாமளும் கவிஞரா இருக்கவேண்டிய அவசியம் இல்லைதானே?”

நச்சுனு 4 மான்டேஜ்

``சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒண்ணு, லைட் ஹவுஸ். அந்த லைட் ஹவுஸைக் கட்டும்போதே பார்த்தவன் நான். ஸ்கூல் படிக்கும்போது, கிராமத்துல இருக்கிற சூழல் நான் வளர்ந்த மயிலாப்பூர்ல இருக்கும். மார்கழி மாசத்துல அதிகாலை பஜனைகளைப் பார்க்கலாம், காலையில இடியாப்பம் விற்கிற குரல்களைக் கேட்கலாம், குப்பைகளை மாட்டுவண்டியில அள்ளிட்டுப் போற காட்சிகளைப் பார்க்கலாம். இப்போ அந்தச் சூழல்கள் எல்லாம் ரொம்பவே மாறிடுச்சு.

சென்னையோட அட்மாஸ்பியரே அத்தனை அற்புதமானது. கடல், கூவம் ஆறு, அடையாறு ஆறு... இரண்டு ஆறுகளுக்கும் நடுவுல பக்கிங்ஹாம் கால்வாய் ஓடிக்கிட்டிருக்கும். அந்தக் கால்வாய் ஏறக்குறைய ஆந்திரா பார்டர்ல தொடங்கி, கூவத்தைக் கடந்து, அடையாறு ஆற்றைக் கடந்து, பாண்டிச்சேரி வரைக்கும் போகும் நீர்வழிப் பாதை. இதுல படகுப் போக்குவரத்து இருந்தது. அந்தப் படகுப் போக்குவரத்து இல்லாத சூழலைப் பார்க்கும்போது சென்னை எனக்கு வெறுமையா தெரியுது.

சென்னையின் முக்கியமான இடம் மவுன்ட் ரோடு. அதுக்குப் பக்கத்துல இருக்கிற பாரிஸ்லதான் பெரிய பஸ் ஸ்டாண்ட் இருந்தது; மார்க்கெட் இருந்தது. பிறகு, ரெண்டுமே கோயம்பேடுக்கு மாறிடுச்சு. அப்போ எனக்கு சென்னையையே நகர்த்தி தனியா வெச்ச மாதிரி ஒரு ஃபீலிங்!

எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன் நான். பல திரையரங்குகளில் படம் பார்த்திருக்கேன். எல்லா தியேட்டரும் தனித்தனியா பரவிக்கிடக்கும். சித்ரா, வெலிங்டன், குளோப், ஓடியன், சன்… இப்படிப் பல தியேட்டர்கள் இப்போ காணாமப்போயிடுச்சு. தியேட்டர்கள் தனித்தனியா இருந்தப்போ கிடைச்ச சந்தோஷம், இப்போ ‘காம்ப்ளெக்ஸ்’ங்கிற பெயர்ல ஒரே இடத்துல குவிஞ்சு கிடந்தாலும் பிடிக்கலை.’’

கானா பாடல்களும் சில பிரார்த்தனைகளும்! 

``திருவள்ளுவர் பிறந்ததே மயிலாப்பூர்னு சொல்றாங்க. `பல அறிஞர்கள் பிறந்தாங்க, போராளிகள் உருவானாங்க'னு சொல்றதைவிட, சென்னையின் மிக முக்கியமான அடையாளமா கானா பாடல்களைச் சொல்லலாம். கானா பாடல்னா, சினிமா மெட்டுக்குப் பாடுற பாடல்கள் அல்ல... ஒரிஜினலான கானா பாடல் எங்க கடற்கரைக் குப்பத்துல நிறைய இருக்கு. கப்பல்ல ஏறி கடலுக்குப் போறவங்க, திரும்பி வர்றதுக்குப் பெண்கள் கானா பாடல்கள் பாடுவாங்க. அந்தப் பாடல்கள் எல்லாமே கடல் வாழ்க்கையை, கடலுக்குப் போறவங்களோட வாழ்க்கையை ஆழமா வர்ணிக்கும். `ஏழு குறுக்கு ரெண்டு நெடுக்கு நாலு ஆள்கள் வாழணும்…' – பாடை கட்டும்போது பாடுற கானா பாட்டு இது. கண்டிப்பா, பாடையைக் கட்டுறவரும், கட்டும்போது பார்க்கிறவரும் மட்டும்தான் இந்த மாதிரி பாடல்களை எல்லாம் பாட முடியும்.

``இது எனக்கு ஸ்பெஷல்''

``சென்னையின் சிறப்பான பிம்பத்துல முக்கியமா சொல்லணும்னா, சாதியப் பாகுபாடுகள் இல்லாததைச் சொல்வேன். என்னைச் சுற்றி இருந்த நண்பர்களையே ரீ-கால் பண்ணிப்பார்த்தா, ஒரே ஒரு நண்பனோட சாதி மட்டும்தான் எனக்குத் தெரிஞ்சிருக்கு. அப்படித்தான் இருந்திருக்கோம். ஒண்ணுமில்ல… 10, 15 வருஷங்களுக்கு முந்தைய செய்தித்தாள்களை எல்லாம் எடுத்துப் பாருங்க. எந்தப் பிரச்னையைப் புரட்டினாலும் சாதி, மதப் பாகுபாடு இல்லாத ஒரு கும்பல்தான் செய்தியில இருக்கும். ஆனா, இப்போ கொஞ்சம் மாறியிருக்கு. இங்கேயும் சாதிப் பாகுபாடுகள் தென்படுது.''

வாழ்ந்து, செத்துப்போகும் வாழ்க்கை

``நான் சென்னையில பார்க்காத வேலை இல்லை. காத்தாடி செஞ்சு வித்திருக்கேன். மீன் வியாபாரம் பார்த்திருக்கேன். அம்மாவோட பட்டாணிக் கடையை கவனிச்சிருக்கேன். துறைமுகத்துல வேலை பார்த்திருக்கேன். ஸ்க்ரீன் பிரின்டிங் வேலை செஞ்சிருக்கேன். நான் மட்டுமில்ல, என்னைச் சுற்றி இருந்த சென்னை மக்களும் இப்படித்தான். கிடைச்ச வேலையைச் செய்வோம். அதைப் பிடிச்சுக்கிட்டு முன்னேறுவோம். முடியலைன்னா, அடுத்த வேலைக்குப் போயிடுவோம்.

அதே சமயம், சென்னை மக்கள்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம் ஒண்ணு இருக்கு. திருநாவுக்கரசர்னு என் அண்ணனோட நண்பர் ஒருவர். ஏரியாவுல ரொம்ப பாப்புலர். கடைசிக் காலத்துல உடம்புக்கு முடியாம பிளாட்பாரத்துல வாழ்ந்தே செத்துப்போனார். இந்தச் சென்னை மக்களுக்கு, யாருடைய பெர்சனலும் தெரியாமப்போயிடுது. வசதியா வாழ்ந்தப்போ ராஜவாழ்க்கை வாழ்ந்தார். கடைசிக்காலத்துல அவர்கிட்ட பணம் இல்லை. அவரோட பிணத்தையே கார்ப்பரேஷன் வண்டியிலதான் கொண்டுபோனோம். அவர் மட்டுமல்ல, பெரிய கோடீஸ்வரனா, லட்சாதிபதியா இருந்த பலபேர் கடைசிக் காலத்துல தெருவுக்கு வந்ததைப் பார்த்திருக்கேன். காரணம்… ஏற்கெனவே சொன்னேனே, ரொம்ப இன்னொசன்ட்டா இருப்பாங்க! கிராமத்து மக்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமா நிலங்களைச் சேர்த்துவைப்பாங்கள்ல… அந்த அடிப்படை எண்ணம்கூட இவங்களுக்கு இல்லை. வாழ்ந்துட்டு, செத்துப்போயிடுறாங்க!’’

கடற்கரையின் சில கதைகள்

``ஹார்பர்ல வேலைபார்க்கிற பலரோட அனுபவக் கதைகள் நான் கேட்டிருக்கேன். இப்போதான் கப்பல்ல வேலைபார்க்கிறதுக்குப் படிப்பு தேவை. அப்போல்லாம் ‘மீனவர்’ங்கிற தகுதி போதும். அப்படி கப்பல்ல உலகம் சுத்துறவங்களைக் ‘கடலோடி’னு சொல்வாங்க. உலகம் முழுக்கத் சுத்திட்டு வர்ற அவங்களோட பயணங்களை, திரும்பி வரும்போது எங்களுக்குக் கதையா சொல்வாங்க. ஒருவர் சரக்குக் கப்பல்ல போனா, கியூபா, ரஷ்யானு உலகத்தையே சுத்திட்டு வருவார். திரும்பி வரும்போது பல நாட்டு உணவுகள், சரக்கு எல்லாம் எங்களுக்குக் கிடைக்கும். அவங்க சொல்ற பயணக் கதை ஒரு மாசத்துக்கு நீளும். உலகத்தையே சுத்திட்டு வந்திருப்பாங்க. ஆனா, அவங்களுக்கு உலகம் உருண்டைனு தெரியாது. பெரும் புரட்சி நடந்த இடத்துக்கெல்லாம் போயிட்டு வந்திருப்பாங்க. அதோட வரலாறு அவங்களுக்குத் தெரியாது. எப்படியோ, அவங்க கதைகள் எங்களுக்கு வந்துடும். ஆனா, சமயத்துல அவங்கதான் வர மாட்டாங்க!

கடல் பயணம் மோசமானது. போற வழியில இறந்துட்டா, பாடியை கடல்ல தூக்கிப் போட்டுடுவாங்க. கடலுக்குப் போனவர் காணாமப்போயிட்டா, ஆறு மாசம் காத்திருப்பாங்க. பிறகும் வரலைன்னா, காரியம் பண்ணுவாங்க. ஆனா, கடலுக்குப் போய் அஞ்சு வருஷம் கழிச்சுத் திரும்பி வந்தவங்களும் இருக்காங்க. இப்படித்தான் ஒருத்தர், ‘இதுதான் கடைசி ட்ரிப். பிறகு வேற வேலைக்குப் போயிடுவேன்’னு சொல்லிட்டுப் போனார். போகும்போது எனக்கு டாட்டா காட்டின அவரோட முகம் இன்னும் ஞாபகம் இருக்கு. அவர்தான் இல்லை. அவர் போன கப்பல் மத்திய தரைக்கடல் பகுதியில மூழ்கிடுச்சு. அவர் வேலைபார்த்த கம்பெனியும் அவரோட இறப்பை அறிவிச்சுட்டாங்க. ஆனா, அவர் மனைவி இன்னும் பொட்டு வெச்சுக்கிட்டு `அவர் வருவார்'னு நம்பிக்கையா காத்துக்கிட்டு இருக்காங்க. இதுவரை அவர் வரலை… ஒருவேளை இனி வரலாம்!’’

இன்னொரு இன்னொசன்ட் :

``சென்னைக்கு, பல முகங்கள் இருக்கு; பல வாழ்க்கை இருக்கு. கறுப்பர் தெரு, ஒயிட்ஸ் ரோடு… இதெல்லாம் வெறும் தெருப் பெயர்கள் கிடையாது. அதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. சென்னையை பிரிட்டிஷ்காரங்க ரூல் பண்ணதுக்குக்கூட பல கதைகள் இருக்கு, ஒண்ணு சொல்றேன்.

தங்களோட பிரிட்டிஷ் கம்பெனிக்காக மெட்ராஸ்காரர்கிட்ட இருந்து ஒரு நிலத்தைக் குத்தகைக்கு வாங்குறாங்க ஆங்கிலேயர்கள். அந்த நிலத்தில் ஒரு கொலை நடக்குது. ஒரு கணவன், தன் மனைவியைக் கொலை பண்ணிட்டார். பிரிட்டிஷ்காரரோ, நிலத்தை வாங்கினவர்கிட்ட வழக்கைக் கொடுக்கிறார். ‘நான்தான் உனக்குக் குத்தகைக்கு விட்டுட்டேனே… கொலைகாரனுக்கு என்ன தண்டனையோ, அதை நீங்களே கொடுத்துடுங்க!’னு சட்டத்தை அவங்க கையில கொடுக்கிறார், அந்த மெட்ராஸ் இன்னொசன்ட். ஆங்கிலேயர்களும் சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்கு தண்டனை கொடுக்கிறாங்க. ஆட்சி பண்ணலாம்கிற ஆசை ஆங்கிலேயர்களுக்கு வருது. அதிகாரம் பண்றாங்க, அடிமைப்படுத்தினாங்க!”

எனக்குப் பிடித்த சென்னை

``நிறைய ஊரைச் சுத்திட்டேன். அமெரிக்கா, ஐரோப்பா, கனடானு பல நாடுகளுக்குப் போயிட்டேன். சென்னைக்கு என்ட்ரி ஆகும்போது இருக்கிற சந்தோஷம் வேற எங்கேயும் எனக்குக் கிடைச்சதில்லை. அதனால, இந்தெந்த இடம்னு குறிப்பிட்டுச் சொல்றதைவிட, சென்னையே எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொல்லத்தான் தோணுது.

இருந்தாலும்… மெரினா பிடிக்கும். உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரைனு வரலாறு சொல்லுது. சின்ன வயசுல நான் இங்கேதான் விளையாடிக்கிட்டு இருந்தேன். மயிலாப்பூர் பிடிக்கும். ஒரு பக்கம் மீனவக் குப்பம், கடற்கரை. இன்னொரு பக்கம் கோயில்கள், அக்ரஹாரங்கள்னு இருக்கிற வித்தியாசமான ஊர். இங்கே ‘மாமி மெஸ்’ மிகப் பிரபலம். சாப்பிடுற எந்தப் பொருளிலும் கலப்படமே இருக்காது. என்னென்ன சாப்பிட்டோம்னு கணக்கெடுத்து காசு கேட்க மாட்டாங்க. நம்பிக்கை அடிப்படையில் இயங்கிக்கிட்டிருந்த கடை. இந்த உணவகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மயிலாப்பூர் பிச்சு தெருவுல இன்னும் இந்தக் கடை இருக்கு, நிறைய மாற்றங்களோடு!’’

மறக்க முடியாத நினைவு

``டவுசர் போட்டு சுத்திக்கிட்டு இருந்த சமயத்துல ஒருநாள், மெரினா பீச்சுல புயலால் திசை மாறி வந்த பயணிகள் கப்பல், தரை தட்டி நின்றுச்சு. கேப்டன் அவசரப்பட்டு கடல்ல குதிச்சு இறந்துபோயிட்டார். பயணிகள் எல்லோரும் பத்திரமா இருந்தாங்க. தரை தட்டிய அந்தக் கப்பலை ஏலத்துக்கு எடுத்த சிலர், பாதி அறுத்து அப்படியே போட்டுப் போயிட்டாங்க. இரும்புக்கப்பல் அது. துருபிடிச்ச கம்பிகள், தகடுகள் எல்லாம் கடலுக்கு அடியில பத்திரமா இருந்தன. காணும் பொங்கல் அன்னிக்கு மெரினாவுல எல்லா மாவட்ட மக்களும் கூடிக் கொண்டாடுறது வழக்கம். பலபேர் நீச்சல் அடிக்கக் குதிச்சு, அந்தத் துருபிடித்த கப்பலுக்கு இடையில சிக்கி இறந்துபோயிருக்காங்க. பலமுறை நாங்க `அந்தப் பக்கம் போகாதீங்க’னு சொல்வோம். ஆனாலும், இறப்புகள் சகஜமா நடக்கும். சமீபத்துலதான், அந்தப் பகுதியில நீச்சல் அடிக்கிறதுக்கும் குளிக்கிறதுக்கும் நிரந்தரமா தடை போட்டிருக்காங்க. ஏன்னா, இன்னமும் அந்தக் கப்பல் கடலுக்கு அடியில அப்படியேதான் இருக்கு!’’

என் நினைவின் கொண்டாட்ட சென்னை

``எனக்குத் தெரிஞ்சு, மொகரம் பண்டிகை எங்க ஏரியாவுல ரொம்ப ஃபேமஸ். சாதி, மதப் பாகுபாடு இல்லாம எல்லோரும் அந்தக் கொண்டாட்டத்துல இருப்போம். அந்தப் பண்டிகையின் முக்கிய நிகழ்வு ‘பஞ்சா’ தூக்கிட்டு வர்றது. கைச் சின்னத்தைப் பலரும் பலவிதமான சைஸ்ல தூக்கிட்டு வருவாங்க. பிறகு, தீ மிதிப்பாங்க. ஆச்சர்யம் என்னன்னா, திருவிழாவின் முடிவு கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் முடியும். இந்தத் திருவிழா, நான் பார்த்த சென்னையில் மிகப் பிரபலம். இந்துக்கள் பண்டிகை மாதிரி ஜோரா இருக்கும். ‘பஞ்சா’வுக்குப் பலரும் நூல் போடுவாங்க. பஜனை மாதிரி ஒண்ணு நடக்கும். நூல் போடுறவங்களுக்கு ‘நூக்குல்’ங்கிற ஸ்வீட் பிரசாதமா கொடுப்பாங்க. என்னோட ‘ஈ’ படத்துல மொகரம் பண்டிகைக் கொண்டாட்டத்தை காட்சியா வெச்சேன். ஆனா, ‘ஈ’ங்கிற கேரக்டர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்னு காட்டும். அதனால எடுத்துட்டேன்.”

என் நினைவில் நின்ற பெருந்துயரம்

``சமீபத்துல வந்த வர்தா புயல், மரங்களைச் சாய்ச்சுட்டுப் போச்சு. சுனாமி, மனிதர்களைச் சாகடிச்சுட்டுப் போச்சு. சுனாமியில என் நண்பர்கள், எங்க கடற்கரையில இருந்த பல குடும்பங்கள் இறந்துட்டாங்க. சென்னையில என்னை ரொம்பப் பாதிச்ச விஷயம் இதுதான்.

சுனாமி சமயத்துல மக்கள் எல்லோரும் கடற்கரையில இருந்து கரையை நோக்கி வந்துக்கிட்டிருந்தாங்க. நான் கரையில இருந்து கடலை நோக்கிப் போய்க்கிட்டிருந்தேன். ஏன்னா, எங்க அண்ணன் என்ன ஆனார்னு தெரியலை. யார் புண்ணியமோ… சாந்தோம் கடற்கரை கொஞ்சம் உயரமான பகுதியில இருந்ததுனால, பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அண்ணனுக்கும் எதுவும் ஆகலை. ஆனா, சுனாமியில மக்கள் செத்ததுக்கு அரசாங்கத்தோட திட்டமிட்டச் செயல் மாதிரிதான் எனக்குத் தோணுச்சு. இந்தோனேஷியாவுல நில அதிர்வு வந்தது. இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு, சுனாமியா மாறி அந்தமானைத் தாக்கியது. பிறகு, அடுத்த கால் மணி நேரத்தில் இலங்கையைத் தாக்கிட்டு, தமிழ்நாடு திரும்புது. அரசாங்கம் நினைச்சிருந்தா, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுக்காப்பான இடத்துக்கு அனுப்பியிருக்கலாம். சேட்டிலைட் மூலமா, இயற்கைச் சீற்றம் அடுத்து இங்கேதான் நடக்கும்னுகூடவா கண்டுபிடிக்க முடியாது?”

இது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்

``பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு, அடுத்தடுத்து நிறைய படிக்கலாம்னு சொல்லித்தர எனக்கு ஆள்கள் இல்லை. எனக்கு ஆர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். அதைப் படிச்சிருப்பேன், முடியலை. சக இயக்குநர்கள் எல்லாம் காலேஜ் கதைகளைப் பேசும்போது, எனக்கு ஒருமாதிரி இருக்கும். அரசியல்ல ஆர்வம் அதிகம். சின்ன வயசுல தி.மு.க உறுப்பினரா இருந்தேன். பிறகு, இடதுசாரிக் கொள்கைகள் மீது ஆர்வம் வந்தது. நான் அதை மக்கள்கிட்ட கொண்டுபோக வழி யோசிச்சேன். சினிமா சரினு பட்டது. ஆனா, மூணு படம் எடுக்கிறவரை சினிமாதான் என் தொழில்னு எனக்குத் தெரியாது. இப்போ சினிமாவுல சின்சியரா இருக்கேன். டெக்னிக்கலா நிறைய விஷயங்களைக் கத்துக்கிறேன். இதே சென்னையில… இன்னும் நிறைய பயணங்களும் அனுபவங்களும் காத்துக்கிட்டிருக்கு!”