Published:Updated:

மினி இந்தியா, சத்யம் தியேட்டர், மிட்நைட் ஹோட்டல், சென்னைக்கு குவியும் பெண்களின் லைக்ஸ்!#Chennai378

மினி இந்தியா, சத்யம் தியேட்டர், மிட்நைட் ஹோட்டல், சென்னைக்கு குவியும் பெண்களின் லைக்ஸ்!#Chennai378
மினி இந்தியா, சத்யம் தியேட்டர், மிட்நைட் ஹோட்டல், சென்னைக்கு குவியும் பெண்களின் லைக்ஸ்!#Chennai378

'சென்னை' என்கிற பெயரே பலரைச் சிலிர்க்க வைக்கும். பல சாதனையாளர்களுக்கும் அடைக்கலம் கொடுத்திருக்கும் சென்னைக்குப் பல முகங்கள் உண்டு. வெளிநாட்டினரும் பார்த்து வியக்கும் பல புகழ்மிக்க இடங்களும் இங்கு உண்டு. பல சரித்திர நிகழ்வுகளும் இங்கே அரங்கேறியிருக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்து இன்று உச்சத்தைக் தொட்டிருக்கும் பிரபலங்கள், சென்னை குறித்த தங்களிடன் உணர்வுகளை இங்கே பகிர்கிறார்கள்,

கஸ்தூரி, நடிகை
''சென்னையில நைட் ரெண்டு மணிக்கும் சாப்பாடு இருக்கிற ஹோட்டல் அது..!"
''இபிஎஸ், ஓபிஎஸ் மாதிரி எனக்கும் சென்னை மெரீனா ரொம்பப் பிடிச்ச இடம். மெரீனா கடற்கரையை ஒட்டிய ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் என் பள்ளிப் படிப்பை முடிச்சேன். லைட் ஹவுஸுக்கு கீழதான் என் பள்ளிப் பருவத்தின் பல நாட்கள் நகர்ந்திருக்கு. அங்கே இருக்கிற ஆல் இந்தியா ரேடியா நடத்திய கவிதைப் போட்டியில் ஆங்கிலக் கவிதை எழுதி நான் வாங்கின 100 ரூபாய் பரிசுதான், என்னோட முதல் சம்பாத்தியம். ஜல்லிக்கட்டுப் பிரச்னையப்போகூட நான் மெரினாகூட இணைந்திருந்திருக்கேன். ஃப்ளைட்ல சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும்போது மெரீனாதான் முதலில் கண்ணுக்குத் தெரியும். என் ஆரோக்கியத்துக்கும்கூட மெரீனாதான் காரணம். காலையில் அங்கதான் வாக்கிங் போவேன்.  என் பள்ளித்தோழி பஸ் வீலில் சிக்கி அடிபட்டு இறந்ததும் மெரீனா சாலையிலதான். இப்படி ஒரு வருடத்தின் 365 நாட்களுக்கும் எனக்கு மெரீனா நினைவுகள் கொடுக்கும். என் சந்தோஷம், துக்கம், ரொமான்ஸ், சிந்தனைகள் எல்லாத்துக்கும் தாய்மடியா மெரீனா இருக்கு. கூவம் நதிக்கரையில் பிறந்து வளர்ந்த பொண்ணு நான்னு எப்பவும் காலரைத் தூக்கிப்பேன். திரு.வி.க பாலத்துல கம்பீரமா பார்த்துட்டு இருக்கிற யாழிகளுக்கு ஸ்கூல் முடிச்சுப் போகும்போது டாட்டா காட்டிட்டுப்போவேன். இப்போ காரில் செல்லும்போதுகூட அந்த எட்டு முகம் கொண்ட நான்கு யாழிகளுக்கு டாட்டா காட்டுறது என்னோட வழக்கம். 
என்னோட அடுத்த லவ், சென்னையின் பெருமையான அண்ணா நூற்றாண்டு நூலகம். இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் போயிருக்கேன். 20க்கும் மேற்பட்ட நாடுகளின் நூலகங்களுக்குப் போயிருக்கேன். லண்டனில் இருக்கும் நூலகத்தைவிடவும் பெரியது அண்ணா நூலகம். என் ரெண்டு குழந்தைகளின் தொப்புள் கொடி உறவும் அந்த நூலகம்தான். அமெரிக்காவில் இருக்கும் என் குடும்பத்தினர் இங்க வரும்போது நான் அழைத்துச் செல்லும் முதல் இடம், அண்ணா நூலகம்தான். 


சென்னையில் நான் விரும்பிச் சாப்பிடுற இடங்கள் நிறைய. கபாலீஸ்வரர் கோயில் தெருக்களின் கையேந்திபவன்,  நடேசன் பூங்காவுக்குப் பின்னாடி இருக்கும் கையேந்திபவன், எக்மோர்ல நண்பர் ஒருவர் நடத்தி வரும் 'Matsya' உணவகம்னு வரிசையாக சொல்லிட்டே போகலாம். 'Matsya' ஹோட்டலுக்கு நைட் ரெண்டு மணிக்குப் போனாலும் சாப்பிட்டுட்டு வரலாம். அதேபோல் சேலம் தட்டுவடைக் கடை, மந்தவெளி பஸ் ஸ்டாண்டுக்கு வெளியில் விற்கும் கடலை, பொறி... என் ஃபேவரைட். போயஸ் கார்டனில் இருக்கும் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் 'டாரியோஸ்' ரெஸ்டாரன்டில் இருக்கும் பீட்ஸா, இத்தாலியில் சாப்பிட்ட ஃபீல் தரும்!" பாரதி பாஸ்கர், பட்டிமன்றப் பேச்சாளர்
''அன்னையாகத் திகழும் சென்னை!"
"நான் பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாம் சென்னைதான். சந்தோஷம், அடையாளம், புகழ் என இந்தச் சென்னை எனக்குக் கொடுத்தது நிறைய. வரலாற்றை தாங்கி நிற்கும் பல இடங்கள் இங்க இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கடற்கரையோரமிருக்கும் விவேகானந்தர் இல்லம். அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில்தான் நான் படித்தேன். அந்தப் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடமாடும் நூலக வண்டி வந்து நிற்கும். அந்த ரெண்டு மணிநேரம்தான், என் வாசிப்புப் பழக்கத்துக்கு அடிதளமா அமைந்தது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, லட்சக்கணக்கான மாணவர்களோட கனவு சாம்ராஜ்ஜியம்...  கிண்டி பொறியியல் கல்லூரி. அங்கதான் நான் படிச்சேன். 

கடற்கரையை ஒட்டிய அழகும், மிடுக்குமாக காட்சிதரும் கட்டடங்கள், எத்தகைய கவலை பொருந்திய மனதையும் இதமாக்கும் கடல் அலை, திருவான்மியூரில் வசித்த எங்கள் வீட்டுக்கு அருகில், மெரினாவைப்போல கூச்சல் இல்லாமல், சவுக்கு மரங்களுக்கிடையே ஊடுருவிவரும் இதமான இசை இதெல்லாம் எப்போதும் என் நினைவில் இருப்பவை. 'அடடே!' எனச் சொல்லும் அளவுக்கு சென்னை நவீனமயமாக மாறிப்போனதன் விளைவாக, சிறு வயதில் நான் பார்த்து ரசித்த தியேட்டர்கள், சாப்பிட்ட உணவகங்கள், விளையாடிய இடங்கள் பலவும் இன்றைக்கு தடம் இல்லாமல் போய்விட்டன. அது குறித்த சின்ன ஆதங்கமும் எனக்கிருக்கிறது.

எனக்குள் இருந்த பேச்சாற்றலுக்கு உரிய அடையாளத்தை கொடுத்து, இன்றைக்கு உலகின் பல இடங்களிலும் பட்டிமன்றப் பேச்சாளராக பேசும் வாய்ப்பைக் கொடுத்திருப்பது, சென்னைதான். வங்கிப் பணியாளராக இருந்தாலும், இப்போதும் என் பேச்சாற்றல்லை அதிகம் வெளிப்படுத்துவதும் சென்னையில்தான். சென்னையை 'வந்தேறிகள் நகரம்' என பலரும் சொல்வார்கள். அது ரொம்பவே அபத்தமான, எனக்குப் பிடிக்காத வார்த்தை. இந்த உலகத்தில் யாருக்கும், எதுவும் நிரந்தரமில்லை. சென்னை, நம் எல்லோருக்கும் சொந்தமான நகரம். எத்தனை பேர் வந்தாலும், அன்போடு வரவேற்று அடைக்கலம் கொடுத்து அவர்களைப் புகழ்பெறச் செய்யும் சென்னை நகரத்தினை, 'நம் நகரம்' என சொல்வதுதான் சரி. என் குழந்தைப்பருவ சென்னை, நிஜமாகவே சிங்கார சென்னையாகத்தான் இருந்தது. அதிக வாகன நெரிசலில்லாத, விபத்தில்லாத போக்குவரத்து, மாசு இல்லாத சுவாசக் காற்று, தடையில்லாத தண்ணீர் என அனைத்தும் கிடைத்தன. ஆனால், இன்றைக்கு அவையெல்லாம் கிடைக்காத இந்த சென்னை, பலரையும்போல எனக்கும் வருத்தத்தைக் கொடுக்கிறது. இந்நிலை மாறி, பழைய சிங்காரச் சென்னையை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில், நம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் அன்னையாக அடைக்கலம் கொடுக்கப்போவது இந்தச் சென்னைதானே!"


    
ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை 
''சத்யம் தியேட்டர்லதான் படம் பார்ப்பேன்... ஏன்னா..!" 
''நான் பிறந்து வளர்ந்தது சென்னை, தி.நகர்ல. நாங்க அப்போ ஹவுஸிங் போர்ட்ல தங்கியிருந்தோம். தீபாவளி அன்னைக்கு நானும் என் அண்ணனும் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து, குளிச்சு, புது டிரெஸ் போட்டுட்டு, யார் அதிகமாக பட்டாசு வெடிக்கிறாங்கனு போட்டிப் போட்டுட்டு வெடிப்போம். சென்னை என்றாலே பலருக்கும் ஞாபகம் வர்ற பீச், எனக்கும் பிடிச்ச இடம். விடுமுறை நாட்களை அங்க கழிக்கிறது அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். மெரீனா, பெசன்ட் நகர் பீச்களை அடுத்து மகாபலிபுரம் பீச் ரொம்பப் பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸ் மீட்-க்கு திட்டமிட்டா, அது நிச்சயமா பீச் ஸ்பாட்டாதான் இருக்கும். அடுத்ததா, சத்யம் தியேட்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறையப் படங்களை அங்கதான் பார்த்திருக்கேன். ஏன்னா, அந்தத் தியேட்டர் பாப்கார்ன் எனக்கு அவ்ளோ இஷ்டம்!" உ. வாசுகி, சமூக செயற்பாட்டாளர் 
''போராட்டக் களமே சென்னையில் பிடித்த இடம்!" 
''நான் பிறந்த ஊரும் எனக்குப் பிடித்த ஊரும் திருச்சி.  மார்க்சிஸ்ட் கட்சி பணிகளுக்காக என் பெற்றோர் சென்னை வரும் சில சமயங்களில் நானும் உடன் வருவதுண்டு. சென்னை கிறித்துவக் கல்லூரியில்(1974-77) மூன்று ஆண்டுகள் படித்தேன். பிறகு, வங்கிப் பணியில் சேர்ந்து, யூனியன் வங்கி ஊழியர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்த பின், சங்கத்தின் தலைமையகமான சென்னைக்கு 1984ல் வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அன்றிலிருந்து நான் சென்னைவாசி! 

வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்க பணிகளின் நிமித்தமும், சென்னைக் கலைக்குழுவுக்காக பிரளயன் இயக்கிய பெண் நாடகத்திற்காகவும் (எனக்கு நீளநீள வசனங்கள் கொண்ட சூத்திரதாரி பாத்திரம்) சென்னையின் பல பகுதிகளில் அலைந்திருக்கிறேன். சென்னையை அடையாளப்படுத்த வேண்டும் என்றால், ஒரு மினி இந்தியா என்று சொல்வேன். பல மொழி பேசக் கூடியவர்கள் இணைந்து வாழ்வது இதன் தனிச் சிறப்பு. உழைப்பாளிகள் நிரம்பிக் கிடக்கும் பகுதி. கொத்தவால்சாவடி ஒரு தனி பிரதேசமாக இருக்கும். அதே போல், மூர் மார்க்கெட்டில் எது வேண்டுமானாலும் கிடைக்கும். லஸ்சில் இருக்கும் நடைபாதை புத்தகக் கடை இன்னும் அபாரம்.

சென்னையில் எனக்குப் பிடித்த இடம் என்றால் குறளகம், பாரிமுனை பகுதியைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அநேகமாக மாதர் சங்கத்தின் பல்வேறு போராட்டங்கள் குறளகம் எதிரில்தான் நடக்கும். ஒரு முறை ஷ்யாம் சுந்தர் ஐபிஎஸ் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, 'குறளகத்தைக் கடக்கும் போதெல்லாம் நீங்கள் மைக்கைப் பிடித்து எங்களைத் திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன், பேசாமல் காவல்துறை பயிற்சி பள்ளிக்கு வந்து நேராகவே திட்டுங்கள்' என்றார். 1980களில் முத்தாண்டிக்குப்பம் வசந்தாவை அப்பகுதி காவல்துறையினர் பாலியல் வல்லுறவு செய்த நிகழ்வு நடந்தது. கைது செய்யுங்கள் என்று போராடினால், அவர்களைக் காணவில்லை என்று உயர் அதிகாரிகள் சொன்னார்கள். குறளகத்தில் மறியல் என்று நோட்டீஸ் போட்டோம். மொத்தக் காவல்துறையும் அங்கு குவிந்தது. ரகசிய தகவல் அனுப்பி பெண்களை ஆர்மீனியன் தெரு சர்ச்சுக்கு வர சொல்லிவிட்டு, திடீரென பாரிமுனை சாலையை, பாப்பா உமாநாத் அவர்கள் தலைமையில் மறித்துவிட்டோம். மைல் கணக்கில் வாகனங்கள் நின்றுவிட்டன. காவல்துறை ஓட்டம் ஓட்டமாக வந்து சேர்ந்து எங்களைக் கைது செய்வதற்குள் திக்குமுக்காடிவிட்டது. அன்று மாலையே தலைமறைவாக இருந்த காவலர்கள் சரணடைந்தனர், கைதாயினர்.

மாற்றம் என்றால், மத்திய, தென் சென்னையின் சில பகுதிகள் பெருநகரமாக மாறியிருக்கின்றன. வட சென்னை, அதாவது ஒரிஜினல் சென்னை பெரிய மாற்றம் எதுவும் இன்றி நிற்கிறது. ஏழைகள் அதிகம் இருக்கும் பகுதி அரசாங்கத்தாலும், திட்டம் தீட்டுபவர்களாலும் கவனிக்கப்படாது என்பதற்கு உயிருள்ள உதாரணம் இது. நகர வளர்ச்சி என்பது வசதியானவர்களுக்கான கட்டமைப்பு மட்டும் அல்ல. அதில் உள்ள உழைப்பாளி மக்களின் அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளடங்கியதே. குடியிருப்பு, குடிநீர், போக்குவரத்து, சாக்கடை தேங்கி கொசு மொய்ப்பது என்று வாழ்க்கையே போராட்டம்தான் எளிய மக்களுக்கு. இதனை சரி செய்யாமல், பெரு நகரம் என்று பெயர் வைத்து என்ன பயன்?" 
 

அடுத்த கட்டுரைக்கு