Published:Updated:

``நடிகைன்னா வேற தொழில் பண்றவன்னு நடிகர் சங்க குரூப்லயே பேசுறாங்க!" - வெடிக்கும் வாட்ஸ்அப் விவகாரம்!

ரஞ்சனி
ரஞ்சனி

நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரை அட்மினாகக் கொண்ட, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாட்ஸ் அப் குழுவில் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல், பெரிய வாக்குவாதமாக மாற, இந்த கொரோனோ பிரச்னைக்கிடையிலும் விவகாரம் காவல் நிலையம் வரை வந்துள்ளது.

வாட்ஸ்அப் சண்டை குறித்து சிலரிடம் பேசினோம்.

``SIAA லைஃப் மெம்பர்' என்பதுதான் அந்த வாட்ஸ்அப் குழுவின் பெயர். விஷால் அணி, ஐசரி அணி என தேர்தல் நேரத்துக் கசப்பையெல்லாம் மறந்துவிட்டு, எல்லாரும் ஒற்றுமையாகத்தான் அந்த குரூப்ல இருந்துட்டு வந்தாங்க. ஆனாலும் அப்பப்ப பழைய பகை எட்டிப் பார்க்குதுங்கிறதுக்கு, இப்ப நிகழ்ந்திருக்கிற இந்த விவகாரம்தான் சாட்சி என்றபடி விவகாரத்தை விவரிக்கத் தொடங்கினார்'' அந்த சீனியர் நடிகை.

``கொரோனாவால் இப்ப எல்லாரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறதால, வேலையில்லாத நலிந்த கலைஞர்களுக்கு செய்த உதவிகள் பத்தி குழுல பதிவுகள் போடத் தொடங்கினாங்க சிலர். அங்குதான் குழு மோதல் எழத் தொடங்கிருச்சு. `நீங்க இவ்ளோதான் செஞ்சீங்க, நாங்க அவ்ளோ செஞ்சோம்’னு ஒப்பீட்டு வார்த்தைகள் பலர்கிட்ட இருந்தும் வரத் தொடங்கின. அப்படியே பேச்சு வலுத்து, ஒருத்தரையொருத்தர் கேலி, கலாய்னு போச்சு. விவகாரம் திசைமாறுதுன்னு அப்பவே எங்களை மாதிரி ஆட்களால கணிக்க முடிஞ்சுது. ஆனாலும் சொன்னா யார் கேக்கறாங்க?

விஷால்
விஷால்

ஒருகட்டத்துல நாடக நடிகர் வாசுதேவன்கிறவர், தான் நாடகக் கலைஞர்களுக்குச் செய்த உதவிகளைப் பற்றி சில பதிவுகள் போட, நடிகை `முதல் மரியாதை’ ரஞ்சனி `யார் இவர்?’னு கேட்டாங்க. அவங்களைக் கேட்டா, `டி.பி.யில போட்டோ இல்லாததாலயும், உண்மையிலேயே அவரைப் பத்தித் தெரியாததாலயும் கேட்டதாச் சொல்றாங்க. அப்படிச் சொன்னதுடன், `நல்லா பி.ஆர் வொர்க் பண்றார்’னு வாசுதேவன் குறித்துக் குறிப்பிட்டாங்க.

வாசுதேவன் மற்றும் இன்னும் சில நாடக நடிகர்களுக்கு `யார் இவங்க’னு கேட்டது கோபம். பதிலுக்கு வாசுதேவனும். `நாங்க நாடக நடிகர்கள். உங்க தொழில் வேறு’ எனப் பேசிவிட பிரச்னை பெரிதாகிவிட்டது.

இவங்களுக்கு நாலு பேரு; அவங்களுக்கு நாலு பேருனு குரூப்புக்கு உள்ளேயே குரூப். அந்த அணி இந்த அணின்னு பழைய பஞ்சாயத்தையெல்லாம் இழுத்து... உலகமே கொரோனோ பீதியில இருக்கிற இந்தச் சூழ்நிலையிலயும் நாலு நாளா ராத்திரி பகல் பார்க்காம சண்டை போட்டுட்டு இருக்காங்க.

மனோபாலா, குட்டி பத்மினி போன்ற நடிகர்கள்லாம் கூட பிரிவினை பேசாதீங்கன்னு சொல்லிப் பார்த்தாங்க. ஆனாலும் சண்டை நின்னபாடில்லை. ரெண்டு தரப்புக்கும் பொதுவான சிலர் வெறுப்பாகி குரூப்பை விட்டு வெளியேறியதும் நடந்தது. ஆனாலும் இந்த நிமிஷம் வரை பிரச்னை முடிஞ்ச மாதிரி தெரியலை'' என்றார்.

SIAA whatsapp group
SIAA whatsapp group

வாசுதேவன், நடிகர் விஷால் தலைமையிலான கடந்த நிர்வாகத்தில் நியமன செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்றால், நடிகை ரஞ்சனி ஐசரி கணேஷ் அணி சார்பாகப் போட்டியிட்டவர். வாசுதேவனிடம் பேசினேன்.

``எனக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. நாடகங்கள் தவிர சில படங்கள்லயும் நடிச்சிருக்கேன். 15 வருஷமா சங்கத்துல ஆயுட்கால உறுப்பினரா இருக்கேன். `பாண்டவர் அணி’ போட்டியிட்ட முதல் தேர்தல்ல நானும் நடிகை ரஞ்சனியும் சேர்ந்தே கூட தேர்தல் வேலைலாம் பண்ணியிருக்கோம். அப்படியிருக்கிற சூழல்ல, எங்க மாவட்டத்தைச் சேர்ந்த நாடக நடிகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வாங்கறதுக்கு நான் எடுத்த சில முயற்சிகள் பத்தி வாட்ஸ்அப் குழுல போட்டேன். அப்ப அவங்கதான் முதல்ல `நீங்க யாரு, நீங்கெல்லாம் நடிகரா?’னு என்னைக் கேட்டாங்க. அது எனக்குக் கோபத்தை உண்டாக்குச்சு. `சங்கத்தின் குரூப்ல எப்படி வெளியாள் ஒருத்தர் இருக்க முடியும். இது கூட உங்களுக்குத் தெரியலையா?’னு கேட்டேன். எங்க தொழில் நாடகம். உங்க தொழில் சினிமா ரெண்டும் வேற வேறன்ற அர்த்தத்துலதான் மெசேஜ் போட்டேன். உடனே, தப்பாப் பேசிட்ட, மன்னிப்புக் கேளு இல்லாட்டி வழக்கு போடுவேன்கிறாங்க. நான் உள்நோக்கத்தோடு எதையும் பேசலை. அவங்களாப் பேச்சு கொடுத்து இப்ப வழக்கு போடுவேன்னா என்ன சொல்றது? போடுங்க சந்திக்கத் தயாரா இருக்கேன்னு சொல்லிட்டேன்'' என்கிற வாசுதேவன் திருவண்ணாமலை எஸ்.பி அலுவலத்தில் நடிகை ரஞ்சனி மீது தன்னைத் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாகப் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார்.

வாசுதேவன்
வாசுதேவன்

ரஞ்சனியிடம் பேசினேன். ``தொழில்ங்கிற வார்த்தைக்கு சினிமா வட்டாரத்துல என்ன அர்த்தம்னு அந்தாளுக்குத் தெரியாதா? யாருன்னு தெரியலைனு கேட்டதுக்கு எவ்ளோ பெரிய வார்த்தை? திரிலோகச்சந்தர், பாரதிராஜா போன்ற ஜாம்பவான்கள்கிட்ட வொர்க் பண்ணியிருக்கேன். இதுவரை ஒருத்தர் என்கிட்ட இந்த மாதிரி வார்த்தைகளைப் பேசியிருப்பாங்களா? அதனால வழக்கு போடுறதுங்கிறதுல இருந்து பின்வாங்குற பேச்சே இல்லை. இதுல இன்னொரு ஷாக் என்னன்னா, குழுல ஒரு நடிகைகிட்ட சக நடிகர் ஒருத்தர் அநாகரிகமான வார்த்தைகள்ல பேசறார். அட்மினா இருக்கிற விஷால், நாசர் சார், கார்த்தி மூணு பேருமே ஒரு வார்த்தை கூட பேசலைங்கிறதுதான்'' என்றார் கோபமாக.

விரைவில் பிரச்னை பெரியளவில் வெடிக்கும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு