Published:Updated:

‘‘ரஹ்மான் பாடல்களுக்கு ஸ்பெஷல் ரிப்பீட் மோட் பட்டன் இருக்கு!’’ - இசையமைப்பாளர் ஜிப்ரான்

பா.ராகுல்
‘‘ரஹ்மான் பாடல்களுக்கு ஸ்பெஷல் ரிப்பீட் மோட் பட்டன் இருக்கு!’’ - இசையமைப்பாளர் ஜிப்ரான்
‘‘ரஹ்மான் பாடல்களுக்கு ஸ்பெஷல் ரிப்பீட் மோட் பட்டன் இருக்கு!’’ - இசையமைப்பாளர் ஜிப்ரான்

தமிழ் திரைப்பட இசையில் தனித்துத் தெரியும் பல மெட்டுகளின் மூலம் திரையிசையைத் தனதாக்கிக்கொண்டவர். இவரின் இசைக் கோப்புகள் அனைத்தும் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு அவரிடமே போட்டியிடுவதை, திரைப் பாடல்கள் வழியே நாம் உணரலாம். பல்வேறு இசை வடிவங்களிலிருந்து யூனிக்கான இசையைப் படைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். தற்போதைய இசை உலகின் இளைய மகனாக விளங்கும் ஜிப்ரான், மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து, மாணவர்களின் கேள்விகளுக்கு உற்சாக பதிலளித்தார். 

``விஸ்வரூபம்-2 என்னாச்சு?''

``ரிலீஸ் எப்போனு தெரியலை. ஆனா, இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் ப்ளான் பண்ணிருக்கோம்.''

``சினிமாவில் சாதாரண மனிதர்களால் பெரிய இடத்துக்குப் போக முடிவதில்லையே ஏன்?''

``அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நானும் சாதாரண மனிதன்தான். சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்த 
கோயம்புத்தூர்காரன். இங்கே சாதிக்க திறமையும், திறமையை வெளிப்படுத்த சரியான இடமும்தான் அவசியம்.''

`` `சினிமாவில் முன்னுக்கு வர கஷ்டங்கள் படணும். அப்பதான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்'னு ஒரு ஸ்டீரியோடைப் இருக்கிறதே?''

``நான் ஒரு குட்டி கதை சொல்றேன். அது கஷ்டமா... சந்தோஷமானு நீங்களே முடிவுபண்ணிகோங்க. பத்தாவது படிக்கும்போது, அப்பாவுடைய பிசினஸ் ஃபெய்லியர் ஆகிடுச்சு. கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு வந்துட்டோம். டென்த்தோடு படிப்ப நிறுத்திக்கிட்டு, இசை தெரிஞ்சதால விளம்பரம், ஜிங்கிள்ஸ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷங்களுக்குள்ள 800-க்கு மேற்பட்ட விளம்பரங்களுக்கு மியூசிக் பண்ணினேன். நிறைய சம்பாதிச்சேன். சொந்தமா வீடு வாங்கினேன். அப்புறம்தான் கல்வியோட தேவை தெரிஞ்சது. அப்புறம், பிரைவேட்ல ப்ளஸ் டூ படிச்சுட்டு, சொந்த வீட்டை வித்து, லண்டன் போயி மியூசிக் படிச்சேன். இந்தியா வரும்போது, அப்ப இருந்த க்ளையன்ட்ஸ் யாருமே, என் தொடர்புல இல்லை. அப்பதான் `வாகை சூடவா' படத்துக்காக சற்குணம் அறிமுகம் ஆனார். மறுபடியும் முதல்லயிருந்து ஆரம்பிக்குது லைஃப்.''

