Published:Updated:

வெரைட்டி காட்டும் விஜய் சேதுபதி... தனி ரூட்டில் சிவகார்த்திகேயன்... 2020 பிளான் என்ன?

விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்

ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் எஸ்.கே சின்னத்திரையிலும், வி.ஜே.எஸ் வெள்ளித்திரையின் ஒரு ஓரத்தில் நின்று தன்னை நிரூபிக்க போராடிக்கொண்டிருந்தவர்கள். அதன்பின்னர், அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை அவர்களே பல மேடைகளில் சொல்லிவிட்டனர். இப்போது அவர்களுடைய ரூட் எப்படியிருக்கிறது?

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பின்பற்றி வந்த மூன்றெழுத்து ஃபார்முலாவை உடைத்த சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும்தான் இக்கட்டுரையின் கதாநாயகர்கள்.

சென்னையின் அடையாளமான `மெரினா'தான் சிவகார்த்திகேயனுக்கும் தமிழ் சினிமாவில் அடையாளத்தைக் கொடுத்தது. காலடி பதிக்கும் முன்பே தன்னுடைய இலக்கை நிர்ணயித்தவர் சிவகார்த்திகேயன். மறுபக்கம் இலக்குகள் ஏதுமின்றி வெரைட்டியை மட்டுமே காட்ட நினைத்து தமிழ் சினிமாவில் உலா வந்துகொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இதுவும் அவர் நிர்ணயித்தது அல்ல, `கோயிங் வித் த ஃப்லோ' ஃபார்முலாதான். இவ்விருவருக்குமே ஒத்துப்போகும் ஒரே விஷயம் உழைப்பு. ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் எஸ்.கே சின்னத்திரையிலும் வி.ஜே.எஸ் வெள்ளித்திரையின் ஒரு ஓரத்திலும் நின்று தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள். அதன்பின்னர், அவரவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை அவர்களே பல மேடைகளில் சொல்லிவிட்டனர். இப்போது அவர்களுடைய ரூட் எப்படியிருக்கிறது?

சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி
சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி

குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் எல்லா ஹீரோக்களுக்கும் தங்கள் படங்களின் மூலம் திரையில் தன்னைப் பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம். ரஜினி - கமலுக்குப் பிறகு, தற்போதைய உச்ச நட்சத்திரங்களான விஜய்யும் அஜித்துமே இந்த ஃபார்முலாவைப் பின்பற்றியவர்கள்தாம். அந்தப் பரிசோதனை முயற்சியில் கிடைத்த படங்கள்தான் `திருமலை'யும் `தீனா'வும். இந்த இரு படங்களுக்குப் பிறகுதான் இருவரின் கிராஃபுமே மாறிப்போனது.

ஆனால், விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் அப்படியானவர்கள் அல்லர். இதற்கு முன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் எதை மேற்கொண்டார்களோ, அதை மேற்கொள்ளக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்து வருகிறார்கள். இதில் விஜய் சேதுபதி இன்னும் உக்கிரம். சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோக்களுக்கு `The Boy next door' என்கிற பிம்பம் வந்துவிட்டால் ரசிகர்களாக அவர்களை இறுகப்பற்றிக்கொள்வார்கள். எஸ்.கே ஆன் ஸ்க்ரீனில் நம்ம வீட்டு பிள்ளையென்றால், வி.ஜே.எஸ் ஆஃப் ஸ்கீரினின் நம்ம வீட்டு பிள்ளை.

எஸ்.கே தன்னுடைய இலக்கை முன்பே நிர்ணயத்துவிட்டதால், அதை நோக்கியே அவரது படங்களும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. விகடன் பிரஸ் மீட்டில் சிவகார்த்திகேயனிடம், `` `இந்தப் பையனுக்கெல்லாம் பிசினஸ் இருக்கா'னு சொன்னவங்கயெல்லாம் இப்போ என்ன சொல்றாங்க?'' எனக் கேட்டதற்கு, `பிசினஸ் இருக்கு பார்த்துக்கனு சொல்வாங்க' என்று சிரித்தபடி சொன்னார் சிவா. நிஜம்தான். இதற்கு இவரது சமீபத்திய படங்களே சான்று.

விமர்சன ரீதியாக `வேலைக்காரன்', `சீமராஜா', `மிஸ்டர் லோக்கல்' எனத் தொடர்ந்து லேசாகச் சறுக்கினாலும், தன்னுடைய பாணியை சிவகார்த்திகேயன் விடுவதாக இல்லை. அதே ஃபார்மட்டில், அதே ஜானரில், வித்தியாச முயற்சிகள் என எதையும் மேற்கொள்ளாமல் `நம்ம வீட்டு பிள்ளை'யாக பாண்டிராஜின் படம் மூலம் வந்தார்; வெற்றியும் பெற்றார். எவ்வளவு விமர்சனங்களுக்கு ஆளானாலும் அதைச் சற்றும் தனது தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான பாணியையும் பாதையையும் மட்டுமே குறிக்கோளாக வைத்து பயணிக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

மறுபக்கம், வெற்றியோ தோல்வியோ விஜய்சேதுபதி, வெரைட்டிதான் முக்கியமென பயணித்துக்கொண்டிருக்கிறார். `செக்கச் சிவந்த வானம்' படத்தில் ரசூல் இப்ரஹிம், `சீதக்காதி'யில் ஐயா ஆதிமூலம், `பேட்ட' படத்தின் ஜித்து என வெவ்வேறு வெரைட்டியில் வந்தவர், `ஐயா என் பேரு மாணிக்கம்... எனக்கு இன்னொரு பேரு இருக்கு' எனச் சொல்லாமல் சொல்லி மாணிக்கம் (எ) ஷில்பாவாக `சூப்பர் டீலக்ஸ்'ஸில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, ஓய்வின்றி உட்கார நேரமில்லாமல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதுவும் ஸ்டேட் விட்டு ஸ்டேட் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு எனக் கிடைக்கின்ற கேப்களில் எல்லாம் தடம் பதிக்க முற்படுகிறார்.

இதற்கு இடையில் விஜய்யுடன் இணைந்த சேதுபதியாக அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தந்தார். பல்வேறு காரணங்கள் இதற்குப் பின்னால் ஒளிந்திருந்தாலும், இவரது இந்தச் செய்கை தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பிட்ட உயரத்தை எட்டிய பின்னர், வேறொரு ஹீரோவுடன் இணைந்து நடிப்பதை பல ஹீரோக்கள் தவிர்த்துவிடுவார்கள். இப்படி மற்ற நடிகர்கள் செய்யத் தயங்குவதை `ஜஸ்ட் லைக் தட்' எனச் செய்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் வி.ஜே.எஸ். பொது மேடைகளில் தன்னுடைய சக நடிகர்களின் பெயரையே சொல்லத் தயங்கும் நடிகர்களுக்கு மத்தியில் வி.ஜே.எஸ்ஸின் இந்தச் செய்கை அவரது இமேஜை இன்னும் உயர்த்தியிருக்கிறது.

ஹீரோவாகிய பின்னர், தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்பது தமிழ் சினிமாவின் ஐதிகம். இதை இருவருமே ஆரம்பித்தனர். அவர்களுக்கான பிரத்யேக பிம்பமே தயாரிப்பிலும் பிரதிபலித்தது. நட்புக்கு மரியாதை கொடுத்த சிவா, அருண்ராஜாவின் `கனா'வை நிறைவேற்றினார். தயாரிப்பிலிருக்கும் பிசினஸை உணர்ந்தபின், `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தயாரித்தார். தற்போது தன் தம்பியின் `வாழ்' படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

மறுபக்கம், சேது. தன்னைப் போலவே படத்தையும் வித்தியாசமாகத் தயாரிக்க ஆரம்பித்தார். பிள்ளையார் சுழியையே `ஆரஞ்சு மிட்டாய்'யில் போட்டார். அதன் பின்னர், `ஜுங்கா'. ஒரு தயாரிப்பாளராக முழு வெற்றியை ருசிக்க முடியாவிட்டாலும் சற்றும் தளராமல், கலைக்கு மரியாதை கொடுக்க நினைத்து `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை தயாரித்தார். படமும் பல விருதுகளைத் தட்டிச் சென்றது. `வெற்றியோ தோல்வியோ' ஃபார்முலாவைத் தன்னுடைய தயாரிப்பிலும் பயன்படுத்தினார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Photo courtesy : Karthik Srinivasan
ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல்... விஜய் சேதுபதிக்கு வரிசைகட்டி நிற்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?

சிவகார்த்திகேயனின் நண்பன் அருண்ராஜா காமராஜாவைத் தொடர்புகொண்டு பேசினேன். ``காலேஜ் டைம்ல சிவாவைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் ஆனா, காலேஜ் ஐ.விக்காக பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டிருக்கும்போது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மிமிக்ரி பண்ணி விளையாடிட்டிருந்தோம். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. அன்னைக்கு இருந்த சிவகார்த்திகேயன்தான் மக்கள் கொண்டாடுற `நம்ம வீட்டு பிள்ளை' சிவகார்த்திகேயனா இப்போ இருக்கார். வளர்ச்சி அவருடைய முயற்சியின் பயனாதான் இருந்துகிட்டிருக்கு. உண்மையைச் சொல்லணும்னா கல்லூரி நாள்கள்ல ரொம்பவே சந்தோஷமா இருந்தோம். அதுக்கப்புறம் ஆளாளுக்கு பொறுப்புகள் வந்துருச்சு, அவருடைய பொறுப்புகள் இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு.

