Published:Updated:

நான்... நீ... நாம் வாழவே!

பொன்.விமலா,  படம்: ப.சரவணகுமார்

''உயிர் வாழ முள்கூட... ஓர் பறவையின் வீடாய் மாறிடுமே... உயிரே உன் பாதை மலராகும்...'

தான் எழுதிய வரிகளை அழகான குரலில் உச்சரிக்க ஆரம்பிக்கிறார் உமாதேவி. சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஹிட் ஆகியிருக்கும் 'நான் நீ நாம்’ பாடலை எழுதியதன் மூலம், தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு பெண் பாடலாசிரியர்.

''திருவண்ணாமலை மாவட்டத்துல அத்திப்பாக்கம் கிராமம்தான் சொந்த ஊர். அப்பா, விவசாயி. கூடவே பெட்டிக்கடையும் வெச்சிருந்தார். 4 அண்ணன், 2 அக்கா, ஒரு  தங்கச்சினு மொத்தம் 8 பேர் நாங்க. பி.ஏ. தமிழிலக்கியம், எம்.ஏ., எம்.ஃபில், பிஹெச்.டினு முடிச்ச நான், சென்னை, சர் தியாகராய கல்லூரியில தமிழ் விரிவுரை யாளரா இருக்கேன்'' என்று பூர்வாசிரமம் சொன்ன உமாதேவி, தன் கவிதாயினி ஜனனம் பற்றித் தொடர்ந்தார்.  'ஒன்பதாவது படிக்கும்போது அண்ணனோட டைரியில இருந்த கவிதைகளை வாசிச்சப்போ, அவரை மாதிரி கவிதை எழுதணும்னு ஆசைப்பட்டேன். நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்துல கவிதை, கட்டுரை போட்டிகள்ல கலந்துகிட்டு நிறைய பரிசுகள் வாங்கினேன். கல்லூரி காலங்கள்ல சிற்றிதழ்கள் தொடங்கி முக்கிய வார இதழ்கள்லயும் கவிதைகள் பிரசுரமாச்சு.

நான்... நீ... நாம் வாழவே!

முதுகலை  படிக்கும்போதே  நிறைய  தமிழ்  ஆர்வலர்களோட அறிமுகம் கிடைச்சுது. அப்படித்தான் குட்டி ரேவதி அறிமுகமானார். அவர் மூலமா 'திசைகளைப் பருகியவள்’னு கவிதை தொகுப்பை வெளியிட்டேன். என் இலக்கிய ஈடுபாட்டை கவனிச்ச இயக்குநர் ரஞ்சித், இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.

'வன்மம் நிறைந்த ஒரு ஆணை, ஒரு பெண் நெறிப்படுத்த வேண்டும். இதுதான் பாடல் களம்'னு சொன்னார் இயக்குநர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்கிட்ட மெட்டை கொடுத்தப்போ, பல வரிகளை நிரப்பிப் பார்த்தேன். எதுவும் பிடிபடல. வீட்டுக்கு வந்து ஔவையாரை யோசிச்சேன். அவரோட பாடல் ஒன்றில், ஒரு பெண்ணுக்குப் போரையே நிறுத்தக் கூடிய திறமை இருக்கிறதா எழுதியிருந்ததைப் படிச்சிருக்கேன். அதை  மனசுல வெச்சுட்டு எழுதினேன். எல்லாருக்கும் பிடிச்சுடுச்சு. இது என்னோட முதல் பாட்டா இருந்தாலும், வரி மாறாம அப்படியே படத்துல வந்திருக்கிறது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது. இயக்குநர் ரஞ்சித்துக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும், எல்லா வகைகளிலும் ஊக்கம் கொடுக்கும் என் கணவருக்கும் நன்றி சொல்லியே ஆகணும்!''

நெகிழ்ச்சியின் விளிம்பில் பேசுகிறார், உமாதேவி!

நான்... நீ... நாம் வாழவே!

தே 'மெட்ராஸ்’ திரைப்படத்தில் கைதட்டல் வாங்கியிருக்கும் இன்னொரு பெண், ரித்விகா. படத்தில் 'மேரி’ கதாபாத்திரத்தில், வடசென்னைப் பெண்ணுக்கான உடல் மொழியையும் வட்டார வழக்கையும் அசலாகக் கொடுத்திருப்பவர். ''நான் கே.கே. நகர்ல இருக்கேன். எனக்கும் வடசென்னைக்கும் ரொம்ப தூரம். ஆனா 'மெட்ராஸ்’ல் கமிட் ஆனதில் இருந்து வடசென்னைப் பொண்ணாவே மாறிட்டேன்.

பி.எஸ்சி., ஃபிசிக்ஸ் படிச்சிட்டு இருந்தப்போ, மாநிறமான பொண்ணை, 'பரதேசி' படத்துக்காக பாலா சார் தேடறது தெரிஞ்சு, என் நண்பர்கள் என்னை அவர் முன்ன நிறுத்தினாங்க. 'கருத்தகன்னி’ கேரக்டருக்கு 'ஓ.கே' பண்ணிட்டார்். அதுக்குப் பிறகு சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சேன். இப்போ 'மேரி’!

தெரிஞ்சே தப்பு பண்ற புருஷனைத் திருத்த அவன் பொண்டாட்டி எப்படி எல்லாம் முயற்சி பண்றாங்கிறதை நிறைய ஊடலோடயும் கொஞ்சலோடயும் சொல்வா 'மேரி’. வடசென்னையில நிறைய 'மேரி’க்கள் இருக்காங்க. பொண்டாட்டி மேல காதலும் குழந்தை மேல அன்பும் இருந்தாலும் ரவுடித்தனம்தான் வாழ்க்கைனு அவங்களைத் தவிக்கவிட்டுட்டுப் போற பலருக்கும், அதுக்குப் பதிலா வீம்பையும் வீறாப்பையும் விட்டுடலாம்னு தோணும் இந்தப் படம் பார்த்த பின்னாடி. படத்துல நடிச்சு முடிக்குற வரைக்கும் 'நீ சரியாவே நடிக்கல’னு ரஞ்சித் சார் சொல்லிட்டே இருந்தார். படம் வந்த பிறகு எனக்கு வந்த முதல் பாராட்டு அவரோடதுதான்!'' என்ற ரித்திகா, சட்டென 'மேரி’யாக மாறி,

''தோ... இந்த கடாமூஞ்சிய... பாத்தொன்னயே... புட்சிச்சி. எப்ப வந்து லவ்வ சொல்லும்னு காத்துக்கினே இருந்தேன்... வந்து சொன்னோன்னயே கல்யாணம் பண்ணிக்கினேன்!'' என்று அசத்துகிறார் ரித்விகா!