``கமலுக்கும் உங்களுக்குமான அறிமுகம்?''

```விஸ்வரூபம்' ஷூட்டிங்ல இருந்த டைம், கௌதமி `வாகை சூடவா' ஆல்பம் பற்றிச் சொல்லியிருக்காங்க. பாடல்களைக் கேட்டுட்டு, அங்கே இருந்த எல்லார்கிட்டயும் கருத்து கேட்டிருக்கார். ஆண்ட்ரியாகூட, `ஹி நோஸ், வாட் ஹி டிட்'னு சொல்லியிருக்காங்க. அப்படி ஆனதுதான் அறிமுகம். அப்புறம் அவரே கால் பண்ணிப் பேசினார்.''

``இசையமைப்பாளர்களிலேயே அதிகம் படிச்சவர் நீங்க, படிப்புக்கும் இசைக்கும் சம்பந்தம் இருக்கா?''

`` நிச்சயமா. கமல் சார் மாதிரியான திரையுலக ஆளுமை, ஒரு சீனைச் சொல்லிப் புரியவைக்கும்போதும் ரெஃபரன்ஸ் கொடுக்கும்போதும் ஈஸியா புரிஞ்சுக்க, கல்வி கொடுத்த அறிவு உதவியா இருக்கு. அவங்க  எதிர்பார்க்கிற இசையைக் கொடுக்க  முடியுது. இசை தவிர, வேற படிக்கவும் ஆர்வம் இருக்கு. இப்போ அனிமேஷன், 3டி மேக்ஸ் படிச்சுட்டிருக்கேன்.''

``நல்ல இசை என்பது, படத்தோட வெற்றி-தோல்வி சார்ந்ததா?''

``ஆம். இசை எவ்வளவு நல்லா இருந்தாலும் படத்தோட வெற்றிக்குப் பிறகுதான் இசைக்கான ரீச் கிடைக்குது. உதாரணத்துக்கு, `உத்தமவில்லன்' படத்துல ஏழு விதமான பாடல்கள், எட்டு விதமான ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் இருக்கும். கமர்ஷியலா பார்த்தா, படம் தோல்வி. இசைக்கான ரீச் இல்லைன்னுதான் சொல்லணும்.''

``இன்றைய காலகட்டத்தில் இசையை உருவாக்க இன்ஸ்ட்ருமென்ட்ஸ் தேவையில்லையே... சாஃப்ட்வேர் போதுமானதா இருக்கே?''

``ஃப்ரீசெட் சவுண்ட்ஸ் வெச்சு சாஃப்ட்வேர்ல உருவாக்கிற இசைக்கும், லைவ்வா இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வெச்சு உருவாக்கிற இசைக்கும் வித்தியாசம் இருக்கு. இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வெச்சு உருவாக்கிற இசையில்தான் உயிர் இருக்குனு நான் நம்புறேன். சாஃப்ட்வேர்ஸ், சவுண்ட் இன்ஜினீயரிங் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். நல்ல இசையை உருவாக்க, ஒரு இன்ஸ்ட்ருமென்ட்கூட போதும்.''


 

``ஏ.ஆர்.ரஹ்மான் இசை பற்றி..?''

``ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்கு ஸ்பெஷல் ரிப்பீட் மோட் பட்டன் இருக்கு. முதல் தடவை கேட்கும்போது, `மறுபடியும் கேட்கலாமா?'னு தோணும். இரண்டாவது தடவை கேட்கும்போது `நல்லாயிருக்கே!'னு தோணும். மூன்றாவது தடவை கேட்கும்போது `தி பெஸ்ட்'னு தோணும்.''

``விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் ஆதியும் நடிக்க வந்துட்டார். நீங்க எப்போ ஹீரோ ஆகப்போறீங்க?''

``நமக்கு நடிக்கிறதெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லைங்க. டைரக்டர் கேட்டார்னு ஒரு படத்துல கேமியோ ரோல் பண்ணியிருக்கேன். மற்றபடி புரொடியூசர் ஆகணும்னு ஆசை இருக்கு. ஒருசில குறும்படங்கள் புரொடியூஸ் பண்ணியிருக்கேன். புரொடியூசரா சில விருதுகளும் வாங்கியிருக்கேன்.''

``நீங்க இசையமைப்பார் ஆகலைன்னா என்னவாகியிருப்பீங்க?''

`` `குக்'கா இருந்திருப்பேன். நல்லா சமைப்பேன். சாப்பிடவும் செய்வேன்... பார்த்தாலே தெரியலையா?'' என்று கண்ணடித்தார் இசையமைப்பாளர்  ஜிப்ரான்.