Published:Updated:

`நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism #Vijay25

ச.அ.ராஜ்குமார்
`நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism #Vijay25
`நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism #Vijay25

மக்களின் வாழ்க்கையில் நீங்காத அங்கமாக விளங்குகிறது `சினிமா'. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்புதுப் படங்களும் திறமையான நடிகர்களும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் 25 ஆண்டுகளாக தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பது என்பது, கடும் சவாலான விஷயம்தான். இந்தச் சாதனையை சர்வசாதாரணமாக நடத்திக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். ரசிகர்களால் `இளைய தளபதி' எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்து 25 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் திரைப் பயண நிகழ்வுகளின் தொகுப்பு...

1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி இயக்குநர் சந்திரசேகர் - பாடகி ஷோபா தம்பதிக்குப் பிறந்த விஜய், சிறு வயதிலேயே அமைதியும் அடக்கம் அமைந்த சிறுவனாக இருந்தார். தன் இயல்பை மீறி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் ஜாலி கேலி காலாய் சம்பவங்களும் உண்டு என்கிறது விஜய்யின் வரலாறு. தந்தையும் இயக்குநருமான சந்திரசேகரின் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான `வெற்றி' என்ற படத்தின் மூலம் கேமரா முன் தோன்றினார். பிறகு `குடும்பம்', `நான் சிகப்பு மனிதன்', `வசந்தராகம்', `சட்டம் ஒரு விளையாட்டு', `இது எங்கள் நீதி' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார் விஜய்.

பள்ளிப் படிப்பை முடித்த அவர், லயோலா கல்லூரியில் சேர்ந்தார். நடிப்பின் மீது ஆர்வம்கொண்ட அவர், தன் தந்தையிடம் அதைக் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான விஜய்யை, அப்போது ரிலீஸான `அண்ணாமலை' படத்தில் வரும் வசனத்தைக் கூறி நடித்துக்காட்டச் சொன்னார் சந்திரசேகர். அதன் பிரதிபலனாக 1992-ம் ஆண்டு `நாளைய தீர்ப்பு' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த இவரை, உலுக்கி எடுத்துவிட்டது அந்தச் சம்பவம்...  இரண்டு வயது தங்கை வித்யாவின் மறைவு, அவரை பெரிதும் பாதித்தது. தன் தங்கையின் ஞாபகமாக  `V V கிரியேஷன்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார்.

1995-ம் ஆண்டு வெளியான `ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய் - அஜித் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுமட்டும்தான்.1996-ம் ஆண்டு வெளியான `பூவே உனக்காக'படம், விஜய்க்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. `நேருக்கு நேர்', `காதலுக்கு மரியாதை' போன்ற படங்களும் அவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத்தந்தன. `காதலுக்கு மரியாதை' படத்துக்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அதன் பிறகு அவர் நடித்த `ஒன்ஸ்மோர்', `ப்ரியமுடன்', `துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற படங்கள் விஜய்யை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தின.

`நெஞ்சினிலே', `என்றென்றும் காதல்', `மின்சாரக் கண்ணா' போன்ற படங்கள் அவருக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் தனக்கான மாஸை ஏற்படுத்தின. எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் அதே வேகத்துடன் எழவேண்டும் என்பதை தன் கலைப் பயணத்தின் மூலம் ரசிகர்களுக்கு எடுத்துச் சொன்னார் விஜய். இவரின் 25-வது படமான `கண்ணுக்குள் நிலவு' அவருக்குள் ஒளிந்திருந்த மாபெரும் நடிகனை வெளிகொணர்ந்தது. இந்தப் படத்தில் அவர் பேசிய `மீசிக்... மீசிக்...' என்ற வார்த்தைப் பிரயோகம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

1999-ம் ஆண்டு சங்கீதாவை மணந்த விஜய்க்கு சஞ்சய் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர்.

தொடர்ந்து `குஷி', `பிரியமானவளே', `ப்ரெண்ட்ஸ்', `பத்ரீ', `ஷாஜகான்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து, வெற்றி நாயகனாக வலம்வந்தார் விஜய். இவரின்  கலைப் பயணத்தில் 2004-ம் ஆண்டு பெரும்மாற்றம் நிகழ்ந்தது. அதுதான், ஆக்‌ஷன் கலந்த யதார்த்த நாயகனாக நடித்து, 50 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த `கில்லி' படத்தின் வெளியீடு. அதன் பிறகு அவர் நடித்த `திருப்பாச்சி', `சிவகாசி' போன்ற படங்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக்  கிளப்பின.  இதுபோன்ற யதார்த்தமான படங்கள் மூலம் பெண்களின் ஆதரவைப் பெற்றார். `சச்சின்' படத்தில் மூலம் தனது பழைய ரொமான்டிக் ஹீரோயிசத்தைக் காட்டினார். `போக்கிரி' படம் மூலம் இளைய தலைமுறையை மனங்களில் ஆழமாகப் பதிந்தார் விஜய்.

2007 முதல் 2010 வரை, தொடர் தோல்விகளைச் சந்தித்தார். அவர் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்', `குருவி', `வில்லு' போன்ற படங்கள் அவருக்குத் தோல்வியைத் தந்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான அவரது 50-வது படமான `சுறா' பெரும் தோல்வியடைந்தது. ஒரே மாதிரியான கதைக்களம், தேவையற்ற வசனம் எனப் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த விஜய்க்கு, அடுத்த படமான `காவலன்' பெரும் வெற்றியைப் பெற்றது.

`வேலாயுதம்', `நண்பன்' போன்ற படங்கள், விஜய்யை மீட்டெடுத்து, பெரும் வெற்றியைக் கொடுத்தன. 2012-ம் ஆண்டு விஜய் - ஏ. ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான `துப்பாக்கி', விஜய் இதற்குமுன் செய்த அனைத்து படங்களின் சாதனையை முறியடித்து, பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தது. இந்தப் படத்துக்குப் பல பிரச்னைகள் எழுந்தாலும், வசூலை அள்ளிக்குவித்தது. விஜய் நடிப்பில் `100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம்' என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது.

அதற்கடுத்து விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `தலைவா'. தன் அரசியல் ஈடுபாட்டை இந்தப் படம் மூலம் வெளிப்படுத்தினார் விஜய். அதன் பிறகு அவர் `ஜில்லா'வில் தனது மசாலா-ஆக்‌ஷன் பாணியில் நடித்தது  கமர்ஷியல் படமாக அமைந்தது. 2014-ம் ஆண்டின் தீபாவளி விருந்தாக, `கத்தி' வெளியாகி, தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஏ.ஆர்.முருகதாஸின் எழுதிய கூர்மையான வசங்களும் அதற்கு இணையாக விஜய்யின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றன.  இந்தப் படத்தில் வரும் `பிரஸ் மீட் சீன்' பார்த்த அனைவரையும் சிந்திக்கவைத்தது.

2015-ம் ஆண்டு வெளிவந்த `புலி' விஜய்க்கு மீண்டும் ஒரு தோல்வியைத் தந்தது. சமூக வலைதளங்களின் ட்ரோல்ஸுக்கு  இரையாக மாறியது. இருப்பினும், இந்தப் படம் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான `தெறி' விஜய்யை  மீண்டும் உச்சத்தில் அமரவைத்தது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான `பைரவா', கலந்த விமர்சனத்துக்குள்ளானது.

` தெறி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் கைகோத்து  `மெர்சல்' படத்தில் மிரட்டியிருக்கிறார் விஜய்.

தனது 61 படங்களில், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு புது இயக்குநர்களுக்கு விஜய் வாய்ப்பு அளித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே தனது படங்களில் சமூகப் பிரச்னைகளையும் சமூகக் கருத்துகளையும் எடுத்துவைக்கிறார். முன்னணி நடிகர், அதுவும் பல கோடி ரசிகர்கள் பட்டாளம்கொண்டுள்ள ஒரு நடிகர், நல்ல கருத்தைக் கூறும்போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இவரது நடிப்பை கௌரவிக்கும்விதத்தில் 1998-ம் ஆண்டு `கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. மாநில அரசின் `சிறந்த நடிகருக்கான' விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு `எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்' இவருக்கு `கெளரவ டாக்டர் பட்டம்' வழங்கி சிறப்பித்தது. தனது அசாதாரண நடிப்பாலும் மாஸான பன்ச் வசனங்களாலும்  ரசிகர்களை ஈர்த்தார். மேலும், அவரது நடனம் மற்றும் பாடல்களுக்கு தனியே ரசிகர் கூட்டம் உள்ளது.

தனது பிறப்பால் தமிழனாய், தமிழக மக்களின் அழகியத் தமிழ்மகனாய், தோற்றத்தில் இன்றும் யூத்தாய், தனது ரசிகனுக்கு நண்பனாய், கத்தி போன்ற கூர்மையான பேச்சால், வசூல் சாதனைகளைத் தெறிக்கவிடும் போக்கிரியாய், இனிவரும் காலத்திலும் `மெர்சல்' காட்டவுள்ள விஜய், இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் எல்லா ஆண்டும் அட்டகாச ஆண்டாக அமைந்திட வாழ்த்துகள்!

`பிறரை மகிழ்வித்து மகிழ்' என்பது பொன்மொழி. அதற்கு நல்ல உதாரணம் சினிமா துறை. அந்தத் துறையையே தன் தொழிலாகக்கொண்டு, அதில் தனக்கென ஓர் இடம் பிடித்து, முத்திரை பதித்து `சில்வர் ஜூப்ளி' கொண்டாடும் விஜய், எதிர்வரும் `கோல்டன் ஜூப்ளி'யில் திரையுலகை மட்டுமல்லாது மக்களின் மனங்களையும் சேர்த்து ஆளவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்!