Published:Updated:

``செல்வா... உங்கள் கனவு சினிமாவுக்காக வெயிட்டிங்!'' - ஒரு ரசிகனின் கடிதம் #18yearsofSelvaism

செல்வராகவன்
News
செல்வராகவன்

'ஆயிரத்தில் ஒருவன்' டயலாக் பேப்பரை பிரின்ட் எடுத்தெல்லாம் ஒரு பிரஸ்மீட்டில் கொடுத்த செல்வராகவனைப் பார்த்தபோது கண்கள் கலங்கின. செல்வாவின் வலி அந்தத் தருணத்தில் எப்படி இருந்திருக்கும் என என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. அந்தப் படைப்பாளியின் ஓலம் எனக்குள் கேட்டது.

உனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் யார்? சச்சின் டெண்டுல்கர். உன்னுடைய ரோல் மாடல்? சச்சின் டெண்டுல்கர்... உனக்குப் பிடித்த நடிகர் ? கமல்ஹாசன். உனக்குப் பிடித்த இயக்குநர் ? இந்தக் கேள்விக்கான உண்மையான பதிலை மட்டும் இன்னும் யாரிடமும் சொன்னதில்லை. யாராவது கேட்கும்போது மணிரத்னம், கெளதம் மேனன் என யார் யார் பெயரையோ சொல்லியிருக்கிறேன். ஆனால், இன்றுதான் உண்மையைச் சொல்கிறேன். நான் செல்வராகவனின் ரசிகன். எனக்குப் பிடித்த இயக்குநர் செல்வா.

SELVARAGHAVAN, KARTHI
SELVARAGHAVAN, KARTHI

2013... 'இரண்டாம் உலகம்' பட ரிலீஸுக்கு முன்பாக ஆனந்த விகடனில் வெளிவந்த பேட்டி அது. சினிமா விகடன் யூ-டியூப் சேனலிலும் இருக்கிறது. அந்த செல்வராகவனின் பேட்டியை மட்டும் யூ-டியூபில் பலமுறை பார்த்திருக்கிறேன். என்னவோ தெரியாது... இப்போதுகூட மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். ஒரு கலைஞன், ஒரு கிரியேட்டர், ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளன், ஒரு சிறந்த கதை சொல்லி எவ்வளவு விரக்தியில் இருந்தால் அப்படிப் பேசுவான் என்று அந்தப் பேட்டியைப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

'துள்ளுவதோ இளமை' சூப்பர் ஹிட்... 'காதல் கொண்டேன்' சூப்பர் டூப்பர் ஹிட்... '7ஜி ரெயின்போ காலனி' வெறித்தன ஹிட்... 'புதுப்பேட்டை' வேற லெவல் சினிமா என வெற்றிகளைப் பார்க்காதவன் இல்லை அவன். ஆனால், ''இதெல்லாம் என் லெவல் சினிமாவே இல்லை... நான் வேறு மாதிரி படங்கள் எடுக்கவேண்டியவன்'' என 'ஆயிரத்தில் ஒருவன்' படம் எடுத்தான். இந்த சமூகம் அந்தப் படத்தைத் தூக்கி குப்பையில் போட்டது. அந்தக் கலைஞனின் வெறுப்பு அங்கிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அந்தக் கலைஞன், அந்த கிரியேட்டர், ஆயிரத்தில் ஒருவனோடு சினிமாவை விட்டு விலகிவிட்டான். என்னைப் பொருத்தவரை அவன் அதற்கு அடுத்து எடுத்த 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்', 'என்ஜிகே' எல்லாம் செல்வராகவன் படங்களே கிடையாது. அது செல்வராகவனின் பெயரில் யாரோ ஒரு வலுவிழந்த மனிதன் எடுத்த சினிமா.

நான் முதலில் குறிப்பிட்ட அந்த ஆனந்த விகடன் பேட்டிக்கே வருகிறேன். இந்தப் பேட்டியில் இருந்து எனக்குள் எதிரொலிக்கும் சில வார்த்தைகளை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கமல் சாருக்கு ஒரு விஷயம் சொல்றோம்னா, அதை நான் ஒரு டைரக்டரா சொல்லலை. அவரை இப்படிக் காட்டினா நல்லாயிருக்கும்னு நான் எனக்குள்ள பார்த்து ரசிச்ச கமல்ஹாசனைக் காட்டணும்னு நினைச்சேன்.
செல்வராகவன்

''இங்க, தமிழ்ப் படங்கள்ல சம்பந்தமே இல்லாம கத்தணும்... இல்லைனா, 10 பேர் சேர்ந்து காமெடின்ற பேர்ல சிரிக்கணும்.''

''பாலிவுட்ல மாற்று சினிமா முயற்சிகள் நடக்குது... ஆல்டர்நேட், பேரலல் சினிமா வந்துடுச்சு... ஆனா இங்க எதுவுமே மாறல... இதெல்லாம் மாறும்கிற நம்பிக்கைலதான் 13 வருஷத்துக்கு முன்னாடி நான் சினிமாவுக்கு வந்தேன்.''

''எங்கே ஆரம்பிச்சேனோ அங்கேயேதான் சுத்திட்டிருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு இங்க படம் பண்ற இஷ்டமே இல்லை. படம் பண்ணப் பிடிக்கல.''

''இரண்டாம் உலகம்தான் என்னோட கடைசிப் படம்.''

''இதுக்கு நடுவுல தமிழ் சினிமா நிறைய பேரை இழந்துடும். 25 வருஷம் கழிச்சும் அதே இடத்துலதான் இருப்போம்.''

இதுதான் அந்தப் பேட்டியின் ஜிஸ்ட். 'ஆயிரத்தில் ஒருவன்' படம் முடிந்ததும், அவர் விக்ரமுடன் படம் எடுத்திருக்க வேண்டும். லொக்கேஷனுக்கெல்லாம் போய்விட்டார்கள். ஆனால், ஏதோ பிரச்னை. கிரியேட்டரின் ஈகோவை யாரோ சீண்டிவிட்டார்கள். படம் டிராப்.

அடுத்து, கமல்ஹாசனுடன் படம். பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சினிமாவில் எனக்குப் பிடித்த இருவர் இணைந்திக்கிறார்கள் என. ஆனால், ஷூட்டிங் ஆரம்பித்த சில நாள்களிலேயே படம் டிராப் என செய்திவந்தது.

selvaraghavan, reema sen
selvaraghavan, reema sen

''கமல் சாருக்கு ஒரு விஷயம் சொல்றோம்னா, அதை நான் ஒரு டைரக்டரா சொல்லலை. அவரை இப்படிக் காட்டினா நல்லாயிருக்கும்னு நான் எனக்குள்ள பார்த்து ரசிச்ச கமல்ஹாசனைக் காட்டணும்னு நினைச்சேன்'' என அந்தப் படம் டிராப் ஆனதற்கான காரணத்தைக் கொஞ்சம் மறைமுகமாகச் சொல்லியிருப்பார் செல்வராகவன். ஆமாம், செல்வராகவன் எனும் கிரியேட்டரின் கனவுக்குள் நுழைந்து யாராவது கரெக்‌ஷன்ஸ் சொன்னால் அது அவருக்குப் பிடிக்காது.

''ஒரு படம் பண்றேன்னா அந்த இடம் எனக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்கணும். நான் ஒரு ஹீரோ சொல்றதுக்கு தலையச்சேன்னா அங்க நான் செத்துட்டேன். அவ்ளோதான். மீதி 80 நாள் ஷூட்டிங்ல பொணமாதான் சுத்திட்டிருப்பேன். அதை நான் என்னைக்குமே பண்ண மாட்டேன்.'' இதுதான் செல்வராகவன் என்னும் கலைஞனின் ஈகோ. இதை யாராவது உரசிவிட்டால், அங்கே அந்தப் படம் முடிந்தது.

இங்கே ஒரு இயக்குநர் ஹீரோவுக்கு ஏற்றபடி, தயாரிப்பாளருக்கு ஏற்றபடி நெளிந்து குழைந்தால்தான் படம் எடுக்கமுடியும். இல்லையென்றால், அந்த இயக்குநருக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துவிடுவார்கள். இங்கே, படைப்பாளி தன் படைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை திமிராகத் தெரிகிறது. ஒரு கலைஞன் கர்வத்தோடு இருக்கக்கூடதா?

selvaraghavan, ravi krishna, sonia agarwal
selvaraghavan, ravi krishna, sonia agarwal

'ஆயிரத்தில் ஒருவன்' புரியவில்லை என்றார்கள். 'என்ன டயலாக் பேசுகிறார்கள் என்றே கேட்கவில்லை' என்றார்கள். டயலாக் பேப்பரை பிரின்ட் எடுத்தெல்லாம் ஒரு பிரஸ்மீட்டில் கொடுத்த செல்வராகவனைப் பார்த்தபோது கண்கள் கலங்கின. செல்வாவின் வலி அந்தத் தருணத்தில் எப்படி இருந்திருக்கும் என என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தப் படைப்பாளியின் ஓலம் எனக்குள் கேட்டது.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பிறகு, அவர் எதிர்பார்த்த நடிகர்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த பட்ஜெட் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த இசையமைப்பாளர், டெக்னீஷியன்ஸ் என சரியான கூட்டணி எதுவுமே அமையவில்லை. அவர் எடுக்க நினைத்த சினிமாவை அவரால் எடுக்க முடியவில்லை.

selvaraghavan, dhanush
selvaraghavan, dhanush

உண்மையில் செல்வராகவன் எடுக்க நினைத்த முதல் படம், 'துள்ளுவதோ இளமை' அல்ல. 'காதல்கொண்டேன்'தான் அவரது முதல் கதை. இந்தக் கதையை எடுத்துக்கொண்டுதான் கோடம்பாக்கத்து தெருக்களில் அலைந்து திரிந்திருக்கிறார். நடிகர் முரளியிடம் கதை சொல்லி ஓகே வாங்கி, பாடல் பதிவெல்லாம் தொடங்கி, பத்திரிகைகளில் விளம்பரங்கள் எல்லாம் வந்த பிறகு படம் டிராப்.

செல்வராகவனின் தந்தை கஸ்தூரி ராஜா அப்போது செல்வராகவனிடம், 'நீ பறப்பதற்கு ஆசைப்படுகிறாய்' என்று சொல்லியிருக்கிறார். ''நான் பறந்துகொண்டேதான் இருக்கிறேன். கீழே இறங்கினால்தானே ஆசைப்பட'' என்பது செல்வராகவனின் மைண்ட் வாய்ஸ்.

அடுத்து, 'காதல் கொண்டேன் 'கதையோடு விக்ரமை போய் பார்த்திருக்கிறார். விக்ரம் மூன்று தயாரிப்பாளர்களிடம் அனுப்பிவைக்க, யாருமே கதைக்கு ஓகே சொல்லவில்லை.

selvaraghavan
selvaraghavan

குடும்பம் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கிறது. திடீரென அப்பா, தான் இயக்கிக்கொண்டிருந்த படத்தை பார்க்கக் கூப்பிடுகிறார். 'படம் எனக்குப் பிடிக்கல'' என்று முகத்துக்கு நேராகச் சொல்கிறார் செல்வராகவன். 'நீயே சரி பண்றியாடா?' எனக் கேட்கிறார் தந்தை. ஒரு சவால் அவருக்கு விடப்படுகிறது. ஒரு கேம். இறங்கி விளையாட ஒரு வாய்ப்பு... அப்படி வந்ததுதான் 'துள்ளுவதோ இளமை'. அது அவரது கனவுப் படம் இல்லை. ஆனால், ஏணியில் ஏறுவதற்கான முதல் படி உடைந்திருந்தாலும் பரவாயில்லை போதும் என ஏறிவிட்டார். உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக வார்ம் அப் போட்டிகளில் ஆடுவார்களே... அதுபோல 'துள்ளுவதோ இளமை' அவர் விளையாடிய வார்ம் அப் ஆட்டம்.

'துள்ளுவதோ இளமை' என் கனவுப் படம் இல்லை. என் மனதில் ஓடிய உலக சினிமா இல்லை. ஆனாலும், அது ஒரு வாய்ப்பு... முதல் வாய்ப்பு!
செல்வராகவன்
Selvaraghavan, Dhanush
Selvaraghavan, Dhanush

அந்த முதல் வாய்ப்பைப் பிடித்துக்கொண்டு மூச்சிறைக்க மாரத்தானில் ஓடிய செல்வராகவனின் ரசிகன்தான் நான். 'காதல் கொண்டேன்' ட்ரெய்லர் என் வாழ்வின் இறுதிவரை மறக்காது. நாகேஷின் 'வெளிய போடா' குரல், ஜீசஸ் சிலையின் கண்களில் இருந்து வந்த ரத்தம், அந்த பிஜிஎம் எல்லாம் இன்னும் கேட்கிறது.

'7ஜி ரெயின்போ காலனி' எல்லாம் எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என எனக்கே நினைவில்லை. ஒன்பதாவது முறை என நினைக்கிறேன். தேவி பாரைடைஸில் இருந்து தேவி பாலாவுக்கு படத்தை மாற்றியிருந்தார்கள். அன்று இந்தியா பாகிஸ்தான் மேட்ச். ஆனாலும் நான் தியேட்டரில்தான் இருந்தேன். என் வாழ்க்கையை ஒருவன் வாழ்ந்திருக்கிறானே என அவனைப் பார்ப்பதற்காக!

செல்வராகவன் படங்கள் பிடித்துப்போக எனக்கு இன்னொரு மிக முக்கியமான காரணம், அவரின் ஹீரோக்கள் எல்லாமே சாமான்யர்கள். சென்னைப் பையன்கள். படாடோபமான மேல்தட்டு பளபள பார்ட்டிகள், அவர் படத்தின் ஹீரோக்கள் இல்லை. சைக்கிளில் மீன் விற்பவரின் மகன்தான் 'துள்ளுவதோ இளமை'யின் ஹீரோ. பெற்றோரால் கைவிடப்பட்ட ஆதவரவற்றவன்தான் 'காதல் கொண்டேன்' படத்தின் நாயகன். ஒரு மிடில் கிளாஸ் காலனிப் பையன்தான் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் ஹீரோ. செல்வராகவன் படங்கள் காதலை மட்டுமல்ல அரசியலும் பேசியிருக்கின்றன. புரியவேண்டியவர்களுக்கு புரியவேண்டிய அரசியல் வசனங்கள் அவரின் எல்லாப் படங்களிலுமே இருக்கும்.

நான் இரண்டாவது இன்னிங்ஸ்களின் காதலன். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டே ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் டபுள் சென்சுரி அடிக்கக்கூடிய வாய்ப்பை டெஸ்ட் கிரிக்கெட்தான் தருகிறது. ஆமாம், காலம் அல்லது கடவுள் எல்லோருக்கும் வாழ்க்கையில் இன்னொரு வாய்ப்பை வழங்கும் - வழங்குவார் எனச் சொல்வார்கள். அப்படி உங்களுக்கான இரண்டாவது இன்னிங்ஸ் இனிமேல்தான் ஆரம்பமாக இருக்கிறது என நான் நம்புகிறேன்.

தனுஷுடன் நீங்கள் மீண்டும் இணையப்போகும் படம்தான் உங்களது இரண்டாவது இன்னிங்ஸின் ஆரம்பம் என காத்துக்கொண்டிருக்கிறேன் செல்வா.

Your BEST is yet to come!