Published:Updated:

“ஆளப்போகிறான் தமிழன்...!" கமலில் தொடங்கி ரகுமானைக் கடக்கும் 'ஆச்சர்ய' அரசியல்

“ஆளப்போகிறான் தமிழன்...!" கமலில் தொடங்கி ரகுமானைக் கடக்கும் 'ஆச்சர்ய' அரசியல்
“ஆளப்போகிறான் தமிழன்...!" கமலில் தொடங்கி ரகுமானைக் கடக்கும் 'ஆச்சர்ய' அரசியல்

மிழகத்தை தமிழன் ஆளவேண்டும்” எனத் திரைப்பட விழாவொன்றில் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான். அவர் சொன்ன தமிழன் விஜய். 'தலைவா' படத்தில் சர்ச்சையைச் சந்தித்த அதே விஜய். விஜய் பற்றிய இந்தப் பேச்சு சில மாதங்களுக்கு முந்தைய தமிழகத்தைப்பற்றி பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது.

அந்த ஓர் ஆள் இல்லை, ஆளாளுக்கு என்ன பேசுறாங்க பாருங்க” என்பது தெருமுனை டீக்கடைத் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை தவறாமல் பேசப்படும் வார்த்தையாகிவிட்டது. அந்த ஒருவர் ஜெயலலிதா. தமிழகத்தின் அரசியல் தட்பவெப்ப நிலை கொஞ்சம் முரணானது. சினிமாத்துறையிலிருந்து தமிழகம் இதுவரை 4 முதல்வர்களைக் கண்டுவிட்டது. ஆனால், அதிர்ச்சியாக அரிதாரம் பூசியவர்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில்தான் சினிமாக்காரர்கள் உணர்ச்சியவயப்பட முடியாத ஒரு சூழல் இருந்தது. 

திரையுலகிலிருந்து முதன்முதலாகக் கோட்டைக்குக் கோலோச்ச வந்தவர் அண்ணா. அவர் காலத்தில் சினிமாக்காரர்களிடமிருந்து மாற்றுக்கருத்து பொதுமேடைகளில் வைக்கப்பட்டதில்லை.  அண்ணாவின் அரசியல் அத்தனை நாகரிகமானது. ஆனால் திராவிட இயக்கத்துக்குக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸை மேடைகளில் வறுத்தெடுத்த சினிமாக்கூட்டத்தின் தலையாக இருந்தவர் அண்ணா. எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆர் மீதான மரியாதை பாதி, அச்சம் மீதி எனத் திரையுலகினரிடம் எம்.ஜி.ஆருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாக இருந்ததில்லை. விதிவிலக்காக எதிர்கட்சியைச் சேர்ந்த திரையுலகினருக்கு மட்டுமே  தன்னைத் திட்டிக்கொள்ள 'சிறப்புச் சலுகை' அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் தொடங்கி சுருளிராஜன், டி.ராஜேந்தர் வரை இந்தச் சலுகை பெற்றிருந்தார்கள்.  

80களின் மத்தியில் எம்.ஜி.ஆரின் அரசியல் புகழ் பிரமாண்டமாக இருந்த காலத்திலேயே, “எம்.ஜி.ஆர் கருணாநிதியின் கால்துாசு” என அனல் கக்கியவர் டி.ராஜேந்தர். எம்.ஜி.ஆர் அவரைக் கண்டிக்கும் முன் கருணாநிதியே கொஞ்சம் பதறிப்போய் டி.ஆரைத் தட்டிவைத்தார் என்பார்கள். இப்படி அரிதாரம் பூசியவர்கள் அரிதாகவே எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள். தன் மீதான விமர்சனங்களுக்குப் பெரும்பாலும் பதில் அளிக்கமாட்டார். தனது எதிர்வினை மூலம் அந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றிவிடும் என்ற நுண்ணிய எச்சரிக்கை உணர்வு அவருக்கு உண்டு.

ஒருமுறை கமலின் திரைப்பட விழா நடந்தது. தி.மு.க. கூடாரத்தைச் சேர்ந்த அந்தப்படத்தின் இயக்குநர் அதற்கு முந்தைய நாள் முதல்வர் எம்.ஜி.ஆரை மேடையில் திட்டியிருந்தார். அதுதொடர்பான உளவுத்துறை அறிக்கையைப் படித்து எரிச்சலான எம்.ஜி.ஆர் விழா மேடைக்கே அவர் வராமல் செய்துவிட்டார் என்பார்கள். இப்படி அரிதாக எம்.ஜி.ஆர் ரியாக்ட் செய்திருக்கிறார். அதே எம்.ஜி.ஆர்தான் சினிமாத்துறையில் இருந்தபோதே தனக்கு மாற்றாகவோ எதிராகவோ யாரை நிறுத்தவும் யாரையும் அனுமதித்ததில்லை. தனக்கு எதிராக கருணாநிதி தன் மகன் மு.க. முத்துவை சினிமாவில் முன்னிறுத்தமுயன்றபோது கொதித்துப்போயிருக்கிறார். காரணம் எம்.ஜி.ஆரின் நகல் போல் முத்து இருந்ததே. எம்.ஜி.ஆருக்கான யூனிட்டையே முத்துவுக்கும் ஒப்பந்தம் செய்து அதை சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. மேக்கப் முதல் மேலாடை வரை எம்.ஜி.ஆரையே அடையாளப்படுத்தச்செய்தார். 

“மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ” என லட்சுமி திரையில் மு.க.முத்துவைப்பார்த்து பாடுவதாக ஒரு படத்தில் வாலி எழுதியிருந்தார். எரிச்சலான எம்.ஜி.ஆர் வாலியை தோட்டத்துக்கு வரவழைத்து, 'என்ன வாலி, மூன்று தமிழ் தோன்றியதும் மு.க முத்துவிடம்தானா? என நக்கலாகக் கேட்டு வாலிக்குக் கிலி தந்தார்.  யாரையும் உயர்த்தி எழுதுவதில் வஞ்சனையில்லாத வாலிக்கு எம்.ஜி.ஆரின் கேள்வி பயத்தை ஏற்படுத்தியது. “அண்ணே  நீங்கள் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறீர்கள். அவன் வளர்ற பையன். அதான் அப்படி எழுதினேன்” என சமாதானம் சொல்லி நழுவினார் வாலி. 

கருணாநிதியின் ஆரம்பகால அரசியலில் திரையுலகினருக்குப் பேச்சுரிமை 'அளிக்கப்பட்டிருந்தது'. தான் சார்ந்த துறை என்பதாலும், தன் சக அரசியல் எதிரி எம்.ஜி.ஆரும் திரையுலகைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு எதிரான திரையுலகினரின் பேச்சை ஆரம்பகாலங்களில் அவர் அனுமதித்திருக்கிறார். ஆனால், எல்லை மீறும்போது அதற்கான எதிர்வினையையும் கருணாநிதி கடுமையாக ஆற்றுவார். முதலில் தன் திரையுலக சகாக்கள் மூலம் நாசூக்காக சம்பந்தப்பட்டவரை கண்டிக்கச் செய்வது அவர் வழக்கம்.

பின்னாளில் கருணாநிதியின் வாரிசுகள் தலையெடுத்தபோது கருணாநிதியின் பொறுமை அவர்களுக்கு இருந்ததில்லை. எம்.ஜி.ஆரால் ஏற்பட்ட சேதாரங்களை மனதில்கொண்டு பி்ன்னாளில் உச்ச நடிகர்களான கமல் ரஜினி இருவரையும் தன் நட்பு வளையத்திலேயே இறுத்தி வைத்துக்கொண்டார் கருணாநிதி. சமயங்களில் ஜெயலலிதா ஆதரவுக் கருத்துகளை அவர்கள் தெரிவித்த சமயங்களிலும்கூட புன்னகையோடு அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். காலமும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து கற்றுத் தந்த பாடம் அது. 