ஒரு நாள், `நீ எதுக்கு சினிமாவுக்கு வந்த ஒழுங்கா பாட்டுப் பாடுறதையும், லிரிக்ஸ் எழுதுறதையும் நிறுத்திட்டு கதை எழுது'னு சொன்னார். கதையும் ரெடி. வேற தயாரிப்பாளரை ரெஃபர் பண்ணுவார்னுதான் நெனச்சேன். கடைசியில அவரே தயாரிக்க முன் வந்தது எனக்கு நெகிழ்ச்சியாகிடுச்சு. ஒரு தயாரிப்பாளரைத் தாண்டி, `என்னோட ஃபிரெண்ட் இவன். படம் பண்றான். இதுதான் இவனுக்கு வாழ்க்கை'னு சொல்லி ஐஷ்வர்யா ராஜேஷையும் படத்துக்குள்ள கொண்டு வந்தவர் சிவாதான். அவர்கிட்ட எப்பவுமே ஒரு பிளானிங் இருக்கும். வெறுமனே எதுலேயும் இறங்கிட மாட்டார். முழுசா தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம்தான் களத்துல இறங்குவார். சிவா எனக்கு ஒரு நண்பனா மட்டும் இல்லாம, அப்பாவாவும், இண்டஸ்ட்ரி உள்ள கூட்டிட்டுப்போற ஒரு தயாரிப்பாளராவும் இருந்திருக்கார். நான் தலைமேல தூக்கி வெச்சிருந்த `கனா'வை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்தது சிவாதான். இன்னைக்கு இல்லை, என்னைக்குமே அவர் எனக்கு நல்ல நண்பர், வழிகாட்டி'' என்று நெகிழ்ந்தார்.

விஜய் சேதுபதியின் பால்ய நண்பரான ஜான்ஸனைத் தொடர்புகொண்டு பேசினேன். அவரைப் பத்திச் சொல்லுங்க என்று சொல்வதற்குள், ``வேணும்னு கேட்டு வர்றவங்ககிட்ட இல்லைனு சொல்லவே மாட்டாப்ள'' என்றுதான் ஆரம்பித்தார். ``தொடர்ந்து இப்போ படம் நடிக்கிறதுக்கான காரணம், கலை மீது இருக்கும் காதல்தான். பெரிய நடிகன், சின்ன நடிகன்னுலாம் எதுவுமே பார்க்காம என்ன கதாபாத்திரம்னு மட்டும் கேட்டுப் பண்ணக்கூடியவர் சேது. நண்பனின் இந்த வளர்ச்சியை இப்போ பார்க்கும்போது ரொம்ப பிரமிப்பா இருக்கு. ஸ்கூல் படிக்கிறப்போலாம் ரொம்பக் கூச்சப்படுவார், ரொம்ப அமைதியாவே இருப்பார்.

காலேஜ்ல காமர்ஸ் சேர்ந்தோம். துபாய்க்கு வேலைக்குப் போனார். அந்தச் சமயத்துலகூட அவருக்கு சினிமாவுல நடிக்கிற ஆசை இல்லை. திடீர்னு, `மாமா நான் சினிமாவுல நடிக்கிறேன்டா'னு சொன்னார். `உன்னுடைய ஹையிட்டுக்கும் வெயிட்டுக்கும் கண்டிப்பா நடிக்கலாம் மாமா'னு சொன்னேன். என்னோட நண்பன் இப்போ ஒரு நல்ல உயரத்துல இருக்கார். இதுக்கு நடுவுல நிறைய பணக் கஷ்டம், மனக் கஷ்டம்லாம் வந்திருக்கு. வெற்றியோ தோல்வியோ எதுக்கும் துவண்டு போகாம சினிமா மேல இருக்கிற காதல்னால வெறித்தனமா நடிச்சுகிட்டிருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.

Arunraja Kamaraj - Johnson
Arunraja Kamaraj - Johnson
``ஒருமுறை ஜெயிச்சிட்டா ஒத்துக்கமாட்டாய்ங்க... ஒவ்வொருமுறையும் ஜெயிக்கணும்!'' - சிவகா  பிறந்தநாள் ஸ்பெஷல்

இருவரும் தங்களுக்கு எதுவேண்டுமென்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். அதேபோல் தங்களுக்கு என்ன தெரியும் என்பதிலும் தீர்க்கமாக இருக்கிறார்கள். எஸ்.கே-வுக்கு சினிமா என்பது வியாபாரம். தன்னை நம்பி வரும் தயாரிப்பாளர்களுக்கு முடிந்தவரை லாபத்தை ஈட்டித் தர வேண்டுமென்ற எண்ணமுடையவர். மறுபக்கம் வி.ஜே.எஸ் தன்னால் எப்படியெல்லாம் உருமாற முடியுமோ அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கக்கூடியவர். படத்தின் நாயகனாக இல்லாமல், கதையின் நாயகனாகப் பயணித்து வருகிறார். கதைக்குத் தன்னால் எந்தளவுக்கு நியாயம் சேர்க்க முடியுமென்பதை உணர்ந்து தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இருவருமே அவரவர்களது பயணத்தின் இலக்கை அடைய வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு