Published:Updated:

`லத்தியில அடிவாங்குற வயசா இது. 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள போகப்போறேன்!'' - கலகல பவர் ஸ்டார்

`லத்தியில அடிவாங்குற வயசா இது.  'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள  போகப்போறேன்!'' - கலகல பவர் ஸ்டார்
`லத்தியில அடிவாங்குற வயசா இது. 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள போகப்போறேன்!'' - கலகல பவர் ஸ்டார்

ன்லிமிட்டெட் ஃபன்... ரணகள ரகளை... ஜாலி கேலிகளின் ஒட்டுமொத்த உருவம், தற்போதைக்கு தமிழ்நாட்டில் பவர்ஸ்டார்தான். ``ஜெயிலுனு சொல்லாதீங்க தம்பி... ஆசிரமம்னு சொல்லுங்க” என்று எடுத்தவுடனேயே டாப் கியரில் போகிறது பவர் ஸ்டார் வண்டி. வயிறு குலுங்கக் குலுங்க அவருடன் ரசித்த தருணங்கள் இதோ...

``எப்போ சார் ஜெயில்ல இருந்து வந்தீங்க?”

``தப்பு... தப்பு... ஜெயிலுனு சொல்லாதீங்க தம்பி. ஆசிரமம்னு சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சு எந்தத் தவறும் நான் செய்யலை. எனக்குத் தெரியாம, அறியாம நடக்கிற தவறுக்கு, கூட இருந்தவங்களே என்னைப் பழிவாங்கிட்டாங்க. எதிரிகள் நிறைய இருக்காங்க. என்னோட வளர்ச்சியையும் புகழையும் தடுக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா, பாவம் என் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கடவுள் ஒருத்தன் கையில மட்டும்தான் இருக்குனு அவங்களுக்குத் தெரியலை.”

``எந்த ஜெ... ஸாரி, ஆசிரமத்தில் இருந்தீங்க. புழல் ஆசிரமமா...  டெல்லி ஆசிரமமா?”

``டெல்லி ஆசிரமத்தில்தான். ஆனா, புழலை ஆசிரமம்னு சொல்லாதீங்க தம்பி. அது ஜெயில்தான். நான் இருந்த திகார்தான்  ஆசிரமம்.”

``திகார்ல இருந்தப்போ தினகரனையெல்லாம் பார்த்துப் பேசியிருப்பீங்களே?”

``அதுக்கு வாய்ப்பு கிடைக்கலை தம்பி. நான் இருந்ததும் அவர் இருந்ததும் வேறவேற செல். அதனால சந்திக்க முடியாமப்போயிடுச்சு. மிஸ் பண்ணிட்டேன்.”

``ஆசிரமத்தில் செல்போன்லாம் யூஸ்பண்ண முடியுமாமே?”

``இல்லை தம்பி. அதெல்லாம் கதையில மட்டும்தான். அங்கெல்லாம் அனுமதி இல்லை. பொதுவான போன் ஒண்ணு இருந்தது. அதுலதான் பேசினோம்.”

``ஆசிரமத்தில் உங்ககூட இருந்த ரூம் மேட்ஸும் தமிழர்தானா சார்?”

``சே... சே... இல்லை தம்பி. எல்லாரும் இந்திவாலாக்கள்தான். இங்கிலீஷ்னா புரியும். இந்திங்கிறதால பேசிப் பழக முடியலை. அதுக்குப் பதிலா, நம்ம தமிழ் போலீஸ் அங்கேயும் இருக்காங்களே. அவங்ககிட்ட பேசுவேன். சொல்லப்போனால், அந்த போலீஸ் எல்லாம் என் ரசிகர்கள்தான். சந்தேகமெல்லாம்கூடக் கேட்டுப்பேன்.”

``பெங்களூர் ஜெயில் மாதிரி திகார்லயும் ஷாப்பிங் போக முடியுமா?”

ஜெர்க் ஆகிறார் ``அதெல்லாம் ஒண்ணும் கிடையாது தம்பி. வெளியே ஆயிரம் சொல்வாங்க. உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. வெளியே இருக்கிறவங்க சும்மா சொல்வாங்க. நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமே இல்லை.”

பேட்டியை முழுமையாகப் பார்க்க...

``விசாரணையில் எப்படி சார்... லத்தி சார்ஜெல்லாம் உண்டா?”

``நிச்சயமா கிடையாது. அதெல்லாம் சுதந்திரம் வாங்கிற காலத்துக்கு முன்னாடி. இப்போ மனித உரிமை கமிஷன்லாம் இருக்கிறதால, முடியவே முடியாது. அதுவும் இல்லாம, நானெல்லாம் பாவம் தம்பி. லத்தியில அடிவாங்குற வயசா இது?”

``நீங்க அ.தி.மு.க-வில் மருத்துவர் அணிப் பொருளாளரா இருந்தீங்களே?'' 

``ஆமா... மாநிலப் பொருளாளரா இருந்தேன். அந்தச் சமயத்தில் மைத்ரேயன், டாக்டர் வேணுகோபால் தலைமையில் செயல்பட்டுக்கிட்டிருந்தேன். அங்கேயும் என்னோட வளர்ச்சி பிடிக்காத சிலர், அம்மாகிட்ட என்னைப் பற்றி தப்புத் தப்பா போட்டுக்கொடுத்துட்டாங்க. அதுலையும் பலிகடா ஆகிட்டேன் தம்பி.”

``ஓ... அப்போ ஜெயலலிதாவைப் பார்த்துப் பேசியிருக்கீங்க?”

``ரெண்டு தடவைப் பார்த்திருக்கேன். ஒரு தடவை மெடிக்கல் கேம்ப்க்கு வந்துட்டு. `இது என்ன?’னு கேட்டாங்க. நான், `அக்குபஞ்சர்ம்மா'னு சொல்லியிருக்கேன்.”

``ஜெயலலிதா ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்தப்போகூட போய்ப் பார்த்தீங்களே?" 

``ஆமாப்பா... ஃபர்ஸ்ட் கேட் வரை போனேன். உள்ளே விடலை. அதுக்கப்புறம் அவங்களே கூப்பிட்டுவிட்டாங்க. அப்பவும் மினிஸ்டர்ஸ் உட்கார்ந்திருந்த இடம் வரைதான் போக முடிஞ்சது. டீ சாப்பிட்டு வந்துட்டேன்.”

``யார் சார் உங்களைத் தடுத்தது... சசிகலாவா?”

``இல்லை...இல்லை. அவங்க எல்லாம் எதுவுமே சொல்லலை. இன்ஃபேக்ட் என்னைக் கூப்பிட்டுவிட்டதே அவங்க ஆளுங்கதான். எந்தத் தடையும் இல்லாம அதுக்கு அப்புறம்தான் உள்ளேயே போக முடிஞ்சது.”

``அப்போ அ.தி.மு.க-வில் முக்கியமான ஒரு ஆளா இருந்திருக்கீங்க?”

``அப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாமே மக்கள் தீர்மானிக்கிறதுதான். அப்போகூட மினிஸ்டர்ஸ் இருந்த இடம் வரைதான் போக முடிஞ்சது. அங்கே விஜயபாஸ்கர் மாதிரியான அமைச்சர்களைப் பார்த்துட்டு, அம்மா உடல்நலம் பற்றிக் கேட்டுட்டு, டீ குடிச்சுட்டு வந்துட்டேன்.”

``நீங்க இப்போ எந்த அணியில இருக்கீங்க?”

``இப்போ நான் அரசியல்லையே இல்லைப்பா. படத்தில் நடிச்சு, கிடைக்கும் புகழை மறுபடியும் தக்கவெச்சுக்கணும். இதுமட்டும்தான் இப்போதைய என் குறிக்கோள்.”

``அ.தி.மு.க-வில் நீங்க இருந்ததால் கேட்கிறேன். இப்போதைய அ.தி.மு.க அரசு எப்படிச் செயல்படுது?”

``ஒண்ணுமே இல்லை தம்பி. எல்லாம் குடும்பத்துக்குள்ளே வர அண்ணன்-தம்பி சண்டைதான். பிரிஞ்சு இருக்கிறவங்க எல்லாரும் இணைஞ்சுட்ட எல்லாம் சரியாகிடும். ஆனா, இப்போ சொல்றேன் எழுதிவெச்சுக்கோங்க. அடுத்த முறை தி.மு.க-தான் ஜெயிக்குது. ஸ்டாலின்தான் முதலமைச்சர்.”

``தி.மு.க-வில் கூப்பிட்டா போய்ச் சேர்ந்திருவீங்களா?”

``நிச்சயமா...  மாபெரும் கட்சியல்லவா தி.மு.க?”

``பதவி எதுவும் கேட்கிற ஐடியா இருக்கா?”

``அதெல்லாம் கேட்க மாட்டேன். பவர் ஸ்டார் பற்றி, தளபதிக்குத் தெரியுமில்லையா. அவரோட இஷ்டம் அதெல்லாம். கொடுத்தா வாங்கிப்பேன்” (சிரிக்கிறார்)

`` `ஐ' படத்துல எந்திரன் கேரக்டரில் நடிச்சுட்டிருந்தீங்க. `எந்திரன்-2'ல இருக்கீங்களா?”

``இல்லை... அந்த வாய்ப்பு கிடைக்கலை. இயக்குநர் என்னைக் கூப்பிடலை. சின்ன இயக்குநர்களிலிருந்து பெரிய இயக்குநர்கள் வரை என்னை நேசிக்கிறாங்க. அதனால, இப்போ நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்கேன்.”

``ஷங்கர் இயக்கத்தில் நடிச்ச அனுபவம் சொல்லுங்க?”

``முதல் தடவை போறப்போவே ரொம்பப் பயந்தேன். ஆனால், ஷங்கர் சார் ரொம்ப நல்ல மனிதர். நான் நடிச்ச சீனை ஷூட் பண்ணும்போதே ஷங்கர் சார், கேமராமேன் சார் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.”

``இன்னும் உங்களுக்கு சி.எம் ஆகணும்கிற ஆசை இருக்குல?”

``ஆமா,  அது எல்லாருக்கும் இருக்கும்தானே! கடவுள்தான் அதைத் தீர்மானிக்கணும்.”

`` `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள உங்களைக் கூட்டிட்டு வர, பெரிய போராட்டமே நடக்குதாமே?"

``கூப்பிட்டாங்க. சிலபல காரணங்களால் தள்ளிப்போகுது. ஆனா, `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள போகணும்னுதான் எனக்கும் ஆசை. இந்த சீஸன் இல்லாட்டியும், அடுத்த சீஸனிலாவது என்னை நீங்க பார்க்கலாம்.”

``நீங்க `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள போயிட்டா தாக்குப்பிடிப்பீங்களா?”

``நிச்சயமா தம்பி. ஆசிரமத்திலேயே இருந்தாச்சு. இதெல்லாம் எனக்கு ஜுஜூபி.”

``கமல் எப்படி தொகுத்துவழங்குறார்?”

```உலக நாயகன் ஆச்சே... பின்னியெடுக்கிறார்.”

``உங்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே நிறைய கேப் விழுந்திருச்சே?”

``இதுவரை நான் 75 படங்களுக்குமேல் பண்ணியிருக்கேனே! இப்பவும் ரசிகர்கள்கிட்ட எனக்கு வரவேற்பு இருக்கு தம்பி.”

``உங்க ``ஆனந்தத்தொல்லை' எப்போ சார் வெளிவரும்?”

``அது ஒரு போட்டியில இருக்கு. படத்துக்கு செலவு முழுக்க நான்தான் செய்தேன். ஆனால், அப்போ கூட இருந்த லேடி ஒருத்தங்க, நான் ஆசிரமத்துக்குப் போன சமயத்துல அவங்கதான் புரொடியூசர்னு சொல்லிட்டாங்க. இதை நான் சட்டப்படி சந்திப்பேன்.”

``சிம்பு படமெல்லாம் இப்போ ஓடுறதில்லையே?”

``எந்தப் படம் தம்பி ஓடுது? படம் வந்தவுடனேயே இப்போலாம் திருட்டு விசிடி, நெட்ல வந்திருது. தம்பி விஷால், இதுக்கெல்லாம் ஒரு நடவடிக்கை எடுப்பார்னு நினைக்கிறேன்.”

``ஆனால், `லத்திகா' 150 நாள் ஓட்டினீங்களே?”

``350 நாள் தம்பி. ஓடலை... ஓடவெச்சேன். ஒரு மாஸ் கொடுக்க என் கைக்காசு போட்டு ஓடவைச்சேன். இப்போ அதுதான் என்னை இங்கே தக்கவெச்சிருக்கு. இந்த ஃபீல்ட்டில் நான் வர எனக்குப் பின்புலமா யாரும் கிடையாது. நான், அஜித்லாம் சுயமா வளர்ந்துவந்தவங்க.”

``ரஜினி, அரசியலுக்குள் வர ஆர்வமா இருப்பதுபோல் தெரிகிறது.  நீங்களும் அரசியலில் குதிச்சு, கட்சி ஆரம்பிக்கிற ஐடியா இருக்கா?”

``இல்லை தம்பி. அவங்க பெரியவங்க. ஆரம்பிக்கட்டும்.”

``ரஜினி, கமல் ரெண்டு பேருமே அரசியல் ஆர்வத்தோடு இருக்காங்க. ஒரு சீனியரா அவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?”

``அட்வைஸ் சொல்ற அளவுக்கு இப்போ எதுவும் தோணலை. இருந்தாலும் கேட்டுட்டீங்க, சொல்றேன். கமல் சாரோட ஆர்வம் கரெக்ட்தான். இருந்தாலும் திடீர் திடீர்னு அறிக்கைவிடுறதெல்லாம் மக்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்ல. ஒருத்தரை பதவி விலகுனு சொல்றதெல்லாம் ஷாக்கா இருக்குல.”

``அப்போ ஊழல் பண்றவங்க ஆட்சி நடத்தலாமா?”

``அவங்க ஊழல் செஞ்சாங்களா இல்லையாங்கிறது நமக்குத் தெரியாதுல? எல்லாரும்தான் ஊழல் பண்றாங்க. செய்றபட்சத்தில் மக்கள்கிட்ட நிச்சயமா அவங்க மாட்டிக்குவாங்க.”

``ரஜினிக்கு?”

``அவர் வர்றேன், வரலைங்கிறதைத் தெளிவா சொல்ல மாட்டேங்கிறார். வந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.”

``அப்படி ரெண்டு பேருமே கட்சி தொடங்கினா, உங்களோட ஆதரவு யாருக்கு?”

``என்னோட ஆதரவைவிட மக்களோட ஆதரவைத்தான் எதிர்ப்பார்க்கிறேன். எனக்கு மாபெரும் கட்சியில் சேரணும்னுதான் ஆசை. அதனால அ.தி.மு.க., தி.மு.க-தான் இப்போதைக்கு என்னோட சாய்ஸ்.”