அவரது ஆட்சியின் இறுதிக்காலங்களில் சினிமாக்காரர்கள் அவரது ஆட்சிக்குறித்தோ தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராகவோ மாறிவிடாதபடி அவர் சினிமாக்காரர்களின் விசேஷங்களுக்குத் தாராளமாக தலைகாட்டினார். கேட்காமலேயே சினிமாத்துறைக்குப் பல திட்டங்களையும், தனிப்பட்ட உதவிகளையும் செய்து அதன்மூலம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சினிமாக்காரர்களையும் வாய்பொத்தி வைத்திருந்தார். சினிமாத்துறைக்குத் தான் ஆபத்பாந்தவன் போலக் காட்டிக்கொள்ள அவ்வப்போது தன் ஆதரவு சினிமாக்காரர்களைக்கொண்டு தனக்குப் பாராட்டுவிழா நடத்திக்கொண்டார்.  அவரது தளபதிகள் ஒருபடி மேலே போய் அவரது விழாக்களுக்கு உச்சநடிகர்கள் வந்தே தீரவேண்டும் என அழைப்பிதழ் அனுப்பாமலேயே காரைமட்டும் அனுப்பிவைக்கும் அளவு போனார்கள். அந்நாள்களில் கருணாநிதிக்கு எடுக்கப்பட்ட எந்தவிழாவானாலும் மேடையில் கருணாநிதியின் இடது வலது என இருபுறமும் ரஜினி கமல் செயற்கையான சிரிப்புடன் நிற்பது டெம்ப்ளேட் ஆனது. 

அப்படி நடந்த ஒருவிழாவில்தான் அஜித் மேடையில் முதல்வர் கருணாநிதி இருக்கையிலேயே, எழுந்து நின்று, 'மிரட்டுறாங்கய்யா" எனத் துணிச்சலுடன் பேசி கருணாநிதிக்கு சங்கடத்தைத் தந்தார். அஜித் மீதான கருணாநிதியின் கோபத்தைக் குறைக்க ரஜினி, கமல் எல்லாம் கோபாலபுரத்துக்குப் படை எடுக்கவேண்டியதானது. 

தன் ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சினிமாக்காரர்களைப் பெரும்பாலும் கருணாநிதி, பொருட்படுத்தியதில்லை. அவர்களுக்கு அரசியலும் ஒரு தொழில் என்பது அவருக்குத் தெரியும். கருணாநிதி, ஜெயலலிதா காலங்களில் அவர்களிடம் தங்களின் துறைக்கு அரசு உதவிகளைப் பெற திரையுலகினர் அடக்கியே வாசித்தனர். குறிப்பாக ரஜினி, கமல் போன்றவர்களே அழைப்பிதழ் இல்லாமலும்கூட கருணாநிதியின் விழாவுக்குச் செல்லும் அளவுக்குப் போனதால் மற்றவர்கள் நிலை சொல்லவேண்டியதில்லை. 

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் ஆளுங்கட்சியைப் பகைத்துக்கொள்ளும் சினிமாக்கலைஞர்களுக்குச் சொந்தத்துறையிலேயே வி.ஆர்.எஸ் வழங்கப்பட்டுவிடும் நிலைமை கருணாநிதி ஜெயலலிதா இருவரின் ஆட்சியிலும் வெளிப்படையா நடந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி ஆதரவுப்பிரசாரம் செய்ததற்காக தன் சினிமா வாழ்க்கையில் 3 ஆண்டுகளைத் தொலைக்கவேண்டியதானது வடிவேலுக்கு. ஜெயலலிதா வடிவேலுவின் ரசிகர் என்பதால் சினிமா வாழ்க்கைக்கு மட்டுமே சேதாரம் ஏற்பட்டது.  

ஜெயலலிதா ஆரம்ப காலங்களில் சினிமாக்காரர்களுடன் நல்லதொரு நட்பு பாராட்டியவர்தான். முதல்வராகி கலந்துகொண்ட முதல் சினிமா மேடையில்தான் ஒரு சினிமா நடிகை என்பதில் பெருமிதப்படுவதாகக் கூறியவர். அரிதாக ஓரிரு படங்களில் முதல்வராகவே தலைகாட்டவும் செய்தார். ஆனால், போகப்போக நேர் எதிரானது அவரது நடவடிக்கை. தி.மு.க-வைச் சேர்ந்த சினிமாக்காரர்களின் பேச்சால் அவர் கொதிப்பானார். எம்.ஜி.ஆர், கருணாநிதிபோல் தன் தாய்வீடான சினிமாவைச் சேர்ந்தவர்களின் பேச்சை அவரால் கடந்துசெல்லமுடியவில்லை. 'பாட்ஷா' படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி, “தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பற்றிப் பேசியதில், மேடையில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்குச்செல்லும் முன்பே மந்திரி பதவியை இழக்கவேண்டியதானது. ரஜினி சோவிடம் அடைக்கலாமாகும் அளவு அவருக்குத் தொல்லைகள் அதிகரித்தன. 96-ல் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கும் அளவு கடும் தொல்லைகளுக்கு ஆளானார். 

கமலுக்கு விஸ்வரூபத்தில் கிடைத்த அனுபவம் உலகமறிந்தது. “மதச்சார்பற்ற நாட்டுக்குச் செல்வேன்” என்ற ஒற்றை வார்த்தைக்காக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் வறுத்தெடுக்கப்பட்டார் கமல். தனக்கு எதிரான குரலை சாத்வீகத்தில் மட்டுமே தடுக்கப்பார்ப்பது எம்.ஜி.ஆர் பாணி. உதாரணத்துக்கு தன்னை விமர்சித்து எழுதியும் பேசியும் வந்த கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி அளித்து கவுரப்படுத்தியது. 

முதலில் சாத்வீகம், பின்பு ரஜோ குணம் இது கருணாநிதி பாணி. எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டுவது ஜெயலலிதா பாணி. இப்படி எம்.ஜி.ஆர், கருணாநிதியின் அணுகுமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஜெயலலிதாவின் அரசியல் பாணி. சொந்தக்கட்சியில் இருந்த திரைக்கலைஞர்களே கூட ஜெயலலிதாவின் அதிரடியான செயல்பாடுகளால் திணறியதுண்டு. யாரிடமும் தன் மனதுக்குபட்டதை சொல்லும் வழக்கம் கொண்டவர் எஸ்.வி.சேகர். ஆனாலும், ஜெயலிதாவிடம் அடக்கியே வாசித்தார். ஜெயலலிதாவிடம் அவரே கூட தாக்குப்பிடிக்கமுடியவில்லை. நடிகர் சங்கத் தேர்தலின்போது இன்னொரு கட்சியின் தலைவரான சரத்குமார், தன் வாகனத்தின் அருகே நெருங்கிப் பேச வந்தபோது அவரைப் புறக்கணித்து அவமானப்படுத்தினார் ஜெயலலிதா. 

தன்னுடைய பேச்சுக்கு எதிர்கருத்து தன் கட்சியிலிருந்து வந்தாலும் பொறுத்துக்கொள்ளும் குணம் அவருக்கு இருந்ததில்லை. ஜெயலலிதா என்ற பெண்மணியின் பெரும் பலவீனம் இது. 

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பொதுவான திரைக்கலைஞர்கள் அடக்கிவாசித்ததில் ஆச்சர்யமில்லை. எதிர்க்கட்சியைச் சார்ந்த கலைஞர்களே கூட வார்த்தைகளை அளந்துதான்பேசினார்கள். ஜெயலலிதாவை துணிந்து எதிர்த்த சில கலைஞர்கள் ஜெயலலிதாவின் அதிரடி வழக்குகளுக்கு அஞ்சி அவரிடமே இறுதியாகத் தஞ்சமடைந்தது நடந்தது. உதாரணம் ராதாரவி. “வேண்டாம் வம்பு” என்று உச்சபட்சமாக பல மேடைகளில் ரஜினியும் கமலுமே ஜெயலலிதாவுடன் புன்னகைத்தபடி நின்றனர். 

தங்களின் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்த, தங்கள் எண்ணத்தை வெளிப்படையாகக் கூற திரைக்கலைஞர்கள் அஞ்சியே கிடந்தனர் அந்நாளில்.  உச்ச நட்சத்திரமான விஜய்யின் தலைவா பட போஸ்டர் விவகாரத்தில் ஜெயலலிதா கற்றுக்கொடுத்த அரசியலை இன்றுவரை விஜய் மறக்கமுடியாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இப்படித்தான் திரையுலகம் மௌனியாகவே இருந்தது. மக்கள் அபிமானம் பெற்றக் கலைஞர்களே அஞ்சியிருந்தார்கள் என்றால் சாமான்யன்நிலை என்னவாகி இருக்கும்...? 

அரசியல் உலகிலும் ஒரு நாகரிகமான அணுகுமுறை ஜெயலலிதா காலத்தில் கடைப்பிடிக்கவில்லை. மாற்றுக் கட்சியினரை எதிர்பாராதவிதமாக சந்தித்த கட்சியினர் கட்டம் கட்டப்பட்டனர். மாற்றுக்கட்சியைச் சேர்ந்த தலைவரின் மகனை மகள் காதலித்துவிட்ட விவகாரம் தெரிந்தபின் அரண்டுபோனார் அ.தி.மு.க. தலைவர் ஒருவர். குழப்பத்தின் உச்சியில் மகளின் திருமணத்துக்குப் போகவே இல்லை அவர். 

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் இன்று அரசியல், திரையுலகம் இரண்டிலும் கடந்த காலத்தில் பேசாமல் வைத்திருந்த அத்தனை பேச்சுக்களையும் பேசுகிறார்கள். இரு திராவிடக்கட்சி நடிகர்களும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்குப் பத்திரிகைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். சங்க விசேஷங்களில் ஒற்றுமையுடன் தலைகாட்டுகிறார்கள். சாதாரணமான தங்கள் அரசியல் கருத்துகளையும் கூட வெளியிடுவதில் அச்சம் கொண்டிருந்தவர்கள் அதைப் பல்லாயிரம் பேர் கொண்ட மேடையில் இன்று பளிச் என சொல்கிறார்கள். 

விஜய் நடித்து வெளியாக உள்ள 'மெர்சல்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமானிடம் “விஜய் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளானதைப் பற்றி கேட்டபோது, “ஆளப்போறான் தமிழன் பாடலை நான் ரசித்துப்போட்டேன். அது வெறும் பாட்டல்ல. ரசிகர்கள் அதை மெய்யாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றார்.  

ஜெ.வுக்கு முன் ஜெ.வுக்குப்பின் என்ற திரைக்கலைஞர்களின் இருவேறு முகங்களை ஒப்பிட்டுப்பார்க்க ரகுமானே நல்ல உதாரணம். ஜெயலலிதாவின் மரணம் சாதித்த விஷயங்கள் இவைதான். திரைக்கலைஞர்கள் மட்டுமல்ல; 'கட்டுண்டோம் விடுதலையானோம்' என்பதுபோலத்தான் சமூக வலைதளங்களில் சாமானியர்களும் தங்கள் கருத்துகளைப் பதிகிறார்கள். ஆரோக்கியமான இந்தச் சூழலை அடுத்து வளர்பவர்களும் வளர்த்தெடுக்கவேண்டியது அவசியம்.

ஆனால், தமிழக அரசியலில் அரசியல் தனித்துவம் மிக்க தலைவர்கள் இனி வர நெடுங்காலம் ஆகலாம். துரதிர்ஷ்டவசமாக இந்தத் தற்காலிக இடைவேளையில்தான் ஒரு சாமானியனும்கூட தைரியமான தன் அரசியல் பார்வையை சமூகத்தின் முன் வைக்கமுடியும். ஆளும் அரசையும் அதன் குறைகளையும் தன் பார்வையில் விமர்சிக்க முடியும். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க முன்வரமுடியும். தற்காலிகமான இந்த இடைவெளி நிரந்தமாவதில்தான் ஜனநாயத்தின் உயிர் இருக்கிறது. 

அந்த ஆரோக்கியமான அரசியலை இனியாவது நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருப்போம்!