Published:Updated:

இதற்குத்தானே ஆசைப்படுகிறோம் விஜய்சேதுபதி?

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் விஜய்சேதுபதியின் நடிப்பில் எந்த வித்தியாசங்களையும் உணரமுடியவில்லை

இதற்குத்தானே ஆசைப்படுகிறோம் விஜய்சேதுபதி?

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் விஜய்சேதுபதியின் நடிப்பில் எந்த வித்தியாசங்களையும் உணரமுடியவில்லை

Published:Updated:
விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி

அன்புள்ள விஜய் சேதுபதிக்கு...

முதன்முதலில் ஒரு நடிகராக நீங்கள் தமிழக மக்களின் அன்புக்குப் பாத்திரமான நாள்கள் நினைவிருக்கிறதா? விஜய்சேதுபதியின் வருகை என்பது வெறுமனே ஒரு நடிகரின் நுழைவு மட்டுமல்ல, காலங்காலமாகப் பார்த்து சலித்த கதைப்போக்கு, காட்சிகளிலிருந்து தமிழ் சினிமா தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட காலகட்டம் அது. நாயக பிம்பம் தகர்ப்பு, புதுப்புதுக் கதைகள், பிளாக் ஹியூமர் என்று தமிழ் சினிமாவில் பரிசோதனை முயற்சிகள் அறிமுகமானபோதுதான் விஜய்சேதுபதி என்னும் நடிகரும் அறிமுகமானார்.

‘எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி’, ‘புதுப்பேட்டை’ ‘நான் மகான் அல்ல’ என்று பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நீங்கள் நடித்தாலும் விஜய்சேதுபதி என்னும் கலைஞனைத் தமிழகம் கண்டுகொண்டது 2010க்குப் பிறகான வித்தியாச சினிமாக்களில்தான். ‘பீட்சா’ வழக்கமான பேய்ப்படமில்லை. ஒரு முழுநீளப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் நீங்கள் மட்டுமே. ஒட்டுமொத்தப் பார்வை யாளர்களையும் உங்களோடு சேர்ந்து பயப்பட வைத்தீர்கள். அந்தப் படத்தின் ஒற்றை டார்ச்லைட்தான் விஜய்சேதுபதியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உங்களை இன்னும் உச்சிக்கு நகர்த்தியது. ‘என்னாச்சு...கிரிக்கெட் விளையாண்டோம்...நீதானே அடிச்சே?’ என்று நீங்கள் படம் முழுவதும் மீண்டும் மீண்டும் பேசிய அந்த ஒருவரி வசனத்துக்கு தியேட்டரே வெடித்துச் சிரித்தது. ‘சூது கவ்வும்’ - குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் கொண்ட நடுத்தரவயது அப்பாவி கடத்தல்காரனாக வேறு பரிமாணம் காட்டினீர்கள் விஜய்சேதுபதி. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் உங்கள் பாத்திரத்தின் பெயர் என்னவோ ‘சுமார் மூஞ்சி குமார்.’ ஆனால் உங்கள் நடிப்பால் நீங்கள் தமிழகத்துக்கே சூப்பர் மூஞ்சி குமார் ஆனீர்கள்.

இதற்குத்தானே ஆசைப்படுகிறோம் விஜய்சேதுபதி?

வரிசையாக வெற்றிகள்...குவிந்த பாராட்டுகள்...சடசடவென்று முன்னணி நடிகர்கள் வரிசைக்கு நகர்ந்தீர்கள். ஆண்கள், பெண்கள் என்று வெறித்தனமான ரசிகர்கள் குவிந்தார்கள். ‘விஜய்சேதுபதி படம் என்றாலே வித்தியாசமான அனுபவம்’ என்ற முடிவுக்கு வந்தோம். திரைக்கு வெளியிலும் உங்கள் வெளிப்படைத் தன்மையையும் இயல்பான எளிமையின் அழகையும் ரசித்தோம். எந்தக் கேள்விக்கும் பகட்டின் பூச்சு இல்லாமல் பளிச் பதில்கள் தந்தீர்கள். ‘ரசிகர்களைக் கொண்டாடுவதுதான் கலைஞர்களுக்கு அழகு’ என்று முத்தங்களால் இலக்கணம் வரைந் தீர்கள். ஒரு தயாரிப்பாளராகவும் உங்கள் இடம் முக்கியமானது. ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ இரண்டும் வசூல் குவிக்காத படங்களாக இருக்கலாம். ஆனால் பரிசோதனை முயற்சிகளை நம்பிய படங்கள். நீட் முதல் ஏழு தமிழர் விடுதலை வரை உங்கள் சமூக அக்கறையை வெளிப் படுத்தினீர்கள். துணிச்சலான சமூக, அரசியல் விமர்சனங்களை முன் வைத்தீர்கள். இவை எல்லாம் சேர்ந்துதான் உங்களை ‘மக்கள் செல்வனாக’ மாற்றின.

எல்லாம் சரி, இப்போதைய விஜய்சேதுபதி குறித்து சமூக வலைதளங்கள் முதல் ரசிகர்களின் தனிப்பட்ட உரையாடல் வரை முன்வைக்கப்படும் விமர் சனங்களை, அக்கறை யுடன்கூடிய ஆதங்கங்களைக் கவனிக்கிறீர்களா விஜய்சேதுபதி? ‘விஜய்சேதுபதி படங்கள் என்றால் வித்தியாசமான அனுபவம்’ என்ற ரசிகர்களின் நம்பிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதை உணர்கிறீர்களா நீங்கள்?

உங்கள்மீது வைத்த அன்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் நம்பிக்கை சிதையாமல் காப்பாற்றவேண்டிய பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது.

‘றெக்க’ படத்தில் ஆரம்பித்தது உங்கள் சறுக்கல் சரித்திரம். ‘கவண்’, ‘ஜுங்கா’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’, ‘சிந்துபாத்’ என்று அது தொடர்ந்துகொண்டிருப்பதைக் கவலையுடன் கவனிக்கிறோம். உங்கள் சொந்தத் தயாரிப்பில் வெளியான ‘ஜுங்கா’வில் பாடல்கள், சண்டைக்காட்சிகள், ஃபாரின் லொகேஷன் எல்லாம் இருந்தன. ஆனால் நாங்கள் விரும்பிய விஜய்சேதுபதி என்று வித்தியாச நடிகரைத்தான் காணவில்லை. இடையில் ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ வெளியானபோது நடுவில் காணாமல் போன பக்கம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தோம். ஆனால் மீண்டும் ‘சிந்துபாத்’, ‘சங்கத்தமிழன்’ என்று தொடர்ச்சியாக ஏமாற்றங்களைப் பரிசளித்தீர்கள். தமிழகம் தாண்டியும் ‘சைர நரசிம்மா ரெட்டி’, ‘உப்பண்ணா’ என்று நீங்கள் நடித்த பிறமொழிப்படங்களும் பெருமை சேர்க்கவில்லை.

அவ்வப்போது ‘மாஸ்டர்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘ஓ மை கடவுளே’ என்று சில படங்கள் மகிழ்வித்தாலும் நீங்கள் நடித்துக்குவிக்கும் படங்களின் எண்ணிக்கைக்கு இது மிகமிகக் குறைவு. திரையரங்குகள், ஓ.டி.டி, தொலைக்காட்சி, யூடியூப் என்று எங்கு பார்த்தாலும் நீங்கள்தான். ஆனால் அவற்றிலெல்லாம் விஜய்சேதுபதியின் முகம் இருக்கிறதே தவிர, உங்கள் தனித்துவ அடை யாளமில்லை. இரண்டு வாரங்களில் உங்கள் மூன்று படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தொடக்கக்காலத்தில் நாங்கள் மூன்று படங்களில் பார்த்து ரசித்த விஜய்சேதுபதியைக் காணவில்லை.

``என்னாச்சு... `பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களில் ரசித்தோம். என்னாச்சு... நீங்கதானே நடிச்சீங்க?’’ என்று ரசிகர்கள் கேட்கும் நிலை.

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் விஜய்சேதுபதியின் நடிப்பில் எந்த வித்தியாசங்களையும் உணரமுடியவில்லை. தலைமுடி மாற்றம், தாடி, மீசை மாற்றம் மட்டுமே மாற்றமாகி விடுமா? அதே உடல்மொழி, அதே வசன உச்சரிப்பு, அதே விஜய்சேதுபதி. ‘வந்தாலே போதும்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டீர்களா என்று தெரியவில்லை. பல படங்களில் நடிப்பில் எந்த மெனக்கெடலும் இல்லை.

இதற்குத்தானே ஆசைப்படுகிறோம் விஜய்சேதுபதி?

இன்னும் வெளிவரக் காத்திருக்கும் உங்கள் படங்களின் பட்டியல் நீளம். வெறுமனே படங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு கலைஞனின்/கலைஞியின் வெற்றியைத் தீர்மானித்துவிடுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே விஜய்சேதுபதி? தனித்துவமான கதைகள், பக்குவமான பாத்திரங்கள், தேர்ந்த நடிப்பு, வித்தியாசமான களங்கள் - இவைதானே வெற்றியின் அடையாளங்கள்? இவைதானே உங்கள் ஆரம்ப அடையாளங்களும்கூட?

இன்னும் உங்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை யிருக்கிறது. நட்புக்காக என்று நடித்துக்கொடுக்கும் செஞ் சோற்றுக்கடனிலும் உங்கள் தனித்துவ அடையாளம் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விக்கிபீடியாவில் பிலிமோகிராபி நீளமாக இருப்பதைவிடவும் உங்கள் சினிமாக்கள் ஆழமாக இருப்பதைத்தான் விரும்புகிறோம். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விஜய்சேதுபதி படம் வெளியாக வேண்டிய தேவையில்லை. மைக்கேல், பிரேம், தாஸ், சுமார் மூஞ்சி குமார், முருகேசன் என்று வெவ்வேறு மனிதர்களைப் பிரதிபலிக்கும், வெவ்வேறுவிதமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விஜய்சேதுபதிதான் வேண்டும். அப்போதுதான் ‘மக்கள் செல்வன்’ என்ற அழகான பட்டத்தின் அர்த்தம் கூடும்.

இதற்குத்தானே ஆசைப்படுகிறோம் விஜய்சேதுபதி... நிறைவேற்றுவீர்களா?

எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்

உங்கள் ரசிகன்/ரசிகை