Published:Updated:

ஜோதிகாவின் பேச்சும் சலங்கை கட்டிய சர்ச்சையும்!

ஜோதிகா

`கோயிலுக்கு நிதி வழங்குவதுபோல், பள்ளி - மருத்துவமனைகளுக்கும் மக்கள் நிதியளிக்க வேண்டும்' என்று நடிகை ஜோதிகா பேசியதன் பின்னணி என்ன?

ஜோதிகாவின் பேச்சும் சலங்கை கட்டிய சர்ச்சையும்!

`கோயிலுக்கு நிதி வழங்குவதுபோல், பள்ளி - மருத்துவமனைகளுக்கும் மக்கள் நிதியளிக்க வேண்டும்' என்று நடிகை ஜோதிகா பேசியதன் பின்னணி என்ன?

Published:Updated:
ஜோதிகா

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை உதாரணமாக முன்வைத்து நடிகை ஜோதிகா பேசிய பேச்சுதான் இணைய உலகின் இன்றைய தடதடக்கும் வைரல்!

விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகா, தற்போது தான் நடித்துவரும் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை அந்த விழாவில் பகிர்ந்துகொண்டார். அதாவது, ``தஞ்சை பெரிய கோயில், மிகவும் அழகான ஆலயம். அருமையாகப் பராமரித்து வருகிறார்கள். ஆனால், அதே கோயிலின் எதிரே அமைந்துள்ள அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி, பார்க்கவே முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

கோயிலுக்கு நிதி உதவி அளிக்கிறீர்கள். உண்டியலில் காசு போடுகிறீர்கள். தயவுசெய்து அதேயளவு காசை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அளித்துப் பராமரியுங்கள்'' என்று அந்த விழா மேடையில் மக்களைக் கேட்டுக்கொண்டார் ஜோதிகா. அவரது இந்தப் பேச்சை அரங்கிலிருந்த அனைவரும் கைகளைத்தட்டி வரவேற்றனர்.

விருது விழா நிகழ்ச்சியில் ஜோதிகா பேசிய இந்தப் பேச்சு, சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து இந்தப் பேச்சின் வீடியோ காட்சியை இணையத்தில் பகிரும் சிலர், `இந்து மத அடையாளமான தஞ்சை கோயிலை இழிவுபடுத்தும் விதமாக ஜோதிகா பேசிவிட்டார். கோயிலுக்கு மக்கள் செலுத்திவரும் உண்டியல் வசூலைப் பற்றிப் பேசும் ஜோதிகா, ஏன் சர்ச், மசூதிகளின் உண்டியல் வசூல் பற்றிப் பேசவில்லை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயிலுக்கு கொடுக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்கு கொடுக்கச் சொல்லும் ஜோதிகா, நடிகர் சூர்யா நடிக்கும் சினிமா படங்களின் வசூலை மருத்துவமனைக்குக் கொடுக்கலாமே...' என்று விதம் விதமான கேள்விகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிடுபவர்கள், `ஜோதிகா பேசியதில் என்ன தவறு..? மனித உயிர் குடிக்கும், உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய கடவுளர்கள் எல்லாம், கதவுகளை இறுக மூடித் தாழிட்டுக்கொண்ட இந்நாளில், மருத்துவமனைகள்தான் மக்களின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றன... அப்படியிருக்கும்போது மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை இப்போதுகூட சிந்திக்கத் தெரியாதவர்கள்தான் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்' என்கிறார்கள் பதிலடியாக.

எஸ்.வி.சேகர் ட்வீட்
எஸ்.வி.சேகர் ட்வீட்

இப்படி காரசார மோதலாக இணைய உலகைக் கலக்கிவரும் இவ்விஷயம் குறித்து, பா.ஜ.க ஆதரவாளரான நடிகர் எஸ்.வி.சேகரும் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார். அதாவது, `ஜோதிகாவின் பேச்சு முதிர்ச்சியற்றது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் அவசியம்தான். ஆனால், கோயிலுக்குப் பதில் இதைச் செய்யுனு சொல்லுறது அயோக்கியத்தனம்' என்று தனது பதிவில் காரம் கூட்டியிருந்தார்.

ஆனால், அவரது இந்தப் பதிவுக்கு எதிர்வினையாக, `மனிதர்களுக்கு செய்யும் சேவை, கடவுளுக்கு செய்யும் சேவைக்கு சமம்' என்ற விவேகானந்தர் வரிகளையும், `ஆயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிடவும், ஓர் ஏழைக்கு கல்வி புகட்டுவது கோடி புண்ணியம்' என்ற பாரதியாரின் வரிகளையும் பதிவிட்டு பதிலடி கொடுத்தனர் நெட்டிசன்கள். இதையடுத்து தனது பதிவையே நீக்கிவிட்டார் நடிகர் எஸ்.வி.சேகர்.

இதற்கிடையில், ``இந்து மதத்தில், ஆழ்ந்த நம்பிக்கையுடையவர் நடிகர் சிவகுமார். மேலும், அகரம் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு கல்விச் சேவை செய்துவரும் சூர்யாவும் அனைவராலும் பாராட்டப்படக்கூடியவர். ஆனால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிகா, கோயில்களுக்கு நிதியளிப்பு செய்வதை `விட'வும் மருத்துவமனைகளுக்கு நிதியளிப்பது முக்கியம் என்று சொல்லியிருக்கக் கூடாது'' என்றும் சிலர் பேசி வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஜோதிகாவின் மனதைக் காயப்படுத்துகிற அளவுக்கு மருத்துவமனையில் அவர் கண்ட காட்சியின் பின்னணி என்ன என்ற கேள்வியோடு ஜோதிகாவை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குநரான இரா.சரவணனிடம் பேசினோம்...

இரா.சரவணன்
இரா.சரவணன்

``வளர்ந்து வருகிற நடிகர்கள்கூட, மருத்துவமனை சம்பந்தப்பட்ட காட்சி என்றால், `செட் அமைத்து நடிக்கலாமே' என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், ஜோதிகா மேடம், `படத்தின் இயல்பு கெட்டுவிடக் கூடாது' என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு, தஞ்சாவூரில் உள்ள ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கே நேரடியாக வந்து நடித்துக்கொடுத்தார். அப்போது அந்த மருத்துவமனை சூழல் மற்றும் அங்கே சிகிச்சை பெற்றுவரும் அடித்தட்டு மக்களின் பரிதவிப்புகள் அவரை வெகுவாகவே பாதித்துவிட்டன.

குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்த நிலையில், மருத்துவமனையில் உரிய படுக்கை வசதிகூட இல்லாத காரணத்தால், ஒரு ஓரமாக அந்தத் தாயும் பச்சிளம் குழந்தையும் ஒண்டியிருந்த காட்சி, ஜோதிகாவின் மனதை ரொம்பவே பாதித்திருக்கிறது. விருது விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை என்பதால், அங்கே ஜோதிகா என்ன பேசியிருந்தார் என்பதுகூட, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறவரையில் எனக்கும் தெரிந்திருக்கவில்லை.

தமிழனின் பெருமையை உலகுக்கே உரக்கச் சொல்லும் தஞ்சை பெரிய கோயிலின் கம்பீர அழகுக்கு எதிரிலேயே இப்படியொரு அவலநிலையில் அரசு மருத்துவமனை இருக்கலாமா... என்பதுதான் அவருக்குள் எழுந்திருக்கும் கேள்வி. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் அடித்தட்டு மக்களின் வலியும் வேதனையும் அவர் மனதை ரொம்பவே காயப்படுத்தியிருக்கிறது. சமூக நலன் சார்ந்த அந்த வலியைத்தான் விழா மேடையில், ரொம்பவும் இயல்பாகப் பதிவு செய்திருந்தார் ஜோதிகா.

அந்தப் பேச்சின் எந்த ஓர் இடத்திலும் அவர் கோயிலைப் பற்றிக் குறைத்துப் பேசவில்லை. ஆனால், திட்டமிட்டு சிலர் அவரது பேச்சைத் திரித்துப்பேசி திட்டுகின்றனர். இதே நபர்கள்தான், `மக்கள் பணத்தில் வாழ்வாங்கு வாழும் சினிமா நடிகர்கள், மக்கள் பிரச்னைகள் பற்றிப் பேசமாட்டார்களா...' என்றும் விமர்சிப்பார்கள். அதேசமயம், இதுபோன்று சமூக நலனை முன்னிறுத்திப் பேசுகின்றபோது, `நடிக்க வந்தவர்கள் நடித்துவிட்டுப் போக வேண்டியதானே... இதைப்பற்றியெல்லாம் இவர்கள் எப்படிப் பேசலாம்....' என்று சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.

இரா.சரவணன் ட்வீட்
இரா.சரவணன் ட்வீட்

இவர் இதைப் பேச வேண்டும், இதைப் பேசக்கூடாது என்றெல்லாம் அங்கீகாரம் அளிப்பதற்கு இவர்கள் யார்? ஓர் இந்தியக் குடிமகன், இந்தச் சமூக பிரச்னைகள் குறித்துப் பேச உரிமையில்லை என்றால், வேறு யார் பேசுவார்கள்?

பிரபலங்கள் சர்ச்சையாகப் பேசினால், ஊடகத்தில்தான் அதுபற்றிய செய்திகள் பரவலாகப் பெரிதுபடுத்தப்படும். ஆனால், இந்த விஷயத்தில் சமூக ஊடகம் வழியே மட்டும்தான் சர்ச்சைகள் வம்படியாக வளர்க்கப்பட்டு வருகிறது. அதாவது, கொரோனா பாதிப்பினால் தினம் தினம் மக்கள் செத்து மடிவதும் உயிர்களைக் காக்க மருத்துவ தெய்வங்கள் போராடி வருவதுமான இந்தக் காலகட்டத்தில், திட்டமிட்டு சர்ச்சையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக, இதன் மூலம் அவர்கள் எந்த விஷயத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஜோதிகாவின் பேச்சு இப்போதும் யூடியூபில் கிடைக்கிறது... அதைக் கேட்டுப்பாருங்கள். `தயவு செய்து பள்ளி - மருத்துவமனைகளுக்கும் நிதியளியுங்கள்' என்றுதான் பணிவாக மக்களைக் கேட்கிறார். கோயிலுக்கு நிதியளிப்பதை `விடவும்' என்று அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

ஜோதிகா
ஜோதிகா

நம் பிரதமர் நரேந்திர மோடியேகூட, `கோயில்கள் கட்டுவதைவிடவும் கழிவறைகள் கட்டப்படுவதுதான் முக்கியம்' என்று பேசியிருக்கிறார். இதனால், கோயில்களை பிரதமர் அவமதித்துவிட்டார் என்று அர்த்தம் ஆகிவிடுமா? எனவே, ஜோதிகா பேசியது சரியா, தவறா என்பதை, ஜோதிகாவின் பேச்சைக் கேட்கும் ஒவ்வொருவரின் மனதும் முடிவு செய்துகொள்ளட்டும்!'' என்றார் தெளிவாக.