Published:Updated:

கொரோனா பற்றிய முதல் திரைப்படம் இதோ தயார்! எங்கே, ஏன், எதற்கு தெரியுமா?

corona movie
corona movie

உலகம் முழுக்க வைரஸைவிட வேகமாய்ப் பரவி, அதைவிட பெரும் கொடுமைகளை நிகழ்த்தி வருகிற `ஜீனோபோபியா' மனநிலையை ஆராய்ந்து விளக்குகிறது படம். ஜீனோபோபியா எனப்படுவது அந்நியர்கள் மற்றும் அந்நியக் கலாசாரங்கள் மீதான அச்சம் அல்லது வெறுப்பு.

இன்னும் சில மாதங்களில், கொரோனா வைரஸ் பற்றிய திரைப்படங்கள் பல நாடுகளிலிருந்து பல மொழிகளில், பல ஜானர்களில் மளமளவென வெளியாகுமென உறுதியாகச் சொல்லலாம். அதில் முதல் திரைப்படமாக, `கொரோனா' என்கிற படத்தைத் தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் மொஸ்டபா கேஸ்வரி. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோதே ​​படத்தின் ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கி, அதை 2 வார காலத்தில் முடித்துவிட்டு, 10 நாள்களில் ஒரு வாடகை இடத்தில் செட் அமைத்து இயக்கி முடித்திருக்கிறார்.

corona movie
corona movie

உலகம் முழுக்க வைரஸைவிட வேகமாய்ப் பரவி, அதைவிட பெரும் கொடுமைகளை நிகழ்த்தி வருகிற `ஜீனோபோபியா' மனநிலையை ஆராய்ந்து விளக்குகிறது படம். ஜீனோபோபியா எனப்படுவது அந்நியர்கள் மற்றும் அந்நியக் கலாசாரங்கள் மீதான அச்சம் அல்லது வெறுப்பு. `FEAR IS A VIRUS' எனும் வாசகத்துடன், இதன் டிரெய்லர் சென்ற மாதம் வெளியானது. மொத்தக் கதையும் `சிங்கிள் ரூம் த்ரில்லர்' பாணியில் ஒரேயொரு லிஃப்டுக்குள் நடக்கிறது. அதை, சிங்கிள் ஷாட் முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.

டிரெய்லரின் தொடக்கத்தில், லிஃப்ட்டில் இருப்பவர்கள் அனைவரும் பரபரப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலைப் பற்றி விவாதிக்கிறார்கள். அதில், ஒரு சீனப் பெண் இருமத் தொடங்குகிறார். அந்த நேரத்தில், லிஃப்ட் பாதி வழியிலே நின்றுவிடுகிறது. உள்ளிருக்கும் மின் விளக்குகளும் அணைந்து, ஆபத்து காலத்தில் எரியும் சிவப்பு நிற விளக்கு மட்டும் எரிகிறது. ``நாம் அனைவரும் இங்கே இறக்கப்போகிறோம்!” என்று ஒரு பெண் கத்துகிறார்.

corona movie
corona movie

சக்கர நாற்காலியில் இருப்பவர், சீனப் பெண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்டி ``இவளிடம்தான் வைரஸ் இருக்கிறது" எனக் கத்துகிறார். சீனப் பெண் அழத் துவங்குகிறாள். அப்போது, ``நாம் அனைவருமே சோதிக்கப்படுகிறோமென நான் நினைக்கிறேன்" என ஒருவர் சொல்ல, டிரெய்லர் முடிகிறது. படம் பற்றி கேஷ்வரி கூறுகையில், ``சீன சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படும் செய்தியை, ஒரு லிஃப்டில் இருந்தபோது படிக்க நேரிட்டது. அப்போதுதான் எனக்கு இந்த யோசனை வந்தது" என்றார்.

படத்தில் யதார்த்த தன்மையைக் கூட்ட, `நிஜமாகவே இந்த லிஃப்டில் வைரஸ் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்' எனச் சொல்லியிருக்கிறார் கேஷ்வரி. இந்த 63 நிமிட படத்தை, முழுக்கவும் சிங்கிள் ஷாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். ``மொத்தம் மூன்று நாள்களில் கிட்டதட்ட 70 டேக்குகள் எடுக்கப்பட்டன. ஒரே ஷாட்டில் 63 நிமிட கதை எடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. பணமும் நேரமும் வேகமாய் விரயமாகியது. நீங்கள் விரும்பும் ஒருவரை இழக்க நேரிடும் என்ற பயம் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதன் அவசரத்தை அதிகரிக்கும்" என்கிறார்.

corona movie
corona movie

மேலும், ```சீன வைரஸ்' என ஆரம்பகாலத்தில் குறிப்பிடப்பட்ட `கொரோனா' வைரஸ் சீனர்களை மட்டும் தாக்கவில்லை. உலகில் உள்ள அனைத்து இன மக்களையும் பாதித்துள்ளது. இந்த நிலையில், இனப் பாகுபாடு பார்ப்பதெல்லாம் மிகவும் தவறு. எல்லா மக்களும் இணைந்தே இதை எதிர்கொள்ள வேண்டும். வைரஸ் எந்தவொரு பாகுபாடும் காட்டாதபோது, மக்கள் மட்டும் ஏன் காட்ட வேண்டும்?" எனக் கேள்வியும் எழுப்புகிறார் இயக்குநர் மொஸ்டபா கேஷ்வரி. விநியோகஸ்தர்கள் இல்லாததால் கொரோனா திரைப்பட வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு