Published:Updated:

பெரும்பாவத்தின் ஆதி ஊற்று...திகில் கிளப்பும் ஜேனீஸ்..! Annabelle Creation படம் எப்படி?

பெரும்பாவத்தின் ஆதி ஊற்று...திகில் கிளப்பும் ஜேனீஸ்..!  Annabelle Creation படம் எப்படி?
பெரும்பாவத்தின் ஆதி ஊற்று...திகில் கிளப்பும் ஜேனீஸ்..! Annabelle Creation படம் எப்படி?

பெரும்பாவத்தின் ஆதி ஊற்று...திகில் கிளப்பும் ஜேனீஸ்..! Annabelle Creation படம் எப்படி?

பெரும்பாலும் ஒரு படத்தின் சீக்குவலோ, ப்ரீக்குவலோ எடுக்கும் போது முந்தைய படத்தினுடனான ஒப்பீட்டிலேயே பாதி தோற்றுவிடும். வெளியாகி வெற்றியடைவதெல்லாம் மிகவும் சிரமமான விஷயம். அதற்கு ஹாலிவுட்டில் பல உதாரணங்கள் இருக்கிறது. இந்த சூழலில் ஒரு பேய்ப் படத்தின் ப்ரீக்குவல், அதுவும் அனபெல் போன்று மிக சுமாரான வரவேற்பைப் பெற்ற ஒரு படத்தின் ப்ரீக்குவலாக வந்திருக்கிறது அனபெல்; க்ரியேஷன். படம், எப்படி இருக்கிறது.

1943ல் துவங்குகிறது கதை. எஸ்தர், சாமுவேல் மற்றும் இவர்களின் மகள் அனபெல் ஊருக்கு ஒதுக்குப் புறமாக பெரிய வீடு ஒன்றில் வசிக்கிறார்கள். விபத்து ஒன்றில் அனெபெல் இறந்துவிட, அந்த வீட்டில் தனியாக வசிக்கத் துவங்குகிறார்கள் எஸ்தர், சாமுவேல். இது முடிந்து 12 வருடங்களுக்குப் பிறகு தனது வீட்டை ஆதரவற்ற இரண்டு பெண்கள் மற்றும் நான்கு சிறுமிகளுடன் வரும் கன்னியாஸ்திரிக்கு தங்க இடம் தருகிறார். இதில் போலியோ பாதிப்படைந்த ஜேனிஸும் ஒருத்தி. அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே எல்லோரும் சில அமானுஷ்யங்களை சந்திக்கிறார்கள். ஜேனிஸ் மிக அதிகமாகவே சந்திக்கிறாள். ஒரு கட்டத்தில் அனைவரும் 'அது' இருப்பதை உணர்கிறார்கள். அந்த 'அது' யார், எதற்காக வந்திருக்கிறது, அதனிடமிருந்து எப்படித் தப்பினார்கள், ஜேனிஸுக்கு என்ன ஆகிறது என்பவைதான் அனபெல்: க்ரியேஷன் படத்தின் கதை.

2014ல் வெளியான அனபெல் முந்தைய படத்தை விட இந்த பாகத்தை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தை இயக்கியிருப்பது 'லைட்ஸ் அவுட்' படம் மூலம் அலரவிட்ட டேவிட் எஃப்.சேன்பெர்க். பயம் கொடுக்கத் தேவையான சூழல், தேவை இல்லாத திணிப்பு எதுவும் இல்லாமல் இயல்பாகவே கதை ஓட்டத்தோடு படபடப்பை சேர்த்திர்ந்தது எனப் பல விதங்களில் கவர்கிறது சேன்பெர்கின் இயக்கம். முடிந்த வரை பேயின் மீடியமாக அந்த பொம்மையை வைத்தே அதிக நேரம் திகிலூட்டிய ட்ரீட்மென்ட் படத்தின் பெரிய பலம். பேய் இதுதான், இப்படிதான் எனக் காட்டும் வரையான திகில் ஆட்டத்தை மிக சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார் இயக்குநர்.

படத்தின் பிரதான கதாபாத்திரம் ஜேனிஸாக நடித்திருக்கும் தலிதா பேடிமன் கவர்கிறார். ஆரம்பத்தில் அமானுஷ்ய நிகழ்வுகளைக் கண்டு திகிலடைவது, தடை செய்யப்பட்ட அறைக்குள் நுழைந்ததற்காக பாவ மன்னிப்பு கேட்கவருவது, 'நான்தான் இருப்பதிலேயே பலவீனமாக இருக்கிறேன். அதனால்தான் எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது' எனக் கலங்குவது, முக்கியமான திருப்பத்திற்குப் பிறகான அவரது நடிப்பு எனப் பல இடங்களில் இவரின் தேர்ச்சியான நடிப்பு வெளிப்படுகிறது. அவரது தோழியாக நடித்திருக்கும் லுலு வில்சன் நடிப்பும் கவனிக்கத்தக்கது. விட்டேத்தியாக ஒரு இணைப்பை வைத்து முந்தைய அனபெல் படத்துடன் இணைக்காமல் நம்பும்படியான ஒரு தொடர்பை படத்தின் ஆரம்பத்திலிருந்தே கொண்டு வந்து இணைத்திருந்ததும், வர இருக்கும் 'நன்' படத்திற்கான லீடை இந்தப் படத்திலேயே கொடுத்திருந்த ஐடியாவும் எந்த துருத்தலும் இன்றி கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

'இன்சிடிஸ்' போல இசையை திகிலுக்கான பிரதான காரணியாகப் பயன்படுத்துவது ஒரு விதம் என்றால், தேவை இல்லாத இடங்களில் இசையைக் குறைத்து காட்சிகள் மூலமே பயமேற்றுவது ஒரு வகை. அனபெல் இரண்டாம் வகையறாதான். பல இடங்களில் பெஞ்சமினின் பின்னணி இசை மெலிதாகவே ஒலிக்கிறது. படத்தில் ஒரு காட்சி இருக்கும். ஜேனிஸ் போலியோ பாதிப்புள்ளவர் என்பதால் மாடிப்படி ஏறுவதற்கு ஒரு லிஃப்ட் டைப் நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். நடு இரவில் எழுந்து அனபெல்லின் அறைக்கு சென்று திகிலடைந்து திரும்ப எல்லாப் புறமும் இருட்டு, வெறியுடன் துரத்தும் உருவம் வேறு, நாற்காலில் ஏறி கீழிறங்க முயற்சிக்க, பாதி வரை கீழிறங்கி திடீரென நின்றுவிடும். மீண்டும் அந்த நாற்காலி மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கையில் பார்வையாளர்களுக்கு நிச்சயம் சின்ன நடுக்கத்தை உண்டு பண்ணும். அதே போல் பொம்மையைத் தூக்கிக் கொண்டு கிணற்றில் போட ஓடுவார் ஜேனிஸின் தோழி லிண்டா. விளக்கொலியில் கையில் பொம்மையுடன் யாரும் வருகிறார்களா என பயத்துடன் திரும்பிப் பார்ப்பார். நம் கவனம் முழுக்க விளக்கு வெளிச்சத்தில் மிக விகாரமாகத் தெரியும் பொம்மை மீது விழுந்து சின்ன நடுக்கத்தை ஏற்படுத்தும். இது போல படத்தின் பல காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மேக்ஸிம் அலக்ஸான்டர். 

பேய் படம் என்றதும் எல்லோருக்கும் வரும் மேலோட்டமான சலிப்பு, "ஒரு பெரிய வீடாம், ஒருத்தர் இறந்து போய் ஆவியா அலைவாங்களாம், திடீர் திடீர்னு சாயுமாம்" என்பதுதான். அதே கதைதான் இங்கும். ஆனால், சலிப்படைய வைக்காமல் நகர்கிறது கதையும் திரைக்கதையும். முடிந்த வரை க்ளிஷேவான காட்சிகளைக் குறைத்து எப்படி பயமுறுத்தலாம் என்ற விதத்தில் யோசித்த விதத்தில் தனித்துத் தெரிகிறது அனபெல். ஆனால், இருப்பதிலேயே சிறந்தது இதுதானா என்றால் இல்லை. ஒரு தரமான பேய்ப் படம் மட்டுமே. நிச்சயம் தவறவிடக் கூடாததும் கூட. 

அடுத்த கட்டுரைக்கு