Published:Updated:

'' ‘பாகுபலி’ தமன்னாவே பாகுபலிக்காக என்னைப் பாராட்டினாங்க!’’ - பூரிக்கும் ஷபானா

'' ‘பாகுபலி’ தமன்னாவே பாகுபலிக்காக என்னைப்  பாராட்டினாங்க!’’ - பூரிக்கும் ஷபானா
'' ‘பாகுபலி’ தமன்னாவே பாகுபலிக்காக என்னைப் பாராட்டினாங்க!’’ - பூரிக்கும் ஷபானா

"என்னோட ஆங்கரிங், ஆக்டிங் ஆசை நிறைவேறிடுச்சு. ஆனாலும், நிறைய வெரைட்டியான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கணும், நிறைய நடிக்கணும்னு ஆசைப்படுறேன். அதற்காக, தொடர்ந்துப் பயணிச்சுட்டிருக்கேன்" - குஷியாகப் பேசுகிறார் ஷபானா. 'இசையருவி', 'வானவில்' தொலைக்காட்சிகளின் தொகுப்பாளினி. 

"முதல் மீடியா அனுபவம்..." 

"பிறந்து வளர்ந்ததெல்லாம், காஞ்சிபுரம். சின்ன வயசிலிருந்து என்னை அழகுபடுத்திக்கிறதுல, டான்ஸ் ஆடுறதுல ரொம்ப ஆர்வமா இருப்பேன். அதனால், மீடியாவில் சாதிக்கும் ஆசை, என்னைவிட அம்மாவுக்கு அதிகம் இருந்துச்சு. பிளஸ் டூ முடிச்சதும், கரெஸ்ல பிபிஏ படிச்சுக்கிட்டே, ஆங்கரிங் வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். சன் மியூசிக் ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். ஆறு மாசம் கழிச்சு அழைப்பு வர, என் ஆங்கரிங் பயணம் ஆரம்பிச்சது.'' 

"முதல்ல திட்டினவங்களே அப்புறம் புகழ்ந்தாங்களாமே..." 

"ஆமாம்! ஆரம்பத்தில், டிரெஸ்ஸிங் சென்ஸ் தெரியாமல், இந்த ஃபீல்டில் எப்படி நடந்துக்கணும்னு புரியாமல் தடுமாறினேன். 'இந்தப் பொண்ணு இப்படி இருக்கே'னு பலரும் கிண்டல் பண்ணினாங்க. டீமில் இருந்தவங்க திட்டுவாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கும். இந்த ஃபீல்டு நமக்கு செட் ஆகாதுன்னு நினைச்சேன். ஒரு நாள் நிதானமா யோசிச்சேன். இந்த ஃபீல்டுக்கு ஏற்ப மாத்திக்க ஆரம்பிச்சேன். பிறகு, என்னைக் கிண்டல் செய்தவங்களே 'சூப்பர்மா'னு புகழ்ந்து தள்ளினாங்க.'' 

"ஆங்கரிங் டு ஆக்டிங் பயணம் பற்றி..." 

"சன் மியூசிக்ல 'ட்ரிங் ட்ரிங்', 'நட்புக்காக' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளால் புகழ் கிடைச்சுது. செம ஜாலியா மூணு வருஷம் வொர்க் பண்ணினேன். அடுத்து, இசையருவி சேனலுக்கு மாறி, இப்போ வரை ஆங்கரிங் செஞ்சுட்டிருக்கேன். சன் டிவியின் 'தேவதை' சீரியலில் நான் நடிச்ச ப்ரியா கேரக்டர் நல்ல ரீச் கொடுத்துச்சு. அடுத்து, 'தெய்வமகள்' சீரியலில் மூணு மாசம் நடிச்சேன். ஆங்கரிங் வொர்க்கால் தொடர்ந்து அதில் நடிக்க முடியலை.'' 

"அந்த சீரியலை மிஸ் பண்ணிட்டோமேனு இப்போ நினைக்கிறீங்களா?'' 

"நிச்சயமா ரொம்பவே வருத்தப்படுறேன். வீஜே ஆனதும் ஆக்டிங்லேயும் கலக்கணும்னு ஆசைப்பட்டேன். 'தேவதை' சீரியலில் நடிக்கிறப்பவும் இனி நிறைய நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, சில காரணங்களால் அந்த ஆசை நிறைவேறாமல் போயிடுச்சு. இப்போ நல்ல ரோலுக்காக வெயிட்டிங்." 

" 'பாகுபலி' டீமை பேட்டி எடுத்த அனுபவம் பற்றி..." 

"இசையருவி சேனலில் வீஜேவா வொர்க் பண்ணிட்டே, கலைஞர் டிவியிலும் செலிப்ரிட்டிகளைப் பேட்டி எடுத்திட்டிருக்கேன். சில மாசத்துக்கு முன்னாடி 'பாகுபலி 2' டீமை பேட்டி எடுத்தேன். பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் என அந்தப் படத்தில் நடிச்ச பலரும் செம ஜாலியா பேசினாங்க. பேட்டி தொடங்கும் முன்னாடி என் பெயரை கேட்ட தமன்னா, நிகழ்ச்சி முடிஞ்சதும், 'இன்டர்வியூ நல்லா இருந்துச்சு ஷபானா'னு பாராட்டிட்டுப் போனாங்க. பாகுபலி தமன்னா 'பாகுபலி'காக என்னைப் பாராட்டினதுல நான் ஹேப்பி அண்ணாச்சி. இப்போ செலக்டிவாகத்தான் செலிப்ரிட்டி இன்டர்வியூ செய்துட்டிருக்கேன்." 

"டப்ஸ்மாஷ்ல நிறைய ஆர்வம் உண்டோ?'' 

"ஆமாம்! எனக்கு டப்ஸ்மாஷ் ரொம்பப் பிடிக்கும். பிடிச்ச டயலாக்ஸை டப்ஸ்மாஷ் செய்து, சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்துட்டே இருப்பேன். டான்ஸ்லேயும் ஆர்வம் உண்டு. ரெண்டு வருஷமா இசையருவி சேனல்ல, 'காதலுக்காக', 'துள்ளிசை' என ரெண்டு லைவ் நிகழ்ச்சிகளை செய்துட்டிருகேன். தினமும் நேயர்களிடம் பேசறதால், நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கிறாங்க. வித்தியாசமான ஃபீலிங்ஸ் கிடைக்குது.'' 

" 'ஷாப்பிங் ஸ்டார்' நிகழ்ச்சி எப்படி இருக்கு?'' 

"எனக்கு ஷாப்பிங் செய்றது ரொம்பப் பிடிக்கும். என் ஆசைக்கு ஏற்ப, வானவில் டிவியில் 'ஷாப்பிங் ஸ்டார்' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சிருக்கேன். சினிமா செலிப்ரிட்டிகள் லைவ்வா ஷாப்பிங் செய்றதும், அதில் கிடைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களும்தான் நிகழ்ச்சி. அதனால், ஒவ்வொரு எபிசோடு முடிவிலும் நானும் ஷாப்பிங் பண்ணிடுறேன். நிகழ்ச்சி செஞ்ச மாதிரியும் ஆச்சு. புதுசு புதுசா ஷாப்பிங் பண்ணின மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். ஸோ, செம செம ஹேப்பி!" எனச் சிரிக்கிறார் ஷபானா.